Posted on Leave a comment

ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் மதம் – அரவிந்தன் நீலகண்டன்

“There is no Master but the Master and QT-1 is
his prophet”

[அஸிமாவ்வின்
‘Reason ‘ சிறுகதை]

1992ல் ஐசாக் அஸிமாவ் தனது 72வது வயதில் இறந்தார்.
அவருக்கு நடந்த ஓர் அறுவைசிகிச்சையின்போது செலுத்தப்பட்ட இரத்தத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ்
இருந்தது. அதன் விளைவாக எய்ட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டு இறந்தார். அவருக்கு அது தெரியும்.
1990களில் மேற்கில் கூட எயிட்ஸ் குறித்து அது பால்வினை நோய் எனும் பார்வை பரவலாக இருந்தது.
எயிட்ஸ் நோயாளிகள் மீதிருந்த ஒரு விலகல் பார்வையை அகற்ற அவர் விரும்பினார். எனவே தமது
இறுதி விருப்பமாக தனது மரணம் எய்ட்ஸ் நோயால் நிகழ்ந்தது என்பது தெரியப்படுத்தப்பட வேண்டுமென்று
அவர் தெரிவித்தார்.

அஸிமாவ் இறை நம்பிக்கை அற்றவர். அஸிமாவின் தந்தை யூதா அஸிமாவ் ஓர் ஆசாரவாத யூதராக வளர்ந்தவர்.
அவர் அன்னை அன்னா ராச்சேல். ரஷியாவின் சூழல் அன்று மிக மோசமாக இருந்தது. யூதர்கள் மீது
வெறுப்பு நிலவியது. அஸிமாவ்கள் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தனர். ஆனால் அஸிமாவ்வின்
இளமைக்காலங்களின் அமெரிக்கா அப்படி ஒன்றும் சொர்க்க பூமியாக இருக்கவில்லை. அமெரிக்காவின்
பெரும் பொருளாதாரச் சிக்கலான Great Depressionஐயும், இரண்டாம் உலகப்போரையும் அவர் தம்
இளவயதில் சந்தித்தார். ஏறக்குறைய அதை ஒட்டியே 1930களின் இறுதி வருடங்களிலிருந்து
1940கள் ஊடான காலகட்டம் அறிவியல் புனைவுகளின் பொற்காலம் எனக் கருதப்பட்டது. இதற்கு
முக்கியக் காரணமாக விளங்கியவர் ஜான் காம்பெல். அவரது 1938வது வருடக் ‘கண்டுபிடிப்புதான்’
18 வயது அஸிமாவ்.
தொடக்க காலகட்டங்களிலேயே அஸிமாவ்வின் சிறுகதைகள் சிறப்பான
தனித்துவ முத்திரைகள் கொண்டிருந்தன. பிற்கால அறிவியல் புனைவுகளில் பல புதியப்போக்குகளை
உருவாக்குவதற்கான தொடக்க கால அறிகுறிகள் அவை.

ரோபோட்டிக்ஸ்

அஸிமாவ் என்றாலே நினைவுக்கு வருவது ரோபோக்கள்தான்.
ரோபோட்டிக்ஸ் என்று இன்றைக்கு சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வார்த்தையை அன்று
உருவாக்கியவர் அஸிமாவ்தான். அறிவியல் புனைவிலிருந்து வெகு சகஜமாக அறிவியல் துறையாகவே
உயர்ந்துவிட்ட ஒரு வார்த்தை – ரோபோட்டிக்ஸ். அஸிமாவ் தம் புனைவில் உருவாக்கிய ரோபோக்களின்
உலகத்தின் ஆழத்தில் மேற்கத்திய பொது மனதின் மதம் சார்ந்த அடிப்படைகளுடனான ஒரு மோதல்
கரு உள்ளோடுகிறது.

செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்கள் ஆன்மாவற்ற அறிவினைக்
கொண்டவை என்பது மதக் கோட்பாடு. ஏனெனில் ஆன்மா என்பது ஆண்டவனால் மட்டுமே படைக்கப்பட
முடிந்தது. எனவே மனிதன் செயற்கை அறிவுடனான இயந்திரங்களை உருவாக்கும்போது அவன் ஆன்மா
இல்லாத அறிவை உருவாக்கி உலவ விடுகிறான். சுதந்திரமாகச் செயல்படவைக்கிறான். எனவே அவை
அழிவில்தான் முடியும். கட்டுப்பாடிழந்து மானுடர்களைக் கொல்லும் ப்ராங்கன்ஸ்டைனின் செயற்கை
மனிதன் முதல் ஹாலிவுட்டின் கில்-பாட்டுக்கள் வரை இந்த கருத்தாக்க அடிப்படை செயல்படுவதைக்
காணலாம்.

அஸிமாவ் எழுத வந்தபோது, அறிவியல் புனைகதைகளின் உலகில்
இயந்திரங்கள் இப்படித்தான் காணப்பட்டன. இந்நிலையில் மானுடச்சூழலில் செயற்கை அறிவு இயந்திரங்களை இயந்திரங்களாகவே நடமாடவிட்டார்
அஸிமாவ்.
அவற்றின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அடிப்படை மதிப்பீடுகள் சார்ந்த விதிகளை
அமைத்தார். ‘அஸிமாவ்வின் ரோபாட்டிக்ஸ் விதிகள்’ என இவ்விதிகள் புனைவுலகில் புகழ் பெற்றன.
சில பத்தாண்டுகளில் ரோபோட்டிக்ஸ் மேலும் மேலும் வளர்ச்சி அடைய இவற்றைக் குறித்து செயற்கை-நுண்ணறிவு
(Artificial Intelligence), இயந்திரங்களுடனான உறவின் தார்மீக அம்சங்கள், சட்டப் பிரச்சனைகள்
ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வோர் சீரியஸாகவே பேசக்கூடிய ஓர் இடத்தை அஸிமாவ்வின் இவ்விதிகள்
அடைந்துவிட்டன.

இப்புகழ்பெற்ற விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஓர்
இயந்திரத்தையும் ஒரு நல்ல மனிதனையும் வேறுபடுத்திக் காண்பது அரிதாகிறது (உதாரணமாக,
Evidence எனும் சிறுகதை.) ரோபோட்டிக்ஸ் விதிகள் ஒரு இயந்திர மனிதனுக்கு மரணத்தை வரிந்தேற்கும்
உரிமையை விலக்குகின்றன. மானுடம் என்பது எதில் உள்ளது எனும் கேள்வியுடன் தன்னை மானுடனாக்க
முற்படுகிறான் ஓர் இயந்திர மனிதன். தன்னை மீண்டும் மீண்டும் மீள்வடிவமைத்து மானுடத்தின்
இறுதிக்கட்டமான மரணத்தை வரிந்தேற்கும் இயந்திர மனிதனின் கதை இன்று பிரபல திரைப்படமான
Bicentennial Man’.
பரிணாமத்தால் வடிவமைக்கப்பட்ட கார்பன் சார்ந்து உருவாக்கப்பட்ட
உடல், அதில் நியூரான்களில் மின்னணு இயக்கங்களால் எழும் உணர்ச்சிகள், அவற்றிலிருந்து
உருவாகும் மதிப்பீடுகள், நம்பிக்கைகள் ஒரு புறம். மறுபுறம் மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட
இயந்திரங்களின் மின்னணு (சரியாகச் சொன்னால் பாஸிட்ரானிக்) இயக்கங்கள் எழுப்பும் இணையான
ஓர் உலகம். இந்த இரு உலகங்களும் மோதுவதால் ஏற்படும் கதை நிகழ்வுகளே அஸிமாவ்வின் களம்
எனக் கூறலாம். ரோபோக்கள் சார்ந்த ஏறக்குறைய அனைத்துச் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும்
இதை நாம் காணலாம்.

அஸிமாவ்வின் புனைவுலக ரோபோக்கள் பாஸிட்ரானிய மூளைகளைக்
கொண்டவை. அந்த பாஸிட்ரானிய மூளைகளில் முகிழ்த்தெழும் பண்புகளை (emergent
properties) அஸிமாவ் பன்முறை வலியுறுத்துகிறார். இன்று புகழ் பெற்றிருக்கும் chaos
போன்ற கோட்பாடுகளின் புனைவுலக முன்னறிவிப்பை அஸிமாவ்வின் ரோபாட்களில் காணலாம்.

சரி, இவற்றுக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு?

ரோபோக்கள் மையம்கொண்ட தம் புனைவுகளின் ஊடாக அவர் ரோபோக்களின்
தரப்புக்கு எதிராக மிக நுணுக்கமாக நிறுத்தும் தரப்பு எது? அது ஒரு தனிப்பட்ட கோட்பாடு
அல்லது ஆளுமைகள் அல்ல. மேற்கத்திய பொது மன மதம் கட்டமைத்த ‘மானுடத்தின் தனித்தன்மை’
எனும் கோட்பாட்டைத்தான்.
மானுடப்பரிமாணத்தின் ஓர் இன்றியமையா நிலையாகவும், மானுடத்துக்கு
இணையாகவும், இயந்திரங்களை ஏற்க மறுப்பவர்கள் யார்? மானுடத்தை சக மானுடரல்லாத விலங்குகளிலிருந்து
தனிப்படுத்திக் காண விரும்பும் அதே கோட்பாடு கொண்டவர்கள்தான். மானுடம் வேரின்றி வானுலக
பொம்மலாட்ட பொம்மைகளாக மட்டுமே காண விழையும் ஒரு கோட்பாடு இங்கு உள்ளது. அது வேர்களை
மட்டுமின்றி மானுடத்தின் பரிணாம விகசிப்பையும் தடுக்கிறது என்பதை மீண்டும் மீண்டும்
காட்டுகிறார் அஸிமாவ்.

தன் குழந்தையை ரோபோ தோழனிடமிருந்து பிரிக்க விரும்பும்
அன்னையை அஸிமாவ் காட்டுகிறார் (Robbie). உலகம் ரோபோக்களின் கைகளில் சென்று அதனால் மானுடம்
விடுதலை இழக்கும் எனக் கருதும் Society of Humanity எனும் அமைப்பையும் காட்டுகிறார்
(Evitable conflict). இங்கு இணைக்கும் இழையாக இயங்குவது இயந்திரங்களின் மீதான மதிப்பீடு
– அவை ஆன்மா இல்லாத அறிவைக் கொண்டவை; எனவே தீமையானவை. இந்த மதிப்பீடுதான் அஸிமாவ்வின்
ரோபோ உலகப்புனைவின் வெளிப்படையாகக் கூறப்படாத வில்லன். இம்மோதலே கதைகளின் உயிர்விசையாக
விளங்குகிறது. கதைசொல்லியின் மனச்சார்பு இம்மோதலில் எங்கிருக்கிறது என்பதைச் சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை.

அஸிமாவ் தம் புனைவுலகில் மதம் எனும் பெருநிகழ்வின்
மற்ற பரிமாணங்களுக்குள்ளும் நுழைந்து பார்த்திருக்கிறார்.

சிறுகதையாக எழுதப்பட்டு பின்னர் நாவலாக மாறிய ‘இரவின்
வருகை’ (Nightfall)ல், மதம் காட்டப்படும் விதம் சுவாரசியமானது. வேறெதோ கிரகமொன்றின்
சமுதாயத்தில் தொன்மையான கொடு நிகழ்ச்சி ஒன்று மக்கள் மனதில் மதத்தின் தொன்மங்களாக உயிர்வாழ்கிறது.
ஒரு நாகரிக இனத்தின் வீழ்ச்சியிலிருந்து மீண்டும் அறிவு சார்ந்த நாகரிகம் உயிர்த்தெழ
மதம் இங்கு ஒரு அத்யாவசிய அமைப்பாக விளங்குகிறது. இம்மதத்தின் காலக் கோட்பாடானது சுழற்சித்தன்மை
கொண்டதாக இருக்கிறது. அச்சமுதாயத்தில் அறிவியல் வளரும்போது கண்டறியப்படும் உண்மைகள்
மதக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றது போலவே இருக்கின்றன. இங்கு மத நம்பிக்கை என்பது,
காலச்சக்கரத்தில் நிச்சயமாக மீண்டும் வரப் போகும் ஒரு நிகழ்வுக்கு, உளவியல் ரீதியாக
சமுதாயத்தை வலுப்படுத்தும் கருவியாக விளங்குகிறது.

அஸிமாவ்வின் புகழ்பெற்ற பவுண்டேஷன் நாவல்கள் இரண்டு
விஷயங்களின் கலவை. ஒன்று, அஸிமாவ் இளமையில் கண்ட இரண்டாம் உலகப்போர். இரண்டு, எட்வர்
கிப்ஸனின் புகழ்பெற்ற வரலாற்று ஆக்கமான ‘ரோம சாம்ராஜ்ஜியத்தின் தாழ்வும் வீழ்ச்சியும்’.
இவை இரண்டின் கலவையில் பிறந்த எதிர்காலக் கற்பனை பவுண்டேஷன். இந்நாவல்களில் மையமாக
விளங்குவது, வெப்ப-இயங்கியலின் சில அடிப்படை விதிகளைப் போலவே மனித சமுதாயத்துக்கு உருவாக்கப்பட்ட
சமூக அறிவியல் ஒன்று. பல நூறாயிரம் கோடியாகப் பல்கிப்பெருகி, பல்லாயிரம் விண்மீன்கள்
கூட்டங்களில் பரவிக்கிடக்கும் மானுட சமுதாயத்தின் போக்குகளின் நிகழ்தகவுகளைக் கணிதச்
சமன்பாடுகளால் கணக்கிடும் ஓர் அறிவியலை அஸிமாவ் கற்பனை செய்கிறார். உளவியல்-வரலாறு
(Psycho-history) எனப்படும் இந்த அறிவியலை ஹாரி செல்டான் எனும் இளம் மேதை உருவாக்குகிறான்.
தாராமண்டல சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியையும், அவ்விடத்தில் பண்பாடற்ற சக்திகள் எழும்புவதையும்
அறிகிறான். இந்நிலையில் மானுடத்தின் அறிவினைக் காத்து மீண்டும் அதனை முன்னகர்த்தி ஒரு
தாராமண்டல சாம்ராஜ்ஜியத்தினை எழுப்பிட இரு பவுண்டேஷன்களை உருவக்குகிறான்.

முதல் பவுண்டேஷன் பெளதீக அறிவியல் முன்னேற்றத்தின்
மூலம் அதனைச் சார்ந்த அமைப்புகள் மூலம் விண்மீன் மண்டலங்களைத் தம் அதிகாரத்தில் கொணர்கிறது.
அதில் நிறுவனச் சமயமும் ஒரு கருவியாக பயன்படுகிறது. அறிவியலை, தொழில்நுட்பத்தை, மதச்சாயல்
பூசி அறிவியலை மறந்துவிட்ட சமுதாயங்களுக்கு அளிக்கின்றனர் பவுண்டேஷன் அரசினர். இங்கு
மதம் அதன் மிகக்குறுகிய பரிமாணங்களுடன் வெளிப்படுகிறது. அதன் அடிப்படைச் சடங்குகள்
மூலம் மத உணர்ச்சிகளாலும் எளிய நம்பிக்கைகளாலும் அதிகார பீடத்துக்குக் கட்டுப்பட்ட
மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதுதான் மதத்தின் ஆதாரப் பணியாக உள்ளது.

அதே நேரத்தில் இரண்டாம் பவுண்டேஷன் அக ஆராய்ச்சிகளில்
கவனம் செலுத்துகின்றனர். இவர்களே செல்டானின் திட்டத்திலிருந்து முதல் பவுண்டேஷன் நழுவுகையில்
மிக நுண்ணிய மனச்சீரமைப்புகள் மூலம் செல்டானின் திட்டத்தை நடத்துகின்றனர். ஒன்றாம்
பவுண்டேஷனுக்கு இரண்டாம் பவுண்டேஷனிடம் பெரும் பகை. அதே நேரத்தில் இரண்டாம் பவுண்டேஷன்
எங்கு உள்ளனர் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. எனவே தாங்கள் வேறு யாரோ ஒருவரின்
கையாட்களாக உள்ளோம் என்னும் அச்சமும் சந்தேகமும் தாழ்மையுணர்வும் அவர்களை இரண்டாம்
பவுண்டேஷனை வெறுக்க வைக்கின்றன.

இந்நிலையில் இரண்டாம் பவுண்டேஷனிடமும் அதே அச்சம் தலை
தூக்குகிறது. தங்களைக் காட்டிலும் அபரிமிதமானதோர் ஆற்றலுடைய ஏதோ ஒருவரது கைப்பொம்மைகளாகத்
தாம் உள்ளோமோ எனும் அச்சத்திற்கேற்றவாறு சில ஆய்வுகள் அமைகின்றன. இரண்டாம் பவுண்டேஷனும்
அதனைத் தேடும் முதல் பவுண்டேஷனும் தம் தேடலில் வெளிப்படுத்துவது ஒரு கிரகம் முழுமையையும்
இணைக்கும் மனம் – Gaia.

இந்நாவல்கள் மூன்று ஆற்றல் புள்ளிகளைக் காட்டுகின்றன.
ஒன்று: புற இயற்கை சார்ந்தது; இரண்டு: அக இயற்கை சார்ந்தது; மூன்றாவது இணைக்கும் தன்னுணர்வு
கொண்ட அதிமனம். இந்த அதிமனமும் அடிப்படையில் அறிவியலுக்குப் புறம்பானதல்ல, மாறாக அறிவியல்
முன்னகர்வால் எழுந்த சாத்தியக்கூறு என்றே அஸிமாவ் காட்டுகிறார்.
தீர்க்கதரிசன மதத்தின் (Prophetic religion) அடிமடியில்
கைவைக்கிற ஒரு சிறுகதையையும் அஸிமாவ் எழுதியுள்ளார். Reason எனும் அச்சிறுகதையில் ஒரு
QT-1 எனும் ரோபாட் விசித்திரமாக நடக்கிறது. விண்வெளியிலேயே தனது வாழ்நாளைக் கழிக்க
வேண்டிய அந்த ரோபாட், பூமி என்று ஒன்று இருப்பதையோ, மானுடர்கள் தம்மை உருவாக்கினார்கள்
என்பதையோ மறுக்கிறது. மாறாக, ஒரு சிருஷ்டிகர்த்தரே கீழான உயிரினங்களான மானுடர்களையும்,
மேலான படைப்புகளான தம்மையும் படைத்ததாகக் கருதுகிறது. இதெல்லாம் அதன் பாஸிட்ரானிக்
மூளை சர்க்யூட்களில் ‘இறங்கிய’ திருமறையாகும். இதன்படி
‘There is no Master but the Master
and QT-1 is his prophet.’
மிகத்தெளிவாக நமக்கு ரோபாட்டின் ‘தர்க்கத்தின்’ அபத்தம்
புரிகிறது. ஆனால் ரோபோட்டின் சர்க்யூட் சிக்கல் அடிப்படைகளிலிருந்து பார்த்தால் அதன்
அபத்தம் தர்க்கபூர்வமாக உள்ளது. தவறான அடிப்படைகளின் மேல் எழுப்பப்படும் அபத்தமான சிருஷ்டிக்கோட்பாட்டின்
அனைத்து வாதத்திறமைகளுடனான ஒரு தர்க்கத்தை எதிர்கொள்கையில் நேர்கிற இயலாமையை அஸிமாவ்
காட்டுகிறார். ஆனால் அதே நேரத்தில் ரோபாட்டின் விண்வெளிப் பணிக்கு இந்த அபத்த பார்வை
பயனளிப்பதையும் காட்டுகிறார்.

அதிர்ஷ்டவசமாக பத்வா அளிப்பவர்கள் அறிவியல் புனைவுகளை
வாசிப்பதில்லை. அஸிமாவ் தப்பினார்.

மதத்தைப் புறக்கணித்து அறிவியல் புனைவுகளை எழுதுவது
கடினம் என்பது அஸிமாவ்வின் கருத்து. ஆண்டவன் உலகையும் உயிர்களையும் படைத்தார் எனக்
கருதும் சிருஷ்டிவாதிகளுக்கு எதிராகக் கடுமையாக எழுதியவர் அவர். அவர்கள் உண்மை மதத்திலிருக்கும்
கவித்துவ அழகை அசிங்கப்படுத்துவதாக அவர் கருதினார். யூத-கிறிஸ்தவ சூழலில் வளர்ந்தவர்
அவர். அச்சூழலின் குறைகளை உணர்ந்தது போலவே அக்கலாசாரப் பங்களிப்பின் மகோன்னதத்தையும்
முழுமையாக அஸிமாவ் உணர்ந்தவர். அவரது விவிலிய விளக்கக் கையேடு, விவிலியம் குறித்த ஆராய்ச்சிக்கு
சமானியர்களுக்கு மிகச்சிறந்த திறப்பாக இன்றளவும் அமைகிறது. அஸிமாவ்வின் இறுதிக் கால
வெளியீடுகளில் ஒன்றான Fantasy தொகுப்பில் ஒரு கட்டுரை இருந்தது. நல்ல சமாரியன் கதைக்கு
அவர் கொடுக்கும் அழகிய விளக்கம் அது. ஏசு கூறியதாகக் கருதப்படும் இக்கதை, நல்ல சமாரியன்
எனத் தலைப்பிடவில்லை. அஸிமாவ் அக்கதையை விளக்கும் அழகையும் ஆழத்தையும் எந்த மதப்பிரசங்கத்திலும்
காணமுடியாது. இந்த நம்பிக்கையற்ற நாஸ்திகர், எந்த அளவு தமது கலாசாரச் சூழலின் ஆக்கபூர்வ
பரிமாணங்களுக்கு உணர்வுடையவராக இருந்தார் என்பதற்கு இது ஒன்றே சான்று. ஒரு உண்மையான
சமயத்தன்மை கொண்ட முழுமையான நாஸ்திகர். நமக்கு தமிழ்நாட்டில் கொடுத்து வைக்காத ஒரு
பேறு!

*******

· Robbie, The Evitable
Conflict, The Bicentennial Man, Reason – ஆகியவை ஐசாக் அஸிமாவ்வின் The Complete
Robot (Voyager, 1995) தொகுப்பில் உள்ளன.

· Cal சிறுகதையும், அஸிமாவ்வின் அறிவியல்
புனைவுகளில் சமயம் குறித்த கட்டுரையும் Gold (Harperprism 1995) எனும் தொகுப்பில் உள்ளன.

· பவுண்டேஷன் நாவல்கள், Banthamல்
கிடைக்கும். அவை: Foundation, Foundation and Empire, Second Foundation,
Foundation’s Edge, பின்னர் Prelude to Foundation மற்றும் Forward the
Foundation.

· Nightfall – அஸிமாவ்வின் புகழ்பெற்ற
இச்சிறுகதையை பின்னர் அஸிமாவ்வும் ராபர்ட் ஸில்வர்பர்க்கும் இணைந்து நாவலாக்கினர்.
(Bantam 1991)

Leave a Reply