Sunday, 19 November 2017

வலம் செப்டம்பர் 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்


வலம் செப்டம்பர் 2017 இதழ் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

வந்தே மாதரம் - தமிழாக்கம்: ஜடாயு

வந்தே மாதரம்: தேசத்தின் உணர்வு - பி.ஆர்.ஹரன்

ஆங்கிலவழிக் கல்வியின் அபாயங்கள் - லஷ்மணப் பெருமாள்

ஜி.எஸ்.டி: கட்டுக்கதைகளும் உண்மையும் - ஜெயராமன் ரகுநாதன்

டெஸ்ட் டியூப்பில் இண்டர்நெட் - சுஜாதா தேசிகன்

சில பாதைகள் சில பதிவுகள் -1 (பாதாளக் கரண்டியில் பராசகதி) - சுப்பு

அவர்கள் அப்படித்தான் - ஹரன் பிரசன்னா

திரை: தர்மத்தின் குரல் - ஆமருவி தேவநாதன்

கிடைமட்டக் கற்றல் - ஹாலாஸ்யன்

கடன் (சிறுகதை) - ரெங்கசுப்ரமணி

ஹெச்.ஜி.ரசூல் (அஞ்சலி) - ஜடாயு


ஹெச்.ஜி.ரசூல்: அஞ்சலி - ஜடாயு


கவிஞரும் எழுத்தாளருமான தக்கலை ஹெச்.ஜி.ரசூல்  ஆகஸ்டு 5, 2017 அன்று  தனது 59ம் வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். 

வஹாபிய அடிப்படைவாதமும், மூர்க்கமான இஸ்லாமிய மதவெறியும் வளர்ந்து வரும் தமிழ்ச்சூழலில் நம்பிக்கையும் நேசமும் தரும் ஒரு குரலாக இருந்தவர் ஹெச்.ஜி.ரசூல். சிற்றிதழ்கள் மட்டுமின்றி, 2002ம் ஆண்டு முதலே இணையத்திலும் தொடர்ந்து ஜிகாதி பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதியும் விவாதித்தும் வந்தவர் அவர். அவரது சில கருத்துக்களுடன் இணைய இந்துத்துவ எழுத்தாளர்களுக்கு மாறுபாடு இருந்தது. அவற்றை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள்.  ஆயினும் அடிப்படையில் அவர்மீது உள்ள உயர்மதிப்பும் மரியாதையும் என்றும் குறைந்ததில்லை. 

சூஃபி ஆன்மீகம் பற்றிய ஒரு ஆழமான புரிதல் அவரிடம் இருந்தது. "பீர்முகமது அப்பாவின் பாடல்கள் புரியவேண்டுமானால் குரான் மட்டும் போதாது, திருக்குறள், சைவ வைணவ பக்தி இலக்கியம், அத்வைதம், சாங்கியம், யோகம், பௌத்தம், சமணம் போன்ற இந்திய தத்துவ மரபுகள் இவற்றை உள்ளடக்கிய பல்சமயச் சூழல் பற்றிய புரிதல் தேவை" என்று  'அப்பாவின் ஞானப்புகழ்ச்சி' பற்றிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். 

ஜிகாதி பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகடனமாக அவர் எழுதிய கீழ்க்காணும் கவிதையில், 

லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது. 

என்ற வரி  நம்மை  உலுக்கக் கூடியது. இஸ்லாமின் உருவாக்கத்தின்போதே அழித்தொழிக்கப் பட்ட அரேபியாவின் பண்டைக் கலாசாரத்து பெண் தெய்வங்களின் குரலைக் கேட்ட தமிழ் முஸ்லிம் கவி அனேகமாக ரசூல் ஒருவராகவே இருக்கக் கூடும். சாக்தம் மற்றும் தாய் தெய்வ வழிபாடு குறித்து இஸ்லாமிய மதநம்பிக்கைகளுக்கு முற்றிலும் முரணான பரிவான கண்ணோட்டம் அவருக்கு இருந்தது. 

ஹெச்.ஜி.ரசூல்  மறைவிற்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.  

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை (2011) 

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நரகங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னைத் தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய்ச் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்துப் பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்துப் புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பின குரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனித வசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களைத் தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்திக் கிடக்கிறது
லக்கும் தீனுக்கும் வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்துகொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர அவனிடம் இப்போது
வேறெந்தச் சொற்களும் மிச்சமிருக்கவில்லை. 

*******

கடன் [சிறுகதை] - ரெங்கசுப்ரமணி
ஜோகனஸ்பர்க்கில் விமானம் தரையைத் தொட்டது.

“ஹூம், ஆன்சைட் ஆஃபர், ஆஸ்திரேலியா, அமெரிக்கான்னு அனுப்புவானுங்கன்னு பாத்தா, ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வச்சிருக்கானுங்க” என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே விமானத்தைவிட்டு வெளியே வந்தான் மணி. சின்ன பெயர். ஆனால் ஆள் பனைமரத்தில் பாதி இருப்பான். முழுப்பெயர் மணிகண்டப் பிரபு. நனைந்த பனை நிறத்தில் இருப்பான். விமானத்தில் அவன் அருகில் அமர்ந்திருந்த இஸ்கான் ஆசாமி அவனைப் பார்த்துக் கையசைத்துவிட்டு வெளியே சென்றார். மணியின் கையில் அவர் தந்த பகவத்கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மணி தன் பெட்டியைப் பொறுக்கிக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் வேலை செய்வது ஒரு குட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனம். வேலைக்குச் சேர்ந்த அடுத்த மாதமே இங்கே அனுப்பி வைத்துவிட்டார்கள். முதல் பயணமே ஆப்பிரிக்காவிற்கு. முடியாது என்று மறுத்தவனை ஒரு மாதம்தான், நல்ல ஊர், சிங்கம் எல்லாம் ரோட்டில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்று வேப்பிலையடித்து அனுப்பி வைத்துவிட்டனர்.

வெளியில் ஜோமி காத்திருந்தான். சென்றவாரமே அவன் அங்கு வந்துவிட்டான். மணிக்கு வீசா பிரச்சினையால் தாமதமாகிவிட்டது. ஜோமி பெட்டியை வாங்கிக்கொண்டு “வா போகலாம்” என்று பார்க்கிங்க் ஏரியா நோக்கி நடந்தான். விமான அசெளகரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே காரை அடைந்தனர். ட்ரைவர் நன்றாகப் பழுத்த ஆப்பிள் போல இருந்தான். மணியின் கையை இழுத்துக் குலுக்கி, “வெல்கம் டு செளத் ஆஃப்பிரிக்கா” என்றான்.

இருபது நிமிடப்பயணம். ராண்ட்பர்க். ஒரு குட்டி நகரம். ஒரு மரங்கள் சூழ்ந்த வீதியில் ஒரு வீட்டின்முன் நின்றது. ஜோமியிடம் இருந்த சாவியின் ரிமோட்டின் மூலம் கேட்டைத் திறந்து உள்ளே சென்றார்கள். வீட்டின் சுற்றுச்சுவர் முழுவதும் மின்சார வேலி. யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஆறடி உயர வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி வந்தாள். கிறிஸ்டா. அறிமுகப்படலம் முடிந்து உள்ளே சென்றார்கள்.

“நீ ரெஸ்ட் எடு, நான் போய்ட்டு வர்றேன். நாளைக்கு நீ வந்தா போதும்” என்று கூறிவிட்டு ஜோமி வெளியேறினான்.

அறையைச் சுற்றிப் பார்த்தான். நல்ல பெரிய அறை. படுக்கைக்கு எதிரில் ஒரு பெரிய சிலுவை. பெரிதென்றால், மணியை அதில் வைத்து அறையலாம், அந்தளவிற்குப் பெரியது. அருகில் ஒரு குட்டி மண் பானை. சுடச்சுட வெந்நீரில் குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டு படுத்தான். சிலுவையை நோக்கிக் கால் நீட்ட மனம் கொஞ்சம் சங்கடப்பட்டது. தலையை மாற்றி வைத்தால், சிலுவையில் யாரோ தொங்கிக்கொண்டு உதைப்பது போலப் பீதியாக இருந்தது. காலை நேராக நீட்டாமல் மடக்கி வைத்துப் படுத்து உறங்கினான்.

மாலையில் ஜோமியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவனது அறையிலிருந்த அடுப்பில் நூடுல்ஸை வேகவைத்துத் தின்று முடித்தான்.

ஏசி இல்லையென்றாலும் ஒன்றும் தெரியவில்லை. என்ன ஊருடா ஒரு கொசுகூட இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள், காலை அலுவலக கார் வந்தது. நெரிசல் ஏதுமில்லா சாலைகள். மலைப்பகுதி போன்று ஏற்றஇறக்கமான சாலைகளில் சென்று அலுவலகத்தை அடைந்தனர். ‘என்னடா ஒரு பைக்கக் கூட காணோம்’ என்று நினைத்த மாத்திரத்தில் ஒரு பைக், கண்ணிமைக்கும் நேரத்தில் காரைக் கடந்து பறந்து போனது.

 அலுவலகம். இரண்டாவது மாடி. “ஹாய் நான் பெஞ்சமின்” என்று ஒருவன் மணிக்குக் கை கொடுத்தான். பெஞ்சமின் அந்த நிறுவனத்தின் இயக்குநர். மணியைவிடக் கொஞ்சம் உயரமும், நிறமும் அதிகம். “சே... வீரபத்ர சாமி சிலை மாதிரியில்லா இருக்கான்” என்று நினைத்துக்கொண்டான். பெஞ்சமின் அவன் குழுவிலிருந்த மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்தான். சிட்னி, மொஹாபூ என்று இரண்டு கருப்பர்கள். ப்ராவோ என்று ஒரு வெள்ளைக்காரன்.

அலுவலகத்தில் அதிகம் கருப்பர்கள்தான். “என்னடா எல்லாம் நம்ம கலருல்ல இருக்கானுங்க.”

“இத ஆரம்பிச்சவன் வெள்ளைக்காரன்தான். பெஞ்சமின் வந்தபின்னாடி, எல்லாம் அவன் ஆளுங்கள போட்டு நிரப்பிட்டான், ஏகப்பட்ட உள்நாட்டுக் கலவரம் உண்டு. நாம எதுலயும் தல நீட்டாம வந்த வேலைய பாத்துட்டு போயிடனும்” என்றான் ஜோமி.

“நம்ம ஊரு மாதிரிதானா?”

சிறிது நேரத்தில் சிட்னி வந்து வேலையை விளக்கினான். அந்த நிறுவனம் அங்கிருக்கும் பல சுரங்க நிறுவனங்களுக்கான மென்பொருட்களைச் செய்து தந்து கொண்டிருக்கின்றது. சுரங்கங்களில் ஏற்படும் சின்ன சின்ன விபத்துகள், நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். எப்போது அதிகம் விபத்து நடக்கின்றது, அதற்குக் காரணம், அது நடக்காமல் தடுக்க வேண்டியது என்ன என்பதை அந்த மென்பொருளின் உதவியோடு கணிக்கலாம். தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உபயோகப்படும். இதில்தான் மணியும் வேலை செய்யவேண்டும்.

மணிக்கு ஒரே நாளில் வேலை போரடித்துவிட்டது. விதவிதமான படிவங்களை தயார் செய்வது மட்டுமே அவன் வேலை. சில பல கோப்புகளை பிரதியெடுத்து, அதில் பெயர்களை மாற்றினால் போதும். மணி ஒரு எக்ஸல் ஷீட்டை தயார் செய்தான். அதில் விபரங்களை நிரப்பினால் போதும். மிச்ச வேலை வெறும் காப்பி பேஸ்ட்தான்.

சிட்னிக்கும், மொஹாபூவிற்கும் ஆச்சரியம். மணி பத்து முறை விளக்கியும் அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ப்ராவோ பார்த்துவிட்டு தோளைக் குலுக்கிக் கொண்டு போய்விட்டான். அவனுக்கும் புரியவில்லை.

“என்னடா, சுத்த மாக்கானுகளா இருக்கானுங்க, எப்படி இவனுகள வேலைக்கு எடுத்தானுங்க?”

“எல்லாம் பெஞ்சமின் வேலைதான். சிட்னிக்கு மட்டும் கொஞ்ச நஞ்சம் தெரியும், மத்தவங்க எல்லாம் சும்மாதான்.”

மணியும், ஜோமியும் அதன்பின் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதன்பின் வெட்டி வேலைதான்.

வெட்டியாக இருக்கும்போது ப்ராவோ வந்து இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான். அவனது மூதாதையர்கள் பிரிட்டீஷ்க்காரர்கள். இங்கு வந்து பல தலைமுறைகள் ஓடிவிட்டன. முதலாம் உலகப்போர் காலத்தில் வந்தவர்கள், அப்படியே அங்கு தங்கிவிட்டார்களாம்.

பல கதைகள் சொன்னான். நெல்சன் மண்டேலா பற்றி, கருப்பர்களின் வளர்ச்சி பற்றி.

மணி ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது. கிளம்புவதற்கு முதல்நாள் அனைவரும் வெளியே சென்றார்கள். ஒரு கலைப்பொருள் கடையில் கல்லில் செய்யப்பட்ட பொம்மை மட்டும் போதும் என்று எடுத்துக் கொண்டான்.

“200 ராண்ட்.”

மணி கணக்குப் போட்டான், இந்தியமதிப்பில் சுமார் 1,200 ரூபாய். இதற்கா?

“100 ராண்ட்?”

“இல்லை இல்லை, அது எனக்கு நஷ்டத்தைத் தரும்.”

“நான் உங்கள் விருந்தினன் அல்லவா, தரலாம்.”

“சரி, நீ என் சகோதரன். உனக்காக 150 ராண்ட். நீ சகோதரன் என்பதால் மட்டுமே தருகின்றேன். இவன் கேட்டால் தரமாட்டேன்” என்று ப்ராவோவைச் சுட்டினான்.

ப்ராவோ முகம் சுண்டிவிட்டது.

மணிக்கு அதற்கு மேல் பேரம் பேச விருப்பமில்லை. வாங்கிக்கொண்டு வந்தான்.

அடுத்தநாள் உள்ளூர் விடுமுறை, ஹெரிட்டேஜ் டே என்றனர். அனைவரும் சிட்னியின் இடத்திற்குச் சென்றனர்

“மணி, உனது மகிழ்ச்சிக்காக” என்று கோப்பையை உயர்த்தினர்.

மணி, தன் கோப்பையிலிருந்த வொயினை உயர்த்தி, “நன்றி நண்பர்களே” என்றான்.

ப்ராவோதான் ஆரம்பித்தான், “நேற்று அந்தக் கடைக்காரன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான், ஐம்பது ராண்ட்கள் கூட வராது.”

“எனக்கும் தெரியும், அதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும். நான் வெளியூர் ஆசாமி, உள்ளூர்க்காரர்கள் நீங்கள்தான் பேசியிருக்க வேண்டும்.”

“சிட்னியோ, மொஹாபூவோ பேசியிருக்கலாம். ஆனால் கடைக்காரன் கருப்பன். அதனால் அவர்கள் தலையிடவில்லை. நான் பேசினால் கேட்கமாட்டான்.”

“நான் ஏன் பேசவேண்டும், சகோதரன் சம்பாதிப்பதை நான் ஏன் கெடுக்க வேண்டும்? இப்போதுதான் எங்கள் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றது” என்றான் சிட்னி.

“ஆமாம் இங்கு எல்லாம் மாறிக் கொண்டு வருகின்றது. நாங்கள் எல்லாம் தேவையற்றவர்களாகின்றோம்” என்றான் ப்ராவோ.

“ஆமாம், மாறத்தான் மாறும். இத்தனை வருடம் நாங்கள் அடங்கியிருந்தோம், இப்போது மேலே வருவது உங்களுக்கு பொறுக்கவில்லை” என்றான் சிட்னி.

“நீங்கள் மேலே வருவதில் எனக்கு என்ன பிரச்சினை. திறமையிருந்தால் மேலே வரவேண்டியதுதான். அதுதான் இல்லையே” என்றான் ப்ராவோ.

ஜோமி, “ப்ராவோ போதும், உனக்கு அதிகமாகிவிட்டது போல. அமைதியாக இரு.”

“நான் சரியாகத்தான் இருக்கின்றேன். என்னால் வண்டி கூட ஓட்ட முடியும். அலுவலகம் முழுவதும் உங்கள் ஆட்கள்தான். திறமையுள்ளவன், இல்லாதவன் என்று பார்க்காமல் நிரப்புகின்றான் பெஞ்சமின்.”

“ஆமாம், இத்தனை நாள் மறுக்கப்பட்ட இடத்தில் இப்போது உரிமையுடன் அமர்கின்றோம், என்ன தவறு” என்றான் சிட்னி.

“சரிதானே ப்ராவோ, அவர்களுக்கு மறுக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் பரிகாரமாக இருக்க முடியும்” என்றான் மணி.

“நீ அவர்களின் சகோதரன், அப்படித்தான் பேசுவாய்.”

“அப்படி ஏதுமில்லை, உங்கள் உள்ளூர் அரசியலில் எனக்கு என்ன ஆர்வம் இருக்க முடியும்?”

“பிறகு ஏன் இதைப்பற்றி பேசுகின்றாய், உனக்கு என்ன தெரியும் இதைப் பற்றி?”

“ஆனால் உனக்கு சொல்வதற்கு என்னிடம் ஒன்று உண்டு.” தனது கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான். “இது எங்கள் வீடு, என் தாத்தா கட்டியது, அவருக்கு பின் என் அப்பாவிற்கு வந்தது. பல வருடங்கள் கழித்து ஒருநாள் உள்ளூர் வங்கியிலிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. வாங்கிய கடனை உடனே செலுத்து என்று. என் அப்பாவிற்கு ஒரே ஆச்சரியம், நான் கடனே வாங்கவில்லையே என்று. வங்கியில் விசாரித்தபின் தெரிந்தது, அவரது தந்தை அந்த வீட்டை வைத்துக் கடன் வாங்கியிருப்பது. என் அப்பா என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றாய்?”

“கடனை கட்ட வேண்டியதுதான்.”

“சரி, அவரும் கட்டினார். ஆக அவர் வாங்காத கடனை அவர் அடைக்க வேண்டியிருந்தது. நான் கூட சிறிது பணம் அனுப்பினேன், ஆனால் நான் ஏன் யாரோ வாங்கிய கடனுக்கு பணம் கட்ட வேண்டும்?”

“வீடு உனக்குத் தானே வரும், வீட்டை அனுபவிக்கும் உனக்கு அதன் கடனை மட்டும் எப்படி மறுக்க முடியும்” என்றான் ப்ராவோ.

“அது போலத்தான் இதுவும் உன் தந்தை உனக்கு வைத்துவிட்டுப் போன கடன். உன் மூதாதையர்கள் விட்டுப் போன கடன். நீ இப்போது அதை செலுத்திக் கொண்டு இருக்கின்றாய், நாம் கடன் பட்டிருக்கின்றோம்” என்றான் மணி.

“மிகச்சரி, இந்தியர்கள் தர்க்க ரீதியாக பேசுவதில் சிறந்தவர்கள். எங்களால் கூட இவ்வளவு சரியாக எடுத்து வைக்க முடியுமோ என்னவோ” என்றான் சிட்னி.

“சரி, நீ சொல்வது சரிதான். கடனை நான் அடைக்க வேண்டியதுதான். ஆனால் கடனுக்காக நிலத்தை மொத்தமும் விட்டுவிட்டுச் செல்ல முடியுமா. இங்கேயே பிறந்து வளர்ந்த என்னை, நீ வெளிநாட்டவன் என்றால் எங்கு செல்வது? நான் இம்மண்ணைச் சேர்ந்தவன் இல்லை என்றாகுமா?” என்றான் ப்ராவோ.

“இது உங்கள் ப்ரிட்டிஷார் இந்தியாவில் பயன்படுத்திய பொய் ஆயுதத்தின் மறு முனை, இங்கு உண்மையாக மாறி இப்போது உன்னை குத்துகின்றது” என்றான் மணி.

“நாங்கள் இங்கு படும் அவஸ்தை உனக்கு புரியாது.”

“ஏன் எனக்குப் புரியாது, எனக்கு மிக நன்றாகவே புரியும்” என்றான் மணி.

ப்ராவோ புரியாமல் தலையை அசைத்துவிட்டு இன்னுமொரு பாட்டிலைக் கவிழ்த்துக் கொண்டு மட்டையானான்.

அடுத்த நாள்.

விமான நிலையத்திற்குக் கிளம்பினார்கள். கிறிஸ்டா ஒரு பைபிள் புத்தகத்தை மணிக்குப் பரிசளித்தாள். மணி தன் பையில் வைத்திருந்த, இஸ்கான்க்காரர் இவனுக்குத் தந்த பகவத்கீதையை அவளுக்கு அளித்தான். அவள் முகம் போனதைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டு கிளம்பினான்.

“அது என்ன புத்தகம்” என்றான் சிட்னி.

“அது எங்கள் மதப்புத்தகம்” என்றான் மணி.

“ஹே, அதுதான் சரி. இவர்களை இப்படித்தான் திருத்த வேண்டும்” என்றான் சிட்னி.

“சரி நான் விடை பெறுகிறேன்” என்று கூறிவிட்டு ப்ராவோ கிளம்பினான். “மீண்டும் சந்திக்கலாம்” என்று மகிழ்வுடன் கூறிவிட்டு ப்ராவோ மணியைக் கட்டி அணைத்துக்கொண்டான்.

“என்ன இது. கயிறு? இதுவும் உங்கள் மத விஷயமா, உன் நெற்றியில் இருப்பது போல” என்றான் ப்ராவோ

“இல்லை, இது என்னிடம் இருக்கும் உன் வெள்ளைத்தோல்” என்றான் மணி.

******** 

கிடைமட்டக் கற்றல் - ஹாலாஸ்யன்
நான் புதிதாகச் சேர்ந்திருக்கிற நிறுவனத்தில் என்னோடு சேர்ந்தவர்கள் எட்டு பேர். நாங்கள் எட்டுபேருமே ஒரே வேலைக்காகத்தான் எடுக்கப்பட்டிருந்தோம். ஓர் இணையவழிப் பாடத்தை வடிவமைக்கும் Project lifecycle என்கிற படிநிலைகள் சுமார் 20 தேறும். நாங்கள் எட்டுபேரும் மூன்று அனுபவமுள்ள ஆட்களுக்குக்கீழ் சேர்க்கப்பட்டோம். அவர்கள் தருகிற வேலைகளை முடிக்க வேண்டியதுதான் எங்களுக்கு ஆரம்பத்தில் தரப்பட்ட வேலை. அதற்குப் பின்னரே எங்களுக்கே எங்களுக்கென்று ஒரு தனி பாடம் பிரித்துத் தரப்படும்.

எங்களுக்கு‌ மேலிருந்த அனுபவமிக்க மூன்று பேரும் வேறு வேறு பாடங்களில் வேறுவேறு project lifecycle நிலைகளில்‌ இருந்ததால், நாங்கள் எட்டு பேரும் வேறுவேறு நிலைகளில் பழகினோம். மொத்தமாகப் பார்த்தால் இருபது நிலைகளில் ஒவ்வொன்றுக்கும் எங்கள் எட்டு பேரில் இரண்டு பேராவது பழகியிருந்தார்கள். நாங்கள் யாராவது புதிதாக ஒரு நிலைக்கு அறிமுகமாகையில் உடனிருப்பவர்களிடம் இருந்து அந்த நிலையின் சவால்களைக் கேட்டறியவும் அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் முடிந்தது‌.

எங்களைப் பயிற்றுவிப்பவர்கள், எங்களின் மேலாளர்கள் ஆகியோர்களிடம் இருந்து எங்களால் நிச்சயமாக இவ்வளவு விஷயங்களைக் கற்றிருக்க முடியாது. மேலும் நாங்கள் எட்டு பேருக்கு பதில்‌ இருவர் மட்டும் இருந்திருந்தாலும் இவ்வளவு கற்றல் சாத்தியமில்லை.

காரணம் கற்றலானது மேலிருந்து கீழ் பயணிக்கையில் ஒரு ஈகோ இருக்கிறது. ஆசிரியர்களெல்லாம் அப்படி இல்லை என்று மல்லுக்கு வராதீர்கள். விதிவிலக்குகளை உதாரணங்களாகக் காண்பித்து நியாயப்படுத்தமுடியாதே. அப்படி ஈகோ உடைய நிறைய ஆசிரியர்களை எனக்குத் தெரியும். மேலும் அலுவலகச் சூழ்நிலையில் மேலாளர்களின், பயிற்றுநர்களின் நேரமும் முக்கியம். இப்படிப்பட்டக் கிடைமட்டக் கற்றல் ஒரு அலுவலகச் சூழலில் நேரம், உழைப்பு என்று இரட்டைச் சேமிப்பைச் சாத்தியமாக்கும். பெரும்பான்மையான கற்றல்கள் நாங்கள் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்துகையில், மதியம் உணவருந்துகையில் நடைபெற்றது. மேலும்‌ பரஸ்பரம் உதவிக் கொள்ளுதலையும், மேலிடத்தில் கேட்கத் தயங்குகிற சில சந்தேகங்களை, நம்முடன் வேலைக்குச் சேர்ந்து நம்மோடே பணியாற்றும் நபரிடம் தயக்கமின்றிக் கேட்டுக்கொள்ள முடியும்.

இதை அலுவலகங்கள் மட்டுமல்ல இயற்கையும் செய்கிறது என்றால் என்ன சொல்வீர்கள்?

பரிணாம வளர்ச்சி என்பது ஒரு கற்றல்தான். மாறுகிற சூழ்நிலை, இருப்பிடம், உணவுமுறை, உயிர்பிழைப்பு என்று ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு உடற்செயற்பாட்டை, உடலின் அமைப்பை, சில விசேஷமான உறுப்புகளை, உணர்வுகளைப் பெற்று வேறு தனி ஜீவராசியாக நிற்கின்றதுதான் அதன் செயல்முறை. ஆனால் இந்த மாற்றம் மரபணுக்கள் தன்னிச்சையாக மாற்றம் பெற்று, சந்ததியில் வழிவழியாக வருவதற்கு ஏகப்பட்ட காலம் பிடிக்கும். சில சமயம் ஆயிரக்கணக்கான வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் சில மரபணுக்களை சக ஜீவராசிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஒரு வழி இருக்கிறது.

உடனே வல்லூறுகளின் இறகுகள் வளரும் ஜீன்களைச் செலுத்திக்கொண்டு பறந்து, நாளையில் இருந்து பெட்ரோல் செலவையெல்லாம் குறைத்துவிட முடியாது. நம்மைப்போல பலசெல் உயிரிகளின் இது சிக்கலான விஷயம். காரணம் நம் ஒவ்வொரு உறுப்புகளின் செல்களும் தனித்தன்மை கொண்டவை. மூளை, சிறுநீரகம், கணையம் என்று ஒவ்வொன்றின் அமைப்பும் செயல்பாடும் வேறுவேறு.

ஆனால் பேச்சுலர் ரூம்கள்‌ மாதிரி சகலமும் ஒரே இடத்தில் நடக்கிற ஒற்றைச்செல் உயிரிகளில் இது மிக எளிதாக நடந்துவிடும்.
இது பாக்டீரியாக்களில்தான் நடந்திருக்கிறது. அவைகள்தான் இங்கு முதன்முதலில் மரபணுக்களை மாற்றிக்கொண்டு கற்றுக்கொண்டவை. இந்தக் கற்றல் ஒரு சுமப்பான் carrier மூலமாகவோ அல்லது நேரடி மரபுப்பொருள் பகிர்வு மூலமாகவோ நடைபெறலாம். எங்கோ எப்படியோ பச்சைத் தண்ணீர் செல்லில் படாமல் (எவ்வளவு நாளைக்குதான் பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல்) உயிர்வாழக் கற்றுக்கொண்ட ஒரு பாக்டீரியா, அதை பிற பாக்டீரியாக்களுக்கு மூன்று விதமாய்க் கடத்தலாம்.

முத்து திரைப்படத்தில் “இரவு எட்டு மணிக்கு தோட்டத்துக்கு வரவும். தீபாவளி பரிசு காத்திருக்கிறது” என்று எழுதிய சீட்டு எல்லோர் மேலும் விழுந்து, மொத்த வீடும் தோட்டத்தில் திரியுமல்லவா? அதுபோல, அந்த நீரின்றி வாழத் தேவையான மரபணுவை மட்டும் பிரதியெடுத்து, வெளியே தூக்கிப்போட அதை இன்னொரு பாக்டீரியா பிடித்து உள்ளிழுத்து அதை தன்னோடு இணைத்துக்கொள்ளும். இதன் பெயர் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் (transformation).

அல்லது “முப்பது நாள் நீரின்றி வாழும் வித்தை! பயிற்றுவிப்பவர் சகாராவுக்குச் சென்று வந்த சித்த பாக்டீரியா” என்பதுபோல் அந்த மரபணு இல்லாத பாக்டீரியாவுக்கு, மரபணு உள்ள பாக்டீரியா, செல்களுக்கு நடுவே ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தி அதன்மூலம்‌ கடத்தலாம். அதன்பெயர் காஞ்சுகேஷன் (conjugation).

மூன்றாவது வகை, அந்த மரபணுவை ஒரு சுமப்பான் (carrier) இன்னொரு சாதாரண மரபணுவுக்குத் தந்து அதையும் நீரின்றி வாழத் தயார்ப்படுத்துவது. இதில் ஒரு சுமப்பான் (கடத்தி) வருகிறதல்லவா? அந்தச் சுமப்பான்தான் இந்தக் கதையின் திருப்புமுனையே. அந்த சுமப்பான்களாகச் செயல்பட்டது ஒரு வைரஸ். சுமப்பான் மூலம்‌ கடத்துவதற்குப் பெயர் ட்ரான்ஸ்டக்‌ஷன் (transduction).

வைரஸ் என்றவுடனேயே நமக்கெல்லாம், உலகின் ஆபத்துகள் எல்லாமே அமெரிக்காவில் மட்டுமே நடப்பதாய்க் காட்டும் ஹாலிவுட் படங்களில் ஒரு ஒளிரும் பச்சை நிற வஸ்துவில் இருக்கும் ஜந்து, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாய் மூக்கு கண் வழியாய் இரத்தம் வழியக் கோரமாய் இறந்து கிடக்கிற காட்சிதான் நினைவுக்கு வரும். அது ஓரளவு உண்மைதான். சாதாரண சளி ஜூரம் முதல், ஆட்கொல்லியாய் இருந்து ஒழிக்கப்பட்ட பெரியம்மை (சின்னம்மை இப்போதைக்கு ஒழியாது போலிருக்கிறது. இது அரசியல் அல்ல) போன்ற ஆட்கொல்லி நோய்கள், திடீர் திடீரென்று வரும் பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா, சிறுகச்சிறுகக் கொல்லும் எய்ட்ஸ் வரை, ஆண்டுதோறும் வைரஸ் தாக்கும் நோய்களால் இறப்பவர்கள் எக்கச்சக்கம். ஆனால் அவை மட்டும் வைரஸ்கள் அல்ல. விலங்கினங்கள் மட்டுமின்றி, தாவரங்களைத் தாக்குகிற வகை உண்டு. பூவன் வாழைத்தார் மாதிரி இருக்கிற டொபோக்கோ மொஸைக் வைரஸ் (Tobacco Mosaic Virus) என்று தாவரங்களை மட்டும் சவட்டிக் களைகிற வைரஸ்கள் உண்டு. அதில் பார்த்தோமானால் பாக்டீரியாக்களை மட்டும் தாக்கும் வைரஸ்கள் உண்டு. அவற்றிற்கு பாக்டீரியோஃபேஜ் (bacteriophage) என்று பெயர். Phage என்னும் லத்தீனச் சொல்லுக்கு உண்ணுதல் என்று பொருள். அதாவது பாக்டீரியாவைத் தின்னும் வைரஸ். பார்க்க ஏதோ எதிர்கால ரோபோட் மாதிரி குச்சிக் கால்கள் உருளையான உடல்பாகம் என்று இருக்கும். பார்க்கச் அழகாக இருக்கிறதே என்று நினைத்தால் செயல்கள் இன்னும் ஆச்சர்யம்.

பாக்டீரியாவின் மேல்போய் அமர்ந்து அதன் மேல் ஓட்டினைத் துளைத்து, தன் மரபணுவை உள்ளே அனுப்பும், உள்ளே போய் பாக்டீரியாவின் இயக்கங்களை நிறுத்திவிடும். பின்னர் அந்த பாக்டீரியாவின் செல் இயக்கத்தை முழுக்க முழுக்க அந்த வைரஸ் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடும். பாக்டீரியாவின் மரபுப் பொருளான டி.என்.ஏ வை பிரதியெடுக்கும், புரதங்களைத் தயாரிக்கும் எல்லாவற்றையும் வைரஸ் தன்னுடைய மரபுப் பொருளை பிரதியெடுக்கவும், அதன் வெளிப்புற புரத அடுக்குகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தும்.

இங்கு இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. முதல் வகையில், அந்த வைரஸ் மளமளவென பல்கிப் பெருகி அவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பாக்டீரியாவை உள்ளிருந்து கிழித்துக்கொண்டு வெளிவரும். பெரிய அளவில் பார்த்தால் ரொம்பக் கொடூரமாக இருக்கும் போல. ஆனால் எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்க்க இந்தச் செயல்பாடு அழகாய் பஞ்சு வெடித்துப் பறப்பது போல இருக்கும். இப்படி நடப்பதை லைட்டிக் சுழற்சி lytic cycle என்கிறார்கள். இது கூலிப்படை மாதிரி. உள்ளே புகு, அடி, சிதை, மீண்டும் உள்ளே புகு அடி இப்படித் தாக்கிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும்.

இரண்டாவது வகைதான் ஸ்லீப்பர் செல்கள். உள்ளே புகுந்த வைரஸின் மரபுப் பொருள் பாந்தமாய் பாக்டீரியாவின் மரபுப் பொருளோடு ஒட்டிக் கொண்டுவிடும். பின்னர் ஒரு ஸ்லீப்பர் செல்போல் அந்த வைரஸ் அந்த பாக்டீரியாவுக்குள்ளேயே வளர ஆரம்பிக்கும்.ஆனால் பாக்டீரியாவும் இறந்து போகாது. நினைவில் வையுங்கள். பாக்டீரியாவே நுண்ணோக்கிகளில் ஒரு மாதிரி குன்ஸாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள்ளே நூற்றுக்கணக்கில் உயிர்கள் என்று நினைக்கையில் இயற்கை என்னும் அதிசயத்தை நாம் வியந்தே ஆக வேண்டும். இப்படி உள்ளேயே வளர்கையில் உள்ளே அணிவகுக்கும் புது வைரஸ்களுக்குள் கொஞ்சம் பாக்டீரியாவின் மரபுப் பொருளும் இருக்கும். திடீரென்று ஒரு நாள் சூழல் கூடி வருகையில் பழையபடி இங்கும் லைய்டிக் சுழற்சி ஆரம்பித்து விடும். இம்மாதிரி பாக்டீரியாவுக்குள் காத்திருந்து, அதன் மரபுப் பொருளோடு வைரஸ் உருவாவதற்கு லைஸோஜெனிக் சுழற்சி என்று பெயர். இப்போது அந்த பாக்டீரியாவைக் கிழித்து வெளிவந்திருக்கும் வைரஸிற்குள் கொஞ்சம் பாக்டீரியாவின் மரபுப் பொருளும் இருக்குமல்லவா? அது நேரே இன்னொரு பாக்டீரியாவைப் போய்த் தாக்கும்.

இங்குதான் கதையின் உச்சகட்டக் காட்சி, சில தற்செயல்களில் அந்த வைரஸ் பாக்டீரியாவிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட மரபணுவை (நம் கதைப்படி தண்ணியில்லாக் காட்டில் பிழைத்திருத்தல்) மட்டும் மொத்தமாய் அள்ளிக்கொள்ளவும் சாத்தியம் உண்டு. இப்படி ஒரு குறிப்பிட்ட மரபணுவோடு போகும் வைரஸ் இன்னொரு சாதாரண பாக்டீரியாவைத் தாக்கும். இங்கு அந்த பாக்டீரியாவுக்குள் செலுத்தப்படும் வைரஸின் மரபணு சில சிக்கலாக உயிரியல் நடைமுறைகள் வாயிலாக பாக்டீரியாவின் மரபுப் பொருளோடு போய் இணைந்துவிடலாம். இப்போது அந்த மரபணு அந்த பாக்டீரியாவுக்கும், அதன் சந்ததிகள் எல்லாவற்றிற்கும் கிடைத்துவிடும். இப்படித்தான் இந்த கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் வேலை செய்கிறது. சிக்கலான பகுதியைத் தாண்டிவிட்டோம். இனி இதன் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

இப்படி ஒரு வெவ்வேறு வகை பாக்டீரியாக்களுக்குள் பகிரப்பட்ட மரபணுக்கள்,பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்காற்றின என்பதை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் எவ்வித சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் நமக்கு நன்மையும் நிகழ்ந்திருக்கிறது. சோதனைகளும் வந்திருக்கிறது.

சோதனைகளை முதலில் பார்த்துவிடுவோம். மனிதனைத் தாக்க முடியாத ஒரு பாக்டீரியாவிற்கு,மனித உடலில் நோயை உண்டாக்கக் கூடிய மரபணு இப்படிப்பட்ட லைஸோஜெனிக் சுழற்சியால் கிடைக்கலாம். டிப்தீரியா நோயை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா மனிதனைத் தாக்கும் திறனில்லாத பாக்டீரிய வகைக்குக் கொடுத்துவிட்டது. இன்னொரு சாத்தியக் கூறு ஒரு குறிப்பிட்ட மருந்திற்கு எதிர்ப்புத் திறன் பெற்றுவிட்ட பாக்டீரியா பிற பாக்டீரியாக்களுக்கு அந்த நோயெதிர்ப்பு மரபணுவைக் கடத்திவிடலாம். இது இப்போது ஆங்கில மருத்துவத்திற்குப் பெரிய சிக்கலாக வந்து நிற்கிறது.

பாக்டீரியாக்கள் சம்பந்தப்படாத வைரஸ்களால் உண்டாகிற சளி ஜூரம் போன்றவற்றிற்கெல்லாம் ஆன்டிபயாட்டிக்குகள் கொடுத்து கொடுத்து, பாக்டீரியாக்களை ஆன்டிபயாட்டிக்குகளால் ஒன்றும் செய்ய முடியாத படிக்கு ஆக்கியிருக்கிறோம். இந்த ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றுவிட்ட பாக்டீரியாக்களுக்கு முன்னர் நாம் நிராயுதபாணிதான். அதிலும் வான்கோமைசின், மெத்திசில்லின் என்று இரு ஆன்டிபயாட்டிக்குகளை, எல்லாவற்றிற்கும் கேக்கும் என்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதித் தள்ளியிருக்கிறோம். ஸ்டாஃப் staph என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ் Staphylococcus aureus என்னும் பாக்டீரியா இந்த இரு ஆன்டிபயாட்டிக்குகளுக்கு ஏற்கனவே எதிர்ப்புத்திறன் பெற்றாகி விட்டது. மிர்ஸா, விர்ஸா MRSA(Methicillin resistant Staphylococcus aureus), VRSA(Vancomycin Resistant Staphylococcus aureus) என்று இரு வகைகள் உருவாகி உலவிக்கொண்டிருக்கின்றன. “அய்யய்யோ! பாதுகாப்புக்கு ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பாக்கலாம்” என்றால்,பொறுங்கள்!! அவை அதிகம் புழங்குவதே அங்குதான்.

ஆனால் இந்த கிடைமட்ட மரபணுக் கடத்தல் மூலம் கிடைத்த நன்மைகளும் அளப்பரியவை. முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், தினப்படி இன்ஸுலின் கிடைப்பதற்காக ஈ. கோலி E. coli என்னும் ஒரு பாக்டீரியாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இன்ஸுலின் ஒரு புரதம். அதைச் சுரக்கும் மரபணுவைப் பிரித்து, அதை பாக்டீரியோஃபேஜுக்குள் செலுத்தி, அதனை ஈ.கோலி பாக்டீரியாவை எடுத்துக்கொள்ள வைத்து பின்னர் அந்த பாக்டீரியா சுரப்பதைச் சுத்திகரித்துத் தயாரிக்கிறார்கள். மரபணு மாற்றம் என்பது இதுதான்‌‌.

பசில்லஸ் துரங்கனிஸிஸ் Bacillus thurenginesis என்னும் பாக்டீரியாவின் சில தாவர உண்ணிப் பூச்சிகளை விரட்டும் திறனைக் கண்டறிந்து, அதற்குக் காரணமான மரபணுவை, வைரஸ் மூலம் நேரடியாகத் தாவரங்களுக்குத் தருவது மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை உருவாக்கும். பி.டி BT என்பது அந்த பாக்டீரியாவின் பெயர்ச் சுருக்கம்தான்.

இதைத்தவிர அதிகம் பேசப்படாத ஒரு உபயோகம் இருக்கிறது‌. ஆன்டிபயாட்டிக்களுக்கெதிராக பாக்டீரியாக்கள் அணிவகுத்தாயிற்று என்று பார்த்தோம் அல்லவா? அதற்கு அந்த பாக்டீரியோஃபேஜ்களே மாற்று. ஆன்டிபயாட்டிக் என்னும் வேதி மூலக்கூறுகளைப் புரிந்துகொண்டு பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் திறனை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் ஒரு பாக்டீரியோஃபேஜ் வைரஸ் என்பது ஒரு உயிர். பாக்டீரியா, அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஏதேனும் எதிர்ப்புத் திறன் வளர்த்துக் கொண்டால், இந்த வைரஸ் உடனே தன்னை மாற்றிக் கொள்ளும். எப்படியாவது பாக்டீரியாவைத் தாக்க வழி கண்டுபிடிக்கும்.

அப்படி ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒரு பாக்டீரியோஃபேஜ் வைரஸைக் கண்டுகொண்டால், கிருமித் தொற்றுகளை மனித உடலுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி நீக்க முடியும்.

இதனை ஃபேஜ் சிகிச்சை (phage therapy) என்கிறார்கள். இது ஒன்றும் புதிதில்லை. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ரஷ்யா தன் இரும்புத் திரைக்கு அடியில் இந்தச் சிகிச்சை முறையில் எக்கச்சக்க ஆய்வுகள் செய்துகொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஃப்ளெம்மிங், ஆன்டிபயாட்டிக்குகளைக் கண்டுபிடித்தவுடன், ஃபேஜ் சிகிச்சை அம்போ என்று விடப்பட்டது. இப்போது தூசு தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


 இன்னொரு பத்து வருடத்தில், மெடிக்கல் படியேறி, “அண்ணா தொண்டை கரகரங்குது‌. தண்ணி மாறுனதுல பிரச்சனை. ஒரு நல்ல ஃபேஜ் டானிக் குடுங்களேன்” என்று கேட்டு வாங்கும் நாள் வந்துவிடும். காத்திருங்கள்.