Monday, 8 April 2019

வலம் பிப்ரவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்


வலம் பிப்ரவரி 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் | ஹரன் பிரசன்னா

இந்துத்துவமும் இந்துமதமும் ஒன்றுக்கொன்று முரண்படுபவையா? | ஜடாயு

சில பயணங்கள் சில பதிவுகள் - 17 | சுப்பு

கேரளத்துச் சுவரோவியங்கள்: வனப்பும் எழிலும் சிறப்பும் | அரவக்கோன்

எழுத்து மூவர் | - அரவிந்த் சுவாமிநாதன்

வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்


ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள் | சுஜாதா தேசிகன்

அறிவியல் கருத்தரங்குகளில் தொன்மங்கள் தொடர்பு | சுதாகர் கஸ்தூரி

இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி | எஸ்.சொக்கலிங்கம்இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி | எஸ்.சொக்கலிங்கம்2010ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி நடப்பதாகப் பெரிய பெரிய விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தனர். சரி, என்னதான் இருக்கிறது என்று, நண்பர்களுடன் சென்று பார்த்தேன். கண்காட்சிக்குள் நுழைந்த உடன், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழுகூற்றிருக்கையை ஒரு தேர் போலச் செய்து அதை அங்கு நிறுத்தியிருந்தனர். காந்தளகம் சச்சிதானந்தத்தின் ஏற்பாடு அது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்து கண்காட்சிக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றி வந்தேன். திருமடங்களின் சார்பில் சில அரங்குகள், ஜாதியமைப்புகளின் சார்பில் சில அரங்குகள் என ஒரு கலவையாக அந்தக் கண்காட்சி காட்சி அளித்தது. அந்தக் கண்காட்சியில் இருந்து பெறுவதற்கு எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒன்றுமில்லை எனத் தோன்றியது. ஆனால் அந்த முயற்சி எனக்குப் பிடித்திருந்தது.
அடுத்து 2014ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வந்திருந்தார். அந்தக் கண்காட்சியிலும் வழக்கம்போல அரங்குகள், வித்தியாசமான முயற்சியாக, சில கட்அவுட்டுகள் மூலம் குறிப்பிட்ட கருத்துக்களை விளக்க முற்பட்டிருந்தனர். சைவ மடங்கள், வைணவ மடங்களின் அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதையடுத்து நடந்த கண்காட்சிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை, என் 3 வயது மகளை அங்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அவளையும் அழைத்துக்கொண்டு குருானக் கல்லூரிக்குச் சென்றேன்.
இந்தமுறை எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன எனலாம். முகப்பில் யானை நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது. அருகிலேயே பாரதமாதா கோயில் கோசாலை அமைப்பு. கண்காட்சிக்கு வந்த கூட்டத்தில் கணிசமான நபர்கள் இங்குதான் நின்று கொண்டிருந்தனர்.
கண்காட்சியின் உள்ளே நுழைந்தால் நேரெதிரே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிவனடியார்கள் அமர்ந்து திருவாசகம் பாடிக் கொண்டிருந்தனர். இடது கைப்பக்கம், ஆதிசங்கரர், ராமானுஜர் முதல் குருநானக் வரையிலான மகான்களின் படங்கள் வைக்கப்பட்டு அவற்றின் கீழே விளக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. என் மகளுக்கு அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி திருவுருவத்தைக் காட்டினேன்.
வழக்கம் போல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அகர வரிசையில் அதாவது, ஆதீனம் என்றால் ஆங்கில எழுத்து ஏ என்பதின் கீழ் வரும் ஜாதி என்றால் கம்யூனிட்டி என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தான சி யில் வரும். இந்த முறையின் படி அரங்குகள் ஒதுக்கப்பட்டுச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
சின்மயா மிஷன், ராமகிருஷ்ண மிஷன், வேலூர் நாராயணி அம்மா பீடம், ஈஷா யோக மையம் ஆகிய அமைப்புகள் தங்கள் அரங்குகளை விரிவான பரப்பளவில் அமைத்து மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தார்கள்.
பசுப் பாதுகாப்பு தொடர்பாக இயங்கும் பல்வேறு அமைப்புகள், பழங்குடியினங்கள் மத்தியில் சேவை புரியும் அமைப்புகள், திருக்கோயில்களில் உழவாரப் பணி புரியும் அமைப்புகள், நூல் வெளியீடு, சடங்குகள் மூலம் சமயத்தைப் பரப்பும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகள், ஆர்எஸ்எஸ்சின் பல்வேறு கிளை அமைப்புகள் என விதவிதமான அமைப்புகள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.
இவை தவிர, பழமையும் பெருமையும் வாய்ந்த திருவாவடுதுறை, தருமபுரம், பேரூர், துழாவூர், வேளாக்குறிச்சி போன்ற சைவ ஆதீனங்களின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
வலம் இதழின் சார்பிலும் தனியாக ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, வித்தியாசமாகத் தெரிந்தது.
இவை தவிர, சைவப் பிள்ளைமார், கார்காத்தார், யாதவர், கம்மநாயுடு, தேவர், நாடார், நாட்டுக்கோட்டை நகரத்தார் என பல்வேறு ஜாதிச் சங்கங்கள் சார்பாகவும் அரங்குகள் இருந்தன.
கூடுதல் சிறப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தைச் சிறப்பான முறையில் ஒளிஒலி முறையில் ஓர் அரங்காக ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. கண்காட்சியில் அதிகளவிலான கூட்டம் அங்குதான் இருந்தது.

அதற்கடுத்தாற்போல், திருக்கயிலாய இசை வாத்தியக் குழு அரங்கில் கூட்டம் குவிந்தது. அங்கு செல்வோர் தங்களால் இயன்ற வாத்தியங்களை இசைத்துப் பயிற்சி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த முறை கண்காட்சியைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதவில்லை. 400க்கும் அதிகமான அரங்குகள் என்றார்கள். கால் வலி வந்து விட்டது.
கண்காட்சிக்கு வந்து சென்ற ஒவ்வொருவரும் தான் இந்துதான் என்பதை உணரும் அளவுக்கு இந்தக் கண்காட்சியின் ஒவ்வொரு அம்சமும் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாகக் குழந்தைகள், மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோர் ஆகியோருக்கு இந்தக் கண்காட்சியில் கற்றுக் கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் காத்திருந்தன. என் மகள், ஈஷா யோகி சிலையைப் பார்த்தபடி அங்கிருந்த நகர மாட்டேன் என நின்று கொண்டாள். அவர் யார் எனக் கேட்டாள். அவர்தான் சிவபெருமான், கபாலி என்றேன். அதேபோல், லட்சுமி நரசிம்மர் அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுக்கச் சொன்னாள். அவளுக்கு தெய்வத் திருவுருவங்களை விளக்கிச் சொல்லவும், வித்தியாசம் காட்டவும், இந்தக் கண்காட்சி நன்றாகவே பயன்பட்டது.
ஒருபக்கம், இயற்கையோடு இசைந்து வாழும் வாழ்க்கையை உணர்த்தும் விதத்தில் சில அரங்குகள்; மற்றொரு பக்கம், நவீன அறிவியலைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் சாதிக்கும் அமைப்புகளின் அரங்குகள் எனப் பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய்க் கண்காட்சி காட்சியளித்தது.
பக்திப்பூர்வமாக, உணர்வுபூர்வமாக உள்ள இந்துக்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு உந்து சக்தி என்றே சொல்லலாம். தனது மதம் இவ்வளவு பெரிதா, இத்தனை தெய்வங்கள், இத்தனை அமைப்புகள், இத்தனை சேவைகள் உள்ளனவா என்பதை அறியும் அல்லது உணரும் ஒவ்வொரு இந்துவும் இந்தக் கண்காட்சியை இனி தவற விடமாட்டார்.
நம்பிக்கைகளின் மேல் நம்பிக்கைகளாகக் கட்டி எழுப்பப்பட்ட கடவுள் உணர்வு பலப்பட இந்தக் கண்காட்சி பெருமளவில் உதவும் என்பதில் ஐயமே இல்லை.
அதேநேரம், அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்ட இந்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்தக் கண்காட்சி எந்த அளவில் உதவும் என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
சாஸ்திரங்களின் அடிப்படையில் தனக்குத் தோன்றிய விதத்தில் வழிபாடுகளைக் கட்டமைத்துக் கொள்ள இன்றைய இந்து மதம் அனுமதிக்கிறது. அதனால் பல்வேறு வழிபாட்டுப் பிரிவுகள், பல்வேறு யோக சாதனைப் பிரிவுகள் என புற்றீசலாக முளைத்து வருகின்றன.
இந்தச் சூழலில், ஆரம்பக் கட்டத்தில் இருந்து அடுத்தகட்டத்திற்கு, அதாவது தத்துவார்த்த ரீதியாகச் செல்ல விரும்பும் இந்துவிற்கு இந்தக் கண்காட்சி எப்போது வழிகாட்டும்?
எனக்குத் தெரிந்து இந்தக் கண்காட்சியில், தேனி ஓங்காரானந்தாவின் அரங்கில் மட்டும், ஆன்லைனில் அத்வைத சம்பிரதாயத்தைச் சொல்லித் தருவதாக அறிவிப்பு பெரிய விளம்பரப் பலகையாக வைக்கப்பட்டிருந்தது. அதில் என்னென்ன நூல்கள் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை விட்டால் ஆதீன அரங்குகளில் சத்தமில்லாமல் வைக்கப்பட்டிருந்த சில நூல்கள். இவை தவிர தத்துவத் தேடலுக்கு இந்தக் கண்காட்சியில் எந்தவித இடமும் வழங்கப்படவில்லை.
எத்தனையோ ஜாதிகள் இருந்தும் அவை முறையான ஒன்றிணைப்புடன் செயல்படவில்லை அல்லது செயல்படத் தயாராக இல்லை என்பதை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஜாதிச் சங்கங்களின் அரங்குகள் எடுத்துக் காட்டின. தங்களைத் தேடி வருவோருக்கு தங்கள் வரலாற்றை எடுத்துச் சொல்லி, தாங்கள் செய்யும் சேவைகளையும் எடுத்துக் காட்டும்படியான எந்தவித முன்முயற்சியையும் அந்த ஜாதிகள் மேற்கொள்ளவில்லை. அடுத்த முறையாவது இந்தக் கண்காட்சிக்காகவாவது, ஜாதிச் சங்கங்கள் கொஞ்சம் செயல்பட்டு அவற்றை ஆவணப்படுத்தி, காட்சிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்
நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் கம்மநாயுடு அரங்குகளில் மட்டும் அவர்களது வரலாறு, சேவைகள் பற்றிய ஆவணங்கள் இருந்தன.
இந்து அமைப்புகளின் அனைத்தும் சேர்ந்து எத்தனை சேவைகளை வழங்குகின்றன என்ற பட்டியலைப் பெரிய காட்சிப் பலகையாக வைத்திருந்தனர். அதைப் பார்த்தால் இவ்வளவு அமைப்புகள் இருக்கின்றனவா என மயக்கமே வந்து விடுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு, இந்து ஆன்மீக கண்காட்சி மெருகேறிக்கொண்டே செல்கிறது; கட்டமைப்பில் விரிவடைந்துகொண்டே வருகிறது. அனைத்து அமைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற ஆர்வம் காட்டுகின்றன.
இந்த நிலையில் எனக்கு எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன்வைக்கின்றேன்.
1.     சங்கரர், ராமானுஜர் போன்றோரின் படங்களை வைத்தவர்கள், காரைக்காலம்மையாருக்கும் அன்னபூரணிக்கும் வித்தியாசம் தெரியாமல் வைக்கலாமா? அதை கவனிக்கத் தவறியது ஏன்?
2.     தமிழகத்தின் ஆன்மீக எழுச்சியில் சைவ சமயக் குரவர் நால்வருக்கும், தத்துவார்த்த எழுச்சியில் மெய்கண்டாருக்கும் தனித்த இடம் உண்டு. மகான்களின் பட்டியலில் இவர்கள் விடுபட்டது எப்படி?
3.     ஆன்மீகக் கண்காட்சி என்றாலே, தெய்வத் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யத்தான் வேண்டுமா? அவற்றுக்கு என்று தனித்த வழிபாடுகள், இடம், பொருள் என சாஸ்திரங்கள் சுட்டிக் காட்டியிருக்க, பலர் முன்பு, அனைத்து விதிகளையும் மீறி, திருவுருவங்களை எழுந்தருளச் செய்யத்தான் வேண்டுமா?
4.     அன்னதானம் குறைந்து புட்கோர்ட் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லையே?
5.     பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் இந்துக்களை மேம்படுத்த கல்வி, தொழில் போன்ற துறைகளில் வழிகாட்டும் கடனுதவி அளிக்கும் அமைப்புகளை அடுத்த முறை சேர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளதா?
எப்படிப் பார்த்தாலும் இந்து ஆன்மீக கண்காட்சி வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். நான் ஒரு இந்து என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கும் மக்களை, நான் இந்துதான் என்பதை உணர வைத்து தைரியமாக சொல்லவும் வைத்துள்ளது இந்தக் கண்காட்சி. அடுத்த சில ஆண்டுகளில் அடுத்த கட்டத்திலும் தனது வெற்றிக் காலடியை எடுத்து வைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

அறிவியல் கருத்தரங்குகளில் தொன்மங்கள் தொடர்பு | சுதாகர் கஸ்தூரி


நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
அமேசான் பிரைமில் ஃபோரன்ஸிக் ஃபைல்ஸ் என்ற தொடர் பிரபலமானது. தடவியல் அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு சிக்கலான கேஸ்களுக்கு எப்படித் தீர்வு கண்டார்கள் என்பதானது கரு. அதில் ஒன்று இப்படிப் போகிறது.
அமெரிக்காவில் ஒரு குழந்தை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறது. பரிசோதனைக்கு அதன் ரத்தம் எடுக்கப்பட்டு, புகழ்பெற்ற தனியார் பரிசோதனைச்சாலை (ஸ்மித்க்ளைம் பீச்சம்)யில் ஆய்வு செய்யப்படுகிறது. கேஸ் க்ரோமோட்டோகிராஃபி கருவியில் ரத்தத்தில் எத்திலீன் க்ளைக்கால் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. இது கார்களின் ரேடியேட்டர்களில் நீர் உறைவதைத் தடுக்கக் கலக்கப்படும். அதே எத்திலீன் க்ளைக்கால் குழந்தையின் பால்புட்டியில் இருப்பதாக அறிகிறார்கள். தாய், குழந்தையைக் கொல்ல முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்படுகிறாள். அடுத்தமுறை குழந்தை நோய்வாய்ப்படுகையில், எத்திலீன் க்ளைக்காலை முறிக்கும்விதம் எத்தனால் கொடுக்கப்படுகிறது. குழந்தை இறந்துவிடுகிறது. தாய் இதனூடே சிறைக்காவலனுடன் தொடர்புகொண்டு கர்ப்பம் தரிக்கிறாள்.
இழுத்து மூடிவிடவேண்டிய கேஸ். இரு ஆய்வாளர்கள், ஆய்வு அறிக்கையில் ஏதோ தவறு இருப்பதாக மீண்டும் பரிசோதிக்கிறார்கள். அது எத்திலீன் க்ளைக்கால் அல்ல, ப்ரொப்பியோனிக் ஆஸிட் என அறிகிறார்கள். இது ஒரு அரிய நோயால் உருவாகிறது என்பதையும், அப்பெண்ணிற்குப் பிறக்கும் அடுத்த மகவிற்கும் அந்த நோய் இருப்பதையும் அறிந்து, அவள் கொல்லவில்லை எனத் தீர்மானிக்கிறார்கள். அவள் விடுவிக்கப்படுகிறாள்.
அதாவது, தீர்வு முடிவானபின்னும், அறிவியல், முயற்சியால் தன்னைத் தோற்பித்துக் கொள்கிறது. தவறு. அறிவியல் படிகள் தோற்கடிக்கப்பட்டு, புதிய படிகள் தோன்றுகின்றன. இறுதியில் அறிவியலே தோல்வியில் வெல்கிறது.
எதையும் கேள்விக்குரியதாக்கும் அறிவியல். அது உறுதியென நிரூபிக்கப்பட்டதெனினும். அவ்வாறு நிரூபிக்கப்படவில்லையெனில், அது மேலும் கேட்கும். கேள்விகள் தாறுமாறாக, தருக்கமன்றி இருக்கலாம். ஏனெனில், அறிவியல் மூலம் நாம் அறியவேண்டியது, உண்மை, அதுமட்டுமே. ‘ஒரே ஓர் உண்மை மட்டுமே உண்டு. அதுவே ப்ரம்மம்’ என்பது நம் இந்திய சிந்தை.
இதை எதற்குச் சொல்கிறோம்? ஒரு நிகழ்வு உண்மையா இல்லையா என்பதைக் கேள்விகள் கேட்பதன் மூலமே அறியமுடியும். இராமன் பாலத்தைக் கட்டினான் என்பதை உறுதியாக நிரூபணமின்றி நம்புவது கேலிக்குரியதென்றால், அதனை நிரூபணமின்றி கேலிசெய்து மறுப்பதும் கேவலமானதே. எதையும் கேள்விகேட்டு அறிந்துகொள் எனத் தூண்டும் உபநிஷத்துகளின் இக்கால உறவினர்கள் நாம். எனவே தொன்மங்களில் கண்டவையும் கேள்வி கேட்கப்படவேண்டும்.
தொன்மம் என்பதற்கு Myth என்று பொருள் கொண்டால், கேம்ப்ரிட்ஜ் அகராதி இவ்வாறு வரையறுக்கிறது. An ancient story or set of stories, especially explaining the early history of a group of people or about natural events and facts:
ஆக, தொன்மம் என்பது கட்டுக்கதை என்று மட்டும் அகராதி சொல்லவில்லை. ஒரு கதை, முன்பிருந்த வரலாற்று நிகழ்வை, அல்லது இயற்கைச் சம்பவங்கள் அல்லது நிஜங்களைச் சுற்றிப் புனையப்பட்டதாயிருப்பின் அது தொன்மமாகிறது. கதை, ஒரு கற்பனையாக இருக்கலாம். அதன் அடிப்படை ஏதோ ஒரு நிகழ்வு. அது காலப்போக்கில் கதையில் மறைந்து நிற்கிறது. அதனைக் கண்டு அறியாமல், அதன் கதையோடு மட்டும் தொடர்புபடுத்தி, நிகழ்வே பொய் எனச் சொல்வது தொன்மத்தை அறியாத கருத்து.
ஒரு நிகழ்வு முதலில் செய்தியாகப் பரவும். அது காலப்போக்கில் வதந்தியாக மாறும். வலுவான கற்பனை கூடிவரின், அது, இசை, நாடக, அல்லது பேச்சுவழக்கில் கதையாக மாறும். அக்கதை, இடம், காலம், சமூக வழக்கில் திரிந்து வேறு வடிவங்களில் பரிணமிக்கும். இது நல்லதங்காள், பட்டி விக்ரமாதித்தன் கதைக்கும், ராமாயண மகாபாரதக் கதைகளின் வேறுவேறு வடிவங்களுக்கும் பொருந்தும்.
தான் நம்பும் ஒரு கதையின் போக்கினை, வடிவினை நம்பும் ஒருவர், அதன் உட்கருவான நிகழ்வைக் கற்பனை என்று நினைப்பதில்லை. அவருக்கு அது ஒரு தொன்மம் என்பது தெரிகிறது. தொன்மத்தின் அடிப்படையை கேம்ப்ரிட்ஜ் அகராதியில் படிக்காமலேயே அவருக்குப் புரிகிறது. அந்த அடிப்படை நிகழ்வின் நிஜத்தினை அசைத்துப் பார்க்கும் எந்த உத்தியையும் அவர் எதிர்க்கவே எத்தனிப்பார். உளவியலில், தான் நம்பும் ஒன்று தவறல்ல என்பதை எப்பாடுபட்டேனும் உறுதிப்படுத்த, எடுக்கப்படும் முயற்சிகளை ஒரு கவனப்பிழை என்று வரையறுப்பார்கள். அந்தத் தொன்மங்கள், ஆதாரங்களற்று, தருக்கரீதியாக நிறுவப்படாதபோது, இம்முயற்சிகள் கேலிக்குரியனவாகத் தோன்றும்.
அந்த முயற்சிகள் சிலவேளைகளில் அறிவியல்பூர்வமான படிகளாகப் பரிணமித்து ஆதாரங்களோடு நிரூபித்திருப்பதும் கண்கூடு. இராமர் பாலம் என்பது இந்தியப் பகுத்தறிவாளர்களால் எள்ளி நகையாடப்பட்ட பிறகு, அது ஒரு பாறைகளின் அமைப்பு என்று செயற்கைக்கோள் படங்களால் அறிவிக்கப்பட்டபின்னர், நகையாடல்கள் நின்றன. ஆனால், நிஜமான அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக இருப்பின், அதனை ஒத்துக்கொண்டு, அதன் மேலான ஆய்வுகளைத் தொடரும் முயற்சிகளை ஆதரித்திருக்கவேண்டும்; குறைந்தபட்சம், எதிர்க்காமலாவது இருக்கவேண்டும்.. தமிழகப் பகுத்தறிவாளர்களிடம் கொஞ்சம் அதிகமாத்தான் எதிர்பார்க்கிறோமோ?
எல்லாத் தொன்மங்களும் அறிவியல், சரித்திரச் சான்றுகளால் நிரூபிக்கப்பட்டுவிடுவதில்லை. உலகமெங்கும் இத்தேடல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அது கிரேக்க, ரோமானிய, எகிப்திய, அல்லது அதற்கு முந்திய ஹிட்டைட்டுகள், ஆசிரியர்கள் காலத்தவையாக இருப்பினும், நாமறியாத தீவுவாசிகளிடம் நிலவும் கதைகளாக இருப்பினும், தொன்மங்களில் நிகழ்வுத் தேடல்கள் தொடர்கின்றன. ஏன் இந்தத் தேடல்கள்? அமெரிக்கர் ஒருவர், ஏன் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொன்மம் ஒன்றினை உறுதிப்படுத்த எழ வேண்டும்?
தனது நம்பிக்கை உலகளாவியது (universal belief) என்று நிரூபிப்பது, ஒட்டுமொத்த மனித சமூகத்தைத் தன்னிடம் துணைக்கழைக்கும், பெருவாரியாக்கும் (majority) முயற்சி இது. அதிகம் பேர் நம்பினால், தன் சிந்தை சரியானது என்று உறுதிப்படுத்தும் உத்தி.
ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கிரேக்க சமுதாயத்தில் ஓராக்கிள் கோவில் என்று ஒன்றிருந்தது. அதில் குறி சொல்லிய பெண், தரையிலிருந்து வரும் ஆவியை முகர்ந்து, கிறங்கிய நிலையில் ஏதோ உளறுவாள். அவளருகில் இருப்பவர், அவளது உளறல் மொழியில் சில விடயங்களைக் கணித்துக் குறி சொல்லுவார். அந்தக் குறிசொல்லிய பெண் குறித்தான கதைகள் ஏராளம். அது இருக்கட்டும்.
இன்று அக்கோவில் இல்லை. இரு இடிபாடுகளை வரலாற்று வல்லுநர்கள் ‘இதுதான் அந்த ஓராக்கிள் கோவில்’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். மண்ணுக்கடியிலிருந்து வந்த அந்தப் போதைப்புகை?
அது ஒரு கனிம ஆவிகளின் கலவை என்றார்கள் சில அறிஞர்கள். மண்ணுக்கு அடியிலிருந்து வரவேண்டுமென்றால், தரையின் அடியில் ஒரு பிளவு இருந்து, அதன் வழி, நிலத்தடி வாயுக்கள் கசிந்து வந்திருக்கவேண்டும். செயற்கைக்கோள்கள் மூலம், இடிபாடுகளின் அடியே நிலத்தடியில் பிளவு இருப்பதை ஜியாலஜிஸ்டுகள் உறுதிப்படுத்தினர். கவனியுங்கள். ஒரு தொன்மத்தை நிரூபிக்க, வரலாறு, ஆர்க்கியாலஜி, புவியியல், செயற்கைக்கோள் வல்லுநர்கள் இந்தப்பாடு படுகிறார்கள்.
இதோடு வேதியியல் நிபுணர்கள் ‘அந்தக் கலவையில் இருந்திருக்கக்கூடிய வாயுக்கள் அவற்றின் விகிதம் எவ்வாறு இருக்கும்?’ என்று ஆய்கிறார்கள். தற்பொழுது ‘அது எத்திலீன், பென்ஸீன், கார்பன் டை ஆக்ஸிடு மற்றும் மீத்தேன் கலவை’ என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்னும் இவை முழுதும் நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் ஆய்வு தொடர்கிறது. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்ற எள்ளலில் இருந்து இது வேறுபட்டது.
‘தற்பொழுது நிரூபிக்கப்படாத தொன்ம நிகழ்வுகளை, அவை உண்மையில் நடந்தவை, இருந்தவை என்று உறுதிப்படுத்த, தன் நம்பிக்கையின் அடித்தளத்தை அசைக்கவரும் விசைகளைத் தடுத்து நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள்’ என்றே உளவியலாளர்கள் வரையறுக்கிறார்கள். இதன்படி பார்த்தால், ‘இராமன் விமானத்தில் பறந்தானா? அக்காலத்தில் இராமர் பாலம் இருந்ததா? மகாபாரதத்தில் எப்படி நூறு குழந்தைகள் பிறந்தன? அஸ்திரங்கள் அக்காலத்தில் இத்தனை வலுவானதாக இருந்தனவா?’ என்ற கேள்விகள் இருவகையில் கேட்கப்படலாம். ஒன்று எள்ளி நகையாடும் கோணம், மற்றது இருந்திருக்குமா என்ற அறிவியல் கோணம். எந்த வகையில் முன்னேறுகிறோம் என்பது நமது சிந்தனையைச் சார்ந்தது.
ஏனெனில் அறிவியல் ஆய்வு என்பது ஒரு கருதுகோளை உறுதிப்படுத்தும் அல்லது தகர்க்கும் முயற்சிப்படிகளின் விளைவுகளின் தொகுப்பு. அதன் முடிவு மற்றொரு கருதுகோளாக வரும்போது, ஆய்வு பலவீனப்பட்டுப் போகிறது. கவனிக்க, ஆய்வு முயற்சிப்படிகளின் விளைவும், கருத்துமே தோற்கின்றன. ஆய்வு அல்ல. வேறொரு ஆய்வு, மற்றொரு முயற்சிப்படிகளின் கனம் கொண்டு இதனை வெற்றிகரமாக நிரூபிக்கலாம். எனவேதான் அறிவியல் என்பது எப்போதும் மேற்சென்று கொண்டே, மாறிக்கொண்டே இருக்கும் முயற்சிப் படிகள். ஒரு வரியில் work in progress.
நியூட்டனின் விதி, குவாண்டம் உலகில் தடைதட்டியது. ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை குறித்த கருதுகோள் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. என்றேனும் அதுவும் ஒருநாள் முறியடிக்கப்படலாம். மற்றொன்று பிறந்துவரும். இது அறிவியல்.
நம்பிக்கைகளில் சில தகர்க்கப்படலாம். முன்பு தகர்க்கப்பட்ட நம்பிக்கை நிரூபிக்கப்படலாம். அறிவியல் என்றுமே முடிவாகச் சொல்லிவிடாது. தனது தோல்வியைத் தோல்வி என ஒத்துக்கொண்டு முன்னேறுவது அறிவியல். இரு பெரும் மனச்சாய்வுகளின் நடுவே காலத்தில் அறிவியல் சிந்தனை அமைதியாக ஓடுகிறது.
கண்மூடித்தனமாக ‘ராமர் பாலத்தை விலங்குகள் கட்டின’ என்று நம்புவதை விட, ‘இந்தக் கிறுக்கர்கள் உளறுகிறார்கள்’ என்று அதனை ஏளனமாகப் பேசுவதை விட, சத்தம் போடாமல், அப்படி இருந்திருக்க அறிவியல்பூர்வ வாய்ப்பு உண்டா என்று கேட்பதும், முயற்சி எடுப்பதும் சிறந்தது. முயற்சிகள் நகையாடப்படினும், அறிவியல் சிந்தனை இதனையெல்லாம் கவனிக்காது முன்னேறும்.
ஆதாரங்கள்
https://dictionary.cambridge.org/dictionary/english/myth
https://www.smithsonianmag.com/science-nature/ten-ancient-stories-and-geological-events-may-have-inspired-them-180950347/
https://explorable.com/definition-of-research

ஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள் | சுஜாதா தேசிகன்

உ.வே.சாமிநாதையர்

சங்க இலக்கியம் காலம் பொ.மு. 500 முதல் பொ.யு. 200 முடிய இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நாம் அந்த ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம். தமிழ் மற்றும் சங்க இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிந்துகொண்டால் போதுமானது.
திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் “செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும், வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். வட மொழியையும் தமிழையும் பல காலமாக ஒன்றாகவே சனாதன தர்மத்தில் கருதியிருக்கிறார்கள். இன்று உ.வே என்று ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் பெயர்களுக்கு முன் போட்டுக்கொள்வது உபய வேதங்கள் தமிழ் மற்றும் வடமொழியைக் குறிக்கும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் - தமிழ் எங்கிருந்து எங்கே பேசப்பட்டது என்று தொல்காப்பியம் உரை சொல்லுகிறது.
இனிமையும், நீர்மையும் தமிழ் என்று கூறலாம். தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாசுரங்கள் வாய்மொழியாகப் பரவின. மரபு வழி உரைகளும் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. பக்தி இலக்கியம் என்பது சங்க நூல்களில் ஒரு வகை என்றே கொள்ளவேண்டும்.
இந்த முன்னுரையின் ஆரம்பத்தில் ‘க’ என்ற எழுத்தைப் பார்த்திருப்பீர்கள். இது தமிழ் எண் 1ஐக் குறிக்கும். இன்று இதை யாரும் உபயோகிப்பதில்லை. அதுபோல தமிழில் செய்யப்பட்ட பல அருமையான விஷயங்கள் காலப்போக்கில் மறைந்து போயின.
பொ.யு. 823ல், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்த கடலூர் பக்கம், வீர நாராயண ஏரிக்கு அருகில் காட்டுமன்னார் கோயில் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். சுருக்கமாக நாதமுனிகள் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் யோகம், இசை என்று எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்றவராக இருந்தார்.
தன் தகப்பனார் ஈச்வர பட்டாழ்வாருடன் குடும்பமாக வடநாட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார். மதுரா, சாளக்கிராமம், துவாரகை, அயோத்தி முதலான இடங்களுக்குச் சென்று சேவித்துவிட்டு யமுனைக் கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் யமுனைத் துறைவன் என்ற பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். சில வருடங்கள் கழித்து...
பொயு 1855ல் உ.வே சாமிநாதையர் பிறந்தபோது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இரயில் வண்டிகள் ஓடத் தொடங்காத காலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் உத்தானபுரத்துக்கு அருகிலுள்ள சூரியமூலை எனும் ஊரில் இசையறிஞர் வேங்கடசுப்பையர், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். செல்லமாக ‘சாமா’ என்று அழைப்பார்கள். தமிழ் மற்றும் வடமொழியில் நூல்களைப் படித்தார். அன்றைய காலலட்டத்தில் கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கமாக இருந்தன. இவற்றை உவே.சா இளமையிலேயே கற்றுக் கொண்டார். பாடம் கற்றுக்கொண்ட விதத்தை உவேசா இப்படிச் சொல்லுகிறார்
“கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.
அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.”
ஏழாம் வயதில் தமிழ் மீது அவருக்கு மோகம் வந்தது...
ஒருநாள் காட்டுமன்னார் பெருமாள் ‘வீரநாராயணபுரத்துக்கு வாரும்’ என்று கனவில் சொல்ல, நாதமுனிகளும் யமுனைத் துறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு பல திவ்ய தேசங்களைச் சேவித்துவிட்டு மீண்டும் வீரநாராயணபுரத்துக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
அங்கே இருக்கும் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை) சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மன்னார் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு நம்மாழ்வார் பாசுரமான ‘ஆராவமுதே...’ என்கிற திருவாய்மொழியின் பாசுரங்களைச் சேவிக்க (பாட) செந்தமிழில் தேன் போன்ற அர்த்தங்களை நாதமுனிகள் சுவைக்கத் தொடங்குகிறார். ஆனால் வந்தவர்கள் பத்து பாசுரங்கள் பாடிய பிறகு ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடிக்க, நாதமுனிகள் ஆழ்வாரின் தித்திக்கும் தமிழ்ப் பாசுரத்துக்கு அடிமையாகி “ஆயிரத்துள் இப்பத்தும் என்கிறீர்களே அப்படியானால் இப்பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க...
உ.வே.சாமிநாதையர் ஏழாம் வகுப்பில் சடகோபையங்காரிடம் தமிழ் கற்றார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்...
“எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.”
சிறுது சிறிதாக ஊட்டிய தமிழ் அமுதை, சுவையை அவர் வாழ்நாள் முழுவதும் தேட வைத்தது. உ.வே.சா கூட ஒரு காலத்தில் எட்டுத்தொகையை ஏட்டுத்தொகை என்றுதான் படித்துள்ளார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஐம்பெரும்காப்பியங்கள் என்று தெரியுமே தவிர அக்காப்பியங்கள் என்னென்ன என்று தெரியாது. அக்காலத்தில் கோயில்களிலும், மடங்களிலும், சிலரின் வீடுகளிலும் ஓலைச்சுவடிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் அவை முடங்கிக் கிடந்தன.
“எங்களுக்கு இந்த பத்து பாசுரங்கள் மட்டும் தான் தெரியும்.. வழி வழியாக இதை நாங்கள் சொல்லுகிறோம்.”
வருத்தத்துடன் நாதமுனிகள் “அந்தப் பத்து பாசுரங்களையும் மீண்டும் ஒரு முறை சேவியுங்கள்” என்று விண்ணப்பிக்க அவர்கள்,
ஆரா-அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே!*
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
என்று ஆரம்பித்து
...
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!*
ஆரா அமுதாய்! அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்!* உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
என்று முடிக்க முதல் பாசுரத்தில் ‘திருகுடந்தை’ என்ற சொல்லும் ‘குருகூர் சடகோபன்’ என்ற சொல்லும் அவர் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்தன. திருகுடந்தைக்கு என்ற கும்பகோணத்துக்குப் புறப்பட்டார்.
1887ல் சீவகசிந்தாமணியை ஆராய்ந்தபோது அதில் பல மேற்கோள்கள் கிடைத்தன. எல்லாம் பல தமிழ் நூல்கள். பத்துப்பாட்டு என்ற ஒரு நூல் உண்டு என்று அப்போதுதான் உ.வே.சா அவர்களுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆவல் உண்டாகியது. கும்பகோணத்திலிருந்து பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளைத் தேடி திருநெல்வேலி பயணத்துக்குத் தயாரானார். தந்தையிடம் சொன்னதற்கு “சிரவணத்துக்கு இங்கே இருக்க வேண்டும்... இப்பொழுது போக வேண்டாம்” என்று தடை போட்டார். சிரவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு அவருக்குப் பெரிதாக இருந்தமையால் தந்தையிடம் தக்க சமாதானம் சொல்லி திருநெல்வேலிக்குப் புறப்பட்டார்.
இந்தக் காலத்தில் இருப்பது போல, உணவு, தங்கும் இடம், வண்டிகள் என்ற எந்த வசதிகளும் இல்லாத, ஏன் சாலைகள் கூட இல்லாத, காடும் மேடுகளும் கடந்து கும்பகோணம் வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அங்கே திருகுடந்தை கோயிலுக்குச் சென்று ஆராவமுதனைச் சேவித்து அங்குள்ளவர்களிடம் இந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடிக்காட்டி, மீதம் உள்ள 990 பாசுரம் இங்கே யாருக்காவது தெரியுமா என்று கேட்க, அவர்கள் “எங்களுக்கும் இந்தப் பத்து பாசுரம்தான் தெரியும்” என்றபோது நாதமுனிகள் ‘குருகூர் சடகோபன்’ என்ற வார்த்தையில் உள்ள திருக்குருகூர் நோக்கி நடக்கத் தொடங்கினார்... பல நாட்கள் நடந்த பின் அவர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார்.
இரவு எட்டு மணிக்கு ஒரு தகர பெட்டியுடன் உ.வே.சா ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒற்றை மாட்டுவண்டியில் வண்டிக்காரனுடன் பேசிக்கொண்டே சென்றார். போகும் வழியில் வண்டி எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து அவர் மீது பெட்டி விழ.. தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்கத் தொடங்கினார். நல்லவேளையாக அங்கே புகைவண்டி கிளம்பாமல் நின்றுகொண்டிருக்க அதில் ஏறினார்.
நடுராத்திரி தஞ்சாவூர் வரும்போது ஒரு காட்டில் வண்டி நிற்க, ரெயில்வே அதிகாரிகள் உ.வே.சா அவர்களைத் தூக்கக் கலக்கத்தில் எழுப்பி, முன்பிருந்த வண்டியில் தீப்பிடித்துவிட்டது, அதனால் வண்டிகளைக் கழற்றிவிட வேண்டும்.. வேறு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொல்ல... மறுநாள் காலை திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார்.
ஆழ்வார் திருநகரி வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் கோயிலுக்குச் சென்று பொலிந்த நின்றபிறானையும் அங்கே இருக்கும் பெரியோர்களைச் சேவித்து திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்கள் பற்றி விசாரிக்க,
“கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் எங்களுக்குத் தெரியாது...” என்றார்கள்.
“அடடா... அடியேன் இதைத் தேடிக்கொண்டுதான் இங்கே வந்தேன்..”
“இங்கே நம்மாழ்வார் (சடகோபன்) சிஷ்யர் மதுரகவியாரின் வம்சத்தவர் ஒருவர் இருக்கிறார்.. நீங்கள் எதற்கும் அவரைக் கேட்டுப்பாருங்கள்.”
“யார் அவர்... எங்கே இருக்கிறார்..?”
“அவர் திருநாமம் பராங்குசதாஸர்... “ என்று அவர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க, நாதமுனிகள் பராங்குசதாஸரைத் தேடிச் சென்றார்.
திருநெல்வேலியில் கனகசபை முதலியார் ஸ்ப்ஜட்ஜாக இருந்தார். அவர் உ.வே.சா அவர்களுக்குப் பழக்கமானவர். ஏடு தேடி வரும் விஷயத்தை அவருக்குக் கடிதம் மூலம் முன்பே அனுப்பியிருந்தார் உவேசா. அவர் வீட்டை அடைந்தபோது “உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதி தபாலுக்கு அனுப்ப இருந்தேன்... உங்களிடம் சொல்ல வேண்டியவற்றை இந்தக் கடித்ததில் எழுதியிருக்கிறேன்” என்று கடித்ததைக் கொடுக்க, அதில்
“நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன். இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிகள் வேண்டுமென்று எழுதியிருந்தார்கள். நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன். தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரமப்படவேண்டாம்.”
இதைப் படித்த உ.வே.சா முதலியாரை நோக்கி “மெத்த ஸந்தோஷம். நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்... இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும், வித்துவான்களும் இருக்கின்றார்கள். அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள். ஆதலால் நான் போய் வருகிறேன்” என்று கைலாசபுரத்தில் இருந்த வக்கீல் அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயர் வீட்டுக்குச் சென்றார். அவர் “நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார். அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தருகின்றேன்” என்று அவர் உவேசா அவர்களை ஆழ்வார் திருநகரிக்குச் அழைத்துச் சென்றார். அங்கே...
நாதமுனிகள் பராங்குசதாஸரை தேடிச் சென்று அவரிடம் திருவாய்மொழி பற்றி விசாரிக்க, “திருவாய்மொழியும், மற்ற பிரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டன. எங்களுடைய பரமாசாரியாரான ஸ்ரீமதுரகவிகள் நம்மாழ்வார் குறித்து ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதினோரு பாசுரங்களை அருளியுள்ளார். அதுதான் எங்களுக்குத் தெரியும்.”
இன்னொரு விஷயம் என்று பராங்குசதாஸர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது...
உ.வே.சா லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் இலக்கணங்களும் பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்து பிரித்துப் பார்த்தபோது தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.
லஷ்மண கவிராயர் “எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவியார் தம் புருஷர் இறந்தவுடன் சொந்த ஊருக்குப் போகும்போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்” என்றார். “பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு போயிருக்க வேண்டும்” என்றார். அவர் மேலும் “ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். அவருக்கு எனக்கும் இப்பொழுது சண்டை. என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்துவிட்டான்.அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்திவிட்டேன்” என்றார்.
உ.வே.சா “எனக்காக உங்கள் மாமனாரிடம் விரோதம் பாராட்டாமல், தமிழுக்காகக் கேட்டு வாங்கி வாருங்கள்” என்றபோது, கவிராயரும் “சரி” என்று ஒப்புக்கொண்டார். இரவு அவர் வீட்டில் திண்ணையில் சோகமாக உ.வே.சா உட்கார்ந்து, சில ஸ்ரீவைஷ்ணவர்கள் சொன்ன பழைய உரைகளைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது அவர் மனம் அதில் ஈடுபட முடியவில்லை. அவர் மனம் முழுக்க பத்துப்பாட்டு அகப்படவில்லையே என்ற கவலையில் இருந்தது. அந்த சமயம்...
கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரத்துக்கு அடியில் அவரை தியானித்து, பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார், அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றார். உடனே யோகத்தில் வல்லவரான நாதமுனிகள் சடகோபனை தியானித்து பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை சேவித்து (சொல்லி) முடித்தார். அப்போது...
திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும் உற்சவத்துக்கு எழுந்தருளியபோது உ.வேசா அவர்கள், பெருமாள், நம்மாழ்வாரை தரிசனம் செய்து இவ்வாறு எழுதியிருக்கிறார்.
அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! வேதம் தமிழ் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், ‘இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன்.
பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன். ஆனால்...
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் காட்சி தந்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அதற்கு நாதமுனிகள் “திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் வேண்டும்” என்று கேட்க, ஆழ்வாரும் அவருக்கு “தந்தோம்” என்று திருவாய்மொழி மட்டும் அல்லாமல் மற்ற ஆழ்வார்களின் அருளிசெயல்களையும் அதன் அர்த்தங்களையும் அவருக்குத் தந்தருளினார். அதை நாதமுனிகள் தொகுத்து, இசை அமைத்து இன்றும் ஸ்ரீவைஷ்ணவக் கோயில்களிலும், இல்லங்களிலும் பிரபந்தம் சேவிக்கப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ஸ்ரீமந் நாதமுனிகள்.
கவிராயர் “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கிவந்தேன்” என்று கூறி, மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.
உ.வேசா அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது, நிலாவின் ஒளியில் சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார். இன்று பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நாம் படிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த தமிழ்த் தாத்தாதான்.
உதவிய நூல்கள்: நிலவில் மலர்ந்த முல்லை, என் சரித்திரம், சுவடிப்பதிப்பின் முன்னோடிகள், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரம் நூல்கள்.

வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்இரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளுடன் செல்லும் வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.
- எழுத்தாளர் பா.ராகவனின் முகநூல் பதிவு.


42வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம் 20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள், வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.
எண்ணிக்கையில் 800-ஐ நெருங்கிய அரங்குகள். ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு செய்வது மட்டுமல்ல - பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான். அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
பொங்கல் பண்டிகையோடு புத்தகத் திருவிழாவும் இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம் எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக் கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.
·        தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.
·        ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக் காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.
·        ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை) காணமுடியும்.
·        புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.
மேற்கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து ஒவ்வொரு வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமான காரணங்கள் இருக்கக்கூடும். ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ - மைதானத்தில் நடைபெற்ற ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப் பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.
துறைவாரியாக ஸ்டால்களை ஒதுக்குவதைக் குறித்துச் சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள் எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.
இணையத்தில் நுழைவுச்சீட்டை பெறும் செயலியை அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் - எண் இணைந்த அட்டவணையைப் பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல. தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை - அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான் அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் - அரங்கிற்கும் இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும் வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர். இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின் சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.
சென்னை புத்தகக் காட்சி மாலை நேரச் சொற்பொழிவுகள் எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும், விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். ‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில் இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில் ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து - விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப் பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன் பேசலாம் - எழுத்தாளர்! கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம் புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.
போதாமைகள் பல இருப்பினும் வாசிப்பை - பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள் வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள் கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள் மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘பார்வையாளர்கள்’ 42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத் தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம், சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன என்பதே உண்மை.
நூலகக்கொள்முதல் என்பது விசித்திரமான சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர் பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே!
உணவு விடுதியில் அமர்ந்து அம்புலிமாமா கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும் அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன் சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார் 1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது!
எனவே, புத்தகக்காட்சிகள் இன்னும் பெருக வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, பதிப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.
சென்னைப் புத்தகக்காட்சி வெற்றியா - தோல்வியா என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும் இடம் உண்டு.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம்! ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்டுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தீரா சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும் தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல - எல்லாப் புத்தகக் காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.

கேரளத்துச் சுவரோவியங்கள்: வனப்பும் எழிலும் சிறப்பும் | அரவக்கோன்சுவர் ஓவியப்படைப்பில் கேரளத்துக்கு நீண்டவரலாறு உள்ளது. பொ.யு. ஏழு - எட்டு நூற்றாண்டுகளிலிருந்து அது தொடங்குகிறது. வடக்கில் ராஜஸ்தான் சுவர் ஓவியங்களுக்கு இணையான சிறப்புப் பெற்றவை. ஆலயங்கள், அரசு மாளிகைகள் கிறிஸ்துவ தேவாலயங்கள் என்று அவை ஏராளமாக இன்றளவும் நம்மிடையே உள்ளன.
சுவர் ஓவியங்களின் தொடக்கமாக இன்றையத் தமிழ் மாநிலத்தில் உள்ள கன்யாகுமரி மாவட்டத்தில் திருநந்திக்கரா என்னும் இடத்தில் அகழ்ந்து உருவான குகைக்கோயிலில் உள்ளதைக் கூறலாம். பொ.யு. 7-8ம் நூற்றாண்டுகளில் பல்லவர் அகழ்ந்து உண்டாக்கிய இந்தக் குகை ஆலயம் முதலில் சமணத்துக்கானதாக இருந்துள்ளது. இதில் உள்ள ஓவியங்கள் பொ.யு. 9-12 நூற்றாண்டுகளில் தீட்டப்பட்டவை. பொ.யு.13-14ம் நூற்றாண்டுகளுக்கிடையில் தீட்டப்பட்ட காந்தளூர், பிஷரிக்காவு பகவதிஅம்மன் ஆலயம் (கோழிக்கோடு), பார்த்திவபுரம் (கன்யாகுமரி), திருவிக்ரமபுரம் (திருவனந்தபுரம்) சுவர் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. கேரளத்துச் சுவரோவிய, சிற்ப பாணி பெரிதும் பல்லவ பாணியைப் பின்பற்றினவைதான் என்பது திருநந்திக்கரா குகைக்கோயிலில் காணப்படும் ஓவியங்களின் வழியைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளமுடியும்.

பொ.யு.14-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் கேரளச் சுவர் ஓவியத்தின் பொற் காலம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. மட்டஞ்சேரி அரசு மாளிகையில் உள்ள இராமாயண, கிரிஜா திருமண சுவர் ஓவியங்களும், வடக்குநாதன் ஆலயம், (திருச்சூர்) செம்மந்திதா சிவன் ஆலயம், (திருச்சூர்) குடமலூர் தேவி ஆலயம் (கோட்டயம்), தொடிக்களம் (கண்ணூர்) சிவன் ஆலயச் சுவர் ஓவியங்களும் நேர்த்திக்கு உச்சம் தொட்டவை என்று சிறப்பிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, பையனூர்க்காவு, திருசக்ரபுரம், கோட்டக்கல் ஆலயங்கள், பத்மநாபபுரம் அரசு மாளிகை ஓவியங்கள் உருவாயின. பொ.யு.14-17 நூற்றாண்டுக் கேரளச் சுவர் ஓவியங்களை இந்தியச் சுவர் ஓவிய வரலாற்றின் இறுதிப்பகுதி என்று என்று இந்தியச் சுவர் ஓவிய வரலாறு கூறுகிறது.
பொ.யு.15 ஆம் நூற்றாண்டில் நாராயணன் என்பவரால் படைக்கப்பட்ட தந்திர சமுச்சயமற்றும் ஸ்ரீகுமாரரின் (16-பொ.யு.) சிற்ப சாஸ்திரம்’ (ஆலயக் கட்டடக்கலை இலக்கண நூல்கள்) இரண்டும்தான் இந்த ஓவியர்களால் பின்பற்றப்பட்ட நூல்கள். சிற்ப சாஸ்திரம்நூலில் ஆலயக் கட்டமைப்பு, ஓவியத்துக்கான இலக்கணம் ஆகியவை பற்றி விவரங்கள் உள்ளன. தென்பகுதிக்கு, குறிப்பாகக் கேரளத்துக்கு இதுதான் சிற்பக்கலை நூல். கேரளச்சுவர் ஓவியங்கள் சித்ர சூத்ரஓவிய இலக்கண நூலைப் பெரிதும் பின்பற்றிவிதமாகவே உள்ளன. தமக்கான தனியான அணுகுமுறையும், குறியீடுகளும், வண்ணத்தொகுப்பும், தோற்ற வடிவமும், கட்டமைப்பும் கொண்ட அவை, இந்தியாவின் மற்ற எந்தச் சுவர்ப்பாணியாலும் பாதிக்கப்படாது விலகியே இயங்கியது.
அரசு மாளிகைகள்
மட்டஞ்சேரி அரசு மாளிகை
கேரளத்து அரச மாளிகைகளும் ஆலயங்களும் அமைப்புமுறையிலும் தோற்றத்திலும் பெரும் ஒற்றுமையைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாற்புறமும் சரியும் கூரையும், அவற்றின்மேல் வேயப்பட்ட மங்களூர் ஓடுகளும், கூரையைத் தாங்கும் கனத்த நீண்ட மரஉத்திரங்களும், அதைத்தாங்கி நிற்கும் சிற்பவேலைப்பாடுகள் கூடிய மரத்தூண்களும் என்று அவை விளங்குகின்றன. மரச்சிற்பங்களைப் படைப்பதிலேயே அவர்களின் அக்கறை இருந்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடும், கர்நாடகமும் அந்த நிலத்து சிந்தனையில் இடம் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

பரபரப்பான துறைமுகத்தைக் கொண்டது கொச்சி. கொச்சி நிலப்பகுதி பெரும்படப்பு ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது. அது கொச்சி மன்னர்களின் தலைநகரம். மட்டஞ்சேரி அம்மன்னர்களின் அரசு மாளிகை. உணவுக்கு மணமும் காரமும் சேர்க்கும் கருமிளகு, இஞ்சி ஏலக்காய் போன்ற பொருள்களை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் போர்த்துகீசிய வர்த்தகர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த தருணம் அது. கள்ளிக் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சமுத்ரீ (ஸாமரின்) மன்னருடன் கொச்சி மன்னருக்கு இருந்த பகையைப் பயன்படுத்திக் கொண்டனர் போர்ச்சுகீசியர். தங்கள் பாதுகாப்புக்காக ஒரு கோட்டையே கட்டிகொண்டு அதில் வசித்தார்கள். ராணுவமும் பாதுகாப்புக்கென இருந்தது. கொச்சி அரசர்களின் ஆதரவுடன் வர்த்தகம் செய்த அவர்கள் அரசு விவகாரங்களில் மன்னர்களை ஏறத்தாழத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது மன்னராக விளங்கியவர் வீர கேரள வர்மா தம்புரான் (1552-55-பொ.யு.) அவரது பரிவுப் பார்வையில் தொடர்ந்து இருக்கும் விதமாகவும் அவரை மகிழ்விக்கும் விதமாகவும் மட்டஞ்சேரியில் ஒரு பெரிய மாளிகையைத் தம்செலவில் எழுப்பி அதை அன்பளிப்பாகக் கொடுத்தனர். அத்துடன் ஒரு தங்கக் கிரீடமும் பரிசளித்தனர். பொ.யு. 1663ல் டச்சு நாட்டிலிருந்தும் கடல் வர்த்தகம் செய்ய வர்த்தகர்கள் கொச்சியில் வந்து இறங்கினர். போர்ச்சுகீசியரை அகற்றி அந்த இடத்தைத் தமது வசமாக்கிக் கொண்டனர். மட்டஞ்சேரி மாளிகையை விரிவாக்கம் செய்து கூடுதல் எழில் சேர்த்தனர். இதனால் பின்வந்த ஆண்டுகளில் அது டச்சு மாளிகை என்றும் அழைக்கப்பட்டது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் அது கொச்சி மன்னர்கள் வசித்த மாளிகையாக விளங்கியது. இந்த மன்னர் வரிசையில் பரிக்ஷித் தம்புரான்தான் கடைசி. அவர் ஒரு ஆண்டுமட்டுமே அரியணையில் இருந்தார். 1949ல் கொச்சி திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட்டது.
மட்டஞ்சேரி மாளிகை நடுக்கட்டு எனப்படும் நான்கு மாளிகைகளைக் கொண்டது. அவற்றின் நடுவில் உள்ள பெரிய திறந்தவெளியில் மன்னர்களின் குலதெய்வமான பழையனூர் பகவதி ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் உட்புறம் முழுவதும் மரச்சிற்பவேலைப்பாடு கொண்ட கூரையும் அதைத்தாங்கும் தூண்களும் உள்ளன. கற்பலகைபோன்றே தோற்றம் கொண்ட நிலத்தில் பதியப்பட்ட பலகைகள் மரம் எரித்த கரி, எரித்த தேங்காய் ஓடு, சுண்ணாம்பு, பழச்சாறு, மஞ்சள் நீக்கப்பட்ட முட்டையின் வெள்ளை திரவம், ஆகியவற்றைக் கலந்து உருவானவை. சிவனுக்கும் தனி ஆலயம் இந்த வளாகத்தில் உள்ளது.
16-17ம் நூற்றாண்டுகளில் மாளிகையின் அறைச் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இராமாயணம், மஹாபாரதம் இரண்டிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகள் ஓவியங்களாயின. அவை நிலத்திலிருந்து கூரைவரை உள்ள சுவர்ப்பரப்பில் பிரிக்கும் கலைவடிவப் பட்டைகளுடன் அடுத்தடுத்து உள்ளன. ஓவியக் காட்சிகளைப் பிரிக்கும் கோடுகளே அரை அடி அகலம் கூடியது. அவற்றில் மலர்கள், பறவைகள் கோலவடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இதை ராஜஸ்தான், முகலாய சிற்றோவியங்களில் காணப்படும் எல்லைக் கோடுகளுடன் ஒப்பிடலாம்.
தொடக்கமாக, 16ம் நூற்றாண்டில் குழலூதும் கண்ணனின் கோகுல லீலைகள் ஓவியமாயின. (வேணுகோபாலன் கதைகள்.) தொடர்ந்து பின்வந்த ஆண்டுகளில் அவற்றின் இடையிடையே இராமாயண காவியத்திலிருந்து எடுக்கப்பட்ட தொடர் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டஆத்யாத்ம ராமாயணம்என்னும் மலையாள மொழிக் காவியத்தில் உள்ள விவரங்களைப் பின்பற்றி ஓவியமாயின என்னும் அழுத்தமான கருத்து உண்டு.
தசரதர் குழந்தை வேண்டி செய்யும் புத்திரகாமேஷ்டி யாகம்தொடங்கி இராமர் இலங்கைப் போருக்குப் பின் அயோத்தி மீள்வதுவரையான நிகழ்வுகள் தொடர் ஓவியங்களாகி உள்ளன. 300 சதுர அடிகளைக் கொண்ட48 ஓவியங்களைக் இங்கு காணலாம். காட்சிகளைப் பிரிக்கும் பட்டைக் கோடுகள் ஓவியத்தின் காட்சித் தொடர்ச்சியை இடையூறு செய்யவில்லை. கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் உள்ள நாயக்கர் கால இராமாயண ஓவியத் தொடருடனும் இதை உடன் வைத்துப் பார்க்கலாம். இரண்டின் கருப்பொருளும் ஒன்றுதான் என்றாலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஓவிய சிந்தனை வழியும் வண்ணத்தொகுப்பு வழியும் பெரும் வேறுபாட்டைக் கொண்டுள்ளதை அறியமுடியும். ஒன்றையொன்று பாதிக்கவில்லை என்பதிலிருந்து கலைஞர்களின் இடப்பெயர்ச்சி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமை தெரிகிறது. அதற்கான காரணம் அறிவது கலை வரலாற்று ஆய்வாளருக்கானது.
தனி ஓவியங்கள்
ஐந்து தலைகொண்ட தனது படத்தை விரித்து உயர்த்தி ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுந்தநாதர் எனப்படும் மாலவன் அமர்ந்திருக்கும் ஓவியம் 6ஆம் நூற்றாண்டு பாதாமி குகை விஷ்ணு சிலையை நினைவுபடுத்துகிறது. திருப்புணித்துரா ஆலயத்தில் உள்ள பூர்ணத்தயேசர் விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஓவியத்தின் பாதிப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். தாமரை மலர்மீது அமர்ந்த இலக்குமி ஓவியமும் காணப்படுகிறது. இவையெல்லாம் பின்னர் சேர்க்கப்பட்டவை.
காளிதாசனின் குமாரசம்பவம்காவியத்திலிருந்து சிவனும் உமையும் கைலாய மலையில் வீற்றிருக்கும் காட்சி, கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கியிருக்கும் காட்சி, படுத்திருக்கும் கிருஷ்ணர் தன்னைச்சுற்றி இருக்கும் கோபியருடன் ஈடுபடும் பாலுறவுக் காட்சி, அரசரின் பள்ளி அறைச் சுவரில் சிவனும் உமையும் ஆரத்தழுவியவிதமாக உள்ள காட்சி போன்றவை 18-19ம் நூற்றாண்டுக்கானவை.
நாராயணமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தன் எம்பராந்தி என்னும் ஓவியரால் பெரும் எண்ணிக்கையிலான ஓவியங்கள் தீட்டப்பட்டதாக Corporation of chochin என்னும் இணையதளத்தில் ஒரு குறிப்பு உள்ளது.
பத்மநாபபுரம் அரசு மாளிகை
கேரளத்தின் தென்கோடிப்பகுதியை திருவிதான்கோடு வேநாடு அரசர்கள் ஆட்சிசெய்து வந்தனர். கல்குளம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் இருந்த அரசரின் மாளிகை மண்ணாலானது. 14ம் நூற்றாண்டிற்கானது. மன்னர் இரவிப்பள்ளி இரவிவர்மா குலசேகரப் பெருமாள் (பொ.யு.1592-1609). ‘தச்சு சாஸ்திரம்என்னும் நூலை முன்மாதிரியாகக் கொண்டு அதை பொ.யு.1602ல் மரமாளிகையாகப் புதுப்பித்துக் கட்டுவித்தார். 1550-1750களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இது மன்னர்கள் வசித்த மளிகையாக விளங்கியது. 1729-1758களுக்கு இடையில் மன்னராக இருந்த அனிசம்திருநாள் மார்த்தாண்டவர்மா மாளிகையில் பல எழில் கூடிய பகுதிகளை உருவாக்கி, தமது குலதெய்வமான பத்மநாபனுக்குக் காணிக்கையாக்கி அதன் முந்தையப் பெயரான கல்குளம் மாளிகை என்பதை மாற்றி பத்மநாபபுரம் மாளிகை என்று பெயர் சூட்டினார். 1600-1790களில் அதுதான் திருவிதாங் கோடு அரசின் தலைநகரமாகச் செயற்பட்டது. 1795ல் மன்னர் கார்த்திகைத்திருநாள் இராமவர்மா (1758-1798) தலைநகரைத் திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். ஆனால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா பத்மநாபபுரத்திலேயே தொடர்ந்து. என்றாலும் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி ஆலயத்தைச் சுற்றிக் குடியிருப்புக்கள் வளர்ந்து விரிவடைந்ததால் பத்மநாபபுரம் மெல்லத் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

மன்னர் சுவாதித்திருநாள் இராமவர்மா (1813-1846) ஆட்சிக்காலத்தில் இந்த நவராத்திரித் திருவிழா திருவனந்தபுரத்துக்கு இடம்பெயர்ந்தது. பத்மநாபசுவாமி ஆலயத்துக்கு அருகில் புதிதாக எழுப்பப்பட்ட குதிரை மாளிகையில் நவராத்திரி மண்டபத்தில் நிகழத்தொடங்கியது. 1850களுக்குப்பின் பொதுமக்கள் பத்மநாபபுரத்துக்குச் செல்லும் பொதுவழி மூடப்பட்டது. மக்களிடம் மாளிகையில் பேய் நடமாட்டம் உள்ளதாக ஒரு செய்தி பரவியது. திருவிதாங் கோடு அரசின் கடைசி மன்னரான சித்திரைத்திருநாள் பலராமவர்மா அவரது அன்னை ராஜமாதா சேதுபார்வதி அம்மாள் திவான் சர் சி.பி.ராமசாமி ஐயர், அப்போது அரசின் கலைப்பகுதியின் வழிநடத்துபவராக இருந்த J.H.Cousins நால்வரும் இணைந்து அரசு அருங்கட்சியகத்தின் தலைமைப் பொறுப்பாளர் வாசுதேவப்பொதுவாள் மேற்பார்வையில் 1934ல் இம்மாளிகையை அருங் காட்சியகமாக மாற்றினர். இந்தியா விடுதலை அடைந்தபின் மொழிவாரி மாநிலங்கள் உண்டாக்கப்பட்டன. இம்மாளிகைப் பகுதியான கன்யாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரித்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மாளிகைப் பராமரிப்பு கேரள அரசிடம் ஒப்புவிக்கப்பட்டது. இன்றளவும் அது தொடர்கிறது. மிகநேர்த்தியாகப் பராமரிக்கப்படும் மாளிகை புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதற்கொப்பான மாளிகை உலகில் வேறு இல்லை என்று புகழப்படுகிறது.
மரத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த மாளிகையில் உள்ள மரச்சிற்பங்கள் சிற்பியின் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் தெரிவிக்கின்றன. அறைகளை உண்டாக்கமட்டுமே செங்கல் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. வேற்று நிலத்து கலைப்பாணி கலக்காமல் கேரளச் சிற்பவழி மட்டுமே கொண்டுள்ள இம்மாளிகையில் இந்நிலத்தில் விளையும் மரங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. மரச்சிற்ப வேலைப்பாடுகளைக்கொண்ட மாளிகை என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு உள்ள நவராத்திரி விழா மண்டபத்தில் தூண்கள் கல்லால் ஆனவை. அவற்றில் விளக்கைக் கைகளில் ஏந்தியபடி நிற்கும் பெண் சிற்பங்கள் உள்ளன. விழாக்கால நிகழ்ச்சிகள் இங்குதான் நிகழ்ந்தன. அனைத்து விளக்குகளும் ஒளிரும் மண்டபத்தை கற்பனை செய்து பார்த்தால் கனவுலகம் போனதுபோலத் தோன்றுகிறது.
இங்கு உள்ள சுவர் ஓவியங்கள் கேரளப்பாணி படைப்புச் சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்துமதம் சார்ந்த இதிஹாசம் புராணம் போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் நிகழ்வுகளையும் கடவுளரின் பல்வேறு தனித்த தோற்றங்களையும் சுவரப்பரப்பு முழுவதும் நெருக்கி அடைத்தவிதமாக ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. தையம், கொடியாட்டம், கதகளி போன்ற ஆலயம் சார்ந்த நாட்டியங்களிலும் ஆலயத் திருவிழாக் காங்களில் நிலத்தில் கடவுளர் உருவத்தை வரைந்து வண்ணப்பொடிகள் கொண்டு தூவி ஓவியமாக்குவதும் இவற்றில் பிரதிபலிக்கின்றன. மானுடன் விலங்கு போன்றவற்றின் உருவங்கள் மிகைப்படுத்தப்பட்ட அளவில் பெரியதாகக் காணப்படுகின்றன. அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் உடலை றைக்கும் விதமாக உள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணத் தொகுப்பு பளீரென்று எதிரெதிர் வண்ணங்களின் கூட்டமைப்பில் உள்ளன. வண்ண அடர்த்திகொண்டு உருவங்களின் முப்பரிமாணம் உண்டாக்கப்பட்டுள்ளது. இயற்கையினின்றும் விலகிய உடற்கூறு கொண்ட உருவங்கள் ஓவியத்தில் அடைத்த விதமாகவும் கூட்டமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. உருவங்களின் முகங்களிலும் ஒரு பொதுத்தன்மை பின்பற்றப்பட்டுள்ளது. உருவங்களை உண்டாக்கும் கோடுகள் தடையற்றதும் பிசிரற்றதும் திடமானதுமானதுமாக ஓவியனால் கையாளப்பட்டுள்ளன. அவை ஒயில் கூடியவை. ஓவியனின் மனத்தெளிவை வெளிப்படுத்துபவை.
காமத்தைக் கூறும் ஓவியங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டுள்ளன. கடவுளர், மானுடர், விலங்குகள் என்று வேறுபாடின்றிக் காணப்படும் புணர்ச்சிக் காட்சிகள் உடலுறவு வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதாகவே இடம்பெற்றுள்ளன. கடவுளருக்கும் எளிய மனிதனுக்கும் உள்ள நுண்ணிய கோடு அகற்றப்படுகிறது. மதமும் கலையும் இங்கு ஒன்றாக பிணைந்துவிடுகிறது. இவற்றில் தேவைக்கதிகமாக உருவங்கள் இடம்பெற்றுள்ள தோற்றம் தெரிகிறது. ஆனால், திப்பெத் தங்க்கா ஓவியங்களிலும் இவ்வித ஓவியக் கட்டமைப்புத்தான் உள்ளது. சிலபோதுகளில் ஓவியன் ஒரு கருவிபோல உருவங்களை மீண்டும் மீண்டும் படியெடுப்பது போலவும் நினைக்க வைக்கிறது.
கிருஷ்ணாபுரம் மாளிகை
ஆலப்புழா மாவட்டத்தில் காயாங்குளம் என்னும் கிராமத்தில் உள்ளது கிருஷ்ணாபுரம் மாளிகை. பொ.யு. 1746ல் ஒடநாடு திருவிதாங்கோடு அரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போரில் திருவிதாங்கோடு மன்னர் மார்த்தாண்டவர்மா வெற்றிபெற்றார். இந்தப் பகுதியைத் தனது ஆளுமையின் கீழ் கொணர்ந்தார். வீர ரவிவர்மா (பொ.யு. 1700-1775) எழுப்பியிருந்த மாளிகையை முற்றிலுமாக இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக ஒரு மாளிகையைக் கட்டினார். கேரளக் கட்டடப் பாணியுடன் மேலைநாட்டுப் பாணியும் கலந்தது உருவானது அந்த மாளிகை. அருகில் ஆலயம், குளம் போன்றவையும் உருவாயின. குளத்தின் அடியில் ஆபத்துக்காலத்தில் மன்னர் தப்பிச் செல்ல சுரங்க வழியும் உண்டு என்பர். பதினாருக்கெட்டு எனப்படும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட இம்மாளிகை 22 அறைகளைக் கொண்டது. மரக்கதவுகளில் நாதாங்கிகூட மரத்திலேயே செய்து பொருத்தப்பட்டுள்ளது. தரைத்தளம் மரப்பலகைகளால் ஆனது. மாடிப்படிகளின் அமைப்பு பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளது. மாளிகையின் நடுவில் உள்ள பெரிய நீர்த்தொட்டி வெப்பத்தை எப்போதும் தணிக்கும் விதமாக உள்ளது. காலப்போக்கில் மாளிகைப் பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்றுப் போயிற்று. சுற்றியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு கதவு போன்ற மரப் பொருள்கள் களவாடப்பட்டன. 1950ல் பத்மநாபபுரம் மாளிகையின் குறு வடிவம் இது என்று புகழப்படும் இம்மாளிகை கேரள அரசால் மராமத்து செய்யப்பட்டு கலைக்கூடமாக மாற்றி அமைக்கப்பட்டது.
இங்கு உள்ள கஜேந்திர மோட்சம்சுவர் ஓவியம் அளவில் மிகப்பெரிது. அறையின் ஒரு பக்கத்துச் சுவர் முழுவதும் பரவியிருக்கும் அது இப்போது கலைக்கூடமாக மாற்றிய பகுதியில் உள்ளது. ஓவியத்தின் உயரம் 9.8 அடிகள். கேரளத்துச் சுவர் ஓவியங்களிலேயே இதுதான் தனித்த பெரிய ஓவியம் என்னும் குறிப்பும் உள்ளது. ஓவியத்தில், முதலையின் பிடியில் இருந்து வேழத்தை விடுவிக்க கருடனின்மேல் அமர்ந்தவாறு வானில் தென்படும் விஷ்ணு, மையமாகக் காணப்படுகிறார். அவரைத்தொழும் முனிவர்கூட்டம், பல்வகை விலங்குகள், வனத் தாவரங்கள், யாளி போன்ற கற்பனை விலங்குகள் சுற்றிலும் இடம் பெற்றுள்ளன. கீழ்ப்புறத்தில் குழந்தை கிருஷ்ணனும் கோபியர்களும் காணப்படுகின்றனர்.
ஆலய ஓவியங்கள்
புண்டரீகபுரம் ஓவியங்கள்
கோட்டயத்தில் தலயோலப்பரம்பு என்னும் இடத்துக்கு அருகில் உள்ள சிறு குன்றின்மீது புண்டரீகபுரம் ஆலயம் உள்ளது. கருவறையில் கருடன்மீது பூதேவியுடன் வீற்றிருக்கும் விஷ்ணு சிலை உள்ளது. கற்பகத் தருவின் கீழ் வீற்றிருக்கும் சிவபார்வதி, மகிஷனை அழிக்கும் மூர்க்கமான துர்க்கை, குழந்தை கிருஷ்ணனின் குறும்புகள், மானுடரை அச்சுறுத்தும் யக்ஷி, இராம பட்டாபிஷேகம், சிவ தாண்டவம், புரவியின் மீது அமர்ந்துள்ள சாஸ்தா என்னும் ஐயப்பன் போன்ற காட்சிகள் ஓவியங்களாயிருக்கின்றன. மட்டஞ்சேரி பத்மநாபபுரம் ஓவியங்கள் போல இவை பரவலாக அறியப்படவில்லை ன்றாலும் அவற்றுக்கு இணையானவைதான் இவையும். இவ்வோவியங்கள் தோராயமாக 18ம் நூற்றாண்டில் தீட்டப்பட்டவை.
கோட்டக்கல் வெங்கடதேவர் சிவ ஆலய ஓவியங்கள்
ஆயுர்வேத மருத்துவத்துக்குக் கோட்டக்கல் என்று இன்று அறியப்படும் கோட்டக்கல் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோழிக்கோடு சாமரின் (சமுத்ரி) மன்னர்களின் கிழக்குப் பகுதியின் முக்கிய இடமாக இருந்தது. அதற்கு முன்னர் அது வலுவநாடு அரசரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்தது.
இந்த ஆலயத்தில் உள்ள ஓவியங்கள் பொ.யு. 1866-1878 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தீட்டப்பட்டவை. ஆலயத்தின் தெற்குச் சுவரில் ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம், பொருள் உதவி செய்தவர், ஓவியர்களின் பெயர்கள் போன்ற விவரங்கள் காணப்படுகின்றன. நீண்ட சுவர் முழுவதும் காட்சித்தொடர் உள்ளது. சுவரை சிறுபகுதிகளாகப் பிரித்தும் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களின் வண்ணத்தொகுப்பும் கோடுகளின் திண்மையும் காண்போரின் கண்களுக்குத் தப்பாது. சைவமும் வைணவமும் இணைந்த சாக்த வழிக்கானது இவ்வாலயம். இங்கு இரண்டு வழி ஓவியங்கள் உள்ளன. அனுபவமும் முதிர்ச்சியும் கூடிய ஓவியரின் படைப்புகளும், வண்ணத்தேர்வின் சிறப்பும் காணப்படுகின்றன. சிவன், மோஹினி, கருடன், சக்தி, பூதேவியை ஏந்திய வராகர் போன்ற ஓவியங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
எட்டுமானூர் ஓவியங்கள்
கோட்டயம் நகரித்திலிருந்து வடக்காகப் பயணித்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எட்டுமானூரில் உள்ள சிவன் ஆலயத்தை அடையலாம். இந்த ஆலயத்தின் சிவன் உருவம் காண்போரை அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட சரபமூர்த்தியாகும். கல், மரம் இரண்டிலும் சிற்பங்களைக் கொண்டது. ஆலயத்தின் தெற்கு நுழைவாயிலில் வெளிப்புற உட்புறச் சுவர்களில் அளவில் பெரிய ஓவியங்கள் உள்ளன. இவற்றின் வனப்பைப்பற்றி ஆனந்த குமாரசாமி, ஸ்டெல்லா க்ராமரிஷ், சி.சிவராமமூர்த்தி போன்ற கலை வல்லுர்கள் விரிவாகப் பேசியுள்ளனர். இந்த ஓவியங்களில் தனித்து விளங்குவது நடராஜர்தான். இந்த ஓவியம் தெற்குப்புற உட்சுவரில் உள்ளது. 217 செ.மீட்டர் உயரமும், 360 செ.மீட்டர் அகலமும் கொண்டது. தாள சம்ஸ்போதிதாஎன்று நாட்டிய சாஸ்த்திரத்தில் பரதமுனிவரால் விவரிக்கப்பட்ட தோற்றம் கொண்டுள்ளது. 16 கரங்கள் உள்ள நடமாடும் சிவனைச் சுற்றி பூத கணங்களும், வானோரும், முனிவர்களும் காணப்படுகிறார்கள். அவர்களின் விழிகளில் பக்தியும் வியப்புக்கூடிய மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது. விஷ்ணு மழவை முழக்குகிறார். இந்திரன் குழல் ஊதுகிறான். பிரமன் நூலிலிருந்து பாடலை இசைக்கிறார். சிவனின் வலப்புறத்தில் வேதாளத்தின் மீது அமர்ந்துள்ள காளி, மூஷிகத்தின் மீது வீற்றிருக்கும் விநாயகர், வலப்புறத்தில் மூன்று தேவியர், மயில்மீது முருகன், கைகூப்பிய நந்தி என்று ஓவியம் முழுவதும் உருவங்கள் காணப்படுகின்றன.
வடக்குச்சுவரில் வாசுகியின் மீது சயனிக்கும் திருமாலின் உருவம் உள்ளது. 246 செ.மீட்டர் உயரமும் 580 செ.மீட்டர் அகலமும் கூடிய பெரிய ஓவியம் இது. இதிலும் ரிஷிகளும் வானோரும் சேஷசாயியை சூழ்ந்துகொண்டு களிக்கிறார்கள். விஷ்ணு தமது வலதுகரத்தால் சிவலிங்கத்தின்மீது மலர்களைத் தூவும் விதமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சூழ்ந்துள்ளவரின் இடையே சிவனும் காணப்படுகிறார்.
நுழைவாயிலின் வெளிபுறச்சுவரில் சிறிய ஓவியங்கள் பல காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் எது என்று உறுதியாகக் கூறவியலாது. 16ம் -18ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடைவெளிகளுடன் அவை தீட்டப்பட்டிருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாளர் கருத்து.
ஆனால் இப்போது உள்ள ஓவியங்கள் மீட்டுருவானவை. பழைமையின் எழில் அகன்று விட்டவை. அவற்றின் புராதன அடையாளமும் காணாமல் போய்விட்டது.
வலியபணயர்காவு பத்ரகாளி ஆலயச் சுவரோவியங்கள்
ஆலப்புழா மாவட்டத்தில் மன்னார் கிராமத்துக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பம்பா நதியின் சிற்றாறுக்கும் பெருமலைக்கும் இடையே உள்ளது. பத்ரகாளியை மையதெய்வமாகக் கொண்டது. சப்தமாதர் சிலைத்தொகுப்பு கருவறையில் வழிபடப்படுகிறது. சாக்தம் சார்ந்த தாந்திரிக வழிபாடுகள் அண்மைக்காலம்வரை வெளியாரின் தொடர்பின்றி நடந்து வந்துள்ளன.உன்னி நீலி சந்தேசம்என்னும் 14ம் நூற்றாண்டு நூல் தாந்திரிக வழிபாட்டுமுறை பற்றி விரிவாகச் சொல்கிறது. உக்கிரமான காளியை மகிழ்வித்து அமைதிப்படுத்தும் வழிமுறைகள் அவை. அந்த நூலைப் பின்பற்றி வழிபாடுகளும் வேள்வியில் உயிர்ப்பலிகளும் (யானை உட்பட) நிகழ்ந்தன. ஆலயத்தினுள் நுழையும்போது இப்போதும் ஒருவித அச்ச உணர்வு தோன்றுவதாகப் பலரும் கூறுகிறார்கள்.
சதுர வடிவில் அமைந்துள்ள சப்தமாதர் ஆலயச் சுவர்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன. தேவி மஹாத்மியம், வைஷ்ணவ புராணம், பாகவதம் போன்ற நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட காட்சிகள் ஓவியமாகியுள்ளன. அகோர சிவன், மஹிஷாசுர மர்த்தனி, கிராத அர்ச்சுனப்போர், தாமரைமலர்மீது வீற்றிருக்கும் ஐந்து தலைகளும் பத்துக்கரங்களும் கொண்ட திரிபுரசுந்தரி, உமையுடன் கூடிய சிவன், நடமாடும் சிவன், நரசிம்ஹர், வேட்டைக்குச்செல்லும் சாஸ்தா, புரவியின்மேல் வீற்றிருக்கும் பார்வதி, திரௌபதி திருமணம், கிருஷ்ணலீலைக் காட்சிகள், பத்ரகாளி என்று கடவுளரின் பெரும் கூட்டம் சுவரை நிறைக்கிறது.
தெற்குச்சுவரை மஹிஷாசுர மர்த்தனியின் ஓவியம் நிறைக்கிறது. அருகில் சப்தமாதரின் ஓவியமும் உள்ளது. அதில் எழுவரும் அவரவர்க்குரிய ஊர்திகளில் அமர்ந்திருக்கிறார்கள். சூரிய நாராயணர் ஓவியம் அதிகம் காணப்படாத ஒன்று. சூரியனின் உருவம் சுவரின் மையமாக மற்ற உருவங்களைக் காட்டிலும் பெரிதாக ஓவியமாகியுள்ளது.
அருகில் உள்ள சிவ ஆலயத்து கிழக்குப்பகுதிச் சுவரில் இராம இராவணப் போர், இராவணன் மரணம், மந்தோதரியின் புலம்பல், சீதையின் மீட்பு, இராமர் முடிசூடல் ஆகிய இராமாயணக் காவியக் காட்சிகள் காணப்படுகின்றன. பொதுவாக இராமாயணக் காட்சிகள் கேரளத்து ஓவியங்களில் பரவலாகக் காணப்பட்டபோதும், இங்கு உள்ளவை அவற்றின் ஓவிய வனப்புக்குப் பெயர்போனவை. உருவங்களை உண்டாக்கும் கோடுகளின் நேர்த்திக்கும், ஒத்தவிதமான வண்ணத் தேர்வுக்கும் இவை புகழப்படுகின்றன. இந்த ஓவியங்கள் படைக்கப்பட்ட காலத்தை முடிவுசெய்வது கடினம். எனினும் காளி ஆலய ஓவியங்கள் முன்னவை என்றும் சிவ ஆலய ஓவியங்கள் பின்னவை என்றும் இரு கால கட்டங்களில் தீட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்.
இவையன்றி செம்மந்தத்தா (திருசூர்) மஹாதேவ ஆலயம், கோட்டயம் குடமலூர் தேவி ஆலயம், கன்னூர் தொடிகளம் சிவன் ஆலயம், (150 ஓவியங்கள் 700 ச.அடிகள் சுவர்ப்பரப்பு) கோழிக்கோடு பிஷரிக்காவு பகவதி ஆலயம், முஞ்சிரை பார்த்திவபுரம் இங்கெலாமும் சுவர் ஓவியங்கள் உள்ளன.
சில சுவையானதும் தெரிந்துகொள்ளவேண்டியதுமானவை:
ஓவியங்களைக் கட்டும் எல்லைக்கோட்டுக்கு பஞ்சமாலைஎன்னும் பெயர் உண்டு. அவை
01- பூதமாலா (பூதகணங்களின் வரிசை), 02- மிருகமாலா (விலங்குகளின் வரிசை) 03- வனமாலா (மலர்களின் தொகுப்பு) 04- பக்ஷிமாலா (பறவைகளின் வரிசை) 05-சித்ரமாலா (பல்வேறு கோலவடிவங்களின் தொகுப்பு)
இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ இடம்பெறுகின்றன.
இந்த ஓவியங்களில் வண்ணத்தொகுப்பும் பேசப்படவேண்டிய ஒன்றுதான். சில்பரத்னாவில் கூறியுள்ளபடி ஒளிரும் முதன்மை வண்ணங்களான சிவப்பு, பச்சை, மஞ்சள் கருப்பு, வெள்ளை ஆகிய ஐந்து நிறங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கல் சிவப்பு, மண் மஞ்சள், நீலம் இல்லாத பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள்தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வண்ணங்களுடன் மரப்பிசின், இளநீர் போன்றவற்றைக் கலப்பது வண்ணம் சுவரிலிருந்து உதிராமல் இருக்கச் சேர்க்கப்படும் பசையாகும். பொ.யு. 6-7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சித்ரசூத்ரஓவிய இலக்கணநூலிலும் இந்த வண்ணத் தொகுப்புமுறை சொல்லப்பட்டுள்ளது.