Tuesday, 23 May 2017

வலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்


வலம் பிப்ரவரி 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.
 
பசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - பி.ஆர்.ஹரன்

என்ன நடக்குது சபரிமலையிலே...? - ஆனந்தன் அமிர்தன்

ஜல்லிக்கட்டு போராட்டம்: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்

தட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது? - பீட்டர் ஸிங்கர்; தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹாலாஸ்யன்

துபாஷி (ஆனந்த ரங்கப்பிள்ளை)  - பி.எஸ்.நரேந்திரன்

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி

ஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமார்

இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு

இராமானுசன் என்னும் சம தர்மன் - ஆமருவி தேவநாதன்


இறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு


தமிழில் நவீன யுகத்தின் முன்னோடியாக விளங்கிய மகாகவி பாரதியார், தனக்கு முன்பிருந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழ் இலக்கிய மரபை முழுவதுமாக கண்மூடித்தனமாக வழிபடுபவராக இருக்கவில்லை. விமர்சன நோக்குடனேயே அதனை அணுகினார். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்’ என்று அவர் அளித்த தரவரிசை அதற்குமுன்பு வேறு யாரும் செய்திராதது. இந்த மூன்று கவிஞர்களையும்தான் தமிழிலக்கியத்தின் உச்சங்களாக மீண்டும் மீண்டும் பல கவிதைகளில் பாரதியார் முன்வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். இவர்களோடு பாரதியார் பெரிதும் மதித்துப் போற்றிய மற்றொரு மகத்தான தமிழ்க்கவி என்றால் அது தாயுமானவர்தான்.
என்றும் இருக்க உளம்கொண்டாய்
இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடு இருப்பாய் நீ!
‘ஒன்று பொருள்; அஃது இன்பம்’ என
உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
- தாயுமானவர் வாழ்த்து, பாரதியார்
தாயுமானவர் பாடல்களின் தத்துவச் செழுமையும், வாழ்க்கை நோக்கும், கவித்துவமும் பாரதியாரை முழுமையாக ஆட்கொண்டன. தமிழ்ச் சிந்தனை மரபில் இத்தகைய உயர் இடத்தை அவருக்கு பாரதி அளித்திருப்பதற்கு இதுவே காரணம். புதுச்சேரி வாசத்தின்போது, வெளிப்படையாக அரசியல், சமூக விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் வேதாந்த விசாரத்திலும் தத்துவ சிந்தனைகளிலும் மூழ்குவதாக பாரதியாரின் மனப்பாங்கு அமைந்திருந்தது. கவிஞர், அரசியல் செயல்பாட்டாளர், வேதாந்தி என்று பல முனைகளிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த அவர் உள்ளத்திற்குத் தாயுமானவரின் வாழ்க்கையும், அவரது பாடல்கள் பேசும் தத்துவங்களும், தெளிவையும் வழிகாட்டுதலையும் தந்திருக்கக்கூடும்.


வரலாற்றுப் பின்னணி:

தாயுமானவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டு தமிழக வரலாற்றில் நிலையற்ற அரசாட்சிகளாலும், மாபெரும் அரசியல், சமூகக் குழப்பங்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு காலகட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைபெற்றிருந்த நாயக்க அரசுகள், இஸ்லாமிய நவாப்கள் மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் காலனியாளர்களின் தாக்குதல்களுக்கும் ஆதிக்கப் போட்டிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு சீரழியத் தொடங்கியிருந்த காலம். மிகை அலங்காரங்களும் உயர்வு நவிற்சிகளும் ததும்பும் படாடோபமான சிற்றிலக்கியங்களையும் பிரபந்தங்களையும், மன்னர்களையும் ஜமீந்தார்களையும் மகிழ்விக்கும் கேளிக்கைப் பாடல்களையுமே தமிழ்ப் பண்டிதர்களும் கவிராயர்களும் புனைந்துகொண்டிருந்த காலம்.

இத்தகைய ஒரு சூழலில், கேடிலியப்ப பிள்ளைக்கும் கஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது குழந்தையாகத் தாயுமானவர் பிறந்தார். பிறந்த ஆண்டு, 1707ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. துல்லியமான தரவுகள் இல்லை. சிவபக்தி மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த தாயுமானவர், திருச்சியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பலத் தேசிகரை முதல் ஆசானாகக்கொண்டு இளம் வயதிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த நூற்புலமை பெற்றார். கணிதம், ஜோதிடம், தர்க்கசாஸ்திரம் ஆகிய துறைகளிலும் தேர்ந்தார். அத்துடன், சைவாகமங்களையும், பன்னிரு திருமுறைகளையும், அருணகிரியாரின் திருப்புகழ் போன்ற நூல்களையும் கசடறக் கற்றார். பின்னாட்களில் அவர் புனைந்த தத்துவக் கவிதைகள் அனைத்திலும் அவரது ஆழ்ந்தகன்ற கல்வித்திறம் விளங்குவதனை அவற்றை வாசிப்பவர்கள் உணரமுடியும். 

கல்வியிலும், செல்வத்திலும் திளைத்திருந்தபோதும், இளைஞன் தாயுமானவனது மனம் அதில் நிலைகொள்ளவில்லை, சத்தியத்தைத் தேடியலைவதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியிலேயே அமைந்திருந்த சாரமாமுனிவர் மடம் என்னும் மௌனகுரு மடத்தின் சுவாமிகளிடத்தில் தீட்சை பெற்று வேதாந்த நூல்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகக் கற்றார். லௌகீக வாழ்வில் எந்த நாட்டமும் இல்லாபோதும், தந்தையின் மறைவிற்குப் பின் அவர் வகித்த உயர்பதவியை நிர்ப்பந்தத்தினால் ஏற்று, பற்றற்ற மனநிலையில் தனது கடமைகளைச் செய்து வந்தார். 1732ல் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசின்றி மறைந்ததால், அவர் மனைவி ராணி மீனாட்சி பதவியேற்றார். அதற்குச் சிறிது காலம் பின்பு, தமது பதவியைத் துறந்து தாயுமானவர் ஊரைவிட்டு வெளியேறி இராமேசுவரத்தில் யோக நிஷ்டைகளைப் பயிற்சி செய்துகொண்டு வந்தார். காதல் விருப்புற்று தன்னை ஏற்குமாறு ராணி வேண்ட, அது முறையன்று என மறுத்து தாயுமானவர் வெளியேறியதாகவும் ஒரு வழக்கு உள்ளது. பிறகு, ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்டு அரசிழந்த சோகவரலாற்றுடன் தமிழ்நாட்டில் இந்து மன்னர்களான மதுரை நாயக்க வம்சத்தினரின் உறுதி மிக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.

தாயுமானவர் பின்னர் குடும்பத்தாரின் வேண்டுதலால் ஊர் திரும்பி, திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் சிலகாலம் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்து, அதன்பின் மனைவியும் காலமானார். தாயும் இறைவனடி சேர்ந்தார். தனது மகனை அண்ணனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தாயுமானவர் முறையாக சன்னியாசம் பெற்றார். மௌனகுரு மடத்தின் தலைவராகவும் இருந்தார். இறுதிக் காலத்தில் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தில் வாழ்ந்து அங்கேயே 1737 தை மாதம் விசாகத்தன்று பூரணமெய்தினார். அவரது சமாதிக்கோயில் அங்கு இப்போது ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாடல்கள்:

தாயுமானவர் தன் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது சீடரும் சிறிய தாயாரின் புதல்வருமான அருளைய பிள்ளை என்பவர் எழுதிப் பாதுகாத்து மற்ற சீடர்களுக்கும் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 1452 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் அவற்றின் உள்ளடக்கத்தை விளக்கும் உபதலைப்புகள் கொண்டு பகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக உள்ளன.

இவற்றில் கணிசமான பகுதிகள், பத்துப்பாடல்களும் ஒரேவிதமான கடைசி அடி கொண்டு முடியும் பதிக வடிவில் அமைந்துள்ளன. இந்தக் கடைசி அடியின் வாசகங்களே மகத்தான ஆன்மீக அனுபவம் தரும் மகா மந்திரங்கள் என்னும்போது முழுப்பாடல்களின் மகத்துவம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பரிபூரணானந்தம்:

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.
மௌனகுரு வணக்கம்:

மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌனகுருவே.

(மந்த்ரம் என்பது இறைவனின் அருட்சக்தி வாய்ந்த பெயரையும், தந்த்ரம் என்பது அதைக் கையாளவேண்டிய உபாயத்தையும் குறிக்கும்.)

கருணாகரக் கடவுள்:

கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே.
ஆனந்தமான பரம்:

அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவாகி
ஆனந்தமான பரமே.
சுகவாரி:

சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவாரியே. (சுகவாரி – சுகக்கடல்)
எங்கும் நிறைகின்ற பொருள்:

இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி
எங்கும் நிறைகின்ற பொருளே.
தேஜோமயானந்தம்:

சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேஜோமயானந்தமே.
மலைவளர் காதலி:

வரைராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை-
வளர் காதலிப்பெண் உமையே. 

(மலைவளர்காதலி - பர்வதவர்த்தினி என்பதன் தமிழ் வடிவம்)
இவை தவிர்த்த வேறுசில பாடல் பகுப்புகள் அவற்றின் முதற்சொல்லை வைத்து அடையாளப் படுத்தப்படுகின்றன - பொன்னை மாதரை, எனக்கு எனச் செயல், பாயப்புலி, எடுத்த தேகம், கற்புறு சிந்தை, கல்லாலின் என்பது போல.
இதுவன்றி, இரண்டே அடிகளில் அமைந்த ‘கண்ணிகள்’ பலவற்றையும் தாயுமானவர் இயற்றியுள்ளார். திருக்குறள் போல சூத்திர வடிவில் அமைந்து ஆழ்ந்த உட்பொருளை விளக்கும் தன்மை கொண்டவை இவை. சில உதாரணப் பாடல்கள்:
பராபரக்கண்ணி:

எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறித்
தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே.

நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே.

(பராபரம் – பரம்+அபரம்; மேலானதும், கீழானதும் இரண்டுமே ஆன இறைவடிவம்)


பைங்கிளிக்கண்ணி:

தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத
எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே.

உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம்
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே.
எந்நாள் கண்ணி:

பொய்க்காட்சி ஆன புவனத்தை விட்டு அருளாம்
மெய்க்காட்சி ஆம் புவனம் மேவுநாள் எந்நாளோ.
தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவது எந்நாளோ.
தத்துவ நோக்கு:
தாயுமானவரின் தத்துவ நோக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் வேரூன்றிச் செழித்திருந்த சைவசித்தாந்தத்திலிருந்து முளைவிட்டு, அதேசமயம் அதன் வரம்புகளைத் தாண்டியும் வளர்ந்து தனக்கான ஒரு தனித்துவத்துடன் மிளிர்வது.
உபநிஷதங்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும், ஆழ்ந்துகற்று அத்வைத வேதாந்தத்தின் தத்துவ சாரத்தை அவர் உவப்புடன் உள்வாங்கியிருக்கிறார். தாயுமானவர் பாடல்கள் அனைத்திற்கும் விரிவான உரையெழுதியவர் சுவாமி சித்பவானந்தர். அந்த உரைகளில் பல இடங்களில் உபநிஷத மந்திரங்களுக்கும் தாயுமானவர் பாடல்களுக்கும் நேரடியாக உள்ள ஒப்புமையை எடுத்துக் காட்டியபடியே செல்கிறார்1. “அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனரென்று தெளிக. தமது நூலிலும் உபநிடத்துட்போந்த சைவக் கருத்துக்களையே வேதாந்தக் கருத்தாகவும் வேதக் கருத்தாக்கவும் கூறினார்” என்று தமது தாயுமானவர் வரலாற்று நூலில் கா.சுப்பிரமணிய பிள்ளை குறிப்பிடுகிறார்2.
யோக பூமிகள், அஞ்ஞான பூமிகள் எனப்படும் ஆழ்மன நிலைகள் குறித்த கருத்தாக்கங்கள் தாயுமானவர் பாடல்களில் வருகின்றன. இவை, யோகவாசிஷ்டம் (தமிழ் வடிவம் ஞானவாசிட்டம் என்று அழைக்கப்படுகிறது) என்ற மாபெரும் யோகநூலில் உள்ளவை. இதன் மூலம் அந்நூல் விரிவாகக் கூறும் சிக்கலான தத்துவ விளக்கங்களையும், பல்வேறு வகையான யோக, தியான முறைகளையும் அவர் பயின்றிருந்தார் என்பது புலனாகிறது. அகத்தியர், திருமூலர், போகர் முதலான சித்தர்களைக் கொண்ட தமிழகத்தின் பதினெட்டு சித்தர் மரபு, கோரக்நாதர் தொடங்கி ஒன்பது சித்தர்களைக் கொண்ட வடஇந்தியாவின் நவநாத சித்தர் மரபு ஆகிய இரண்டு மரபுகளையும் தமது பாடல்களில் அவர் குறிப்பிடுகிறார்.


“வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே” 

என்பது ‘சித்தர் கணம்’ என்ற பதிகத்தின் பாடல்களில் வரும் கடைசி அடியாகும். இதன்மூலம் வேதாந்தம், சைவ சித்தாந்தம், சித்தர்களின் யோகம் ஆகிய மூன்று மெய்ஞான மரபுகளின் இணைவே தனக்கு உவப்பான மார்க்கமாகும் என்று அவர் பிரகடனம் செய்கிறார். தாயுமானவரின் முழுமையான தத்துவ நோக்கைத் தெளிவாக வெளிப்படுத்தும் சொற்றொடர் இது. இத்தகைய தத்துவ இணைப்பு தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த ஒன்று. இதில் தாயுமானவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் குமரகுருபரர். (17ம் நூற்றாண்டு.) தாயுமானவரை முன்னேடியாகக் கொண்டு இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இராமலிங்க அடிகளார். (19ம் நூற்றாண்டு.)
மேற்கண்ட சொற்றொடரில் வரும் சமரசம் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, ஒரு சாரார் மிகவும் தவறான விளக்கங்களை அளிக்கிறார்கள். அதாவது, சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. எனவே வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரண்டு பிரிவினருக்கிடையில் நிலவிவந்த பூசலைத் தீர்த்துவைக்கும் வகையில் இந்த வரியைத் தாயுமானவர் எழுதியிருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது சரியன்று.
சமரசம் என்பதற்கு இன்றைய நடைமுறைத் தமிழில் உடன்படிக்கை (agreement) என்ற பொருள் உண்டாகியிருக்கிறது. ஆனால், யோக மொழியில் அதற்குண்டான பொருள் அதுவல்ல. சமரசம் என்றால் ஒருமை உணர்வு அல்லது ஒன்றாகக் கருதுதல். “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறது ஔவையார் பாடல். “ஸாமரஸ்ய பராயணா” (ஒருமையில் நிலைபெற்றவள்) என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளலார் கூறும்போதும் ஒருமை என்பதையே சுட்டுகிறார். எனவே, தாயுமானவர் அச்சொற்றொடரில் கூறுவது பூசல்களையும் சமரசங்களையும் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அல்ல. அவர் பேசுவது தெளிவான யோக மொழி.
இதே ரீதியில், பல தாயுமானவர் பாடல்கள், அதில் உறைந்துள்ள யோக, தத்துவ மொழி சார்ந்த பிரக்ஞையின்றி நேரடியாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்கு உரை எழுதப் புகுந்த சில தமிழறிஞர்களுக்கும், சமயப் புலவர்களுக்கும் போதிய தத்துவ இயல் பயிற்சியும், சம்ஸ்கிருதப் புலமையும் இல்லாததே இதற்குக் காரணம்.
வாழ்க்கை நெறி:
தாயுமானவரின் ஆன்மீகம் என்பது அறிதலின் சிக்கல்களுக்குள் புகுந்து துழாவும் தத்துவங்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதல்ல, வாழ்க்கையின் போரட்டங்களை நேரடியாக நடைமுறையில் எதிர்கொள்வது. அறிதலின் உயர்நிலையை அடைந்த ஞானியின் மனம் போலித்தனங்களும் விருப்பு வெறுப்புகளும் அற்ற அற்ற தூய உள்ளமாக இருக்கும். அவரது ஆன்ம ஞானம் அனைத்து உயிர்களின் மீதான அன்பாகவும், அருளாகவும், கருணையாகவும் வெளிப்படும் என்பது இந்து ஞான மரபின் அனைத்து குருமார்களும் காட்டிச் சென்ற வழியாகும். தாயுமானவரின் வாழ்விலும் உபதேசங்களிலும் இதைத் தெளிவுபடக் காண்கிறோம்.
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ 

என்பது தமிழில் எழுதப்பட்ட என்றென்றைக்குமான மகத்தான வாசகங்களில் ஒன்று.

எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே.

எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் உன்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.

தாயுமானவர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தான் எழுதிய இந்த வரிகளுக்கு இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார் என்பதை உணர்த்துகின்றன.
அவர் சம்பிரதியாக அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் அரசாங்கப் பத்திரங்களை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பத்திரங்களைக் கைகளால் கசக்கித் தூள்தூளாக்கினார். அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் தடுமாற்றமடைந்தனர். உடனே “திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரியின்
துகிலில் பற்றிய தீயைக் கசக்கி அணைக்க முயன்றேன். என்னையறியாது இந்தப் பத்திரம் பாழாகி விட்டது குறித்து வருந்துகிறேன்” என்று தாயுமானவர் தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து திருவானைக்காவல் கோயிலிலிருந்து அரண்மனைக்கு ஒரு செய்தி வந்தது. தீபாராதனையின் போது கற்பூரம் லேசாகத் தவறி விழுந்து அம்பிகையின் ஆடைமீது விழுந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், அர்ச்சகர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை அணைத்ததாகவும் நல்லவேளையாக பெரிய தீவிபத்து நிகழாமல் காப்பாற்றப்பட்டதாகவும் செய்தி கொண்டு வந்தவர்கள் கூறினர். இதன்மூலம் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போதும் தாயுமானவரது மனம் எப்போதும் இறைவனிடத்திலேயே ஈடுபட்டுள்ளதால் அவரது உள்ளுணர்வுக்கு இந்த விஷயம் தோன்றியிருக்கிறது என்று அரண்மனையில் இருந்தவர்கள் எண்ணி வியப்படைந்தனர்.
தாம் உயர் அதிகாரியாக வலம்வந்த அதே திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களில் துறவியாகக் கௌபீனம் தரித்து பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார் தாயுமானவர். பனிவிழும் அதிகாலையில் அவர் வெற்றுடம்புடன் கண்மூடி அமர்ந்திருந்ததைப் பார்த்து மனம் கலங்கிய ஊர்ச் செல்வந்தர் ஒருவர் விலையுயர்ந்த சால்வையை அவர்மீது போர்த்தி வணங்கிவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அதே சால்வையை ஒரு இளம் வேலைக்காரி அணிந்துகொண்டு நடமாடினாள். அவள் அதை எங்கிருந்தோ திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, பரதேசி ஒருவர் தனக்கு அதை அளித்தார் என்று அவள் கூறியதை யாரும் நம்பவில்லை. அந்தப் பரதேசியிடமே போய் விசாரிப்போம் என்று தாயுமானவரிடம் வந்து கேட்டனர். “அன்னை அகிலாண்டேஸ்வரி அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு வந்தாள். என்னிடமிருந்த சால்வையை அவளுக்குச் சார்த்தினேன்” என்று அவர் பதிலளித்தார். பாரதியார் வாழ்க்கையிலும், இதே போன்று தனக்குப் போர்த்திய சால்வையை வண்டிக்காரன் ஒருவனுக்கு அளித்துவிட்டு வீட்டுக்கு வந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னிலை உணர்ந்த ஆத்மஞானிக்கு, யோகமும் போகமும், இல்லறமும் துறவறமும், செயலும் செயலின்மையும் எல்லாம் ஒன்றுதான், அவற்றின் பயன்கள் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை என்று கீதை கூறும் வாழ்க்கை நெறியை ஏற்பவராகத் தாயுமானவர் இருந்தார். தனது பகவத்கீதை மொழிபெயர்ப்புக்கு எழுதிய விரிவான முன்னுரையில் இதுகுறித்து ஒரு அழகிய தாயுமானவர் பாடலை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் பாரதியார்.

கவித்துவம்:

தாயுமானவரின் தத்துவ நோக்கு போன்றே அவரது கவித்துவமும் தனித்தன்மை கொண்டது. அவரது சொல்லாட்சிகள் அபாரமான அழகும், வீரியமும் பொருளாழமும் கொண்டவை. 18ம் நூற்றாண்டின் பொதுவான தமிழ்நடையிலேயே சம்ஸ்கிருதச் சொற்கள் மிக அதிக அளவில் புழங்கின. அப்படியிருக்கையில், தத்துவப் பொருளைப் பேசவந்த தாயுமானவரின் கவிதைகளிலும் சம்ஸ்கிருதச் சொற்கள் கொஞ்சம் அதிக அளவில் பயின்று வருவது ஆச்சரியமல்ல. ஆனால், இந்த வடசொற்பெருக்கு அவரது தமிழ்க் கவிதையின் ஜீவனைப் பாதிக்காத வகையிலும், அதைச் சிடுக்காக்காத வகையிலும் அமைந்துள்ளது கவனத்திற்குரியது. சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் அமைந்துள்ள வைணவ வியாக்யானங்களை இன்று சாதாரணத் தமிழ் வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால், தாயுமானவரின் பாடல்கள் அதன் இயல்பான அழகினாலும் கவித்துவத்தினாலும் இன்றைக்கும் அனைத்துத் தமிழர்களும் படித்து இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

தாயுமானவரின் ஒரு புகழ்பெற்ற பாடலை (அறுசீர் விருத்தம்) வழக்கமாக பழந்தமிழ்ப் பாடல்களை எழுதும் முறையில் இல்லாமல், பொருளுக்கேற்றபடி மடக்கி எழுதிக் கீழே அளித்திருக்கிறேன்.
கல்லாத பேர்களே நல்லவர்கள்
நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாத
என் கர்மத்தை என்சொல்கேன்
மதியை என் சொல்லுகேன்
கைவல்ய ஞான நீதி நல்லோர் உரைக்கிலோ
கர்மம் முக்கியம் என்று
நாட்டுவேன்
கர்மம் ஒருவன் நாட்டினாலோ
பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன்
வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும்
த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்
வல்ல தமிழறிஞர் வரின்
அங்ஙனே
வடமொழியின் வசனங்கள்
சிறிது புகல்வேன்
வெல்லாமல்
எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தை
என் முத்தி தருமோ
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர்கணமே.
மெய்யறிவு ஒன்றே முக்தியளிக்குமே அன்றி, வெற்றுத் தர்க்கங்களால் பயனொன்றுமில்லை என்பதைக் கூறவருகிறது இந்தக் கவிதை. இந்த ஆன்மீகமான கருத்தைத் தாண்டி, இக்கவிதையிலுள்ள அங்கதமும் பகடியும் சுய எள்ளலும் கலந்த தொனி ரசனைக்குரியது.
இத்தகைய பன்முகப் பான்மைகள் கொண்ட தாயுமானவர், பாரதியார் போன்ற ஒரு கூர்மையான சிந்தனையாளரை, வசீகரித்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால், புதிய நூற்றாண்டில் பிரவேசித்துக் கொண்டிருந்த இந்தியாவின் நவீனக் கல்விமுறையில் தாயுமானவர் போன்ற மகான்களைப் பற்றி சிறிதும் அறியாமல் இந்தியாவின் இளைய தலைமுறைகள் வளர்கிறார்களே என்ற பெரிய கவலை அவருக்கு இருந்தது. ‘நமது கல்விமுறை’ என்ற கட்டுரையில் அதனை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:
”நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள். அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா?
தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.”
பாரதியாரின் இந்த விசனம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே உள்ளது என்பது தான் சோகம்.
*****

சான்றுகள்:
[1] ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்கள் – சுவாமி சித்பவானந்தர் உரையுடன், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (1988)

[2] தாயுமான சுவாமி வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (1977)

ஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமார்


2016 நவம்பர் 25ம் தேதி கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய கம்யூனிச ஆட்சியாளர்  என்ற பிம்பத்தைத் தாண்டி அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இங்கு பலருக்கும் தெரியாது.
காஸ்ட்ரோவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர். கம்யூனிஸ்டுகளைக் கண்டால் பிடிக்காதவர்கள் கூட, உண்மையான கம்யூனிஸ்ட் மறைந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி வசதி போன்ற திட்டங்களை காஸ்ட்ரோ வெற்றிகரமாகச் செயல்படுத்தினார் என்ற பிரசாரமும், புரட்சியாளர் பிம்பமும் இந்தியாவில்கூட கணிசமான இளைஞர்களை அவர்பால் ஈர்த்தது நிஜம்.
“சுதந்திரம் என்பது விரிவடைதல்; தனிமைப்படுதல் அல்ல” என்பார் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில், உலக அரங்கில் இருந்து கியூப மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பொருளாதார வளர்ச்சியோ அல்லது வீழ்ச்சியோ, அதை காஸ்ட்ரோவின் கம்யூனிச அரசுதான் உறுதி செய்யும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூப மக்களுக்கு மிகச்சில நன்மைகள் கிடைத்தாலும், கம்யூனிசம் என்ற பெயரில், அவர்களின் அடிப்படை உரிமைகள் முழுதுமாக மறுக்கப்பட்டன. கடந்த 57 ஆண்டுகளாகத் தொடர்ந்த காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தில், அந்த மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் சிவப்பு மையால் எழுதப்பட்டவை.

உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகம் பேசினாலும், கியூபாவில் மட்டும் ஜனநாயகத்தை யாரும் பேச முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு இடமில்லை. ஒற்றை கட்சி முறைதான் வலுவான தேசத்துக்கு அவசியம் என்று அங்கே பிரசாரம் செய்யப்படுகிறது. அரசைத் தவிர மற்ற யாரும் ஊடகங்களை நடத்த முடியாது. மனித உரிமைகளைப் பேச முடியாது. இதை காஸ்ட்ரோவை ஆதரிப்பவர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அதனால்தான் அவரால் வலுவாகப் போராட முடிந்தது என்று அதற்கு ஒரு நியாயமும் கற்பிப்பார்கள்.
இதை விடப் பெரிய கொடுமை, கம்யூனிஸ்டுகள் நாத்திகவாதிகள் என்பதால், கடந்த 1969 முதல் 1998ம் ஆண்டு வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம் கியூபாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இதையெல்லாம் தட்டிக் கேட்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
காஸ்ட்ரோவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, கியூபாவில் இருந்து கடல் மார்க்கமாக 150 கி.மீ. தொலைவில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி நகருக்குத் தப்பியோடிய அகதிகளின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும். அப்படி தப்பியோடுபவர்கள் பிடிப்பட்டால், கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் தப்பியோட முயன்றவர்கள், எதிர்க்குரல் எழுப்பியவர்கள் என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1994 ஜூலை 13ம் தேதி கியூபா ராணுவத்தினர் நடத்திய தக்போட் படுகொலை புகழ்பெற்றது. அந்தப் படுகொலையில் மட்டும், அமெரிக்காவுக்குத் தப்பியோட முயன்ற குழந்தைகள், அவர்கள் தாய்மார்கள் என 37 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், கியூப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பவே இல்லை என்பதும் உண்மையல்ல. ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் 22 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்மாண்டோ வல்லாதரஸ் என்பவர் எழுதிய Against All Hope (அனைத்து நம்பிக்கைகளுக்கும் எதிராக) என்ற புத்தகம், வல்லாதரஸுக்கு ‘கியூபாவின் சோல்செய்னிஸ்டின்’ (சோவியத் ரஷியாவின் கம்யூனிச அரசு அடக்குமுறைக்குக்கு எதிராகக் குரலெழுப்பிய புகழ்பெற்ற எழுத்தாளர் சோல்செய்னிஸ்டின்) என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. மற்றொரு எழுத்தாளரான ரைனாடோ அரேனஸ் எழுதி 1993ம் ஆண்டில் வெளியான Before Night Falls (இரவு வீழ்வதற்கு முன்பு) என்ற நாவல், நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. ஆனால், இந்த உண்மைப் பிரகடனங்கள் அனைத்தும் கியூபாவின் கம்யூனிச பிரசாரப் பனியில் உறைந்துவிட்டன.
ஃபிடல் காஸ்ட்ரோவை எதிர்த்தவர்கள் என்றில்லை, ஆதரித்தவர்களும் துன்பங்களையே அனுபவித்தனர். கியூபா கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், அதன் பொருளாதாரம் சோவியத் ரஷியாவையே நம்பியிருந்தது. கம்யூனிசம் வீழ்ந்து ரஷியா சிதைந்ததால், கியூபாவின் பொருளாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அதிக அளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்த நாடு என்ற பெருமை போய், சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. நாட்டுநலன் காக்க மக்கள் பட்டினியை ஏற்கத் தயாராக வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்தார் காஸ்ட்ரோ. அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் பெரும் எண்ணிக்கையிலான கியூபக் குடிமக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.
இதை விடவும், காஸ்ட்ரோவின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அவருடன் இணைந்து கியூபாவில் கம்யூனிசப் புரட்சி செய்த சேகுவேரா, பொலிவியா நாட்டில் புரட்சி செய்ய முற்பட்டபோது, 1967ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் காஸ்ட்ரோவுக்கும் தொடர்புண்டு என்று குற்றம்சாட்டுகிறார், சேகுவேரா பற்றி ஆராய்ச்சி செய்து வரும் கியூபப் பத்திரிகையாளர் ஆல்பர்டோ முல்லர். கடந்த 1965ல் அல்ஜீரியாவில் நடைபெற்ற அஃப்ரோ-ஆசிய மாநாட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு சோவியத் ரஷியா உடந்தையாக இருப்பதாக, சேகுவேரா மறைமுகமாகக் குற்றம்சாட்டியதாகவும் அது முதலே காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்கும் கருத்து மோதல்கள் நிலவி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த சேகுவேராவை பொலிவியாவுக்குப் புரட்சி செய்ய காஸ்ட்ரோ அனுப்பினார் என்றும், அங்கு சேகுவேராவுக்கு ஆபத்து நேர்ந்தபோது அவரைக் காப்பாற்ற கியூப ராணுவத்தினர் விரும்பினாலும் காஸ்ட்ரோ அனுமதியளிக்க மறுத்துவிட்டார் என்பதும் ஆல்பர்டோ முல்லரின் குற்றச்சாட்டு.
சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் பல்வேறு கொடுமைகளைப் புரிந்தாலும், அவருக்குப் பின், குருசேவ் போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் என்று இருக்கவே செய்தனர். ஸ்டாலின் செய்த கொடுமைகளை வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் அவர்கள்தான். இதை காஸ்ட்ரோ நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.
எனவே பொதுவுடமைவாதி என்று தன்னை முரசறைந்து கொண்டாலும், முடியாட்சி வழக்கமான வாரிசு நியமனத்தை மறக்காமல் கடைப்பிடித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களை அவர் உருவாக விடவில்லை. அவருக்குச் சமமான போட்டியாளராக இருந்த சேகுவேராவும் ஒழிக்கப்பட்டுவிட்டார். காஸ்ட்ரோவுக்குப் பிறகு அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவையே கியூபாவின் அடுத்த அதிபராக்கினார். ஆனால், மற்ற வாரிசுகளை அவர் வெளியே கொண்டு வரவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஐந்து மனைவிகளும் ஒன்பது வாரிசுகளும் இருப்பதாக, ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. இது தவிர பல்வேறு பெண்களுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கியூபாவில் இருந்த சர்வாதிகாரத்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோவின் குடும்பத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. ஃபிடல் தங்கை ஜுவாலா, கடைசி 40 ஆண்டுகள் அவருடன் பேசவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில், “என் அண்ணன் ஒரு அரக்கன்” என்று அவர் குறிப்பிட்டார். ஃபிடல் ஆயுதப் போராளியாக இருந்த காலத்தில், திருமண உறவுக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பிறந்த அலினா பெர்னாண்டர்ஸ், தனது தந்தையை “சர்வாதிகாரி” என்று விமர்சித்து வருகிறார்.
கடைசி காலத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு தானே நியாயம் கற்பித்துக் கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விதித்த தடையை விலக்கினார். “அன்பையும், சகோதரத்துவத்தையும்தான் கிறிஸ்தவம் கடைப்பிடிக்கிறது என்றால், அதை ஏற்கத் தயார்” என்று அறிவித்தார். ஆனால், இந்த வாதத்தை கம்யூனிஸ்டுகளே ஏற்க மறுக்கிறார்கள். தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள கிறிஸ்தவத்திடமும் அவர்கள் மூலமாக அமெரிக்காவிடமும் காஸ்ட்ரோ சரணடைந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இப்படிப் பல ஆதாரபூர்வமான செய்திகள் உலகளவில் அறியப்பட்டிருந்தாலும், இந்தியா உட்பட பல நாடுகளில் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. காஸ்ட்ரோவின் நடவடிக்கைகளுக்குப் பொதுவுடமை பின்னணி அளிக்கப்பட்டதும், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச எழுத்தாளர்களும் ஊடகங்களும் ஃபிடல் காஸ்ட்ரோவை உயர்த்திப் பிடித்ததுமே அதற்குக் காரணமாகும்.
ஆனால், உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்தால், ரஷியாவின் ஸ்டாலின், ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, கம்போடியாவின் போல்பாட் போன்ற சர்வாதிகாரிகளின் பட்டியலில், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் இயல்பாகவே கலந்து விடுகிறார்.

இசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி “போங்கல, நிக்கானுவோ, அவ என்ன ஏசுதான்னு கேக்கணும் என்னலா?” சிவராசன் மாமா அனைவரையும் துண்டை சுழற்றி விரட்டிவிடுவார். எசக்கி என்ன சொற்கள் கொண்டு ஏசினாள் என்பது தெரியாமல் துக்கத்தில் நாங்கள் தயக்கத்துடன் அங்கிருந்து நகர்வோம்.

எசக்கி பே(ஏ)சுவதை சிறுவர்களால் மட்டுமே கேட்கமுடியும். பெரும்பாலும் பாலுணர்வு அர்த்தம் புரியாத வயதில், சொற்களின் தீவிரம் புரியாது, கோபத்தில் அவள் இரைவதில், அவள் கைகள் காட்டும் புணர்வுக்கான சைகை வசவுகளை சிரிப்புடன் பார்த்திருப்போம். எசக்கியின் வசவுகள் முழுதும் காணாமற்போன அவளது கணவனையோ, குடியால் சீரழிந்த அவள் மகனையோ உருவகப்படுத்தியே இருக்கும். அவள் மகள் சற்றே தறிகெட்டுப் போயிருந்த நிலையில், அவசரமாக எவனுக்கோ விக்கிரமசிங்கபுரத்தில் மணம் செய்து கொடுத்திருந்தாள். அந்தப்பெண் அங்கு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதாகவும், அவ்வப்போது எசக்கியைப் பார்க்க வருவதாகவும் வதந்தி இருந்தது. தொழில் என்பதன் பொருள் புரியாமல், மலங்க மலங்க விழித்து வதந்தி கேட்ட நாட்கள் அவை.

எசக்கி சற்றே இளைத்த உடல்வாகு. தீனமாகத்தான் பேசுவாள். மார்கழியில் கோவில் வாசலில் நெல்லிக்காய், அருநெல்லிக்காய் படியாய் அளந்து விற்பாள். இலந்தைப்பழ சீசனில் இரு கூடை நிறைய இலந்தைப்பழம் இருக்கும். மதியம் முதல் மாலை வரை, நாடார்க் கடை அருகே புண்ணாக்கு விற்பாள். “ஏட்டி, அங்கிட்டு போன்னேம்ல்லா? வாபாரத்த கெடுக்கியே? எங்கடலயும் புண்ணாக்கு வச்சிருக்கேம்லா?” என்று திட்டும் நாடாரின் குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகித்து ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பாள். வசவு என வரும்போது மட்டும், அவள் ஒரு ஆம்ப்ளிஃபயரை அவசரமாக முழுங்கியது போலத் தோன்றும். கரகரத்து மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் குரல் திடீரென சரியாகி பெரும் ஒலியில் வீதி முழுதும் கேட்கும்.
“எம்பொளப்புல மண்ணள்ளிப் போடுற நாடாரே ஒம்ம...” எனத் தொடங்கும் அவள் வசவு வரிகளில் நாய் நரி கிளி என்று விலங்கினங்களுடனான புணர்ச்சி விகாரம் மேலோங்கி நிற்கும்..

“இந்த மாமா பெருசால்லா இருக்காரு? அவர எப்படி…?” என்ற லாஜிக்கான கேள்வியை செல்வராஜ் முன்வைக்க, அனைத்துப் பயல்களும் அதனை சீரியஸாக யோசித்து, இறுதியில் அவனே, அவனது மாமாவிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு வரட்டும் என தீர்மானித்தோம். செல்வராஜும் முதலில்  ‘நா மாட்டேண்டே’ என்று பிகு பண்ணி, பின் ஒத்துக்கொண்டான்.
அடுத்த நாள் முதல் இருவாரங்களுக்கு அவன் எங்களோடு சேர்ந்து பள்ளி வரவில்லை. கூப்பிட கூப்பிட கேட்காது தனித்து முன் நடந்தான். அவனுக்கு படு கோபம் வரவைக்கும் “சீப்புள்ள” என்றபோதும் திரும்பி வந்து அடிக்கவில்லை. அதன்பின்தான் விசயம் தெரிந்தது.

“ஒக்காளி, இந்த வயசுல இது தெரியணும் என்னலா?” என்றபடி மாமா, இடுப்பில் இருந்த பச்சை பெல்ட்டை எடுத்து ரெண்டு அறை விட்டதும், அவன் “யாத்தீ” என்று வாய்க்காங்கரை வழியாக ஓடியதையும், பின்னாலேயே ”நில்லுல, ஓடினே கொன்னுறுவேன்” என்று அவன் தாய் வீறிட்டுக்கொண்டே துரத்தி ஓடியதையும் கண்ணனின் தம்பி பார்த்ததாகவும், அது உண்மை என்று சாஸ்தா முன்னாடி சத்தியம் செய்வதாகவும் உறுதி சொன்னான். அதன் பின் சைஸ் பற்றிய தருக்கங்களை விட்டுவிட்டோம்.

எசக்கி எந்தச் சிறுவனுக்கும் சிறுமிக்கும், கொடுத்த காசுக்கு அதிகம் நெல்லிக்காய் தந்ததில்லை. அருநெல்லிக்காய் கூட இரண்டு கூட விழுந்தால், கையைப் பிடித்து நிறுத்தி அதனைக் கூடையில் போட்டுக்கொள்வாள். “நாம்போயி பொறுக்குதேன். இவனுக மேல்டாக்ல வந்து அஞ்சிசாக்கு (அஞ்சு பைசாவுக்கு) அள்ளிட்டுப் போவகளாம். எங்கையி என்ன ***லயா சொருகிட்டு நிக்கி?”

ஏன் அவள் இத்தனை வசை பாடுகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. பேசினால் மானம் போகும் என்பதால் அவளிடம் பேசவே பலரும் பயந்தார்கள். சிவராசன் மாமா மட்டும் அவளிடம் பேசுவார் “ஏட்டி, ஏன் நாயி கணக்கா குலைக்க? அன்பாத்தான் பேசேன்” என்பார் அவளைச் சீண்டி விடுவதற்கு. அதன்பின் அரைமணி நேரத்துக்கு ரோட்டில் நடப்பவர்கள் நின்று அவள் கத்துவதை வேடிக்கை பார்ப்பார்கள். சிவராசன், ஏதோ கூண்டில் இருக்கும் மிருகத்தைச் சீண்டிவிட்டு தைரியமாக நிற்கும் ரிங் மாஸ்டர் போல பெருமிதமாய் ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்ப்பார்.
ரிடையர் ஆகி வந்திருந்த ரோசம்மாள் டீச்சர் “இவமேல சாத்தான் இறங்கியிருக்கு, கர்த்தர் மனமிறங்கினா சாத்தான் ஓடிறும். 

செபக்கூட்டத்துக்கு வாரியா எசக்கி?” எனக் கேட்கப்போக, எசக்கி பேசின பேச்சில் அவர் தன்னையே சிலுவையில் அறைந்த வலியில் துடித்து ”சேசுவே, இவள ரச்சியும்” என்று விசும்பியபடி, குடை விரித்து விரைந்தார். அதுதான் எசக்கியை மனிதராக்கவோ மதம் மாற்றவோ நடந்த கடைசி நிகழ்வு என நினைக்கிறேன். வசவு மழை நிற்கவே இல்லை.

“அவ சம்பாரிக்காளே, யாருக்கு சேத்து வைக்கா?” என்று கேட்டார் விறகுக்கடைத் தேவர். “அவ பொண்ணுக்காயிருக்கும், இல்ல அவ பேத்திக்கா?” என்றார் அங்கு ஓசி பேப்பர் படிக்க வந்த ஜோசப் தங்கராஜ். தினசரியில் ‘நீர்மட்டம்’, சிந்துபாத் படிக்க வந்த நாங்கள் இதையும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

’ப்ச்’என்று பல் குத்தித் துப்பியபடி சிவராசன் சொன்னார். “அவ பொண்ணுதான் மலந்து கிடந்து சம்பாரிக்காளே? பேத்தி மேல ஒரு பாசம், எசக்கிக்கு பாத்துகிடுங்க. அவ எப்பவாச்சும் எங்கிட்ட சொல்லுவா ‘சாமி, எம்பேத்தியாச்சும் நல்ல பொண்ணா வருவாள்லா? அவள இந்த தாயளிப்பயலுவ சீரளிச்சுறக் கூடாது. அதான் எம்பயம்.”

“நீரு என்ன சொன்னீரு?” என்றதற்கு ஜோசப் தங்கராஜ் புன்னகைத்து “தொளிலு செய்யுறவ மவ எப்படி வருவா? பூப்பெய்தினா தொளிலுதான் அவளுக்கும். பன்னிக்குட்டி மலந்தான திங்கும்? சோறா திங்கும்?”

“அடக்கிப் பேசுவே” அதட்டினார் சிவராசன். “அவளும் மனுசிதானவே. என்னமோ போறாத காலம். அதுக்கு சின்னப்புள்ளய இப்படி அசிங்கமாப் பேசுதீரே? விளங்குவீரா நீரு?”

ஜோசப் துணுக்குற்று “சும்மா ஒரு ஜோக்கு” என்று வழிந்தாலும், சிவராசன் அவரைக் கோபமாகவே பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரென எசக்கியைக் காணவில்லை. இரு நாட்கள் வசவு நாடகம் நடக்காத ஏமாற்றத்தில் நாங்கள் இருந்தாலும், பின்னர் எசக்கி இல்லாத வெற்றிடமும், வசையில்லாத மாலைப்பொழுதுகளும் பழகிப்போயின. அவள் மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து மறைந்து போனாள்.

ரு மாதம் கழித்து கோவிலில் அலுவலகக் கட்டிடத்தினுள் பெரிய சத்தத்தில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. சிவராசன் கோயில் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“ஆமாவே, எசக்கியோட பைசாதான். அவ உடம்பு அழுக்கோ, வாய் அழுக்கோ, மனசு சுத்தம். அவ, கடவுளுக்குன்னு கொடுத்ததை மறுக்க உங்களுக்கு உரிமை இல்லை.”

“சார்வாள், குதிக்காதயும். நாங்க எங்க மாட்டம்னோம்? யாருக்குன்னுவே இதுக்கு ரசீது கொடுக்க? ரெண்டு பவுன் சங்கிலி... கோவிந்தா கணக்கு எழுத முடியாதுவே. அறநிலைத்துறை அதிகாரி இப்ப ஒரு முசுடு தெரியும்லா?”
“வழி இருக்கும்வே, அவர்கிட்ட பேசிப்பாரும்.”

“சரிய்யா, இவ்வளவுதான் அவ வச்சிருந்தான்னு உமக்கு எப்படித் தெரியும்? எதுக்கு கேக்கேன்னா, நாளக்கி போலீஸ் எதுவும் விசாரணைன்னு வரக்கூடாதுல்லா?”

சிவராசன் “எங்கிட்ட கொடுத்தாவே, ஒரு மாசமுன்னாடி. ‘சாமி, பேத்தியப் பாக்கப் போறன். திரும்பி வராட்டி, இத கிருஷ்ணங்கோயில்ல சேத்திருங்க’ன்னா. ‘ஏட்டி, இதென்னா, புதுசா சொல்லுத?’ன்னேன். ‘பொண்ணு வீட்டுல பேத்தி இனிமே நிக்கக்கூடாது சாமி. அது எப்ப வேணாலும் திரண்டுரும், கேட்டியளா? அதான் ஒரு முடிவுலதான் போறேன்’ன்னா” என்றார்.

“பெறவு?” என்றார் கோயில் அதிகாரி ஒருவர். அவரது முன்வழுக்கையில் ட்யூப்லைட்டின் ஒளி சற்றே மின்னியது.

“சரி, பேத்திய நீ கூட்டிட்டு வந்தா என்ன செய்வேன்னேன். ‘பாப்பம், விதி என்ன எழுதியிருக்கோ? மாப்பிள ஒரு முரட்டு ஆளு. அவள வச்சி சம்பாரிக்கற மாரி, பொண்ணையும் வச்சி சம்பாரிக்க நினைச்சிருக்கான். போய்க்கேட்டேன்ன, செருக்கியுள்ள, என்ன செய்யுமோ’ன்னு அழுதா.”

சிவராசன் மேலே தொடர்ந்தார். “ ‘என் அழுகின வாய வச்சுத்தான் இத்தன வருசம் என் ஒடம்ப சுத்தமா வச்சிருந்தேன். இங்கன இருக்கற தயாளிய, கொஞ்சம் பலவீனமா இருந்தா, அசிங்கப்படுத்திருவானுவோ. இது சின்னப் புள்ள பாத்தியளா. என்ன மாரி அசிங்கமா பேசத்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கா. பயந்த புள்ள. என்ன செய்யும்? எதாச்சும் ஆசிரமம் இருக்காய்யா? சேத்துவிடுவீயளா’ன்னா. எனக்குத் தெரியாதுன்னேன். அழுதுகிட்டே டவுண்பஸ் ஏறிப் போயிட்டா. சரி கதய விடும். இந்த சங்கிலிய என்ன செய்யணுமோ செஞ்சுக்கோரும்.”

இருநாட்கள் கழித்து மாலையில் பள்ளி விட்டு எசக்கி வழக்கமாய் அமர்ந்திருக்கும் இடத்தினருகே பெரிய கூட்டம். ஓ வென ஒரு பெண்ணின் அழுகை. “பெணம் கிடக்குலே. பாக்காதீய ஓடிப்போயிரு” என்று எவரோ எங்களை விரட்டிக்கொண்டிருந்தார். “லே, பொணத்தைப் பாக்கும்போது வவுத்தப் பிடிச்சுக்கிட்டு பாக்கணுமாம். பாட்டி சொல்லிச்சு” என்ற செல்வராஜின் அறிவுரைப்படி, வயிற்றைப் பிடித்துக்கொண்டே, மெல்ல உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தோம். ஊதிய உடலொன்று மல்லாந்து கிடக்க, அதனருகே ஒரு நடுத்தர வயதுப்பெண் ஒருத்தி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“பாவி மவளே, போறதுதான் போற, எம்புள்ளய என்னட்டி செஞ்ச? எங்கிட்டு கொண்டு போய் விட்ட? தே..யா மவளே. அதாண்ட்டி நல்ல சாவா இல்லாம குளத்துல விழுந்து செத்த... இங்கனயே புளுத்துக் கிடந்து நாறுட்டீ...”
“ஏ, செத்த அம்மயப் பாத்து சொல்ற பேச்சாட்டி இது?” யாரோ அவளை அடக்க, அவள் வெகுண்டு எழுந்தாள். “எவம்ல என்னச் சொல்றது? தே..மவனே. முன்னாடி வால” என்று அசிங்கமாகத் தொடங்கினாள். “எசக்கி பொண்ணு பின்ன எப்படி இருப்பா?” என்றார் எவரோ.

“இந்தாட்டி, நீ எடுக்கலன்னா, நாங்க பொணத்த எடுக்கணும். கோவிந்தாக் கொள்ளி போட்டுறுவம்” என்றார் சிவராசன். “இந்த தே..நாய என்ன வேணும்னாலும் செய்யி. நாம் போறேன். எம்பொண்ணக் காங்கலயே?” அழுது அரற்றிக்கொண்டே அவள் ஓட்டமும் நடையுமாய், வாய்க்காப் பாலம் அருகே திரும்பி, சாஸ்தா கோவில் பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்த விக்கிரம சிங்கபுரம் டவுண் பஸ்ஸில் அவசரமாக ஏறினாள்.

“சரி. தூக்குங்கடே. ஏ, ஆத்துப்பாலம் பக்கம் சுடுகாட்டுல எரிச்சிருவம்” என்ற ஒருவரின் குரலுக்கு நால்வர் பாடையைத் தூக்கினர்.

எசக்கி போகிற வழியில் எழுந்து “ஏல, ஒன்ன...” என்று ஏதோ திட்டிவிடுவாளோ என்று பயந்துகொண்டே வயிற்றை இறுகப் பிடித்து சிவராசன் அருகே நான் நின்றிருந்தேன்.

முன்வழுக்கை கோயில் அதிகாரி சிவராசன் அருகே வந்தார். “நேத்திக்கு ஒரு சின்னப் பொண்ணை மதுரைக்கு முத பஸ்ல கூட்டிட்டுப் போனீயளாமே? காசி சொன்னான். யாரு அது?” என்றார்

“எம் பேத்தி” என்றார் சிவராசன். “அங்கிட்டு ஒரு போர்டிங்க் ஸ்கூல்ல சேத்திருக்கம். லீவுக்கு வந்திருந்துச்சி.”

“ஏம்வே, எசக்கி பேத்திய எங்கிட்டு கொண்டு போய் விட்டிருப்பா?”

“எவங்கண்டான்?” என்றார் சிவராசன் குளக்கரைப் படிகளைப் பார்த்தபடி.