Posted on Leave a comment

நாளைய நகரங்கள் – கிஷோர் மகாதேவன்

‘இந்தியாவின் எதிர்காலம் அதன் கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் அழிந்தால், இந்தியாவும் அழிந்துவிடக் கூடும்’ என்றார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் இன்று நாம் காணும் யதார்த்தம் என்ன? உலகெங்கும் மக்கள் பெருந்திரளாகக் கிராமங்களை விட்டு நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறார்கள். 1991ல் இந்தியாவில் 22 கோடி மக்கள் நகரங்களில் வாழ்ந்து வந்தனர். அந்த எண்ணிக்கை 2011ல் 38 கோடியாக அதிகரித்தது. 2030க்குள் இந்தியாவில் 50 கோடி மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என்றும், அந்நகரங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் 60% பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்று நம் நகரங்களின் உண்மை நிலை என்ன? இதைப் பற்றி யாரிடமாவது பேசிப் பாருங்கள். ‘திட்டமிடல் பத்தாது’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போவார்கள். இந்திய நகரங்களைப் பொருத்த வரையில் திட்டமிடல் என்றால் என்ன? நம் நகரங்கள் எப்படி உருவாகின்றன?

1947க்குப் பிறகு இந்திய நகரங்களின் வளர்ச்சியை இரண்டு பரிணாம நிலைகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசின் மேற்பார்வையில் உருவான நகரங்கள். எந்த நகரத்தையும் அரசு மட்டுமே திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும், யார் எங்கே வாழ வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பது நேருவின் சோசலிஸ அரசின் நிலைப்பாடாக இருந்தது. சண்டிகர் மற்றும் தில்லியின் சில பகுதிகள் இவ்வாறு உருவாகின. இந்நகரங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கென பிரத்யேகமாக பல குடியிருப்புகள் எழுப்பப்பட்டன. சண்டிகர் இந்தியாவின் ஆதர்ச நகரமாகத் திகழவேண்டும் என்று நேரு கனவு கண்டார்.

ஆனால் 1991க்குப் பிறகு இந்தியா செய்த பொருளாதார சீர்திருத்தங்களால் பல புதிய சாளரங்கள் திறந்தன. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் நாடெங்கும் தோன்றின. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். கலாசாரப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. சமூக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. இதன் தாக்கம் இந்திய நகரங்களில் தென்பட்டது. பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முதலீடு பெருகியது. அப்பகுதிகள் தன்னளவில் தொழிற்பேட்டைகளாக மாறி, நகரங்களோடு இணைந்தன. இந்திய நகரங்களின் வளர்ச்சியில் இரண்டாவது பரிணாம நிலை என்று குறிப்பிடுவது இதைத்தான். சண்டிகரின் மொஹாலி, சென்னையின் மகாபலிபுரம் சாலைப்பகுதி, கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டி போன்றவை இப்படி வளர்ந்தன. இவற்றுள் சில விஸ்வரூபமெடுத்து பெருநகரங்களாக மாறின. இதற்கு எடுத்துக்காட்டாக குர்காவ் கிராமத்தைச் சொல்லலாம். 1990களின் இறுதியில் மேய்ச்சல் நிலமாக இருந்த குர்காவ் கிட்டத்தட்ட தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. 2001ல் குர்காவின் மக்கள்தொகை 8.7 லட்சம். 2011ல் அது இரட்டித்து 16 லட்சம் ஆனது. இத்தனை மக்களுக்கு வசதிகள் வழங்குவது என்பது எந்த அரசுக்கும் இயலாத காரியம். குர்காவ் நகரின் குடியிருப்புகள், சாலைகள், தெருவோர மின்விளக்குகள், பூங்காக்கள் என்று அனைத்தும் தனியார்த் துறையின் முனைப்பால் கட்டப்பட்டன. அங்குள்ள தீயணைப்புச் சேவை கூடத் தனியார்த் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 2008ல்தான் குர்காவ் நகருக்கென தனி நகராட்சி அமைக்கப்பட்டது.

அப்படியென்றால் குர்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? குர்காவின் நிதர்சனம் என்ன? இந்தியாவின் உச்சக்கட்ட செல்வந்தர்கள் பலர் வாழும் குர்காவ் நகரம் இன்று போதுமான நிலத்தடி நீர் இல்லாமல், கழிவுநீர் அமைப்பு இல்லாமல் தவிக்கிறது. அதுமட்டுமல்ல, குறுகிய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் உண்டாகும் ஏழை-பணக்காரர் வித்தியாசம், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் என பல்வேறு சிக்கல்களுக்கு இடையே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

யதார்த்தம் இப்படியிருக்க, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எல்லாம் வெற்றுக்கூச்சல்தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதே நேரம் நகரங்களை எல்லாம் மேம்படுத்தமுடியாது, அவற்றைக் கைவிட வேண்டியதுதான் என்று நேரெதிராகச் சொல்வதும் நியாயம் ஆகாது.

முதலில் ஸ்மார்ட் நகரம் என்றால் என்னவென்று பார்ப்போம். ஸ்மார்ட் நகரம் என்ற சொல்லுக்கு இன்று வரை உலகளாவிய வரையறையோ பொருளோ இல்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நகரமும், அதன் சூழலுக்கு ஏற்ப, அதன் சக்திக்கு ஏற்ப ஸ்மார்ட் நகரம் என்னும் திட்டத்தை வரையறுத்துக் கொள்கிறது. ஸ்மார்ட் நகரத்துக்கு ஐரோப்பாவில் ஒரு வரையறை இருக்குமென்றால், அமெரிக்காவில் வேறொரு வரையறை இருக்கும். இந்தியாவின் புரிதலும் வேறுபட்டு இருக்கும்.

2015ம் ஆண்டு இந்திய அரசு ஸ்மார்ட் நகரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் 2020க்குள் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். ஸ்மார்ட் சிட்டியில் தடையற்ற நீர் விநியோகம், தடையற்ற மின்சாரம், திடக் கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, மலிவு விலை வீடமைப்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கணினி சார் அரசு சேவை (e-governance), சுற்றுச்சூழல் பராமரிப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள், கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அடிப்படைக் கூறுகள் உள்ளன.

ஸ்மார்ட் நகரத்தை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம்?

1. பின் மாற்றியமைப்பு (Retrofit) : நகரத்தில் ஒரு 500 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியை ஸ்மார்ட் நகரத்தின் கூறுகளோடு பின் மாற்றியமைக்கலாம்

2. மறுவளர்ச்சி (Re-development) : நகரத்தின் ஒரு 50 ஏக்கர் பகுதியை ஒதுக்கீட்டு, அப்பகுதியில் இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தலாம், கட்டடங்களை இடித்துப் புதிய கட்டடங்களைக் கட்டலாம்

3. புது ஸ்மார்ட் நகரம் : புத்தம்புது நிலப்பகுதியை அடையாளம் கண்டு, ஸ்மார்ட் நகரமாக வடிவமைத்துக் கட்டலாம்

4. தொழில்நுட்ப பொருத்தல் : வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல், ஸ்மார்ட் நகரத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பொருத்தலாம். உதாரணமாக கண்காணிப்பு காமிராக்கள், சூரிய ஒளி மின்சாரக்கருவிகள் முதலியன பொருத்தலாம்

ஸ்மார்ட் நகரத் திட்டம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது?

1. மத்திய அரசு ஸ்மார்ட் நகரங்களின் நிபந்தனைகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஸ்மார்ட் நகரங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டது

2. நாடெங்கும் 100 ஸ்மார்ட் நகரங்கள் மாநிலங்களால் பரிந்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு நகரமும் தன்னை எப்படி ஸ்மார்ட் நகரமாக மாற்றியமைக்கும் என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது

3. நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று இவற்றைப் பரிசீலித்து, சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகின. இதுவரை 74 நகரங்கள் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் இப்பட்டியலில் உள்ளன. 2017ன் முடிவுக்குள் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது இலக்கு

4. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் நகரக்குழு ஒன்றை அமைத்துக்கொள்ளும். இக்குழுவில் முழு நேர தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் இருப்பர். ஸ்மார்ட் நகரம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்குத் தேவையான நிதியை எப்படித் திரட்டுவது, வருவாயை எப்படி வசூலிப்பது, எந்தெந்த தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது போன்ற முடிவுகளை எடுக்க இந்தக் குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கும்

5. ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்துக்கும் மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக தலா ரூ.194 கோடியை ஒதுக்கீடு செய்யும். அதற்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.98 கோடி வழங்கும். ஆண்டுதோறும் இந்த ஒதுக்கீட்டைப் பெறும் தகுதி இருக்க வேண்டுமெனில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், அரசின் ஸ்மார்ட் சிட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்

6. அரசு முதலீட்டையும் தாண்டி, வேறு பல வழிகளில் நிதி திரட்ட ஸ்மார்ட் நகரக் குழுக்கள் முயலும். உதாரணமாக நிதி நிறுவனங்களிலிருந்து பணம் திரட்டலாம். வரிப்பணத்தில் ஒரு பகுதியைச் செலவிடலாம். தனியார் நிறுவனங்களின் முதலீடு கொண்டு இயங்கலாம்.
மற்ற திட்டங்களை போல ஸ்மார்ட் நகரங்களின் வெற்றியும், அது எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்து இருக்கிறது. இத்திட்டம் வெற்றிபெற முதலில் நகராட்சிகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இன்று நகராட்சியின் துறைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்கின்றன. அனேகமாக இதனால் பல திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே தேக்கமடைந்து விடுகின்றன. வளர்ந்த நாடுகளில் நகர மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் நம்மூரில் நகராட்சி மேயர் என்பவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ பதவி வகிப்பவர். நகரப் பணிகளை நிறைவேற்றுதல், அதற்குத் தேவையான வரி விதித்தல் அனைத்தும் மேயரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருந்தும் மாநில அரசுகள் ஏனோ அமல்படுத்தாமல் இருக்கின்றன. அடுத்ததாக, எங்கெல்லாம் தனியார்த் துறையின் நிபுணத்துவம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக ஸ்மார்ட் தெருவிளக்கு அமைப்பு, ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடங்கள், ஸ்மார்ட் மின்சார விநியோகம் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் தொழில்நுட்பம் இருந்தும், பணப்புழக்கம் அதிகம் இல்லாததால் அரசோடு இணைந்து செயல்பட தடையாக இருக்கிறது. இது போன்ற சிறு நிறுவனங்களும், மற்ற பெரு நிறுவனங்களும் முதலீடு செய்ய ஊக்கமும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் நகரம் என்றால் நவீன நகரம், நவீன தொழில்நுட்பம் என்று ஒரு புரிதல் இருக்கிறது. நவீனமயமாக்கல் என்பதைத் தாண்டி, நம் பாரம்பரியச் சின்னங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம், தொழில்நுட்பத்தைச் சாதாரண மக்களும் உபயோகிக்கக்கூடியதாக எப்படி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் யோசித்து வடிவமைக்க வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தும், இந்த ஸ்மார்ட் நகரத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியதே. இந்தப் பரிசோதனை முயற்சியில் அரசு இன்னும் தீவிரமாக இறங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நகரங்கள் முக்கியப் பங்களிக்கப் போகின்றன. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார மற்றும் அரசியலமைப்பு சார்ந்த மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும். செய்யத் தவறினால் இது நழுவ விட்ட மற்றொரு சந்தர்ப்பமாகவே இந்திய வரலாற்றில் எழுதப்படும்.

*********

உதவியவை :

1. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் : http://smartcities.gov.in
2. இந்திய பொருளாதார அறிக்கை : http://indiabudget.nic.in/es2016-17/echap14.pdf
3. ஏழு நதிகளின் நாடு (புத்தகம்) – சஞ்சீவ் சன்யால்

Leave a Reply