Friday, 7 September 2018

காலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்


காலா திரைப்படம் தொடர்பான அனைத்து விவாதங்களும் முதலில் எழுப்பப்படும் கேள்வி ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டுமா என்பதுதான். ஒரு திரைப்படம், அதுவும் வெகுஜனங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படத்தை நாம் ஒரு பரப்புரை ஆயுதமாகத்தான் கருதவேண்டும். எனவே அதனைக் குறித்து விவாதிப்பதும், அதன் பரப்புரை அம்சங்களைக் கட்டுடைப்பதும் அவசியமானதாகும்.
காலா திரைப்படம் குறித்து விவாதிக்கும்போது அத்திரைப்படம் கட்டி எழுப்ப முயலும் மதம், சித்தாந்தம் மற்றும் அரசியல் சார்ந்த பரப்புரைகளை / சித்திரங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
காலாவும் மதமும்:
தனிப்பட்ட வாழ்வில் பெரும் ஆன்மிகவாதியாகத் தன்னை முன்னிறுத்தும் ரஜினிகாந்த் எப்படி இந்தத் திரைப்படத்தில் நடித்தார் என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி. நாத்திகமோ, ஹிந்து மதத்தின் மீதான விமர்சனமோ ஒரு பிரச்சினை அல்ல. இந்தியாவில் ஹிந்து மதத்தில் நாத்திகம் என்பதை பொருட்படுத்தத்தக்க ஒரு எதிர்தரப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதி வந்துள்ளோம். காலாவில் வரும் மதம் சார்ந்த கருத்துகளில் பிரச்சினை என்னவென்றால் அது தமிழகத்தில் மட்டும் காணப்படும் தக்கையான ஹிந்து வெறுப்பு நாத்திகம் என்பதுதான். படத்தில் ரஜினி அதாவது காலாகடவுள் நம்பிக்கையற்றவராக காண்பிக்கப்படவில்லை. ஹிந்துமத நம்பிக்கையற்றவராகத்தான் காட்டப்படுகிறார். முதலில் வரும் பாடல் காட்சியில் ரஜினி நமாஸ் செய்வது தெளிவாகக் காட்டப்படுகிறது. அதேபோல் பின்னர் வில்லனிடம் பேசும்போதும் குதா...” என்று தொடங்கும் வசனத்தைக் கூறுகிறார். படத்தில் பல ஹிந்து கதாபாத்திரங்கள் கழுத்தில் இஸ்லாமியபாணி தாயத்தை அணிந்துள்ளனர். ரஞ்சித் முன்வைக்கும் போலி பகுத்தறிவுதான் படத்தை கேலிக்குரியதாக்குகிறது.

திரைப்படத்தில் எங்கெல்லாம் ஹிந்து மதத்தை சிறுமை செய்ய முடியுமோ அங்கெல்லாம் சிறுமை செய்துள்ளார். சில உதாரணங்களை பார்க்கலாம்.
1. படத்தில் வரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அனைவரும் நெற்றியில் ஆஞ்சநேயர் குங்குமம் என்று தமிழகத்தில் அறியப்படும் செந்தூரத்தை அணிந்துள்ளனர். செந்தூரம் என்பது ஆஞ்சநேய பக்தர்கள் அணியும் சின்னம். அது ஹிந்து இயக்கத்தவர்கள் மட்டுமே அணியும் சின்னம் அல்ல. நெல்லையில் 90% ஹிந்துக்கள் நெற்றியில் இது இருக்கும். உபயம்: கெட்வெல் ஆஞ்சநேயர். ஆனால் இத்திரைப்படம் செந்தூரத்தை ஏதோ ரவுடிகளின் சின்னம் என்பதுபோல சித்தரித்துள்ளனர். இதே இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். காலாவின் முன்னாள் காதலி நீங்கலாக அனைத்து இஸ்லாமிய கதாபாத்திரங்களும் இஸ்லாமிய சின்னங்களை அணிந்துள்ளனர். ஜீன்ஸ் அணிந்துள்ள இஸ்லாமிய யுவதி கூட தலையை ஹிஜாபால் மறைத்துள்ளார். ஒரு சின்னத்தைக் கேவலப்படுத்துதல் அதற்கெதிராக மற்றொரு சின்னத்தைப் புனிதப்படுத்துதல் என்னும் அற்ப பரப்பியல் விளையாட்டு இது. இரு சமூகங்களையும் பிரிக்கும் சூழ்ச்சி என்றுகூட கூறலாம்.
2. இதேபோல் வில்லன் தொடர்ந்து தனது தரப்பை நியாயப்படுத்த கீதையின் வசனங்களைச் சொல்கிறார். “கிருஷ்ணர் ஏற்கெனவே கூறினார்....”, “போரில் கிருஷ்ணன் செய்ததுதான்...” என்றெல்லாம் தனது தவறை நியாயப்படுத்துகிறார். ஏனைய புனித நூல்கள் போரைக் குறித்து சொன்னவற்றை வசனமாக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. இவ்வாறு வெறுப்பை வளர்க்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதல்ல நம் கருத்து.
3. ‘ராவணகாவியம்’, ‘அசுரன் என்ற அழைப்பு ஆகியவற்றைக் காட்டி, இறுதிக் காட்சி வன்முறை வெறியாட்டத்தில் பின்னணியாக ராமகாதையின் வரிகளை ஓடவிட்டிருப்பது மற்றொரு கீழ்மை.
4. காலாவின் போராட்டத்தில் இஸ்லாமியர் கலந்துகொள்கிறார்கள். வெள்ளை உடை அணிந்த பெந்தகோஸ்தே ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஹிந்துக்கள், அர்ச்சகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஹிந்து இயக்கங்கள் அதற்கு எதிராகவும் இருக்கின்றன. எதற்கு இத்தகைய ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி?
5. ‘காலா என்னும் பெயரே வடமொழி மூலத்தைக் கொண்டது. வேதத்தில் அச்சொல் வருகிறது. ஸ்ரீராமனை காலாம்போதர... ’ என மந்திர நூல்கள் வர்ணிக்கின்றன. (அதாவது கார்மேகத்தின் வர்ணம் கொண்டவன் என்று.) இருப்பினும் இவை அனைத்தையும் ஹிந்து மதத்திற்கு எதிராகத் திருப்பி போலி பரப்புரை உரையாடல்களை உருவாக்குகிறார் இயக்குநர்.
6. ஆஞ்சநேயர் குங்குமத்தை மட்டும் அல்ல. ஆஞ்சநேயரையும் கீழ்மைப்படுத்தும் விதமான காட்சிகள் உண்டு. இறுதிக் காட்சிகளில் வரும் வில்லனின் உடல்மொழியையும் அந்தக் கதாபாத்திரம் பயன்படுத்தும் கதையை ஒத்த ஆயுதத்தையும் பார்த்தால் இது புரியும்.
7. வில்லனின் நிறுவனத்தின் பெயர் ‘Manu Builders’. இதற்கு நான் விளக்கவுரை தரவேண்டியது இல்லை.
8. அந்தண வெறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி? ஆகவே வில்லனின் பெயரில் சித்பவன் அந்தணர் துணைப்பெயரான அய்யங்கர் இணைக்கப்பட்டுள்ளது.
ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி? சரி, ஏனோ காழ்ப்புணர்ச்சி என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்கு மாற்றாக இயக்குநர் எதை வைக்கிறார்?
. படம் முழுவதும் புத்தர் சிலைகள் வருகின்றன. இயக்குநருக்கும் அறிவுஜீவிகளுக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் பௌத்தம் ஜாதி அமைப்பை ஏற்கிறது என்பதுதான். லஸிதி வஸ்தார சூத்திரத்தில் போதி சத்துவர் அந்தண/சத்ரிய உயர்குலத்தில்தான் பிறக்க முடியும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. Y.Krishnan எழுதிய ‘Buddhism and the caste system’ என்னும் கட்டுரையை (Journal of the International Association of Buddhist studies vol.a. Number 1) வாசித்தால் தலை சுற்றும். வைதீக ஹிந்து மதப்பிரிவுகளில் இரு பிறப்பாளர் அல்லாதவர்களுக்கு மோக்ஷ உபாயமாக புராணங்கள் கூறப்பட்டுள்ளன. தொல் பௌத்தத்தில் அப்படியான வழிமுறை கூட இல்லை. திரு.அம்பேத்கருக்கு ஓரளவிற்கு இது தெரியும். அதனால்தான் அவர் ஒரு புது பௌத்த பிரிவை உருவாக்கினார். ‘நவயானா என்ற பெயரில் திரு.அம்பேத்கர் பௌத்தத்தின் ஆதாரக் கொள்கையான கர்மாவையும் மறுபிறப்பையும் நிராகரித்தார். (இவற்றை ஏற்றுக்கொண்டால் ஜாதியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.) இவை இல்லாத ஒரு பௌத்தம் பௌத்த மதமே அல்ல என்பது செவ்வியல் பௌத்தர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்து. இதைப்பற்றி எல்லாம் இயக்குநர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
. இதைத் தவிர திரு.அம்பேத்கரின் உருவச்சிலையும், .வே.ரா.வின் உருவச்சிலையும் படம் முழுக்கக் காட்டப்படுகின்றன. இஸ்லாம் குறித்த திரு.அம்பேத்கரின் கருத்து என்ன, ஏன் அவர் இந்திய ராணுவத்தில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என்றார், இஸ்லாமிய அரசியலுக்கும் ஜனநாயக அமைப்பிற்கும் இடையேயான முரண் குறித்த திரு.அம்பேத்கரின் வாதம் முதலியவற்றை இயக்குநர் வசதியாக மறந்துவிட்டார்போல. (‘ஹிந்துத்துவ அம்பேத்கர் நூலை ஏனையோர் வாசிக்கலாம்.) பட்டியல் இனத்தவர் மற்றும் இஸ்லாமியர் குறித்த ஈ.வே.ரா.வின் கருத்தை நான் கூறவேண்டிய தேவை இல்லை.
காலாவின் குலதெய்வம் காலாச்சாமிதானே. எனவே ஹிந்துக்களின் சிறுதெய்வ வழிபாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறதே என்ற கேள்வி எழும். இதிலும் ஒரு விஷமம் உண்டு. சமுத்திரக்கனி காலாச்சாமி பிரசாதம் என்று கூறி காலாவை கள் அருந்தச் செய்கிறார். பின்னர் காலாவின் மனைவியும் மகனும் கொல்லப்படும்போது காலாவே தான் கள்ளுண்டதனால்தான் அதனைத் தடுக்க முடியாமல் போனது என்கிறார். நுட்பமாகச் சொல்லப்படும் செய்தி என்ன? ஹிந்து மத எதிர்ப்பாளர்களும் மிஷனரிகளும் சிறு தெய்வ வழிபாட்டை முன்னெடுப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சிறு தெய்வ வழிபாடுகளில் இத்தகைய விஷமங்களைச் செய்யலாம் என்பதுதான். மறைமுகமாக குறுதெய்வங்களை வழிபடுவதால் அபாயமே உண்டு என்பது அல்லவா படம் சொல்லும் செய்தி?
குழந்தைகளை போராட்டக்களத்திற்குக் கொண்டுவருவது என்னும் கண்டிக்கத்தக்க வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன் ஐஐடி .வெ.ரா. வாசக வட்டம் பிரச்சினையில் தொடங்கியது. இதனை அப்போதே கவிஞர் தாமரை போன்றவர்கள் கூட கண்டித்தனர். இன்று இது அனைத்து சமூக விரோத சக்திகளும் பயன்படுத்தும் தந்திரமாக மாறியுள்ளது.
இத்தகைய நிலமோசடி விஷயங்களில் சாதாரணமாக பெரும்பங்கு வகிக்கும் அரசு சாரா நிறுவனங்களையும் (NGO) ஆட்சியாளர் தரப்பையும் (அப்பகுதி ச..) மிக மெலிதாகதான் கண்டிக்கிறார்.
நாஞ்சில் நாடனின் எட்டு திக்கும் மதயானை தொடங்கி ஜெயமோகனின் புறப்பாடு வரை பல படைப்புகளிலும் சொல்லப்பட்டிருக்கும் தாராவி ஜாதிப் பிரச்சினைகள் ஆக மொத்தம் ஒரு வரியே இந்தப் படத்தில் வருகிறது. இந்தப் பிரச்சினையைக் குறித்தெல்லாம் பேசாமல் எத்தகைய சமூகநீதி திரைப்படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார் என்று புரியவில்லை.
ஹிந்து மதத்தை திரைப்படங்களில் சிறுமைப்படுத்த முயல்வது புதிது ஒன்றும் இல்லை. இத்தகைய முயற்சிகளுக்கு ஹிந்துக்கள் என்றும் அறிவுசார் தளத்தில் மட்டுமே எதிர்வினையாற்றியுள்ளனர். இனியும் அப்படித்தான். ஆனால் இத்தகைய திரைப்படங்கள் ஒரு சில சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களையும் தவறாக வழிநடத்தி தனிமைப்படுத்தி அவர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடுமோ என்பதுதான் நம் கவலை. ‘மெட்ராஸ் திரைப்படத்தில் நாம் கண்டது திரைக்கலையில் புதிய அழகியலை, ஆவணப்படுத்தப்படாததை ஆவணப்படுத்திய நம்பிக்கை நட்சத்திரமான ரஞ்சித்தை. ஆனால் காலாவில் இருப்பது வெறுப்பின் தேய்வழக்கை உமிழும் ஒருவர்தான். தவறான சித்தாந்த ரஞ்சித் கலையை பலிவாங்கிவிட்டார்.

2 comments:

  1. படத்தில் கவனிக்கப்படாத பல காரியங்களைச் சுட்டிக்காட்டுகிறது இவ்விமர்சனம். அருமை.

    ReplyDelete

அநாகரீகமான பின்னூட்டங்கள் வெளியிடப்படமாட்டாது.