Posted on 1 Comment

அஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு

“இந்த தேசத்தின் நலனுக்காக எங்கள் சிறு கரங்களால் நாங்கள் தொடங்கிய பணி முடியும் வரை ஓயமாட்டோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மரியாதைக்குரிய அவைத்தலைவர் அவர்களே, எனது ராஜினாவை சமர்ப்பிக்க ஜனாதிபதியிடம் செல்கிறேன்.”

1996ல் மற்ற எந்தக் கட்சியும் ஆதரவளிக்க முன்வராத நிலையில் 13 நாட்களில் பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வந்தபோது அடல் பிகாரி வாஜ்பேயி பாராளுமன்றத்தில் பேசிய வாசகங்கள் இவை. இந்தச் சொற்களை அன்று கேட்ட இந்திய மக்கள் மறக்கவில்லை. பின்பு 1998 – 2004 வரையிலான காலகட்டத்தில் ஆறு வருடங்கள் பாரதப் பிரமராக வந்தமர்ந்து தனது உறுமொழியை நிறைவேற்ற அவருக்கு வாக்களித்தது மட்டுமன்றித் தங்களது நெஞ்சத்திலும் நீங்காத இடமளித்து விட்டனர் இந்திய மக்கள்.

2018 ஆகஸ்டு 16 அன்று அவரது மரணச் செய்தியைத் தொடர்ந்து நாடு முழுவதும், அனைத்துத் தரப்பு மக்களும் அவருக்குச் செலுத்திய கண்ணீர் அஞ்சலியே அதற்குச் சான்று. பத்து வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்விலிருந்து முற்றாக விலகியிருந்தவர் அவர். மருத்துவமனையில் நினைவழிந்த (dementia) நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர். அப்படியிருந்தாலும் அந்தத் தேசியத் தலைவரின் மகத்தான பங்களிப்பு இந்தத் தேசத்தின் நினைவிலிருந்து அகன்று விடவில்லை என்பதை இது உணர்த்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற 24 வயது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது வெற்றியை அடல்ஜிக்கு அர்ப்பணித்தார்.

‘உங்களது கனவில் உதித்து நீங்கள் சமைத்த சாலைகளில் நாங்கள் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறோம் அடல்ஜி’, ‘இந்தியா இன்று வல்லரசாக நெஞ்சை நிமிர்த்தி நிற்பது உங்களால்தான் அடல்ஜி’ என்று இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தினர். தங்களது இருபதுகளில் உள்ள இளைஞர்களும்கூட நாட்டின் தற்போதைய பன்முக வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளம் அடல்ஜியின் ஆட்சிக்காலத்தில்தான் இடப்பட்டது என்பதை உணர்ந்தே இருந்திருக்கின்றனர் என்பது பொதுவெளியில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களில் வெளிப்பட்டது. ஒரு ஜனநாயகத் தேசத்தின் ஆட்சியாளருக்கு இதைவிட உயர்ந்த பெருமை வேறு என்ன இருக்க முடியும்? அடல்ஜியின் புகழெனும் சிகரத்திற்கு மேலிட்ட சிகர தீபமாக, வாழும் காலத்திலேயே 2015ல் அவரை இந்திய அரசு பாரத ரத்னா விருதினால் அலங்கரித்தது.

1924ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் குவாலியரில் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த வாஜ்பேயி, சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவராக, 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு தனது சகோதரருடன் சிறை சென்றார். தனது அரசியல் வாழ்க்கையின் அனைத்து காலகட்டங்களிலும் சங்க பரிவாரத்தில் தான் கற்ற விழுமியங்களையும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட முன்னோடிகளின் ஆதர்சங்களையும் கடைப்பிடிப்பவராகவே அடல்ஜி இருந்தார்.

ஹிந்து உடல்-மனம் ஹிந்து வாழ்வு
நாடிநரம்பெங்கும் ஹிந்து
இதுவே என் அடையாளம்

என்று தான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது எழுதிய கவிதையின் உணர்விலிருந்து எந்த வகையிலும் தான் விலகிவிடவில்லை என்று 2006ம் ஆண்டு புணேயில் வீர சாவர்க்கர் குறித்து ஆற்றிய மகத்தான உரையில்*1 அடல்ஜி கூறினார். தனது சுடர்விடும் இளமைப்பருவத்தில் வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து சங்க பிரசாகராகக் களத்தில் குதித்த அடல்ஜி, இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் சம்பிரதாயங்களையும் ஆசாரவாதத்தையும் பொருட்படுத்தாத சுதந்திர சிந்தனையாளராகவும், அதே சமயம் இந்துப் பண்பாட்டின் மீதும், இந்து தர்மத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகவும் அவர் இருந்தார்.

1990கள் தொடங்கி வாஜ்பேயிக்கும் அத்வானிக்கும் பாஜகவுக்கும் இந்துத்துவத்திற்கும் எதிராக செக்யுலர்வாதிகளாலும் அவர்களது பிடியிலிருந்த ஊடகங்களாலும் வன்மத்துடன் கூடிய எதிர்ப் பிரசாரங்கள் தீவிரமாக நிகழ்த்தப்பட்டன. 2014 தேர்தல் வெற்றிக்கு முன்பு நரேந்திர மோதி மீது தொடுக்கப்பட்ட வெறுப்புணர்வுடன் கூடிய பொய்யான எதிர்மறைப் பிரசாரங்களுக்கு எந்த வகையிலும் குறையாதவை அவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதையும் மீறியே இந்திய அரசியலில் 1990களில் ஏற்பட்ட திசைமாற்றமும், பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சியும் நிகழ்ந்தது. அதை ஜீரணிக்க முடியாத ஊடகங்களும் சில அரசியல் விமர்சகர்களும், பின்பு வாஜ்பேயியை அவரது இந்துத்துவ வேர்களிலிருந்தும், கட்சியிலிருந்தும் தனிமைப்படுத்தும் வகையிலான விஷமத்தனமான சித்தரிப்புகளையும் சளைக்காது செய்தனர். ‘தீவிரவாத பாஜகவின் மென்மையான முகமூடி’, ‘தவறான கட்சியில் இருக்கும் சரியான தலைவர்’ என்று வாஜ்பேயியைக் குறித்து வேண்டுமென்றே பொய்யான, குழப்படியான கருத்துக்களைத் திட்டமிட்டுப் பரப்பினர். ஆனால், தற்போது அடல்ஜியின் மறைவுக்குப் பின்னர் அதே ஊடகங்களும் நபர்களும் அடல்ஜிக்குப் புகழாரம் சூட்டி, அதே வீச்சில் மோதி அரசின் தற்போதைய இந்துத்துவக் கருத்தியல் அடல்ஜியின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டது என்று கூறி அடுத்தகட்ட வினோத சித்தரிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

1951ம் ஆண்டு ஜனசங்கம் நிறுவப்பட்டபோது, அதில் முழுநேரப் பணியாற்றுவதற்காக சங்கம் அடல்ஜியை அனுப்பியது. தனது அபாரமான ஹிந்தி பேச்சாற்றலாலும், எழுத்து வன்மையாலும், கவிதை புனையும் ஆற்றலாலும் ஜனசங்கத்தின் அபிமான தலைவர்களில் ஒருவராக அவர் வளர்ந்தார். 1957 பொதுத்தேர்தலில் ஜனசங்க வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் சென்றார். 1975 நெருக்கடி நிலை காலகட்டத்தில் அதனை எதிர்த்துப் போராடிய தலைவர்களுடன் சேர்ந்து அடல்ஜியும் பெங்களூரில் சிறைவாசம் அனுபவித்தார். அடுத்து வந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்று 1977ல் மொரார்ஜி தேசாய் ஆட்சி அமைந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சர் என்னும் முக்கியமான பதவியை வகித்தார். பின்பு, 1980ல் பாரதிய ஜனதா கட்சி உதயமானதும், அதன் முதல் தலைவரானார். ஸ்ரீராமஜன்மபூமி இயக்கம் தேசமெங்கும் பரவியபோது அத்வானி, வாஜ்பேயி ஆகிய இருவரே கட்சியின் பிரதான முகங்களாக எழுந்து வந்தனர். பாஜக பாராளுமன்றத்தில் 86 இடங்களைப் பெற்று காங்கிரசை வீழ்த்தும் வல்லமைகொண்ட எதிர்துருவ அரசியலை நிலைநிறுத்தி விடும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. 1995 மும்பை செயற்குழுக் கூட்டத்தில் வாஜ்பாயியே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அத்வானி அறிவித்தார்.

அயோத்தி ரதயாத்திரை மற்றும் தனது உறுதிவாய்ந்த தலைமை மூலம் பாஜகவை தேசிய அரசியலின் மையத்திற்கு இட்டுச்சென்ற பெருந்தலைவர் அத்வானி. ஆனால் அந்தத் தருணத்தில் கட்சியில் தனது மூத்த சகபயணியும் இணைபிரியாத் தோழருமான வாஜ்பேயியைத் தானே அவர் முன்மொழிந்தது அவரது பெருந்தன்மையையும், சங்க பரிவாரப் பண்பாட்டில் வேரூன்றிய பாஜக என்ற கட்சியின் ஜனநாயகத் தன்மையையும் காட்டுகிறது. வாஜ்பேயி என்ற மகத்தான பிரதமரை நாட்டிற்கு அளித்த பெருமையில் அத்வானிக்கும் மிக முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையல்ல.

காங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து வந்து முதன்முறையாக ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த பிரதமர் வாஜ்பேயிதான். அவரது தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் நவீன இந்தியாவின் வரலாற்றில் என்றென்றும் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும்.

* இந்தியாவின் அணுசக்தி தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் 1960களிலிருந்தே அமைக்கப்பட்டது. ஆயினும் 1998ல் போக்ரான் அணுகுண்டு பரிசோதனையே இந்தியாவை வல்லரசாக உலக அரங்கில் நிலைநிறுத்தியது. 1995ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அத்தகைய பரிசோதனைகளுக்கான முயற்சி செய்யப்பட்டு அமெரிக்க செயற்கைக் கோள்களின் அதிதீவிரக் கண்காணிப்பின் காரணமாக அது நிறைவேறாமல் போனது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பி, பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துமுடித்த பெருமையும், அதைத் தொடர்ந்து உலக நாடுகள் விதித்த கடும் கெடுபிடிகளையும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் திறமையுடன் கையாண்டு, அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரித கதியில் இட்டுச் சென்ற பெருமையும் அடல்ஜி தலைமையிலான அரசையே சாரும்.

* அகண்ட பாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ் கருதுகோளின் அடிப்படையில் பாகிஸ்தானை முற்றான எதிரிநாடாகக் கருதாமல் லாகூர் பஸ் பயணம் உள்ளிட்ட பல நட்புணர்வுச் செயல்பாடுகளின் மூலம் நேசக்கரம் நீட்டினார் அடல்ஜி. இந்த நல்லுறவு உறுதிப்படும் சாத்தியங்களைச் சகிக்கமுடியாத பாகிஸ்தானின் உளவு அமைப்பும் ராணுவமும் சதி செய்து கார்கில் பகுதியை ஆக்கிரமித்தபோது, சிறிதும் சமரசமன்றி போரை அறிவிக்கவும் இந்திய ராணுவத்தை முடுக்கி விடவும் அவர் தயங்கவில்லை. போர் உச்சத்தை அடைந்த சமயத்தில், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு உள்ளாகாமல், அதே நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்று பாகிஸ்தானை பயங்கரவாத தேசம் என்று அறிவிக்க வைத்த அடல்ஜியின் ராஜதந்திர யுக்திகள் மறக்க முடியாதவை. இதன் விளைவாகவே ஜூலை 26, 1999 அன்று இந்தியா தனது எல்லைப் பகுதிகளை முற்றிலுமாக மீட்டுக் கொண்டது. கார்கில் வெற்றி தினமாக அந்நாளை ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடுகிறோம்.

* உள்நாட்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக POTO போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளையும், பாதுகாப்புச் செயல்பாடுகளையும் அடல்ஜி தலைமையிலான அரசு எடுத்தது. பின்னால் வந்த மன்மோகன் சிங் அரசு இந்த நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்ததன் விளைவாகவே 2006 மும்பையின் மீதான பயங்கரவாதத் தாக்குதல், ஹைதராபாத், தில்லி, அகமதாபாத் நகரங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் முதலான சேதங்களையும் இழப்புகளையும் நாம் சந்திக்க நேர்ந்தது.

* அரசுத் துறை நிறுவனங்களில் அரசு செய்திருந்த அதீதமான முதலீடுகளைக் குறைத்து, நரசிம்மராவ் தொடங்கி வைத்த தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை மிகப்பெரிய அளவில் துரிதப்படுத்தியது அடல்ஜி அரசு.

* தங்க நாற்கரம் (Golden Quadrilateral) என்ற பெயரில் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் அகன்ற அதிவேக நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் (PMGSY) ஆகிய அற்புதமான சாலைப் போக்குவரத்து திட்டங்கள் அடல்ஜியின் கனவில் உதித்தவையே. உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மிகப்பெரும் அளவில் வளர்ப்பதற்கான திட்டங்களும், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் புதிய, நவீன விமான நிலையங்களுக்கான அஸ்திவாரமும் அடல்ஜி அரசின் கொடையே.

* இயற்கை எரிவாயு, மின்சக்தித் திறன் அதிகரிப்பு, மொபைல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இன்று இந்தியா அடைந்திருக்கும் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கான வரைபடமும் ஆரம்பகட்ட உந்துவிசையும் அடல்ஜியின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன. இந்த வளர்ச்சியின் பின்னணியில் மலைக்க வைக்கும் ஊழல்களையும் முறைகேடுகளையும் கட்டுக்கடங்காமல் பெருகவிட்டதுதான் அடுத்து வந்த பத்தாண்டு காங்கிரஸ் அரசின் சாதனை.

* கல்வி வளர்ச்சி (சர்வ சிக்ஷா அபியான்), காப்பீடுத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்த கட்டுப்பாட்டு நீக்கங்கள், வரிவிதிப்பு சீர்திருத்தங்கள், வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதக் குறைப்பு உள்ளிட்ட வங்கித்துறைச் செயல்பாடுகள் என்று பல துறைகளில் அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சிந்தனைகளையும் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தது அடல்ஜியின் அரசுதான்.

இவ்வளவு சாதனைகளையும் படைத்த அடல் பிகாரி வாஜ்பேயியின் ஆட்சிக்காலம் அரசியல் ரீதியாக அவருக்கும் பாஜகவுக்கும் எந்த வகையிலும் மென்மையாகவோ இலகுவாகவோ இருக்கவில்லை. இந்தியாவின் பலகட்சி ஜனநாயக முறையின் விளைவாக பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சியை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், அவர்களது அராஜக அழுத்தங்கள், இழுபறிகள், நம்பிக்கைத் துரோகங்கள் அத்தனையும் தாங்கிச் சமாளித்து அரசை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு, முதுமையால் வரும் உடல்நலக் குறைவும் மென்மையான மனமும் கொண்ட அடல்ஜியின் மீது விழுந்தது. ‘இறைவா, இந்த மெல்லிய தோள்களில் இத்தனை சுமையா’ என்று அவரது கவிமனம் ஒருபுறம் அரற்றியபோதும், தேசப்பணியை லட்சியமாக்கி யதார்த்தத்தில் நிலைகொண்ட ஸ்வயம்சேவகனின் மனம் அதற்கான உறுதியை அளித்தது.

நடைமுறையில் தான் சந்தித்த அரசியல் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி, வாஜ்பேயி பலகட்சி ஜனநாயகம் இந்தியாவிற்கு வலிமை சேர்க்கும் ஒரு கூறு என்றே கருதினார். ‘பலகட்சி ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனக்கான கொள்கைகளும், லட்சியங்களும் இருக்கலாம். ஆனால், அவை எதுவும் தேசநலனுக்கு விரோதமாக இருக்கக்கூடாது, தேசத்தின் நல்வாழ்விற்கு உரமூட்டுவதாக இருக்க வேண்டும். வன்முறையின்றி ஒரு அரசாட்சியை அகற்ற முடிவதுதான் ஜனநாயகம். வெறுப்பின்றி மாற்றுத்தரப்பை எதிர்க்க முடிவதுதான் ஜனநாயகம்’ என்று சரத் பவாரின் அறுபதாம் ஆண்டு விழாவில் பேசுகையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்*2.

பாஜக ஏற்பாடு செய்தியிருந்த சர்வகட்சி அஞ்சலிக் கூட்டத்தில் அடல்ஜிக்குப் புகழாரம் சூட்டிய காஷ்மீர் அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா உணர்ச்சி வசப்பட்டு இறுதியில் பாரத்மாதா கி ஜெய் என்று மும்முறை கோஷமிட்டார் (இதற்காக காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஒரு வாரத்திற்கு அவரை வறுத்தெடுத்தனர் என்பது சோகம்.) அடல்ஜியின் ஆளுமை மாற்றுத் தரப்பு அரசியல் தலைவர்களிடமும் எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது இதிலிருந்து புலனாகிறது.

‘அவருக்குப் பகைவன் இன்னும் பிறக்கவில்லை’ என்று பொருள்தரும் அஜாதசத்ரு என்ற அடைமொழியுடன் அவரைப் பல அரசியல்வாதிகள் நினைவு கூர்ந்தனர். மகாபாரத நாயகனும் தர்மத்தின் வடிவமுமான யுதிஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட பெயர் அது. பகைவர் என்று ஒருவரையும் கருதாத விசாலமான நெஞ்சம் அவனுடையது என்பது ஒரு பொருள். ஒருவரும் அவனைப் பகைவராக எண்ணத் துணியாத அளவு பராக்கிரமம் அவனுடையது என்பது மற்றொரு பொருள். ஆம், அடல் பிகாரி வாஜ்பேயி உண்மையில் ஓர் அஜாதசத்ருதான்.

வா மீண்டும் விளக்கேற்றுவோம்
பட்டப் பகலிலும் கவிந்தது இருள்
நிழலுக்குத் தோற்றது கதிரொளி
அகத்தின் உள்ளிருக்கும் அன்பைப் பிழிந்து
அணைந்து விட்ட சுடரைத் தூண்டுவோம்
வா மீண்டும் விளக்கேற்றுவோம்.

(அடல்ஜியின் கவிதை வரிகள்)

சான்றுகள்:

[1] https://www.youtube.com/watch?v=eWWvxqacbC0

[2] https://www.youtube.com/watch?v=QxTba4KRLHY

1 thought on “அஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு

  1. வாஜ்பாய் பற்றிய நீண்ட விரிவான அலசல் புத்தகமாக இருக்கிறதா? பகிரவும். நன்றி.

Leave a Reply