Posted on 1 Comment

யார் குரு? | சுமதி ஸ்ரீதர்


வெள்ளையர்களிடமிருந்து விடுதலை கிடைத்த இந்த 71 ஆண்டுகளில்தான் நம் நாட்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதியை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் வழக்கம் உருவாகியிருக்கிறது. ஆனால், ஆசிரியர் தினம் கொண்டாடும் வழக்கம் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்தே நம் கலாசாரத்தில் குருவின் மகத்துவத்தைக் கொண்டாடும் மரபு இருந்து வந்திருக்கிறது. ஆனி மாதம் பெளர்ணமியன்று கொண்டாடப்படும் குரு பூர்ணிமா நம் ஆச்சார்யர்களைக் கெளரவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்நாளை பெளத்தர்கள், கௌதம புத்தர் தான் பெற்ற ஞானத்தை மானிட இனத்திற்குக் கொண்டு சேர்க்க சாரநாத்தில் கொடுத்த முதல் பிரசங்கத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர். இந்துக்கள் இந்த நாளில் ஆதியோகியான சிவனையும், வியாச மாமுனிவரையும் நினைவு கூர்கின்றனர்.

சரி, குருவும் ஆசிரியரும் ஒன்றுதானே, பிறகு நாம் ஆசிரியர் தினம், குரு பூர்ணிமா இரண்டையும் ஏன் தனித்தனியாக கொண்டாட வேண்டும்? காரணம் இல்லாமலில்லை. ஆசிரியரும் குருவும் ஒன்றல்ல. இருவருக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆசிரியர் என்பவர் லெளகீக விஷயங்களில் நம்மைத் தேர்ச்சி பெறச் செய்பவர். ஆனால் குருவோ இந்த லெளகீகத்தைத் தாண்டி நம்மை மெய்ஞானத்தை நோக்கி கூட்டிச் செல்பவர்.

இந்திய கலாசாரத்தில் ஆசிரியரைவிட குருவின் நிலை மிக உயர்ந்தது, சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலே.

ஒருமுறை கவியும் ஞானியுமான கபீரிடம், “உங்கள் முன்னால் நீங்கள் பூஜிக்கும் கடவுளும் உங்களுடைய குருவும் ஒரே நேரத்தில் தோன்றினால் நீங்கள் முதலில் யார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அவர், “நான் முதலில் என் குருவின் பாதங்களைத்தான் தொழுவேன், ஏனென்றால் அவர்தானே எனக்கு என் கடவுளையே அடையாளம் காட்டியவர்” என்றார்.

கபீர் மட்டும்தான் தன் குருவைத் தன் கடவுளுக்கு மேல் வைத்தாரா என்றால் இல்லை. நம் கடவுள்களே கூட மனித அவதாரம் எடுத்தபோது குருகுலவாசம் ஏற்றுத் தங்கள் குருமார்களிடம் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் யோகவாசிஷ்டம் என்னும் நூல் ராமர் தன் குரு வசிஷ்டரிடம் கேட்டு அறிந்துகொள்வதுபோல் படைக்கப்பட்டுள்ளது.

சாந்தீபநி என்னும் ஒரு மிகச்சிறந்த குரு கிடைக்காவிட்டால் வெண்ணெய் திருடிய கண்ணன் ஒரு கீதாச்சாரியனாக உருவாகி இருப்பானா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

சம்ஸ்க்ருத மொழியில் ‘கு’ என்றால் இருள் என்றும் ‘ரூ’ என்றால் விலக்குவது என்றும் பொருள். குரு என்பவர் அறியாமை என்னும் இருளைப் போக்கித் தம் சீடனைக் கடவுளுக்கு அருகே கொண்டு சேர்ப்பவர் ஆகிறார். ஞானத்துக்கும் மோட்சத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நம் சமுதாயத்தில் குருவின் பங்களிப்பு மிக அதிகம். நாம் கூறும் கதைகளிலும் அது பிரதிபலிக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு உன்னதமான குருவின் கதை திருமழிசை ஆழ்வாரின் கதை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சிறிய ஊரான திருமழிசை பாடல் பெற்ற ஸ்தலமாகும். அங்கு உறைந்திருக்கும் ஜகன்னாதப் பெருமாள் பாம்பணையில் காட்சியளிக்கிறார். பெருமாள்பால் ஆழ்ந்த பக்தி கொண்டவர் திருமழிசை ஆழ்வார். ஆழ்வாருக்கு கனிகண்ணன் என்னும் ஒரு சீடன் இருந்தான். அவன் தன் குருவைப் போலவே மிகுந்த ஞானம் உடையவன். இப்படிப்பட்ட தேஜஸ் கொண்ட சீடன் கிடைத்ததில் ஆழ்வாருக்கு மிகுந்த பெருமை. அவனிடம் அபரிமிதமான அன்பு கொண்டிருந்தார் அவர். ஒருநாள் கனிகண்ணன் கோவிலை வலம் வரும்போது அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒரு கூனிக் கிழவியைக் கண்டான். தன் சோர்ந்த உயிரையும், தளர்ந்த உடலையும் பொருட்படுத்தாது முழு மனதுடன் பகவத் சேவையில் ஈடுபட்டிருந்த அந்தக் கிழவியைக் கண்டு அவன் மனம் நெகிழ்ந்தான். அவளது கூனை நிமிர்த்தி அவளை மறுபடி ஒரு அழகான யுவதியாக மாற்றினான். தனக்கு மறுவாழ்வு அளித்த கனிகண்ணனுக்கு நன்றி சொன்ன அந்த யுவதி தனக்கு கிடைத்த புது வாழ்வை கோவில் நற்பணிகளிலேயே தொடர்ந்து கழிக்க முடிவு செய்தாள்.

இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட வயது முதிர்ந்த காஞ்சி மன்னன், கனிகண்ணனை அணுகி, தனக்கும் தன் இளமையை மீட்டுத் தரக் கோரினான். மன்னனுக்குத் தான் வாழ்ந்த சுகபோக வாழ்க்கையை மறுபடி வாழ ஆசை. இதையறிந்த கனிகண்ணன் பேராசை பிடித்த அந்த மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்தான். கோபமுற்ற மன்னன் கனிகண்ணனை நாடு கத்தினான். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆழ்வார் தன்னால் தன் அன்பான சீடனின்றி வாழ இயலாது என்பதை உணர்ந்து தானும் திருமழிசையை விட்டுச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அவர் செல்லும்போது தான்மட்டும் செல்லவில்லை. தான் தினந்தோறும் வணங்கும் பெருமாளையும் தன்னுடன் வரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவர் பெருமாளிடம், “உமது பக்தனான நானே இந்த ஊரை விட்டுச் செல்லும்போது உமக்கு இங்கென்னய்யா வேலை? நீரும் தங்களுடைய பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு என்னுடன் கிளம்பி வாருமய்யா” என்றார்.

பக்தன் கட்டளையிட்டபடி உடனே தன் நாகப்பாயான ஆதிசேஷனைச் சுருட்டிக்கொண்டு திருமழிசையை விட்டு அவரும் கிளம்பி விட்டார். ஆக கனிகண்ணனைப் பின்தொடர்ந்து ஆழ்வாரும், ஆழ்வாரைப் பின்தொடர்ந்து பெருமாளும் மூவருமாகச் சேர்ந்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ஊரின் எல்லையைச் சென்றடைவதற்குள் இருட்டி விட்டது. அதனால் இரவுப் பொழுதை அங்கேயே கழித்துவிட்டு காலையில் மறுபடி தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். பெருமாள் இல்லாத காஞ்சி முன்னைப்போல் செல்வச்செழிப்புடன் இருந்திட முடியுமா என்ன? திருமழிசையை விட்டு பெருமாள் செல்லும்போது தன் மார்பில் குடியிருக்கும் ஸ்ரீதேவியையும் அல்லவா கூட்டிச் சென்று விட்டார். ஸ்ரீதேவி விட்டுச் சென்ற காலி இடத்தில் மூதேவி வந்து குடி புகுந்தாள். நாடே இருளில் மூழ்கியது. தரித்திரமும் அமங்கலமும் வந்து சேர அந்நாட்டுச் செல்வந்தர்களெல்லாம் தங்கள் செல்வங்களை இழந்தனர். இந்த விபரீத நிகழ்வுகளைக் கண்ட காஞ்சி மன்னன் மிரண்டு போனான். உடனே நாட்டு எல்லைக்கு விரைந்தான். நேரே சென்று அங்கு தங்கியிருந்த பெருமாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரிடம் மறுபடி திருமழிசை திரும்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பெருமாளோ தன் பக்தன் ஆழ்வாரை விட்டு தன்னால் வர முடியாது என்று கை விரித்து விட்டார். வேறுவழியில்லாமல் மன்னன் அடுத்து ஆழ்வாரின் காலைப் பிடித்தான். ஆனால் அவரோ தன்னுடைய சீடன் கணிகண்ணன் இல்லாமல் தான் திருமழிசை ஒருபோதும் திரும்ப முடியாதென்று உறுதியாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு நொந்து போன மன்னன் வேறு வழி தெரியாமல் கனிகண்ணனிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். மறுபடி அவனை திருமழிசை திரும்புமாறு வேண்டிக்கொண்டான். உடனே கனிகண்ணன் மனமிறங்கி ஊர் திரும்ப ஒப்புக்கொண்டார். சீடனுடனேயே ஆழ்வாரும் திருமழிசை திரும்பிவிட முடிவெடுத்தார். உடனே பெருமாளிடம் சென்று “நான் ஊர் திரும்பி விட்டால் நீர் மட்டும் இங்கிருந்து என்ன செய்வீர்? உம் பாயை சுருட்டிக்கொண்டு நீரும் மறுபடி என்னுடன் ஊர் திரும்பும்” என்றார். பெருமாளும் ஆழ்வார் ஆணையிட்டபடியே திருமழிசை திரும்ப முடிவு செய்தார். ஒருவழியாக சீடன் குரு மற்றும் பகவான் மூவரும் தங்களுடைய இருப்பிடத்திற்கே மீண்டும் திரும்பினர்.

தன் சீடனுக்காக ஒரு குரு கடவுளையே தனக்குக் கீழ்ப்படியச் செய்தது ஆச்சரியம் என்றால் தன்னுடைய சீடர்களுக்காகத் தன்னையே துன்புறுத்திக் கொண்ட குருமார்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான மணிமேகலையை இயற்றியதாகக் கூறப்படும் சீத்தலைச் சாத்தனார். தன் சீடர்கள் சரியாகப் படிக்காவிட்டால் எழுத்தாணியால் தன் தலையை தானே குத்திக் கொண்டார் என்றும், அதனால் அவர் தலை எப்பொழுதும் சீழும் ரத்தமும் ஒழுகிக் காணப்பட்டதாகவும் கூறுப்படுவதுண்டு. இதனாலேயே அவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வந்ததாகக் கதையுண்டு.

மேலே கூறிய இரு கதைகளிலும் குருமார்கள் தங்களது சீடர்களைவிட வயது முதிர்ந்தவர்கள். ஆனால் ஞானமென்பது வயதையொட்டியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இளைய குருவுக்கானச் சாலச் சிறந்த உதாரணம் தட்சிணாமூர்த்தி. சிவனின் அவதாரமாகக் கருதப்படும் அவர் ஒரு மௌன குரு. ஆலமரத்தின் கீழ் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் அவரிடம் கேட்க இருந்த சந்தேகங்கள் எல்லாம் மாயமாக மறைந்து விடுகின்றன. தான் இயற்றிய தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுவது போல் ஞானத்தை போதிக்கும் குருவோ இளையவர், ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரும் தாடி நரைத்த முனிவர்கள்! ஆனால் இப்படிப்பட்ட ஞானகுருவான சிவனே ஒரு கட்டத்தில் சுவாமி மலையில் தன் மகன் முன் அடக்கத்துடன் அமர்ந்து ஓம்காரத்தின் பொருளை அறிந்துகொள்ள வேண்டி வந்தது.

ஞானபண்டிதனாக அறியப்படும் முருகனைப் பற்றிய இன்னொரு கதையுமுண்டு. கச்சியப்பர் கந்தபுராணம் இயற்றியதாகக் கருதப்படும் காஞ்சியின் குமரகோட்டத்தில் காட்சி தரும் முருகனின் பெயர் பிரம்மசாஸ்தா. படைக்கும் கடவுளான பிரம்மா பிரணவ மந்திரத்திற்குத் தவறாக அர்த்தம் சொன்னதால் முருகன் கையால் தலையில் குட்டுப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். பிரம்மாவிடமிருந்து சிருஷ்டிக்கும் பொறுப்பைத் தற்காலிகமாக கந்தசாமி ஏற்றுக்கொண்டதாகக் கதை. அதனால் அவர் பிரம்ம சாஸ்தா என்று அறியப்படுகிறார், அதாவது பிரம்மாவுக்கே ஆசான் ஆகியவர்.

இதே போல் பிஞ்சில் பழுத்த பழமாக உபநிடதங்களிலும் மகா புராணங்களிலும் பவனி வரும் குமாரர்கள் பிரம்மாவின் மானசீகப் புத்திரர்கள். இளம் பருவத்திலேயே பிரம்ம ஞானம் அடைந்தவர்கள். சாந்தோக்கிய உபநிடத்தில் மற்றும் மகாபாரதத்திலும் சனத்குமாரர் என்னும் குமாரர் நாரதருக்கு உபதேசம் செய்வதாக உள்ளது. சனத்குமாரருக்கு நிகரானவர் பௌத்தக் கதைகளில் (ஜாதகக் கதைகள்) தோன்றும் ஔடத குமாரர். இவர் புத்தரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

எப்படி வயதுக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லையோ, அப்படியே குரு என்பவர் ஒரு அந்தணராக மேட்டுக்குடியினராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் எங்கிருந்து வருகிறார் என்பது முக்கியமில்லை, அவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம் என்ற கருத்தைப் பறைசாற்றுகின்றன நம் கதைகள்.

மகாபாரதத்தின் வனபர்வத்தில் அறத்துடன் வாழ்ந்த ஒரு கசாப்புக்காரனின் கதை வருகிறது. ஒருநாள் ஒரு அடர்ந்த வனத்தில் முனிவர் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்து ஒரு கொக்கு அவர் தலையில் எச்சம் இட்டுவிட்டது. கொதித்தெழுந்த முனிவர் அந்தக் கொக்கைத் தன் பார்வையால் எரித்துக் கொன்றார். சிறிது நேரத்தில் அவருக்குப் பசி தோன்ற பிட்சை கேட்டு வாங்குவதற்காக நகரத்துக்கு வந்தார். அங்கு ஒரு வீட்டின் முன் சென்று பிட்சை கேட்டுக் குரல் எழுப்பினார். அந்த வீட்டு எஜமானி வீட்டினுள் இருந்தபடியே அவரிடம் சற்றுப் பொறுத்திருக்குமாறு கூறினாள். தன் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதாகவும் முனிவர் சற்றுப் பொறுத்திருந்தால் தான் வந்து பிட்சையிடுவதாகவும் கூறினாள். ஆனால் முனிவருக்குப் பொறுமையில்லை. அவளுக்குச் சாபமிட்டு விடுவதாக எச்சரித்தார். இதைக் கேட்ட வீட்டு எஜமானி சிறிதும் கலங்காது முனிவர் தன்னைச் சுட்டெரித்துக் கொல்ல தானொன்றும் ஒரு பாவபட்ட கொக்கல்ல என்று பதிலடி கொடுத்தாள். இதைக்கேட்ட முனிவருக்கு ஆச்சரியம்! அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி இந்தப் பெண்மணி எப்படி அறிந்திருந்தாளென அவளிடம் கேட்டார். அதற்கு அவள் தன் கணவனுக்குப் பக்தி சிரத்தையுடன் சேவை செய்து வந்ததால் தனக்கு முக்காலமும் உணரும் சக்தி கிடைத்ததாக முனிவரிடம் கூறினாள்.

இதைக் கேட்ட அந்த முனிவர் வெட்கித் தலை குனிந்தார். தனக்கு உலகத்தில் கற்க வேண்டியது இன்னுமும் நிறைய உள்ளது என்பதை உணர்ந்தார். இதையறிந்த அந்தப் பெண்மணி முனிவரை மிதிலை மாநகரில் தன்னறத்துடன் வாழும் கசாப்புக்காரனைத் தன் குருவாக ஏற்கச் சொல்லி அனுப்பி வைத்தாள். உயர்குலத்து அந்தணனான தான் ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் என்ன கற்க முடியும் என்ற சந்தேகத்துடனே மிதிலைக்குச் சென்றார் அந்த முனிவர். அங்கு, கசாப்புக்காரனைச் சந்தித்து அவனிடம் இவ்வளவு இம்சை வாய்ந்த தொழில் செய்பவனுக்கு அறத்தைப் பற்றிப் பேச எவ்வாறு இயலும் என்று கேட்டார். அதற்கு அவன், எந்தத் தொழிலுமே களங்கமானதோ ஈனமானதோ இல்லை, அதன் மதிப்பு அதை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதில் இருக்கிறது என்றான். அந்தக் கசாப்புக்காரனுக்கும் முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடல் வியாத கீதை என்னும் பெயரில் அறியப்படுகிறது. ‘வியாத’ என்றால் சம்ஸ்கிருதத்தில் கசாப்புக்காரன் என்று பொருள். வியாத கீதை அறத்தைப் பற்றியும், பலனை எதிர்பாராது செய்யும் கருமத்தைப் பற்றியும் பேசுகிறது.

மறுபடி மறுபடி நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால் குரு என்பவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. எவர் ஒருவர் நமக்கு ஞானத்தை ஊட்டக்கூடிய தகுதி பெற்றிருக்கிறாரோ அவர் எந்த குலத்திலிருந்து வந்தாலும் நமக்கு ஞானகுருவாகிறார்.

இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் ஆதிசங்கரரின் கதையிலுள்ளது. ஒருமுறை சங்கரர் வாரணாசியில் தன் சீடர்களுடன் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்படிச் செல்லும் வழியில் எதிர்பாராமல் திடீரென ஒரு சண்டாளன் வந்து விட்டான். அவன் தீண்டத்தகாதவனாகையால் சங்கரரும் அவரது சீடர்களும் அவனை ஓரமாக ஒதுங்கி அவர்களுக்கு வழிவிடச் சொல்லிக் கேட்டார்கள். பதிலுக்கு அவன் அவர்களிடம், “நீங்கள் என் உடலை நகரச் சொல்கிறீர்களா அல்லது என் ஆன்மாவையா? ஆன்மா எல்லோர்க்கும் ஒன்றுதானென்றால் உடலால் அது அசுத்தமாகாது. அத்வைத உலகில், அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபடாத உலகில், ஒரு அந்தணனும் சண்டாளனும் எப்படி வேறுபட முடியும்?” என்று கேட்டான். இதைக் கேட்ட சங்கரருக்கு அதிர்ச்சி! இவ்வளவு நுட்பமாகக் கேள்வி கேட்கும் இந்த சண்டாளன் எப்படி ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியும்? அந்த நொடியிலேயே சண்டாளனை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார் அவர். பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து மனீஷா பஞ்சகம் என்ற செய்யுளை இயற்றினார்.

முன்னே சொன்னதுபோல குரு என்பவர் எப்படி மேட்டுக்குடியிலிருந்து வரவேண்டியது கட்டாயமில்லையோ, அப்படி அவர் சந்நியாசியாக, முற்றும் துறந்தவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. இல்லறத்தில் ஈடுபடுபவன்கூட ஒரு முதிர்ந்த ஆசானாக இருக்க முடியம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு ஜனகர். மிதிலைக்கு அரசனான ஜனகர் இல்லறத்தில் இருந்துகொண்டே தாமரை இலை மேல் தண்ணீராக வாழ்ந்த ஒரு பிரம்மஞானி.

ஒருமுறை வேதவியாசர் தன் மகன் சுகரை ஜனகரிடம் சென்று தீட்சை பெற்றுவர அனுப்பி வைத்தார். ஆனால் சுகருக்கு அதில் நாட்டமில்லை. இல்லறத்தில் வாழும் ஜனகர் தன்னைப் போன்ற சந்நியாசிக்கு எவ்வாறு பிரம்ம ஞானத்தை அருளிட முடியும் என்ற சந்தேகம் அவருக்கு. தன் சந்தேகத்தை சுகர் ஜனகரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். இதற்கு ஜனகர் பதில் ஏதும் கூறவில்லை. மாறாக சுகரிடம் ஒரு பால் செம்பைக் கொடுத்து அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனையை சுற்றி வரச் சொன்னார். ஆனால் பாத்திரத்திலிருந்து பால் ஒரு சொட்டுக்கூட சிந்தக்கூடாது என்பது நிபந்தனை. சுகரும் ஜனகர் ஆணையிட்டபடியே அரண்மனையைச் சுற்றி வந்தார். அவர் சென்ற வழியெங்கும் கண்ணைக் கவர்ந்து நெஞ்சை அள்ளக் கூடிய பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆனால் அந்தப்புரத்துப் பேரழகிகள் ஆகட்டும், சமையலறை தின்பண்டங்களாகட்டும் அல்லது வழியெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆகட்டும், இவை எதுவுமே சுகரின் கண்களுக்குத் தென்படவில்லை. அவரின் கவனம் முழுவதும் அந்த பால் செம்பின் மேலேயே இருந்தது. சற்றுகூடக் கவனம் சிதறாமல், ஒரு சொட்டு பால் நிலத்தில் சிந்தாமல் ஜனகர் கூறியபடி தன் அரண்மனை வலத்தை முடித்த சுகர் வெற்றிக் களிப்புடன் ஜனகர் முன் ஆஜரானார். ஜனக மஹாராஜா அவரைப் பார்த்து, “தங்களுக்கு நான் வைத்த பரிசோதனையில் வெற்றி பெற்றுத் திரும்பி இருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம். இப.பொழுது கூறுங்கள், தாங்கள் சென்ற வழியில் தாங்கள் என்னவெல்லாம் கண்டீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்ட சுகர் தன் கவனம் முழுவதும் பால் செம்பில் இருந்ததால் மற்றவற்றில் தான் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அதற்கு ஜனகர், தானும் இல்லறத்தில் அவ்வாறே இருந்துகொண்டு பிரம்ம ஞானியாக வாழ்வதாகக் கூறினார். அறத்தைக் கடைப்பிடிப்பதில் தன் கவனம் முழுவதையும் செலுத்துவதால் தன்னைச் சுற்றியுள்ள சுகபோகங்கள் ஒருபோதும் தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட சுகர் மனம் மாறி ஜனகரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். ஜனகருக்கும் சுகருக்கும் இடையிலான உரையாடல் மகா உபநிஷத்தில் வருகிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண் குருமார்களைப் பற்றிய கதைகளும் நம் கலாசாரத்தில் நிறைய உண்டு. திரிபுரா ரகசியம் மற்றும் யோக வாசிஷ்டம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டதுபோல் ஹேமலேகா மற்றும் சுபலா என்ற இரு பெண்மணிகள், தேக இன்பத்தை நாடும் தன் கணவன்மார்களைப் பிரம்மஞானத்தை நோக்கி அழைத்துச்சென்ற கதைகளும் உண்டு. எமனே குருவாக மாறி உபதேசித்த நசிகேதசின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வளவு ஏன், நம் கலாசாரத்தில் மிருகங்களும் பறவைகளும் கூட ஞானத்தை போதித்த கதைகள் உண்டு.

மேலே சொன்ன கதைகளில் கண்டது போல் குரு என்பவர் யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும் சீடனையும் கடவுளையும் இணைக்கும் ஒரு பாலமாகிறார். சாரமற்ற இந்த சம்சாரத்தை நாம் கடந்து செல்ல உதவும் ஒரு தோணியாகிறார். இந்தத் தோணியில்லாமல் நாம் கரை சேர்வது கடினம்.

1 thought on “யார் குரு? | சுமதி ஸ்ரீதர்

  1. பல தகவல்கள் அடங்கிய நல்ல பதிவு. சங்கரர் தமது 'ப்ரஷ்னோத்தர ரத்ன மாலிகா' என்ற சிறிய நூலில் 'யார் குரு?' என்று வினா எழுப்பி 'தத்துவத்தி அறிந்தவன், சீடர்களது மேன்மைக்காக இடை விடாமல் உழைப்பவன்' என்று இரு தகுதிகளைக் காட்டியுள்ளார். को गुरुः – अधिगततत्त्वः शिष्यहितायोद्यतः सततम् sanskritebooks.org/2009/04/prasnottara-ratna-malika-of-sankaracharya-sanskrit-english/

Leave a Reply