Thursday, 16 May 2019

வலம் மார்ச் 2019 இதழ் - முழுமையான படைப்புகள்


வலம் மார்ச் 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

புல்வாமா தாக்குதல் | கேப்டன் எஸ்.பி. குட்டி

நேர்காணல்: ஹெச்.ராஜா | அபாகி

பட்ஜெட் 2019 | ஜெயராமன் ரகுநாதன்

கனம் நீதிபதி அவர்களே, ஒளியிலிருந்து இருட்டுக்கு இட்டுச் செல்லாதீர்கள் | அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: மைத்ரேயன்

ஒடிசாவில் ஒரு இறையியல் சுற்றுலா | சுமதி ஸ்ரீதர்

இரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்

சில பயணங்கள் சில பதிவுகள் - 18 | அவசர நிலை | - சுப்பு

சாலா (சிறுகதை) | மதிபொன்னரசு

செண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்
செண்டலங்காரர் தெட்டபழம் | சுஜாதா தேசிகன்


தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும் எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம் சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.

பருப்பதத்துக் கயல் பொறித்த
பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் பொறித்தாய்

எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள். அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால் அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன் ஆழ்வாருக்கு அடியவன் ஆனான். செப்பேட்டில் ‘பரமவைஷ்ணவதானாகி’ என்று வருவதே இதற்குச் சான்று.

இந்தப் பாசுரத்தில் பாண்டியனைச் சிறப்பித்துப் பேசி அவனுடைய இலச்சினையை ஏன் பெரியாழ்வார் பெருமாளின் திருவடிக்கு ஒப்பிடுகிறார் என்று கொஞ்சம் ஆராயலாம்.

பாண்டியரின் இலச்சினை இரண்டு மீன் நடுவில் ஒரு சாட்டை போல இருப்பதைப் பார்க்கலாம். சாட்டை போல இருப்பது பாண்டியரின் செங்கோல். இதைப் பார்த்தவுடன் ஆழ்வாருக்குப் பெருமாளின் திருவடியும், தன் நெற்றியில் இருக்கும் திருமண்னும் (நாமம்) நினைவுக்கு வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலே சொன்ன இந்த உதாரணம் எதற்கென்றால், செய்யுளில் சொற்கள் சாதாரணமாக நமக்குத் தெரியும். ஆனால் சரியான பொருள் தெரிந்தால்தான் அதன் அலாதியான சுவை புரியும்.
பாண்டியனின் சின்னத்தில் நடுவில் செண்டு போல இருப்பதைப் பார்த்தால் உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘செண்டலங்காரர்’ என்ற கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.

செண்டலங்காரர்

வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழிலே சுவையானது. தமிழர்களுடைய உள்ளத்தை அது கவர்ந்தது. உ.வே.சாமிநாதையர் தன் இளமையிலே அந்நூலைப் படித்து அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்திருக்கிறார்.
அதில், சூதாடித் தோற்ற வரலாற்றில் சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரத் தன் தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான். அதை விவரிக்கும் செய்யுள் இது.

“தண்டார் விடலை தாயுரைப்பத்
 தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
 தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலு முடன்குலைய
 மானங் குலைய மனங்குலையக்
கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்
 கொண்டா ளந்தோ கொடியாளே”

“தன்னுடைய தாயாகிய காந்தாரி, ‘நீ போய் வா’ என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலைப் பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி, அந்தோ!, தன் குழல் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்” என்பது இச்செய்யுளின் பொருள்.

உ.வே.சாவிற்கு ‘கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி’ என்று வரும் வரியில் ஐயம் வந்தது. செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்று பொருள் கூறுவர். துச்சாதனன் கையில் பூச்செண்டு எங்கிருந்து வந்தது?
திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று வைத்துக்கொண்டால், திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாள், அதனால் அவள் கூந்தலில் மலர் அணிந்திருக்க சாத்தியமில்லை. செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம் என்று பல ஐயங்கள் ஐயருக்கு இருந்திருக்கின்றன.

பல வருடங்கள் கழித்துத் தமிழ் யாத்திரையில் சீர்காழி-மாயூரம் பக்கம் ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்க, அங்கே சென்றார். அக்கோயிலின் வாசலில் தர்மகர்த்தாவும் வேறு சிலரும் யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது உ.வே.சா. அவர்களைப் பார்த்து, இவர்தான் அந்தப் பெரிய உத்தியோகஸ்தர் என்று எண்ணிவிட்டார். "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றுப் பெருமாள் தரிசனம் செய்து வைத்தார்.

தரிசனம் செய்தபோது பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. தர்மகர்த்தாவை நோக்கி, “இது புதிதா யிருக்கிறதே, என்ன?” என்றார். “அதுதான் செண்டு” என்று தர்மகர்த்தா கூற, “செண்டா!” என்று சொல்லி, “எங்கே, அதை நன்றாகக் காட்டுங்கள்” என்று உ.வே.சா கேட்க, கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். உ.வே.சாவின் மனக்கண்முன் திரௌபதியின் உருவம் வந்து நின்றது. துச்சாதனன், தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றியிழுக்கும் காட்சி அவர் கண்முன்னே வந்தது.
அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தைக் காட்டி, பலகாலமாக அவர் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றியது.
அர்ச்சகர் மேலும் “இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. ‘செண்டலங்காரப் பெருமாள்’ என்றும் அவரது திருநாமம்” என்று கூறினார்.

மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்டென்று தர்மகர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் பிறகு உறுதி செய்துகொண்டார். பெருமாள் தரிசனத்தின் பயன் அன்று அவருக்குக் கிடைத்தது.
*
தெட்டபழம்

ஸ்ரீராமானுஜர் காலட்சேபம் (வேதம் மற்றும் ஆழ்வார்ப் பாசுரங்களுக்கு விளக்க உரை) செய்யும்போது அன்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தார்.

பட்டு அரவு ஏர் அகல் அல்குல், பவளச் செவ்வாய்,
      பணை நெடுந்தோள், பிணை நெடுங்கண், பால் ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா, வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்!* அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ,
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு* பீனத்
தெட்ட பழம் சிதைந்து, மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

சீர்காழி (காழிச் சீராமவிண்ணகரம்) பெருமாள் பற்றிய பாசுரம்: 

“சத்தியபாமைக்குப் பரிசாக பாரிஜாத மரத்தைக் கொணர்ந்து பெருமான் திருவடியை அடைய விருப்பம் உள்ளவர்களுக்கு காழிச் சீராம விண்ணகரமே கதி” என்கிறார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் ஊரை எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள் என்று விவரிக்கத் தொடங்கினார். “பட்டுச் சேலையை விரித்த மாதிரியான நிலப்பரப்பு. அங்கே பவழம் போலச் சிவந்த வாய், மூங்கில் போன்ற நீண்ட தோள்களையும் அமுதம் போன்ற இனிமையான வாய்மொழிகளையும்... என்று அடுக்கிக்கொண்டு விவரித்த ஸ்ரீராமானுஜர், அங்கே நீண்ட இலைகளை உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே விழுந்தன” என்றார்.

விவரிக்கும்போது ‘தெட்ட பழம்’ என்ற சொல்லுக்குச் சரியான பொருள் அவருக்குப் பிடிபடவில்லை. சரியான பொருள் கூற முடியாமல் தவித்தார். அவர் மனதில் ‘தெட்ட பழம்’ என்னவாக இருக்கும் என்ற ஐயம் உண்டாயிற்று.
பிறகு ஒருசமயம் அவர் திவ்யதேச யாத்திரையில் சீர்காழி தலத்தின் சோலை வழியாக, திருமங்கை ஆழ்வார் வர்ணித்த இயற்கை அழகை அனுபவித்துக்கொண்டு வந்தபோது அங்கே ஒரு நாவல் மரம் பழுத்துக் குலுங்கியதைக் கண்டார். நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் சிறுவர்கள் பொறுக்கிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஒரு சிறுவன் “அண்ணே தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு” என்று மரத்தின் மீதமர்ந்த பையனைப் பார்த்து கூற, ஸ்ரீராமானுஜர், “பிள்ளாய் தெட்ட பழம் என்றால் என்ன?” என்று வினவ, அதற்கு அந்தச் சிறுவன் “பழுத்த பழம்” என்று சொல்ல, ஸ்ரீராமானுஜர் அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் வட்டார மொழியில் அருளிச் செய்திருப்பதை உணர்ந்து வியந்தார்.

சாலா (சிறுகதை) | மதிபொன்னரசு“ஏட்டி, புள்ளைக்கு எப்படி இருக்கு?”

“இன்னும் விட்டுவிட்டுத்தான் காச்ச அடிக்கி. பேதிலபோவான் கிணத்துப்பக்கம் போவானா.. யெ உயிர எடுக்கணும்னே புறந்திருக்கான்.”

“புள்ளையே காச்சல்ல கிடக்கு, அதப்போய் திட்டிகிட்டு இருக்க.”

“பின்ன என்னத்தே, ஒரு சொல்பேச்சு கேக்கானா பாருங்க.”

“ஏல ராசா, அந்த கிணத்து பக்கம் போவதியாலே, அங்கன அவ நிக்கானு சொல்லிட்டு கிடைக்காவல்ல எல்லாரும்... பின்னையும் எண்டே இப்படி அழிச்சாட்டியம் பண்ணுதியோ.”

அந்த கிணறு குளத்துக்குள் இருந்தது. குளத்துக்குள் கொஞ்சதூரம் இறங்கி நடந்துதான் கிணற்றை அடைய முடியும். கிணத்தடி உண்டு. கிணற்றைச் சுற்றி மூன்று அடி அகலத்துக்கு சிமிண்ட் தரை போட்டிருக்கும். அது குளத்தில் இருந்து இடுப்பளவு உயரம் இருக்கும். குதித்து எற வேண்டியிருக்கும். அதில் உட்க்கார்ந்து துணி துவைக்க, அலசும் வேலைகள் நடக்கும்.

கிணற்றின் மேல நாலு பக்கமும் நாலு அடி உயரத்துக்கு கல்தூண் நிற்கும். நீச்சல் தெரியாதவர்கள் சேலையைக் கிணற்றுக் கல்தூணில் கட்டிட்டு இன்னொரு முனையை இடுப்பில் கட்டிக்கொண்டு உள்ளே குதித்து நீந்துவது மாதிரி நடிக்கலாம். நாம் அந்த வகைதான்.

அந்த ஞாயித்துகிழமை நல்ல விடியலாக இல்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம் தண்ணி நல்லா குளத்துல ரொம்பி இருந்துச்சு. கிணத்துலயும் முக்கா கிணத்துக்கு தண்ணி. கிணத்தடில நின்னுகிட்டு குனிஞ்சா கிணத்து தண்ணிய தொடலாம். அந்த அளவு தண்ணி.

நாங்க ஏழாவது படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பொ வழக்கம் போல அன்னிக்கி குளிக்க போனோம்... இல்ல ஓடினோம். தெருவில புடிச்ச ஓட்டம்... சிட்டாய் பறக்கதுனு சொல்வாங்களே, அந்த மாதிரி. 

வெங்கிட்டு, வெள்ளையா, வெயிலுக்கந்தன், மணி, நான். இதில் வெயிலுக்கந்தன் மிக வேகமாக ஓடினான். குளத்தில் இறங்கியதும் கொஞ்சம் வேகம் தடைபட்டது. ஆயினும் இடுப்பளவு நீரில் வேகமாக ஓடினான். ஓடி கிணத்தடி அடைந்து அதில் ஏறினான்.

எறியவன் அப்படியே கிணற்றுச் சுவரைப் பிடித்து ஆவியம் (ஒருவர் குனிந்து நிற்க அவரின் முதுகில் கை வைத்து அப்டியே தாண்டுவது) தாண்டுவதுபோலத் தாண்டி,குளத்தில் குதித்தான்.

“ஏ, நான் தான் பர்ஸ்டே.”

சொல்லிக்கொண்டே குதித்தான். 

நாங்கள் அப்போது தான் கிணத்தடி ஏறினோம். கிணற்றில் குதித்து உள்ளே போனவன்... வந்தான்... அவன் கூடவே... வேறு எதோ ஒன்று... பச்சை கலர் துணி.... இல்லை... சேலை... இல்லை...

“டேய்ய்ய் ... மேலே ஏறுடா.” வெள்ளையா கத்தினான்.

வெயிலுக்கந்தன் மேலே வரும்போதே ஏதோ இடித்துக்கொண்டே வருவதை உணர்ந்தான். ‘அதுக்குள்ள இந்த பயலுவோ குதிச்சிட்டானுவலா’ என்ற யோசித்தபடியே காலை உதைத்துத் தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து கொண்டிருந்தான் .

அவன் உதைக்க உதைக்க காலை எதோ இடித்துக்கொண்டே இருந்தது. வெள்ளையாவாதான் இருக்கும். அவன்தான் இந்தச் சேட்டை பன்னுவான் என்று நினைத்தபடியே மேல வந்தவன், தன்னை இடித்துக்கொண்டிருந்தவனைத் திட்ட திரும்பியவன் அதிர்ந்தான்.

இதற்குள் நாங்கள் எல்லோரும் கத்த ஆரம்பித்தோம்.

“மேல வாலே...மேல ஏறுல.”

இப்போது முகம் நன்றாகத் தெரிய ஆரம்பித்து இருந்தது.

பச்சைக்கலர் சேலை கட்டிய பெண் பிணம்.

அதுவரை கீழே இருந்தது, இவன் குதித்ததும் கால் பட்டு மிதக்க ஆரம்பித்திருந்தது. இப்போதுதான் அவன் நன்றாகப் பார்த்தான்.

“எ... ம்... மே ...”

அலறிக்கொண்டே நீந்தினான். நல்லவேலையாக அந்தப் பதற்றத்தில் இன்னும் வேகமாக கிணற்றுச் சுவர் நோக்கி நீந்தினான். கிணற்றின் சுவர் அருகில் வரவும் அவன் கையைப் பிடித்துத் தூக்கி வெளியே இழுத்தோம்.

இதை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருப்போம் என முடிவெடுத்தாலும் ,வெயிலு கத்திக்கொண்டே சென்றான்.

“எ... ம்...மே, பொ...ண...ம்... கிணத்துல பொணம்.” அழுதுகொண்டே ஓடினான்.

“ஏல... என்ன சொல்லுதே.”

“எங்க ல?”

“யாருல?”

அவன் ஓடும் வழி எங்கும் கேட்பவர்களுக்குப் பதிலே சொல்லவில்லை.வீட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தான். நாங்கள் அதிர்ச்சியில் பிரம்மை பிடித்ததுபோல் சென்று கொண்டிருந்தோம். யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லவா வேண்டாமா, சொன்னால் நல்லதா, சும்மானாச்சுக்கும் அழுது நடித்துவிடலாமா என்றெல்லாம் மனசுக்குள் குழம்பிக்கொண்டோம்.

மென்று முழுங்கி, “அந்த கிணத்துல பொணம் மிதக்கு” என்று சொன்னோம். கிட்டத்தட்ட அழத் தயாராக இருந்தோம்.

“எப்ப பாரு குளம் கிணறுனு. ஒழுங்கா வீட்டுல இருக்குதுங்களா பாரு.” யார் யாரோ திட்டினார்கள். வீட்டுக்குள் வந்து பதுங்கினோம்.

“டே, உங்கள தான் போலீசு தேடுதாம், சாட்சி சொல்ல ஆள் வேணுமாம்” என்றார் போஸ்ட் ஆபீஸ் பெரியப்பா. இன்னும் பயந்தோம். பீதியில் கிடந்தோம்.

கந்தனுக்கு காய்ச்சல் வர ஆரம்பித்திருந்தது. அவன் அப்பா ஒரு அப்பிராணி என்பார்கள். எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். அதிர்ந்து பேச மாட்டார். “அவருக்கு இப்படி ஒரு புள்ளை.”

“புள்ளெழுவலா இதுங்க, எல்லாம் வினைங்க.”

“சரி. எப்படியும் யாராவது போய் குளிக்கையில அது வந்து தானே ஆவணும். இவனுவ குளிக்கையில் வந்திட்டு, ஆனா தைரியசாலி புள்ளெழுவதான்.”

“அதானே பாரேன், தைரியமா நடந்து வந்திட்டானுவளே, இவனுவளும் முங்கிராம. அதுவே பெரிய விஷயம்லா.”

“அது இவனுவள அடிக்காம இருந்துச்சே.”

ஆளாளுக்குப் பேசிக்கொண்டார்கள்.

“என்னமோ நாங்க கொன்னு கிணத்துல போட்ட மாதிரி பேசுறீங்க.”

கோபம், அழுகை, ஆற்றாமை எல்லாம் ஒன்று சேர வெங்கிட்டு சொன்னான். “அது யார்னே எங்களுக்கு தெரியாது.” அவனுக்காவது பேச்சு வந்தது. எங்களுக்கெல்லாம் மூசசு மட்டும்தான் வந்து கொண்டிருந்தது.

“ஓ, சார்வாளுக்கு அந்த ஆசை வேறயா.” காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே சொன்னார் ஆறுமுக சித்தப்பா. “எவனும் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. மூணு நாளைக்கு எவனையும் ஒண்ணா பாக்க கூடாது.போங்கல” என விரட்டினர்.

கிணத்தடிப்பக்கம் கூட்டம் அலை மோதியதாக எதிர் வீடு அத்தை சொன்னார்கள்.

“யாராம் டி” – காந்தி பெரியம்மா கேட்டாள்.

பெரியம்மா ரொம்ப குண்டாக இருப்பாள். பிந்துகோஷ் மாதிரி. ஆனால் உட்கார்ந்த இடத்தில இருந்தே எல்லா செய்தியையையும் சேகரித்து விடுவாள். எங்க தெரு ஆல் இந்திய ரேடியோ.

“தெரியல மயினி”என்று இழுத்தபடியே சொல்ல, “ஏத்தாடி, இந்த அநியாயம் எங்கும் உண்டுமா” என்று புலம்பியபடியே வந்து சேர்ந்தாள் பார்வதி ஆச்சி. “சே, பச்சைபுள்ளகாரித்தா, ரெண்டு நாளா காணோமாம்தா. ரெண்டு நாளும் தேடாமலா இருப்பாவோ.”

“சீ, என்ன அநியாயம்.” - எதுத்த விட்டு அத்தை.

“சித்தி, என்ன சொல்லுத, யாரு?” - பெரியம்மா.

“தெற்கு தெருதான், எட்டையபுரத்து சங்கரன் இருக்காருல்லா, அவர் மருமவதானாம்தா.”- ஆச்சி.

“எது, அந்த கலரா ஒரு புள்ளை இருக்குமே அதுவா?” - பெரியம்மா.

“ஆமாட்டி, அது பேரு சாலா-ட்டி.”- விசாலாட்சிதான் சாலாவாகச் சுருங்கிப் போனாள்.

“அய்யயோ, யேன் இப்புடி பண்ணுச்சாம்.”

“என்னனு ஒன்னும் தெளிவா தெரியல. சண்டையும் கூட்டமுமா இருந்துருக்கு போல. பாதவத்தி, இந்த முடிவெடுத்துட்டா. அந்த கைபுள்ளை அழுதமேனிக்கு இருக்குத்தா... சீ.. இப்படியும் உண்டுமா” என்ற பார்வதி ஆச்சி கொஞ்சம் நேர மெளனத்துக்குபி பின் சொன்னாள். “பாதவத்தி. என்ன கஷ்டமும் இருக்கட்டுமே. பச்சைப்புள்ளை மொவத்துக்காக வாழ வேண்டாமா.” சொல்லும்போதே அழுகை வந்தது ஆச்சிக்கு. “எங்க ஆத்தாலாம் என்ன கஷ்டபட்டு என்னைய வளர்த்தா தெரியுமா, மூதி, இப்படி பண்ணிட்டு பேயிருக்கா.” லேசா அழுது முந்தானையில் துடைத்துக்கொண்டாள். “இதுல வவுத்தெரிச்சல் என்ன தெரியுமா, இரட்டைவட சங்கிலி தொலஞ்சுற கூடாதுனு ரவிக்கையோட சேத்து ஊக்கு மாட்டிட்டு விளுந்துருக்காத்தா. அந்த சங்கிலி ரவிக்கையோட ஒட்டி கிடக்கு.”

“ஏம்தா, அவளா குதிச்சாளா, இல்லை அடிச்சு தூக்கி போட்டுட்டானுவலா? ”- பெரியம்மா விசாரணையைத் துவங்கினாள்.

“அப்பிடியும் இருக்குமோ, யார் கண்டா?”

நான் சாலாக்காவை ரெண்டொருதரம் பார்த்திருக்கிறேன். இடுப்பில் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு சோறூட்டும். அழகாக இருக்கும். சிரித்த முகம்.

தெற்கு தெரு ஆட்களே சேர்ந்து தூக்கி தெருவில் கொண்டு வந்து போட்டார்களாம். இரவு ஒரு எட்டுமணிக்கு நான் சென்று தெற்குத் தெருவை லேசாக எட்டிப் பார்த்தேன். தெருமுனையிலேயே போட்டிருந்தார்கள். சாலாக்காவின் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது.ரெண்டு போலீசுகாரர்கள் இரும்பு சேரில் உக்காந்திருந்தார்கள். குளிருக்கு மப்ளர் கட்டி இருந்தார்கள். கையில் டார்ச் வைத்திருந்தார்கள். ‘எங்கே கூப்பிட்டு விசாரிப்பார்களோ’ என்ற பயத்தில் ஓடி வந்துவிட்டேன்.

யாரிடம் என்ன விசாரித்தார்கள் எனத் தெரியவில்லை. எங்கள் யாரிடமும் எதுவும் விசாரிக்கவில்லை.

“நம்மளா போய் சொன்னா என்னல, என்ன என்ன பாத்தோம்னு, கோர்ட்டலாம் பாக்கலாம். ஜம்ம்னு போலீஸ் ஜீப்ல போலாம்” என்றான் கட்டமுத்து.

“வா, போலாம்” என வெள்ளையா இழுத்தான்.

“ஏய் போப்பா, நான் ச்சும்மால சொன்னேன்.”

கட்டமுத்து காமெடி என்ற பெயரில் இப்படித்தான் எதாவது பேசுவான்.

 “அவம் துட்டுள்ள பார்ட்டில்லாடே. இளக்க வேண்டியதை இளக்கி எல்லாத்தையும் சரி பண்ணிருவாம் பாரு” எனப் பொதுவாகப் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் எல்லாம் முடிந்தது. இரண்டாவது நாள் நாங்கள் மெல்ல ஒன்று கூடினோம். கந்தனுக்கு விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டு இருந்தது. ‘இரவில் உளருதாம்’ என்று சொன்னார்கள். முதலில் இரண்டு நாட்களுக்கு எங்களை கந்தனைப் பார்க்க விடவில்லை.

‘எல்லாம் உங்களாலதாம்ல; என்று திட்டினார்கள் அவன் அம்மா. அவன் அப்பவும் அமைதியாக வெறிச்சமேனிக்கு இருந்தார். எங்களுக்கும் கந்தனை நினைத்துப் பயம் வந்தது.

“நேத்து நைட் 12 மணிக்கு ஜல்ஜல்னு சத்தம் கேட்டுச்சுல.” - குமாரு சொன்னான். “நான் லேசா ஜன்னல் கதவை திறந்து பாக்கலாம்னு நினைச்சேன். பயமா இருந்துச்சு.”

ஆளாளுக்கு ஒரு கதை சொன்னார்கள். சாலா கிணற்றடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்... வா வா எனக் கூப்பிட்டாள்... நேற்று குளத்தங்கரை முனையில் நின்றிருந்தாள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.

*

அந்தக் கிணற்றடிக்குத்தான் ராசா போய்ட்டு வந்திருக்கானாம்.

“பேயா இருந்தாலும் கும்பிடுத்தவங்கள ஒண்ணும் செய்யாது, நாம சாலாக்காவ கும்பிட்டுருவோமா” என்றேன்.

“எப்படி கும்பிடுதது.”- கட்ட முத்து.

“பூசைக்கு வீட்டுல வாங்குவோம்ல, அத எல்லாம் வாங்கிடுவோம்” என்றான் மணி.

பதினாறாம்நாள் கழிந்த சனிக்கிழமை யாரும் வராத பதினோரு மணிக்கு, பகல்தான், போக பயம். ஒருவேளை சாலாக்கா வந்துட்டாள்னா?

வெற்றிலை பாக்கு, பழம், சூடம், பத்தி, பூ, பொரிகடலை வாங்கி குளத்தங்கரை போனோம். கீழே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்தோம். பத்தி கொளுத்திக் காட்டினோம். கீழே பார்த்துக்கொண்டே, கிணற்றைப் பார்க்க தீபாதரனை காட்டினோம். கிணற்றைப் பார்க்க பயம்.

“கடைசியாக ஒருதடவை கிணத்த பார்த்துருவோமா.”- கட்டையன்.

“சும்மாருல, அப்படியே குனிஞ்ச தலை நிமிராம போயிருவோம்” எனக் கத்தினேன்.
“யக்கா, கந்தன ஒன்னும் பன்னிரதக்கா... அவன் ரொம்ப நல்லவன். வேனும்னு ஒன்ன மிதிக்கல.” கிட்டத்தட்ட அழும் குரலில் சொன்னான் மணி.

“யாரையுமே ஒன்னும் பன்னிராதக்கா.” இது கட்டமுத்து.

ஒருமாதம் ஆகியும் பயம் போகவில்லை. யாரும் கிணத்துக்குப் போகவில்லை. தண்ணி எடுக்கவும் வழியில்லை. ஊர் கொஞ்சம் திணறியது. இறுதியில் ஒரு பூசாரி வைத்துப் பூஜை செய்வது, எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்வது என்று முடிவானது.

பூசாரி வந்தார், உடுக்கை வேப்பிலை சகிதம். நெற்றி மற்றும் உடல் முழுவதும் திருநீறு. உடுக்கை அடித்தபடியே காளி பாடல்களை உக்கிரமாய்ப் பாட ஆரம்பித்தார். ஒரு பெண்ணுக்கு உடுக்கைச் சத்தத்தில் சாமி வந்தது. இல்லை சாலாக்கா வந்தாள்!

“யாரிட்டி ஆடுதா?” கண்ணை இடுக்கிக்கொண்டு பார்வதி ஆச்சி கேட்டாள்.

“தெற்கு தெரு ராணி தாம்.”

என்னென்னவோ மந்திரங்களை உச்சரித்தபடி பூசாரி, “ஏன் இப்படி பண்ணினே, சொல்லு.”

சாலாக்கா அமைதியாக இருந்தாள்.

“சொல்லு, ஏன் இப்படி பண்ணினே.”

“சொல்ல மாட்டேன். சொல்ல மாட்டேன்.”

சரி, இனிமே இந்த பக்கம் நீ வரக்கூடாது. ஹே...ஹே...ய்... சொல்லு. வர மாட்டேன்னு சொல்லு.” திருநீறை வாரி முகத்தில் அடித்தார்.

“ஊருக்கு குடிக்க தண்ணி வேணும்தா, நீ போய்ரு ...” யாரோ ஒருவர் கத்தினார்.

சாலாக்கா காறித் துப்பினாள். “த்த்த்தூஊ... ஒரு பொம்பள புள்ளை... ஹ..ஹ ..ஹ..” மூச்சு வாங்கியபடி சொன்னாள். “அழுது அரட்டுறப்போ..... ஹ..ஹ ..ஹ.... காப்பாத்த துப்பில்லை... ஹ.. ஹ.. ஹ.. தண்ணி வேணுமாடா... தண்ணி.”

“யாத்தீய்ய்ய், எம் மருமவள வுட்டுருத்தா... உனக்கு என்ன வேணுமோ கேளுத்தா.”- ராணியின் மாமியார்க் கிழவி சொன்னாள்.

“உவ்வ்வ்வ்வ்வ்.... இன்னொரு சாலா... ஹ..ஹ.. ஹ.. இந்த ஊருல.. ஹ..ஹ..ஹ இருக்கக் கூடாது...”

“சரி..த்..தா..” மருமகள் காலில் விழுந்து மாமியார்க் கிழவி கும்பிட்டாள்.

*

இரண்டு வருடங்கள் ஆகியிருந்த. பம்பாயிலிருந்து நேற்று ஊருக்கு வந்த மலர் அத்தை ராணியிடம் கேட்டார்கள்.

“எப்படிட்டீ இருக்க?”

“நல்லாருக்கேன்த்தே.”

“மவளா, பேரு என்ன ராசாத்திக்கு?”

“சாலா.”

“யேம்ட்டி , அவ பேர வச்சுருக்க?”

“அவளாலதாம்த்தே நிம்மதியா வாழ்தேன், அடி உதை இல்லாம.”

குழந்தை அழகாகச் சிரித்தது, சாலாக்கா கன்னத்தில் இருக்கும் மரு மாதிரியே ஒரு அழகிய மருவுடன்.

சில பயணங்கள் சில பதிவுகள் - 18 | அவசர நிலை | - சுப்புஇந்திரா காங்கிரஸோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 1971 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது திமுக. இருந்தாலும் இந்த நல்லுறவு நெடுநாள் நீடிக்கவில்லை. அன்றையத் தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் பாரதப் பிரதமர் இந்திராவும் மாலைகளை அணிந்தபடி அருகருகே இருப்பது போன்ற சுவரொட்டிகளை வெளியிட்டது திமுக.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கசப்பு இரண்டு பக்கமும் பரவிக்கொண்டிருந்த வேளையில் தமிழின் முன்னணி வார இதழுக்குப் பேட்டியளித்தார் திமுக.ச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவர். அவர் சொன்னது “கலைஞர் விரும்பினால் இந்திரா என்ன, 16 வயது சந்திரா கூட...” என்று.

இதுபோன்ற திமுகவின் பழக்கமான ஆபாசத் தாக்குதல்கள் ஒருபக்கம் இருந்தாலும், இதுமட்டுமல்ல இந்திய அரசியல் குறித்த திமுகவின் பார்வையில் ஒரு மாற்றமும் தென்படத் துவங்கியிருந்தது. எழுபதுகளின் முற்பகுதியில் இந்திராவின் காங்கிரசுக்கு எதிராக பீகாரிலும் குஜராத்திலும் உருவாகி வந்த எழுச்சிக்கு ஆதரவான குரல்கள் திமுக தரப்பிலும் கேட்கத் தொடங்கின. இதன் நீட்சியாகத்தான் அமைந்தது திமுகவின் ‘அவசரநிலை எதிர்ப்பு’ என்கிற நிலைப்பாடு.

இந்தச் சூழலில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயி சென்னைக்கு வந்தார். குமுதம் வார இதழ் அட்டைப் படத்தில் அவரை வெளியிட்டுப் பிரபலப்படுத்தியது. அதன் உள்ளே இருந்த பேட்டியில் “திமுகவினர் நாடாளுமன்றத்தில் மொழிப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேசுவார்கள். பொருளாதாரம் போன்ற முக்கியமான விஷயங்களில் அவர்களுடைய குரல் ஒலிக்காது” என்று குறிப்பிட்டிருந்தார். குமுதம் இதழ் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமையில் தமிழகத்தின் அரசியல் பரப்பு முழுவதும் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அன்று மாலை சென்னையில் கோட்டூர்புரத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் திறப்பு விழா நடந்தது. விழாவில் பேசிய திமுகவின் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் ‘பொருளாதாரம் குறித்துத் தான் வாஜ்பாயி உடன் விவாதிக்கத் தயார்’ என்று சவால் விடுத்தார்.
ஆனால் கருணாநிதி ‘பூர்ஷ்வாக்களோடு விவாதம் செய்யக்கூடாது’ என்று சொல்லி அவரை அடக்கிவிட்டார்.

*

பங்காளதேசத்துப் போரின்போது இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த ஒரு கோடி அகதிகளுக்கு உணவளித்ததின் காரணமாக இந்திய நாட்டின் தானியக் கையிருப்பு வெகுமளவில் குறைந்துவிட்டிருந்தது. தவிர, நாட்டின் பெரும்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. விலைவாசி உயர்வின் காரணமாகத் தன்னெழுச்சியாக வெகுஜனப் போராட்டங்களும் நடைபெற்றன. மே 1974ல் நடந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் பிரச்சினைகளைக் கூர்மையாக்கியது. குஜராத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்டப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. வெகுஜன எழுச்சியை எதிர்கொள்ள இயலாமல் மாநில அரசு ராஜினாமா செய்தது; குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்தது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது மொரார்ஜி தேசாயின் உண்ணாவிரதப் போராட்டம்.

குஜராத் எழுச்சியைத் தொடர்ந்து பிகாரிலும் மாணவர்கள் களத்தில் குதித்தனர் (மார்ச் 1974). மாணவர்களுடைய போராட்டத்தை லத்தியாலும் துப்பாக்கியாலும் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்த காங்கிரஸ் அரசின் முயற்சி பலிக்கவில்லை. ஜெ.பி. என்றழைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து அதற்கு முழுப் புரட்சி என்கிற வடிவமும் கொடுத்தார். இதைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்தது.
லஞ்ச ஊழலாலும் விலைவாசி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் இயல்பானது. ஆனால் இதை அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தது இந்திராவின் எதேச்சிகார எண்ணம். பிகாரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 மாணவர்கள் உயிரிழந்தனர் (18-03-1974). சமஸ்திபூரில் நடந்த குண்டு வெடிப்பில் மத்திய ரயில்வே அமைச்சர் உயிரிழந்தார். இந்தப் படுகொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார் இந்திரா.

விலைவாசி உயர்வுக்கும் லஞ்ச ஊழலுக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி செய்த வேளையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மட்டும் இந்திராவின் ஜால்ராவாக செயல்பட்டது என்பது சரித்திரத்தின் கரும்புள்ளிகளில் ஒன்று.
இந்திரா எதிர்ப்பும் காங்கிரஸ் எதிர்ப்பும் நாடு முழுவதும் திரண்டு வந்துகொண்டிருந்த வேளையில் அலகாபாத் நகரிலிருந்து வந்த ஒரு செய்தி வெடிமருந்தில் வெப்பம் கலந்ததுபோல் ஆயிற்று. ஜனநாயக மாதா அலகாபாத் நகரில் 1975 ஜூன் 12ஆம் தேதி தனக்குத் தானே ஒரு மாலை சூட்டிக்கொண்டாள். அந்த ஜனநாயகத்தின் வெற்றியைக் கொண்டாடித்தான் வெடிமருந்தில் வெப்பம் சேர்ந்தது.

“இந்திரா காந்தி தேர்தலில் ஊழல் செய்தார். எனவே ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க அவருக்குத் தகுதியில்லை” என்கிற தீர்ப்பு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹாவால் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார். விடுமுறைக் கால நீதிபதியாகப் பணியாற்றிய நீதியரசர் கிருஷ்ண ஐயர் பிறப்பித்த உத்தரவில் இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட முடியாது என்றும் ஆனால் அவர் பிரதம மந்திரியாகச் செயல்படலாம் என்றும் தெளிவுப்படுத்தினார்.
இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திரா அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார் (25-06-1975).

*

இந்திரா அவசர நிலையை அறிவித்தபோது நான் கோவாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்ததும் விட்டுப் போன செய்தித்தாள்களை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்தேன். இந்தியாவெங்கும் பத்திரிக்கைத் தணிக்கை அமலில் இருந்தாலும் கருணாநிதி கொடுத்த தைரியத்தில் தமிழகத்துப் பத்திரிக்கைகள் தாக்குப் பிடித்தன. அவசர நிலையைக் கண்டித்து திரு. காமராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்காரர்களால் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்காரர்கள் லோச் சங்கர்ஸ் ஸமிதி (திரு.ஜெ.பி.யின் ஸ்தாபனம்) என்ற பெயரில் தங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். தவிர ரகசியப் பிரசுரங்களையும் அவ்வப்போது வெளியிட்டார்கள். பெரும்பாலான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலிஸின் பிடியில் சிக்காமல் தப்பிவிட்டதாக, இவற்றில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தப் பிரசுரங்களை நானும் நண்பர்களும் பஸ் ஸ்டாண்டிலும் பொது இடங்களிலும் விநியோகித்தோம்.
அவசரநிலையை எதிர்த்து ஆர்எஸ்எஸ்காரர்கள் சத்தியாகிரகம் செய்தார்கள். வடபழனியில் நடந்த சத்தியாகிரகத்திற்கு நான் போயிருந்தேன். அன்று போலிஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டு ‘அவசரநிலை ஒழிக’ என்று கோஷம் போட்டோம். பக்கத்தில் நடந்து கொண்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் ஏறி மைக்கில் கோஷம் போட்டோம். ஆனால் அன்று யாரும் கைது செய்யப்படவில்லை.
இண்டு இடுக்கெல்லாம் இந்திராவின் பாஸிசம் பரவியிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளைக்குச் சொந்தமான நிதி ஒரு வங்கிக் கணக்கில் இருந்தது. அந்தக் கணக்கை முடக்கவேண்டும் என்று ஒரு சனிக்கிழமை அன்று ஆளுநர் உத்தரவிட்டார்.
கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளேயே சங்கத்துக்காரர்களுக்குத் தகவல் தெரிந்துவிட்டது. என்னதான் அவசரநிலை, அடக்குமுறை என்றாலும் அரசு இயந்திரம் அசைவதற்குக் கொஞ்சம் நேரமாகும் என்று தெரிந்தது. இரண்டு நாள் இடைவெளி கிடைத்தது.

அதற்குள் பணத்தை எடுக்க முடியாதபடி ஒரு சிக்கல். அந்த வங்கிக் கணக்கு இரண்டுபேர் கையெழுத்திட வேண்டிய ஜாயின்ட் அக்கவுண்ட். ஒருவர் சென்னை மத்தியச் சிறையில் மிசா கைதியாக இருந்த ரெங்கசாமி தேவர். இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளைக்குத் தலைவர். இன்னொருவர் கே.சூரிய நாராயணராவ் என்கிற முழுநேர ஊழியர். சூரிய நாராயணராவ் தேடப்படும் நிலையில் தலைமறைவாக இருந்தார். இவர் கையெழுத்திட்ட காசோலையில் ரெங்கசாமி தேவர் கையெழுத்திட வேண்டும். காசோலையை வங்கியில் சேர்ப்பித்து வல்லிசாகப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என்பது செயல்திட்டம்.

சிறையிலிருக்கும் கைதியிடம் காசோலையைக் கொண்டுசெல்வது எப்படி? கையெழுத்திட்ட காசோலையை வங்கிக்குக் கடத்தி வருவது எப்படி? இருப்பதோ இரண்டுநாட்கள்.

இந்தச் சிக்கலோடு என்னைத் தேடி வந்தார் பிரசாரக் ரவி. நான் நொச்சிக்குப்பத்தில் இருந்தேன். நான் செயல்பட்டேன்.
செவ்வாய்க்கிழமை காலை அரசு அதிகாரிகள் வங்கிக்கு வந்தபோது காசு, காக்கா ஊஷ் ஆகிவிட்டிருந்தது.

தொடரும்...இரண்டாவது மொழி | ரஞ்சனி நாராயணன்ஒரு அம்மா பூனையும், குட்டிப் பூனையும் ஒரு நாள் மதியம் நல்ல வெய்யிலில் நட்ட நடுச் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் பாய்ந்து வந்து இந்தப் பூனைகளைத் துரத்த ஆரம்பித்தது. சும்மா இல்லை; ‘பௌ பௌ’, ‘பௌ பௌ’ என்று குலைத்தபடியே. பூனைகள் இரண்டும் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் தாய்ப்பூனை சிந்திக்க ஆரம்பித்தது. காரணமேயில்லாமல் இந்த நாய் நம்மைத் துரத்துகிறது, நாமும் பயந்து போய் ஓடிக்கொண்டிருக்கிறோமே, என்ன அநியாயம் இது என்று நினைத்து ஒரு கணம் சட்டென்று நின்றது. காலை பலமாக ஊன்றிக் கொண்டு அந்த நாயின் கண்களைப் பார்த்து ‘பௌ பௌ’ என்று கத்தியது. நாய் விதிர்விதிர்த்துப் போய்விட்டது. என்னடாது பூனை ‘மியாவ்’ என்றல்லவா கத்த வேண்டும். இந்தப் பூனை என்ன இப்படி நம்மைப் போலக் குலைக்கிறதே! அதற்கு இப்போது பயம் வந்துவிட்டது. தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. தாய்ப்பூனை தன் குட்டியிடம் சொல்லிற்று: ‘பார்த்தாயா? இரண்டாவது மொழியின் ஆற்றலை?’ என்று.

ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலக்ருஷ்ணன் இந்தக் கதை மூலம் மிக அழகாகச் சொல்லுவார்.

எனக்கு இரண்டாவது மொழியின் ஆற்றல் புரிந்தது என் பாட்டியும் அதாவது என் அம்மாவின் மாமியாரும் நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான கோதாவரி அம்மாவும் தெலுங்கு பாஷையில் பேசும்போதுதான். தமிழ் தெரிந்த இருவரும் திடீரென்று தெலுங்கில் பேச ஆரம்பிப்பார்கள். என் பாட்டியிடமிருந்து அனாவசியமாக முன் குறிப்பாக அல்லது பின்குறிப்பாக ஒரு வாக்கியம் வரும்: ‘கமலம், நாங்க உன்னைப்பத்திப் பேசல!’ என்று.

என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ‘என்னைப்பத்தித்தான் பேசுங்களேன். சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது – நாயெல்லாம் குலைக்கிறது - என்று நினைச்சுக்கறேன்!’ என்று பதிலடி கொடுப்பாள். அவ்வளவுதான் தெலுங்கு மொழி அப்போதே அங்கேயே செத்து விழுந்து விடும்.

கையில் எட்டாவது வகுப்புப் பாடப்புத்தகத்துடன் இந்தக் கூத்தை வேடிக்கை பார்க்கும் எனக்கு அந்த இரண்டாவது மொழி மேல் ஒரு காதல் வந்துவிட்டது. எப்படியாவது வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு யாருக்கும் புரியாமல் பேச வேண்டும் என்று ஒரு தீராத வேட்கை வந்துவிட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் இருந்த கோதாவரி அம்மாவின் வீடு ‘ஸ்டோர் வீடு’ அதாவது பொதுவான ஒரு வாசல், உள்ளே நுழைந்தால் பல வீடுகள். எல்லா வீடுகளுக்கும் பொதுவான நீளமான மித்தம் அல்லது முற்றம் வாசலிலிருந்து ஆரம்பித்து கடைசி வீடு வரை இருக்கும். முற்றத்தில்தான் குழாய், தண்ணீர் தொட்டி, தோய்க்கிற கல் எல்லாம் இருக்கும். நான்கு வீடுகளுக்கு இரண்டு குளியலறை; இரண்டு கழிப்பறை. எங்களைத் தவிர இன்னும் மூன்று குடித்தனங்கள் அங்கிருந்தன. கடைசி வீடு வீட்டுக்காரம்மாவினுடையது. பிள்ளை, மாட்டுப்பெண் பேரன் பேத்திகளுடன் அந்த அம்மா அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்.

கோதாவரி அம்மாள் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசினாலும் எங்களுடன் தமிழில்தான் பேசுவார்கள். அந்தக் குழந்தைகளும் எங்கள் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெலுங்கு கற்றுக் கொள்ள ஆர்வம் வரவில்லை. மேலும் என் தாய்க்குப் பிடிக்காத மொழி அது. அதைப் போய்க் கற்பானேன் என்று கூடத் தோன்றியிருக்கலாம்.
இந்த சமயத்தில்தான் காலியாக இருந்த நடு போர்ஷனுக்கு ஒரு குடும்பம் குடியேறியது. மங்களூர் ராவ் குடும்பம். குடும்பத்தலைவர் தங்கநகை செய்பவர். பெரிய குடும்பம். வரிசையாகக் குழந்தைகள். பெரிய பிள்ளை சந்துருவில் ஆரம்பித்து பிரதிபா, ஷோபா, விக்ரம், காயத்ரி, காஞ்சனா என்று இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள். இவர்களில் பிரதிபா என் வயதுப் பெண். பெரிய குடும்பம்; சிறிய வருமானம். அவர்கள் துளு என்ற மொழி பேசுபவர்கள். எப்படியாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று நான் அவளுடன் ரொம்பவும் நட்பாக இருந்தேன். அவள் என்னை விட வேகமாக தமிழைக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பிக்கவே எனக்கு அந்த மொழியைச் சொல்லிக் கொடுப்பதில் அவள் அக்கறை காட்டவில்லை. இன்றைக்கு எனக்கு நினைவு இருக்கும் ஒரே ஒரு வாக்கியம்: ‘ஜோவான் ஜல்லே?’ இதன் அர்த்தம் சாப்பாடு ஆயிற்றா என்று நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பில் ஹிந்தி மொழியை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். இந்த முறை ஹிந்தியை நான் விரும்பும் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொண்டு விடுவேன் என்ற எனது நம்பிக்கையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்து மண்ணை அள்ளிப் போட்டது. ஹிந்தி ஓரளவுக்கு எழுத படிக்கக் கற்றுக்கொண்டதுடன் நின்று போயிற்று. ஹிந்தி இருந்த இடத்தில் சமஸ்கிருதம் வந்தது. ‘ராம: ராமௌ ராமா:’ சப்தம் படுத்திய பாட்டில் அந்த மொழி மேல் அவ்வளவாகக் காதல் வரவில்லை. இப்படியாகப் பல வருடங்கள் தமிழைத் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாதவளாகவே இருந்தேன்.

திருமணம் ஆகி, கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போனோம். அண்ணா நகரில் வீடு. பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம். அவர்களது குழந்தைகளும் என்னுடைய குழந்தைகளும் ஒரே வயது. குழந்தைகள் மாலைவேளைகளில் விளையாடும்போது குழந்தைகளின் அம்மாவும் வருவாள். ஒருநாள் அவளாகவே, ‘எனக்குத் தமிழ் சொல்லித் தருகிறீர்களா?’ என்று கேட்டு என் வலையில் விழுந்தாள். எனக்கு அவள் மலையாளம் சொல்லித் தருவதாக டீல்! படு சந்தோஷத்துடன் நினைத்துக்கொண்டேன்: நான் கற்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அந்த இரண்டாம் மொழி மலையாளமோ? யார் காண்டது? அன்றிலிருந்து நான் தமிழில் பேச, அவள் மலையாளத்தில் சம்சாரித்தாள். நானே ஒரு நாள் கேட்டேன்: ‘எனக்கு மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்று. நான் அவளுக்குத் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தேன். அவள் எனக்கு மலையாளம் எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். மிகவும் தீவிரமாக உட்கார்ந்து மதியவேளையில் எழுதி எழுதிப் பயிற்சி செய்வேன். அப்படி இப்படியென்று மலையாள மனோரமாவில் வரும் விளம்பரங்களை எழுத்துக் கூட்டிக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் கணவர் ‘பெங்களூரில் ஆரம்பித்திருக்கும் புது நிறுவனத்திற்கு என்னை மாற்றி விட்டார்கள்’ என்ற செய்தியுடன் வந்தார். என் தோழி ஜெயா சொன்னாள்: ‘நீ இனிமேல் சாக்கு, பேக்கு என்று கன்னடம் பேசலாம்’ என்று. இரண்டாம் மொழி கேட்டவளுக்கு மூன்றாவது மொழியையும் அருளிய கடவுளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று எண்ணியபடியே பெங்களூருக்கு மூட்டை முடிச்சுடன் வந்து சேர்ந்தேன். வெகு சீக்கிரமே கன்னடம் பேசக்கற்றுக் கொண்டு விட்டேன். என் குழந்தைகளுடன் சேர்ந்து எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டேன்.

பிறகு ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்தில் ஸ்போக்கன் இங்க்லீஷ் பயிற்சியாளர் ஆனேன். அங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலோர் ஹிந்தி பேசுபவர்கள். ஆங்கிலம் கற்க வந்திருந்தாலும் டீச்சர் ஹிந்தியில் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்களது சந்தேகங்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவேன். ஒரு மாணவர் கேட்டார்: ‘அது எப்படி மேடம் உங்களுக்கு நமது நாட்டின் தேசிய மொழி (ஹிந்தி) – நேஷனல் லாங்குவேஜ் தெரியவில்லை?’ என்று.
‘ஐ நோ இன்டர்நேஷனல் லாங்குவேஜ்’ என்று அப்போதைக்கு சமாளித்தாலும் ஹிந்தி தெரியாதது கையொடிந்தாற் போலத்தான் இருந்தது. வீட்டில் என் மகள், மகன் இருவரும் ஹிந்தி நன்றாகப் பேசுவார்கள். எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றால் சிரிப்பார்கள். மகள் சொன்னாள்: ‘ஹிந்தி சீரியல் பாரு. எஸ்.வி. சேகர் (வண்ணக் கோலங்கள்) ஜோக்கெல்லாம் நினைச்சுண்டே பார்க்காதே! சீரியஸ்ஸாக கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு ஃபோகஸ் பண்ணி பாரு. ஹிந்தி வரும்’ என்று. எத்தனை சீரியஸ்ஸாக பார்த்தாலும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அதைவிட தமாஷ் ஒன்று நடந்தது. சீரியல்கள் ஆரம்பிப்பதற்கு முன்

‘தோபஹர் (दोपहर) .........
3 மணிக்கு .......... (சீரியல் பெயர்)
3.30 மணிக்கு ...... (சீரியல் பெயர்)

என்று வரும். நான் அதை சீரியஸ்ஸாக படித்துப் பார்த்துவிட்டு என் பெண்ணிடம் ‘அந்த தோபஹர் எப்போ வரும்?’ என்று கேட்டேன்!
என்னை ஒருநிமிடம் கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ‘அம்மா! இது கொஞ்சம் ஓவர்! தோபஹர் என்றால் மத்தியானம்’ என்றாள். ஓ!
இன்னொரு நாள்: நான் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு டீவியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மகன் அப்போதுதான் வெளியில் போய்விட்டு வந்தான். என்னையும் டீவியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு ‘அம்மா! இது காமெடி சீரியல்மா. கொஞ்சம் சிரி’ என்றான். நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். எப்போதெல்லாம் டீவியில் சிரிப்பு ஒலி வந்ததோ அப்போதெல்லாம் நானும் ‘கெக்கே கெக்கே’ என்று சிரிக்க ஆரம்பித்தேன்.

என் மகன் கடுப்பாகிவிட்டான். அக்காவிடம் சொன்னான்: ‘இந்த அம்மாவை ஒண்ணுமே பண்ணமுடியாது. என்ன படுத்தறா, பாரு! நாம ரெண்டுபேரும் இந்த விளையாட்டுலேருந்து விலகிடலாம்’ என்று என்னைத் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். மறுபடியும் நான் ஹெல்ப்லஸ் ஆகிவிட்டேன்.
அப்போதுதான் எனது பக்கத்துவீட்டில் புது கல்யாணம் ஆன ஜோடி ஒன்று புதுக் குடித்தனம் வந்தது. பால் காய்ச்ச வேண்டும் என்று எங்கள் வீட்டில் வந்து அடுப்பு, பால், சர்க்கரை பாத்திரம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் வீட்டுப்பாலை, எங்கள் வீட்டுப் பாத்திரத்தில் ஊற்றி, எங்கள் வீட்டு அடுப்பில் காய்ச்சி, எங்கள் வீட்டு சர்க்கரையைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒரு நல்லநாளில் குடியேறினார்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். கணவன் பெயர் வினோத் மிஸ்ரா. மனைவி (ரொம்பவும் சின்னப்பெண்) பெயர் ருசி.

‘அந்தப் பெண்ணுடன் ஹிந்தியில் பேசு. உனக்கு ஹிந்தி வரும்; இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் உனக்கு ஹிந்தி எந்த ஜன்மத்துக்கும் வராது’ என்று ‘பிடி சாபம்’ கொடுத்தான் என் பிள்ளை.
ஒரு நாள் மிஸ்ரா என்னிடம் வந்து ‘ஆண்டிஜி! ருசி நோ நோ கன்னடா. ஹெல்ப் ப்ளீஸ்!’ என்று சொல்லிவிட்டுப் போனான். அவளிடம் போய் ஒரு டீல் போட்டேன். ‘நீ எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடு. நான் உனக்கு கன்னடா சொல்லித் தரேன்’ என்று. அவள் ‘நோ கன்னடா. ஒன்லி இங்கிலீஷ்’ என்றாள். ஆங்கிலம் தான் நமக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே என்று ஆரம்பித்தேன். 

‘வாட் இஸ் யுவர் நேம்?’
‘மை நேம் இஸ் ருசி.’
‘வாட் இஸ் யுவர் ஹஸ்பெண்ட்ஸ் நேம்?’ என்று கேட்டு முடிப்பதற்குள்
‘ஆண்டிஜி! ஐ ... முஜே... ஒன்லி ஒன் ... ஏக் ஹஸ்பெண்ட்... ஒன்லி. ஆப் க்யூ(ன்) ஹஸ்பெண்ட்ஸ்...?’ சந்தேகமாக என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை ‘உங்களுக்கு இங்க்லீஷ் தெரியுமா?’ என்று கேட்பது போல இருந்தது. ‘லுக், ருசி! என்று ஆரம்பித்து ஃபாதர்ஸ் நேம், மதர்ஸ் நேம் என்றெல்லாம் அரைமணி நேரம் மூச்சுவிடாமல் விளக்கினேன்.

அடுத்த நாள் ருசியைக் காணவில்லை. நேற்றைக்கு அபாஸ்ட்ரஃபியை பற்றி ரொம்பவும் ஓவராகச் சொல்லிக் கொ(கெ)டுத்துவிட்டேனோ? கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிவிட்டன. ருசி வரவேயில்லை. ருசிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதைவிட நான் ஹிந்தி கற்றுக் கொள்வது நின்றுவிட்டதே என்று இருந்தது. அடுத்த சில நாட்கள் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வீட்டிற்கும், மருத்துவ மனைக்கும் அலைந்து கொண்டிருந்ததில் ருசியை பார்க்கவில்லை. இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

‘அந்த ருசிப் பொண்ணு அடிக்கடி ஆஸ்பத்திரி போய்விட்டு வருதும்மா’ என்று எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து ஒருநாள் சொன்னாள். ‘என்ன ஆச்சாம்?’ ‘அதென்னவோ அந்தப் பெண்ணுக்கு தலை ரொம்ப அரிக்கிதாம். எப்போ பார்த்தாலும் தலையை சொறிஞ்சிகிட்டே இருக்கும்மா. நேத்திக்கு மயக்கம் போட்டு விழுந்திடிச்சி!’ என்றாள்.

என்னவாக இருக்கும் என்று எனக்கும் மனதிற்குள் அரித்தது. என்னவோ சரியில்லை என்று மட்டும் உள்ளுணர்வு சொல்லியது. அவளுக்கு உதவியாக அவளது அம்மா, அவள் மாமியார் வந்திருந்தனர். அவர்களிடம் என் ஹிந்தி அறிவைக் காண்பிக்காமல் சற்று ஒதுங்கியே இருந்தேன். ருசியைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். கணவரின் உடல்நிலையில் திரும்பத்திரும்ப ஏதோ ஒரு சிக்கல். அவரைக் கவனித்துக் கொள்ளும் மும்முரத்தில் ருசியை மறந்தே போனேன்.
ஒருநாள் காலை எதிர்வீட்டுப் பெண்மணி வந்து ‘ருசி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காளாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்’ என்று ஒரு குண்டை வீசிவிட்டுச் சென்றார். ரொம்பவும் பதறிவிட்டேன். அன்று முழுக்க வேலையே ஓடவில்லை. இரவு ருசியின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அவளுக்கு மூளையில் கட்டி இருந்திருக்கிறது. அதனால்தான் அந்த அரிப்பு. ஏதோ தலைமுடியில் பிரச்சினை என்று நினைத்து இந்த எண்ணெய் தடவு; அந்த எண்ணெய் தடவு என்று காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்து வைத்தியம் பார்ப்பதற்குள் அவளது முடிவு நெருங்கிவிட்டது. காலன் காலத்தைக் கடத்தாமல் வந்து அந்தச் சின்னப்பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட்டான். இரக்கமில்லாதவன்.

இரண்டாவது மொழிதானே கேட்டாய்; மூன்றாவதாக எதற்கு இன்னொரு மொழி என்று கடவுள் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இன்று வரை ஹிந்தியைக் கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ருசி தான் நினைவிற்கு வருகிறாள். என்ன செய்ய?