Posted on Leave a comment

உரிமைக்குரல்: பதிப்புரிமை – சன்மானம் – நாட்டுடைமை | கோ.இ.பச்சையப்பன்

மனிதகுல வரலாற்றின் கண்டுபிடிப்புகளில் மகத்தானவையாக போற்றப்படுவன இரண்டு, ஒன்று சக்கரம், இரண்டாவது அச்சுக்கலை. கூடன்பர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் மனிதனின் அறிவுப் புரட்சியில் ஆற்றிய பங்களிப்பை விவரிக்க ஒரு கட்டுரை போதாது.

ஓலைச்சுவடிகளில் எழுதும் சிரமத்தைத் தளர்த்தவே சுருக்கமான பாடல் வடிவத்தைத் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். சுவடிகளைப் படியெடுக்கவே தமிழகத்தில் பல பகுதிகளில் ‘எழுத்துக்காரர்கள்’ எனப்படுவோர் வசித்ததாக எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் தம்பிரான் வணக்கம். இருபதாம் நூற்றாண்டில் அச்சுககலை புத்தக வெளியீடுகளை இலகுவாக்கியதற்கு இணையாக வாசிக்கும் வழக்கமும் வளர்ந்தது. எனினும் க்ரியா ராமகிருஷ்ணன் கூறுவதைப் போன்று புத்தகங்கள் தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக இன்னும் மாறவில்லை.

1914ல் காலனி ஆதிக்க பிரிட்டிஷார் ‘காப்புரிமை’ சட்டத்தை இந்தியாவில் இயற்றினர். சுதந்திர இந்தியாவில் 1952ல் இச்சட்டம் நவீனப்படுத்தப்பட்டது. பரவலான இது ‘காப்பிரைட் சட்டம்’ என்று அறியப்படுகிறது. ஒரு படைப்பு எவ்வகையைச் சேர்ந்தது எனினும் (எழுத்து, பேச்சு, புகைப்படம், இசை) அதன் உரிமை படைப்பாளிக்கு என்பதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது. படைப்பாளி தனது படைப்பின் மீதான உரிமையை சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிறருக்கு விற்று அதன் மூலம் சன்மானம் (ராயல்டி) பெறலாம். மேலும் அனுமதியின்றி தன் படைப்பை பிறர் நுகர்ந்தால் வெளியிட்டால் வழக்கு தொடுக்கலாம்.

எல்லா இந்தியச் சட்டங்களைப் போன்றே நம் சமுதாயத்தின் யோக்கியதையை நிரூபிக்கும் வகையில் இச்சட்டமும் தவறாகப் பயன்பட்ட வரலாறு உண்டு. படைப்பாளிக்குப் பாதுகாப்பானதாக மேலோட்டமாகத் தோன்றும் இந்தச் சட்டம், படைப்பின் மீதான உரிமைக்குரல்வளையை நெருக்கியதும் உண்டு.

எழுத்தாளர் தேவனை அறியாதவர்கள் குறைவு. சிவந்த நிறம், சுருட்டை முடி, வஜ்ரம் பாய்ந்த உடல் என்ற கதாநாயகனுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல், விளாங்காய் மண்டை, வழுக்கைத் தலை, ஒட்டடைக்குச்சி தேகம் என தேவன் படைத்த ‘துப்பறியும் சாம்பு’ என்றென்றும் வாழும் பாத்திரமல்லவா? கல்கிக்குப் பிறகு ஆனந்த விகடனின் ஆசிரியரன அவர் தன் பேனாவலிமையால் கல்கியின் வெற்றிடம் விகடனின் விற்பனையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். கதை, கட்டுரை, பயண நூல்கள் என எழுதிக்குவித்த தேவன், தான் மரணமடைந்த 1955ம் ஆண்டு வரை தன் படைப்புகளில் ஒன்றைக்கூட புத்தக வடிவில் பார்க்கவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்களா? விகடனின் பதிப்பாளர் வாசனின் பதிப்புரிமை தேவனை – புத்திரப்பேறில்லாத சோகத்துடன் தன் புத்தகம் பார்க்காத சோகமும் சேர்ந்து மரணமடைய வைத்தது.

எழுத்தாளர் அகிலன் கூட, விகடனில் பரிசுபெற்ற தன் சிறுகதைகளைப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே அச்சேற்ற முடிந்தது. தமிழுலகில் முதல் முனைவர் பட்டம் பெற்ற மு.வ. என்று அன்புடன் அழைக்கப்டும் மு. வரதராசனாரை அறியாதவர்கள் இலர். பரிமேலழகர் முதல் சாலமன் பாப்பையா வரை திருக்குறளுக்கு உரை எழுதியிருப்பினும், மு.வ.வின் தெளிவுரை தனித்துவம் மிக்கதான இன்றும் விளங்குகிறது. தனது தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்திடம் மிகக் குறைந்த தொகைக்கு விற்றுவிட, பின்னாட்களில் அது இலட்சக்கணக்கில் விற்க, மு.வ. திகைத்தார். படிப்பறிவு இருந்தாலும் மு.வ. பட்டறிவு இல்லையே என வருந்தியிருக்க வேண்டும். பின்னாட்களில் பல நாவல்கள் எழுதிய அவர் பதிப்புரிமையை யாருக்கும் வழங்காமல், விற்பனை உரிமையை மட்டும் பாரி நிலையத்திற்கு தந்தார். ‘சூடு கண்ட பூனை’யல்லவா?

2007ம் ஆண்டு ஈவெராவின் ‘குடியரசு’ இதழ்த் தொகுப்பை பெரியார் திராவிடர்கழகம் நூல் வடிவில் கொண்டுவர முயன்றபோது, தி.க.வின் வீரமணி நீதிமன்றம் சென்றார். பெரியாரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கம் பற்றிய விவாதங்கள் மேலெழ மேற்படி நிகழ்வு வித்திட்டது.

அண்மையில் இளையராஜா தன் பாடல்களின் உரிமைக்காகப் போராடி அதன் விளைவாக ஒலி வடிவிலான படைப்பிற்குரிய மரியாதையை மீட்டெடுத்ததை நாம் மறக்க முடியாது.

ஒரு எழுத்தாளர் மறைந்து குறிப்பிட்ட காலம் நிறைவுற்றபின் அரசே முன்வந்து அதன் உரிமையாளர்களுக்கு (பெரும்பாலும் படைப்பாளியின் வாரிசுகளுக்கு) குறிப்பிட்ட தொகை அளித்து, அப்படைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை வழங்குவதை நாம் அறிவோம்.

நாட்டுடைமை ஆக்கப்படுவதன் மூலம் ஒரு படைப்பு ஜனநாயகப்படுத்தப்படுகின்றது. எளிய விலையில் பரவலாக மக்களைச் சென்றடைகின்றது. மேலும், வாரிசுகளுக்கு பணப்பயன் கிடைக்கவும் வழிவகுக்கின்றது. கல்கி, நா.பா., அண்ணா, காந்தியடிகள் என ஏராளமானவர்களின் உன்னதப் படைப்புகள் மக்களை அடைய ‘நாட்டுடைமை’ உதவிற்று எனில் அது மிகையில்லை.

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் மற்றும் அகிலன் ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது அவர்களின் வாரிசுகள் அதனை மறுதலித்ததும் நிகழ்ந்தது.

1990களில் தாகூரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படாமல், பி.வி.நரசிம்மராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பத்தாண்டுகள் நீட்டிப்புச் சட்டத்திருத்தத்தால் விஸ்வபாரதி பல்கலையிடமே தாகூர் முடங்கிப்போனார். அரசியலுக்கு இணையாக எழுத்துலகின் மகத்தான ஆளுமை பெற்றிருந்த நேருவின் படைப்புகள் சோனியாவிடமே சுருங்கிப்போயுள்ளது.

எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் உயிருடன் இருந்தபோதே அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது ஒரு புதுமை. மருத்துவ சிகிச்சையை அவர் மேற்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் தேர்வு அது என்பது உண்மை.

கண்ணதாசன் மற்றும் அகிலன் போன்ற விற்பனை வாய்ப்பு குன்றாத ஜீவநதிகளின் ஊற்றை நாட்டுடைமை ஆக்கித் தூர்ந்து போகாமல் காப்பாற்ற வாரிசுகளுக்கு மனமில்லையே! கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எல்லாப் புத்தகக்காட்சிகளிலும் விற்பனையில் முதல் பத்துக்குள் இடம் பெறுவதையும் பல பதிப்புகள் கண்டிருப்பதையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால் இது புரியும்.

தமிழில் எழுதிப் பிழைக்கமுடியாது என்பது ஓரளவிற்கு உண்மை. வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் தன் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான பொருளை எழுத்தால் பெற முடியும் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

இலக்கியம் என்ற பிசாசு தன்னைப் பிடித்து ஆட்டிய காலம் வரை எழுதி வந்ததாகக் குறிப்பிட்டுக்கொண்ட ஜெயகாந்தன், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் வரை தன் நூல்களின் மூலம் ராயல்டி பெற்று வந்தார். ஜேகே எழுதியதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆன பின்பும் இது சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எண்பதுகளின் மத்தியகாலம் வரை வாழ்ந்த சாண்டில்யன் தன் ‘விஜயமாதேவி’ நாவலிற்கான ராயல்டியாக ஒரே தவணையில் ரூ 50,000 பெற்றுள்ளார். 80களில் இது மிகப்பெரிய தொகை. பாரதி பதிப்பகத்தின் பதிப்பாளர் பழ.சிதம்பரம் தனது பதிப்புரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரமணிசந்திரனின் நூல்கள் (அதன் இலக்கிய அந்தஸ்து விமர்சனத்திற்கு உரியதாயினும்) கட்டுக்கட்டாகக் கடல்கடந்து வாங்கப்படுகின்றன. அம்மணிக்குப் பணத்தையும் குவிக்கின்றன.

ராயல்டியில் ஏமாந்த எழுத்தாளர்களும் உண்டு. சுஜாதா, துக்ளக் பேட்டியொன்றில், ‘எனது லாண்டரி கணக்கைக்கூட’ (இதற்கு மாற்றாக ‘வண்ணான்’ என்ற சொல்லை சுஜாதா பயன்படுத்தியதாக வண்ணதாசன் கூறுகிறார்) வெளியிடுவதற்கு இதழாசிரியர்கள் தயாராக உள்ளனர் – எனக் கூறும் அளவிற்கு வாசகர்களால் வாசிக்கப்பட்டார். தனது நூல்கள் விற்பதற்குத் தகுந்த ராயல்டி தனக்குக் கிடைக்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்தது உண்மை.

தமிழில் முதலில் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரன் பாரதி. தேசியக் கவி என்னும் மகாகவி என்றும் இன்று புகழப்படும் பாரதியின் படைப்புகள், டி.கே.சண்முகம், நாரண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன், ஜீவா உள்ளிட்ட பலரின் பெரும் போராட்டத்திற்குப் பிறகே நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த வரலாற்றை ஆய்வாளரான ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்ற நூலில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

பாரதியின் பாடல்வரிகள் இன்று மேற்கோள் காட்டப்பெறாத பட்டிமன்றங்களே இல்லை. ரொளத்ரம் பழகு, நேர்படப்பேசு எனப் புகழ்பெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளுக்கு பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ கைக்கொடுக்கிறது. மணிக்கொடி, சுதந்தரச்சங்கு போன்ற பாரம்பரிய இதழ்களின் பெயர்கள் கூட பாரதியின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவைதாம்.

வள்ளுவரை விடவும் கூட அதிக மேற்கோள் காட்டப்படும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன் பாரதி. அரசியல் ரீதியாக அவரை விமர்சிப்பவர்கள் கூட அவர் மகாகவி என்பதை மறுக்கவில்லை. தமிழை நவீனப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மையானவர் பாரதி. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எனத் தீவிரமாக இயங்கியவர் பாரதி. ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என ஜார் மன்னனின் வீழ்ச்சியைப் பாடிய ஒரே இந்தியப் படைப்பாளி பாரதி. தான் வாழ்ந்த கால அரசியல் நிகழ்வுகளைத் துணிச்சலாகப் பிரதிபலித்த பாரதி சமகாலத்தில் விதந்தோதப்பட்டாலும் வாழுங்காலத்தில் வரவேற்பு பெற்றாரா?

தீப்பெட்டிகள் போல் என் படைப்புகள் சரளமாகவும் விலை மலிவாகவும் பரவ வேண்டும் என விருப்பம் தெரிவித்த பாரதியின் படைப்புகளில் நூற்றிருபது பக்கங்கள் தவிர வேறெதுவும் நூல் வடிவம் (அவர் மரணமடையும் வரை) பெறவேயில்லை என்பது மாபெரும் அவலம்.

‘சுதேசமித்திரன்’, ‘இந்தியா’, ‘விஜயா’ எனப் பல ஏடுகளில் பாரதியின் படைப்புகள் அச்சேறியபோதும் நூல் வடிவம் பெறவில்லை. ஆகச்சிறந்த அவருடைய ஆக்கங்களான ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்றவையும் விதிவிலக்கில்லை. பாரதியின் மரணத்திற்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை மட்டுமே காரணமன்று. அன்றைய தமிழ்ச் சமூகமும்தான். தன் படைப்புகளை நூலாக்கம் பெற உதவி செய்வோருக்கு அதன் விற்பனையில் பங்குதர பாரதி விளம்பரம் வெளியிட்டும், கடிதம் எழுதியும் தமிழ்ச்சமூகம் காட்டிய பாராமுகமே அவரைக் கொன்றது.

அமரத்துவமான படைப்புளும் வறுமையுமே பாரதி தன் குடும்பத்திற்கு விட்டுச்சென்ற பரிசுகள். மனைவி செல்லம்மாள் பாரதி, பாரதியின் தம்பி விஸ்வநாத அய்யருடன் இணைந்து படைப்புகளை நூல் வடிவமாக்கினார். எனினும் பெரிய வரவேற்பில்லை. 1930ம் ஆண்டில் பாரதியின் பாடல்களை இசைத்தட்டாக வெளியிடும் உரிமையை செல்லம்மாள் பாரதி சுராஜ்மல் என்ற நிறுவனத்திடம் கையளித்தார். வெறும் 450 ரூபாய்க்குக் கைமாற்றப்பட்ட இத்தொகை, அவரது மகள் தங்கம்மாளின் திருமணத்திற்குப் பயன்பட்டிருக்கக்கூடும். இந்த உரிமையை 1946ல் மிகபெரிய திரையுலக ஜாம்பவான் ரூ 9500 கொடுத்து வாங்கினார். அவர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியார்! சுருக்கமாக ஏ.வி.எம். அவருடைய தந்தையின் பெயர் ஆவிச்சி செட்டியார். எனவே, ஆங்கிலத்தில் ஏவி!

1935ல் டி.கே.சண்முகம் ‘மேனகா’ என்ற திரைப்படம் எடுத்தார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மூன்று அம்சங்களுக்காக இன்றளவும் நினைவுகூரப்படும் திரைப்படம் அது.

அ) முதல் சமூகக்கதை படம்

ஆ) வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவலைத் திரைவடிவமாக்கி வந்தது.

இ) பாரதியின் பாடலைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ்ப்படம்.

பாரதியின் பாடல் உரிமைகளைப் பெற்றவுடன் ஏ.வி.எம். செட்டியார் செய்த முதல் வேலை டி.கே.எஸ்ஸிற்கு சம்மன் அனுப்பியதுதான். டி.கே.எஸ். திகைத்தார்.

பாரதியின் மறைவிற்குப்பிறகு அவருடைய பாடல்கள் பல காரணங்களுக்காகப் பிரபலமடையத் தொடங்கி இருந்தன. சுதந்தரப் போரில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட மக்கள் அவற்றைப் பாடினர். ‘பாரதி தேசியக் கவியா? மகா கவியா?’ என்ற விவாதத்தின் மூலம் கல்கியும், வ.ரா.வும் அவரை விவாதப் பொருளாக்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக 1938ல் பாரதியின் பாடல்களைப் பாட பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்தது. தடை செய்யப்பட்ட படைப்பு எவ்விதம் பிரபலமடையும் என்பதை ‘விஸ்வரூபம்’ படம் நமக்கு அண்மையில் நிரூபித்தல்லவா?

பாரதி மணிமண்டம் திறப்பு விழாவில் பாரதி படைப்புகளை அரசே வாங்கி அதனை நாட்டுடைமை ஆக்க வேண்டும் எனப் பொதுவுடைமை தலைவர் ஜீவா முழங்கினார். தனிச்சொத்து மறுப்பை அடிநாதமாகக்கொண்ட சிந்தனைக்குச் சொந்தக்காரரான ஜீவாதான் ‘நாட்டுடைமை’ என்ற சிந்தனையை விதைத்தார்.

கட்டுரையின் முற்பத்தியில் கூறப்பட்ட பிரமுகர்கள் மற்றும் எண்ணற்ற ஆர்வலர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் அப்போதைய ஓமந்தூரார் தலைமையிலான அரசின் கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.வி.மெய்யப்பச்செட்டியாரை வலியுறுத்தி பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கினார். இணையாக பாரதியின் நூல்களையும் பாரதியின் தமையனார் விஸ்வநாத ஐயர் தானே முன்வந்து தேசத்திற்கு அளித்தார். 1949ல் இவையெல்லாம் நடந்தேறின.

1981ல் வெளியிடப்பட்ட ஒரு ஒலிப்பேழையில் பாரதி படைப்புகளை தேசத்திற்கு இலவமாக ஏவி.எம். செட்டியார் தாரைவார்த்ததாக (அப்போது அரசாகவோ – பேரரசாகவோ ஆகி இராத) வைரமுத்து எழுதியிருந்தார். பாரதி படைப்புகளை வேறுவழியின்றி கையளித்த ஏவி.எம். செட்டியார் தனக்குப் பாடல் வாய்ப்பளிக்கும் பெருநிறுவனத்தை நிறுவியவர் என்பதற்காகவே வைரமுத்து புகழ்வது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் எதன் பொருட்டும் உண்மை வரலாறு மறக்கப்படக்கூடாது. ஏனெனில் பாரதியின் படைப்புகள் அக்னிக்குஞ்சுகள்!

Leave a Reply