Tuesday, 10 September 2019

வலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்

வலம் செப்டம்பர் 2019 இதழ் வெளியாகி இருக்கிறது.காஷ்மீர்: 370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன் 

அஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019)  | திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்

லண்டனில் இருந்து மீண்டும் இரு கலைப்பொருள்கள்  | எஸ்.விஜய்குமார்
அஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ்  |  SG சூர்யா

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம்   | தமிழில்: ஜனனி ரமேஷ்

ஆயிரம் பள்ளிகள் மூடல்: ஒரு யோசனை  | ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்தி

வி.ஜி.சித்தார்த்தா: வளர்ந்தாரா வளைந்தாரா?   | ஜெயராமன்ரகுநாதன்

திராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு  | வெங்கட்குமார்

மனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா

சில பயணங்கள் சில பதிவுகள் - 22   | சுப்பு

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய்  | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள்  | தமிழில்: VV பாலா

ஆவின் பால் விலையேற்றம்  | பிரவீன் குமார்

ஆன்லைனில் அச்சு இதழுக்கு சந்தா செலுத்த: http://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html

Sunday, 8 September 2019

வலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்

வலம் ஜூலை 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

கும்மாயம் | சுஜாதா தேசிகன்மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும். எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்கும்.

உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்

“பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி (அடி, 175-6)

என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம் என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும் பயன் இல்லை.

காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில் சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரியர் உ.வே.சா அவர்களின் வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது “கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவிக்க வேண்டும் என்றார்.

பிறகு ஒரு சமயம் உ.வே.சாவும் அவருக்கு உதவி செய்யும் திருமானூர்க் கிருஷ்ணையரென்பவரும் கோயிலுக்குச் சென்றார்கள். இவர்களைப் பார்த்த பட்டாசாரியார் அன்று ஒவ்வொரு சந்நிதியைப் பற்றிய வரலாறுகளையெல்லாம் சொல்லி தரிசனம் செய்வித்தார்.

பல முறை பெருமாளை சேவித்திருந்தாலும், அன்று உ.வே.சா அனுபவித்து சேவித்தார். தரிசனம் முடிந்த பின் பட்டாசாரியர் “சற்று இருங்கள் என்று சொல்லிவிட்டு மடைப் பள்ளிக்குச் சென்று பல பிரசாதங்களை ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் எடுத்து வந்தார்.

பட்டாசாரியார் பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவர்களுக்குக் கொடுக்க - தேங்குழல், வடைத் திருப்பணியாரம், அதிரசம் என்று பல வந்தன. பட்டாசாரியார் ஒரு பிரசாதத்தைக் கொடுக்க “இதற்குப் பேர் என்ன? என்று உ.வே.சா அதன் பெயரைக் கேட்டவாறே உட்கொண்டபோது ஒரு பிரசாதம் புதிதாக இருந்தது.

“இது புதிதாக இருக்கிறதே; இதன் பெயர் என்ன?

“அதுவா? கும்மாயம்

“என்ன? கும்மாயமா! என்று வியப்போடு மணிமேகலையின் பாடல் அடிகள் அவர் கண் முன்னே வந்து நின்றன.

“ஐயா! இன்னும் கொஞ்சம் கொண்டு வரச் சொல்லுங்கள் என்று கேட்டு உட்கொண்டார். பட்டாச்சாரியார் இவருக்கு ‘கும்மாயம் மிகப் பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டார்.

உ.வே.சா.வுக்குக் கும்மாயத்தின் சுவையைவிட அதன் பெயர் அதிக சுவையைக் கொடுத்தது. மணிமேகலையில் கண்ட கும்மாயம் மடைப்பள்ளியில் இருக்கிறது என்று வியந்து “இதனை எப்படிச் செய்வது? என்று கேட்டபோது பட்டாசாரியார் விரிவாக விளக்கினார்.

கும்மாயத்தைப் பற்றி அந்தப் பட்டாச்சாரியரிடம் தெரிந்துகொண்ட பிறகு நீலகேசி யென்னும் நூலிலும் அச்சொல் வந்திருப்பதை அறிந்துகொண்டார். வேறு நூல்களிருந்தும் சில செய்திகள் அவருக்குத் தெரிய வந்தன. அவற்றையெல்லாம் சேர்த்து மணிமேகலைக் குறிப்புரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்

“கும்மாயம், புழுக்கிய பச்சைப் பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி. இப்பெயரோடு இது விஷ்ணு ஆலயங்களில் இக்காலத்தும் வழங்கி வருகின்றது. ‘கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி (பெரியாழ்வார் திருமொழி,3.3.3) என்பதில் கும்மாயம் என்பதற்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர். ‘பயற்றது கும்மாயம் (நன்னூல், சூத்திரம் 299, மயிலை நாதருரை மேற்கோள்).

இதைப் படித்த பின்னர் கும்மாயம் எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ள சில ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். முதலில் பெரியாழ்வார் திருமொழியில் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம்

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
      குடத் தயிர் சாய்த்துப் பருகி*
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
      பொன்றுவித்து இன்று நீ வந்தாய்

குழையச் சமைத்த பருப்பையும் வெண்ணெய்யையும் விழுங்கிவிட்டு, குடத்தில் நிறைந்த தயிரைச் சாய்த்துக் குடித்தும், பொய்யையும் மாயச் செயல்களையும் புரியும் அசுரர்களால் ஆவேசிக்கப்பெற்ற இரட்டை மருத மரங்களை விழுந்து முறியும்படி, இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த நீ இப்போது ஒன்றும் செய்யாதவன் போல வந்து நின்றாய் என்று பெரியாழ்வார் வியந்து தன் பிள்ளைத் தமிழில் பாடுகிறார்.

குழந்தைகளுக்குத் தாய் நன்றாக மசித்துத்தான் சோறு ஊட்டுவார். அதேபோல பெரியாழ்வாரும் நன்றாக மசித்து கண்ணனுக்குக் கும்மாயத்தை ஊட்டுகிறார்.

கவிஞர் பெரியசாமி தூரனின் குழந்தைகளுக்கான பாடல்கள் ‘மழலை அமுதம் என்று 1981ல் வெளிவந்துள்ளது (கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீடு). அதில் ‘கும்மாயம் என்ற சிறுவர் பாடல் இப்படி வருகிறது.

கும்மா கும்மா கும்மாயம்
கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்
அம்மா தெய்வம் கும்பிடு
அப்பா தெய்வம் கும்பிடு
அவரே தெய்வம் கும்பிடு
அன்பாய் என்றும் நடந்திடு
கும்மா கும்மா கும்மாயம்
கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்

(குறிப்பு: கும்மாயம் என்பதற்குப் பாயசம் என்பது பொருள்)

பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்த பின் இதை எழுதியிருப்பாரோ என்று கூடத் தோன்றுகிறது.

‘முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்ற நூலில்,

“கும் - குமை. குமைதல் = புழுங்குதல். கும் - கும்மாயம் = குழைய என்று விளக்கம் தந்துள்ளார்கள்.

கல்வெட்டில் கும்மாயம் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடும்போது

அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான ‘எரிச்சாவுடையார் கோயிலில் வரகுன மஹாராஜா ஆட்சிக் காலத்தில் ஒரு கல்வெட்டில் ‘கும்மாயம் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. (தற்போது இந்தக் கல்வெட்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது) [AR No. 105 of 1905] அதில் வரிசையாக இப்படி வருகிறது. “...கும்மாயத்துக்கு பயற்றுப் பருப்பு நிவேதிக்க பசுவின்னனறு நெய் ஒரு ஆழாக்கு, பசுவின் தயிர் ஒர் உரி, கருவாழைப்பழம் நான்கு, சர்க்கரை ஒரு பலம்... என்று வருகிறது

Epigraphia Indica தொகுதி 21ல் கும்மாயம் பற்றிய ஒரு குறிப்பில் இப்படி வருகிறது.

“கும்மாயம் செய்வதற்குப் பாசிப் பருப்பு முக்கியப் பொருளாகத் தெரிகிறது. ஆனால் தற்போது அது வழக்கத்தில் இல்லை. தற்போது கும்மாயம் சுண்ணாம்பு, மண் கலவையைக் குறிக்கிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பெரும்பாணாற்றுப்படையில் ‘அவரை வான் புழுக்கு என்பது கும்மாயத்தைக் குறிக்கலாம் என்கிறார்கள். கும்மாயம் என்பது நன்கு வேக வைத்த பச்சைப்பயிறு கூடவே கொஞ்சம் வெல்லம் என்று தெரிகிறது.

‘பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்ற புத்தகத்தில் “தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண விருந்து. அதிற் பதினெண் வகைக் கறியும், கன்னலும் (பாயசம்) படைக்கப்பெறும். பதினெண் வகைக் கறிகள்: அவியல் (உவியல்), கடையல், கும்மாயம், கூட்டு (வெந்தாணம்), துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆணம்), அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உழுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன

என்று பட்டியலில் கும்மாயம் வருவதை வாசகர்கள் கவனிக்கலாம்.

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றில் கண்ணனுக்கு வரிசையாக சில சிற்றுண்டி செய்துவித்து கண்ணனைச் சாப்பிட வரும்படி அழைக்கிறார்.

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல் நம்பி

சின்ன குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும்போது அவர்களுக்குப் பிடித்தவற்றையும் சேர்த்துத் தருவோம் (உதாரணம்: சிப்ஸ்!) அதே போல கண்ணனுக்கு பெரியாழ்வார் அப்பம் ‘கலந்த சிற்றுண்டி தருகிறார்.

அதே போல் குழந்தைகள் வெறும் பாலைக் குடிக்க மாட்டார்கள். அதில் ஏதாவது கலக்க வேண்டும் (உதாரணம் - பூஸ்ட்). பெரியாழ்வார் அக்காரம் கலந்த பாலைக் கொடுக்கிறார். அக்காரம் என்றால் வெல்லம் என்று பொருள்.

இன்னொரு பாசுரத்தில் பெரியாழ்வார்:

“செந்நெல் அரிசி சிறுபருப்புச்
செய்த அக்காரம் நறு நெய் பாலால்

என்று அக்கார அடிசல் செய்யத் தேவையானவற்றை இப்படிப் பட்டியலிடுகிறார்.

செம் நெல் அரிசி
சிறு பயற்ற பருப்பு
கரும்பை காய்ச்சித்திரட்டின கரும்புக்கடியும் (வெல்லம்)
மணமிக்க நெய்யும்
பாலால் சமைத்தேன்

பெரியாழ்வார் சொன்ன அக்கார அடிசல் குறிப்பை, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில்:

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறு தடா நிறைந்த “அக்கார அடிசில்
சொன்னேன்*
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?

அதை அழகருக்குச் சம்பர்பிக்கப் பிரியப்படுகிறாள். அவளின் விருப்பத்தை ஸ்ரீராமானுஜர் பூர்த்தி செய்து வைத்தார் என்ற வரலாறு தெரிந்ததே. அக்கார அடிசல் பற்றி ஸ்ரீரங்கத்தில் கல்வெட்டு இருக்கிறது.

ஸ்ரீரங்கம் கோயிலில் ராஜமஹேந்திரன் திருச்சுற்று கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி சுவரில் அமைந்துள்ள கல்வெட்டில் நயினாராசார்யரின் சிஷ்யரான பிள்ளைலோகம் ஜீயரின் சிஷ்யரான ஜீயர் ராமானுஜ தாஸன் என்பவரால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட சாஸனத்தில் (23-4-1618)

‘ஸ்ரீரங்க ராஜ சரணம்புஜ ராஜஹம்ஸராய் ஸ்ரீமத் பராங்குஸ பதாம்புஜ ப்ருங்க ராஜராய் ‘பல்கலையோர் தாமென்ன வந்து அனைத்துலகும் வாழப் பிறந்து தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவித்து பொன்னரங்கமென்னில் மயலே பெருகும் ஸ்வாமி எம்பெருனாருடைய சித்திரை மாஸம் திருவாதிரை திருவத்யயநம் சாத்துமுறை முதல் நாள் ஆறாந்திருவத்யயநம் பொலிக பொலிக திருவாய்மொழி சிறப்பு அமுது செய்தருளும் படிக்கு பொலியூட்டாக பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில்... வருஷம் வருஷம் தோறும் ஸ்வாமி நம்பெருமாள் அமுது செய்தருளும்படி ‘செந்நெல் அரிசி சிறுபருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் என்கிற திவ்யஸ்ரீஸுக்தியின் படியே. நம்பெருமாளுக்குக் கண்டருளச் செய்து, பிறகு வைணவ அடியார்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யப்ப்பட்டது என்கிறது இந்தக் கல்வெட்டு.

பெரியாழ்வார் சொல்லிய அதே குறிப்பைக் கொண்டு செய்தார்கள் என்று தெரிகிறது.

ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் இன்னும் கும்மாயம் பிரசாதம் வழங்கப்படுகிறதா என்று தெரிந்துகொள்ள அவர்களைக் கூப்பிட்டேன். “என்ன சார்? கும்மாயமா? அது என்ன? என்று என்னைத் திருப்பி கேட்டார்கள்.

பிறகு அங்கே கோயில் கைங்கரியம் செய்பவர் ஒருவரின் தொலைபேசியை நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டு, அவர் பட்டாசாரியாரைத் தொடர்புகொண்டு, கீழ்க்கண்ட தகவலை எனக்கு அளித்தார்.

“திரு அத்யன உற்சவ ஏழாம் திருநாள் ‘கற்பார் ராமபிரானை என்ற பாசுர நாளில் கும்மாயம் பெருமாளுக்குச் சமர்பிக்கிறார்கள். இது ராமருக்கு ரொம்ப பிடித்த சிற்றுண்டி.

“பெரியாழ்வார் கிருஷ்ணருக்கு என்று சொல்லியிருக்கிறார்

“ஓ அப்படியா, இங்கே ராமருக்குத்தான்!

“எப்படிச் செய்வது?

“ஒரு படி பயத்தம் பருப்புக்கு ஒரு படி தண்ணீர், நல்லா மசியனும். அப்பறம், படி வெல்லத்தை அதில் சேர்த்து நல்லா கெட்டியாகும் வரை அடுப்பில் நெய்விட்டுக் கிளர வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து இறக்க வேண்டும்... முன்பு பாலில் பருப்பைக் குழையவிடுவோம் அதிக நேரம் ஆகும். அதனால் இப்ப தண்ணீரில்... என்று ஐந்து நிமிடத்தில் சொல்லிமுடித்தார்.

பன்னிரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில் கருப்பெட்டி கொண்டு செய்த இனிப்புப் பணியாரம் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாண்டியர்கள் வாழைப்பழம், சீரகம், சுக்கு, மிளகு எல்லாம் சேர்த்து இனிப்பு செய்திருக்கிறார்கள். விஜயநகரத்துக் கல்வெட்டு ஒன்று திருப்பதியில் அவல், பலாப்பழம், கரும்புச்சாறு கொண்டு செய்யப்பட்ட ஒரு பதார்த்தைச் சொல்லுகிறது. அதிரசம் செய்வது பற்றியும் ஒரு குறிப்பு இருக்கிறது. காஞ்சிபுரம் வரதாராஜப் பெருமாளுக்கு 15 வகையான உணவு வகை பற்றிய குறிப்பில் இவை வருகிறது. பானகம், வடை பருப்பு, கறியமுது, ததியோனம், தோசை, அதிரசம், ஆப்பம், வடை, சுக்குப்பொடி, புளியோதரை, எள்ளோரை, கடுகோரை, பொங்கல், இட்லி, அக்கார அடிசல்.

இதுபோலப் பல உணவு பற்றிய குறிப்புகள் நம் கல்வெட்டில் இருக்கின்றன.

கல்வெட்டில் கும்மாயம் செய்யத் தேவையானவை என்ற பட்டியலில் பாசிப்பருப்பு, வெல்லம், நெய், தயிர், கருவாழைப்பழம் கொண்டு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது - இன்று இதைப் போல யாரும் செய்வதில்லை!

பாய்ஸ் படத்தில் செந்தில் என்ன என்ன கோவிலில் என்ன என்ன பிரசாதம் என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார். அது போல ‘கல்வெட்டில் உணவு வகைகள் என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் இது நல்ல தலைப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது - food for thought!


பன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணுகுமுறை | கஞ்சாநகரம் துங்கபாலா


 சபரிமலை விவகாரம் சமய சுனாமி ஒன்றை 2015 வருட இறுதியில் எழுப்பியது.. இப்புத்தக ஆசிரியர் நிதின் ஸ்ரீதர் அதைப்பற்றி எழுதிய ஆறு பகுதிகள் கொண்ட கட்டுரை India Facts பத்திரிகையில் 2016ல் பிரசுரிக்கப் பட்டது.. சபரிமலை ஒரு சமய விவகாரமா அல்லது ஒரு பெண்ணுரிமை சம்பந்தப்பட்டதா என்ற அலசலுக்குக் கிடைத்த வரவேற்பு 2018ல் (Menstruation across Culture:A Hitorical Perspective ) என்னும் அருமையான புத்தகமாக -மிளிர்ந்திருக்கிறது.ஆனால், சபரிமலை விவகாரம் ஒரு தூண்டுதலே தவிர, இப்புத்தகம் சபரிமலை சர்ச்சை பற்றியதல்ல என்று ஆசிரியர் முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறார்..

ஆசிரியர் நம்மை பொ.யு. ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னாலான கலாசாரங்களுக்கே அழைத்துப் போகிறார். அது ஒரு அறிவுபூர்வமான உணர்ச்சிக் கொந்தளிப்பான பயணமாகவே இருக்கிறது. மாதவிடாய் குறித்து இந்து மதம் கூறும் ஆழமான வேதாந்தம் கலந்த கருத்துக்களை மிகத் தெளிவாக, விரிவாக முதல் பகுதியில் குறிப்பிடுகிறார். பின் மற்ற மதங்கள் கலாசாரங்களின் கருத்துக்களை அலசிவிட்டு இந்து மதமுடன் ஒப்பிடுகிறார்.

பயணம் தொடர்வதற்கு முன் வாசகர்கள், மாதவிடாய், வெளியில் விவாதிக்கத் தகுதியுள்ள விஷயமல்ல; வீட்டிற்குள் பெண்கள் மத்தியில் சன்னக் குரலில் பரிமாறப்பட வேண்டிய விஷயம் என்ற எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும். திறந்த மனத்துடன் விரிவான ஆராய்ச்சி முறையில் அணுக வேண்டும்.

ஸனாதான தர்மம்

இந்து ஸனாதன தர்மம் மாத விலக்கை நிலவின் வளர்ச்சி, தேய்வு மறைவுடன் சம்பந்தப்படுத்துகிறது. ஆயுர்வேதம், ஜோதிடம், வான சாஸ்திரம், பாலியல் படிப்பு எல்லாமே இக்கருத்தை ஆதரிக்கின்றன. சந்திரனுக்கும் மன உணர்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதால் பௌர்ணமிக்குப் பின் சினை முட்டை உருவாகி வளர்பிறையில் வளர்ந்து பின் தேய்ந்து அமாவாசையில் உடைந்து உதிரப் பெருக்காகிறது. அதனால் தான் 28 நாள் சுழற்சி. இதை யூத மதமும் மற்ற சில கலாசாரங்களும் கூட சொல்கின்றன.

பௌர்ணமியன்று ஆண் பெண் இருவரது குணநலன்களும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது உருவாகும் குழந்தை உயர்வாக இருக்கும் என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மாதவிடாய் என்பது ஒரு புது உயிரை, ஜீவாத்மாவை இவ்வுலகிற்குக் கொண்டுவர உதவும் முக்கியமான நிகழ்வு. அது கொண்டாட்டம். அந்த விலகி இருக்கும் மூன்று நாடகள் பெண்களுக்குத் தவம் போலத் தம்மைத் தூய்மைப் படுத்தும் நேரம்.

இதற்காக ஆசிரியர் மேற்கோள் காட்டிய புத்தகங்கள்: யஜுர் வேத தைத்ரிய ஸம்ஹிதா, ஆங்கீரஸ ஸம்ஹிதா, ஷுஷ்ருத ஸம்ஹிதா மனு ஸ்மிரிதி முதலியன.

அவை என்ன சொல்கின்றன?
  1. மாதவிடாய் இயற்கை நிகழ்வு.
  2. கரு முட்டைகள் கருவாகுமுன் உடைவது இந்திரனின் பாப நிவர்த்தி. (ஒருமுறை இந்திரனுக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது மூன்றில் ஒரு பங்கை பூமியும், மற்ற இரண்டு பங்கை மரங்களும் பெண்களும் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். இதனால் பூமியில் பள்ளங்களும், மரத்திற்குப் பால் வடிதலும், பெண்களுக்கு மாதவிடாயும் தோன்றின. பதிலுக்கு வரமாக பூமியிலிருந்து தாவரங்களும், மரத்திலிருந்து தளிர்களும், பெண்ணிடமிருந்து புது உயிரும் தோன்றின.
  3. மாதவிடாயின் அந்த மூன்று நாட்கள் அசுத்தமானது. உடலிலிருந்து வெளியேறும் எந்தக் கழிவு நீரும் அசுத்தமானதுதான். அந்த மாதிரி நேரங்களில் ஆண் பெண் யாருமே கோவிலுக்குப் போவதோ யாகம் அல்லது சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு பெறுவதோ தவறு.
  4. அந்த நேரங்களில் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். இது பெண்களின் உடல் ஓய்விற்காக.
  5. அது பெண்களுக்கு ஒரு தவம் போல். அது ஒரு சுய தூய்மைப்படுத்தும் நிகழ்வு. மனத்தை ஒருநிலைக்குக் கொண்டு வரும் முயற்சி.
  6. அது ஒரு பெரிய திருவிழா போன்ற நிகழ்வு.

இந்து சமயத்தில் மாத விடாய் போற்றப்படுகிறது. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் திருமணம் போலவே விழா எடுக்கிறார்கள். நாம் மஞ்சள் நீராட்டு விழா பற்றி நன்கு அறிவோம்.

இந்தக் கருத்துக்கள் பெண்ணுரிமை இயக்கங்களுக்கு மட்டுமல்ல. மற்றவர்க்கும் கோபம் வரவழைக்கும். ‘இந்திரன் ஏன் மூன்றில் ஒரு பங்கு தோஷத்தைப் பெண்களுக்குத் தர வேண்டும்? ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அது என்ன தவம்?

நிதின் ஸ்ரீதர் ஆயுர்வேதம், யோக சாஸ்திரத்திலிருந்து விளக்கம் தருகிறார். “மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ரஜோகுணம் உச்சத்தில் இருக்கும். கோபம் வெறுப்பு ஆத்திரம் எல்லாமே அதிகமாக வெளிப்படும். அபான வாயு அதிகமாக வெளியே விடுவார்கள். இது உடலின் சமான, உடான போன்ற மற்ற வாயுக்களை சீர்குலைத்து பிராணவாயுவைப் பாதிக்கும். இதனால்தான் இந்த நிலையில் பெண்கள் யாகம் உள்ளிட்ட சம்பிரதாயச் சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடாது. மனம் சஞ்சலப்படும். ஆண்களுக்கும் இந்தத் தடை உண்டு. உதாரணமாக ‘சாவுத் தீட்டு. அதனால் பெண்கள் தாழ்த்தப்படுகிறார்கள் என்ற வாதம் தவறு என்கிறார் ஆசிரியர்.

ஆயுர் வேதம், பெண்கள் மாதவிடாய்த் தருணத்தில் ஒய்வடுத்தல் அவசியம் என்கிறது. மிக்க கடினமான வேலை செய்வது அவர்கள் உடல் நிலையைப் பாதிக்கும். சாத்வீக உணவு ரஜோ குணத்தை மட்டுப்படுத்தும் என்றும் சொல்கிறது.

தாந்த்ரீகம்

இப்பிரிவில் பெண் தெய்வமாகிறாள். சக்தியாக வழிபடப்படுகிறாள். அஸ்ஸாமில் காமாக்யா கோவில் ஒரு சக்தி பீடம். இங்கு யோனி ரூபத்தில் வழிபாடு. அம்மனுக்கு மூன்று நாள் மாதவிலக்கு சமயம் கோவில் மூடப்படும். அங்கு இயற்கையாக நீர் ஊறும். அதை சிவப்புத்துணியால் மறைத்து விடுவார்கள். நாலாம் நாள் நீராட்டல். பின் பிரசாதம். கேரளாவிலும் பகவதி கோவிலில் சபரிமலை கோவிலின் முக்கிய நம்பூதிரியின் மனைவி, தேவியின் ‘உடையாடையை சோதித்து பகவதியின் மாத விலக்கை அறிவிப்பார். தேவி தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்காம் நாள் பம்பை நதியில் ‘திருப் புத்தாராட்டுக்குப் பின் பூஜை. சிவப்புத்துணி பிரசாதம்.

அஸ்ஸாமில் பூமித்தாய்க்கும் மாதவிடாய் உண்டு. அந்த நேரம் நிலம் உழுவது கூடாது. பூமிக்கு ஓய்வு தருவதற்காக. கர்நாடகாவில் துளு மக்களும் பூமியின் மாதவிடாயைக் குறிப்பிட்ட நாட்களில் ‘கேடஸ்ஸா என்னும் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

தாந்த்ரீக வழிபாட்டில் மாதவிடாய்

இங்கு வியப்புறும் (இன்று அருவருக்கும்) வண்ணம் மாதவிடாய் பூஜிக்கப்படுகிறது. பெண் என்பவள் சக்தி. ஆண் என்பவன் சிவன். பெண்ணின் மாத விடாய் நேரம், ஆண் அவளுடன் உடலுறவு கொள்ளும் அந்த சிவசக்தி பிணைப்பைப் பூஜை செய்து வழிபட்டால், அந்த ‘அமிர்த நீரைப் பருகினால் சித்தி கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் காம உணர்வு அறவே கூடாது.

இந்தக் குறிப்புகள் மூலம் இந்து மதம் பெண்மையையும், மாதவிடாயையும் போற்றுகிறது என்கிறார் ஆசிரியர்.

தேவிபுரம் என்னும் ஆந்திரப் பிரதேச ஊரில் உள்ள ஸ்ரீ சக்ர வடிவக் கோவிலில் லலிதா பரமேஸ்வரி அம்மனை யோனி ரூபத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அங்குள்ள அமிர்தானந்த நாத ஸரஸ்வதி சொல்வதைக் குறிப்பிடுகிறார். “பெண்கள் உயிருள்ள நடமாடும் தெய்வங்கள். இங்கு பெண்கள்தான் பூஜாரிகள். மாதவிலக்கிலும் பூஜை செய்யலாம். தேவியின் சன்னிதானத்தில் எல்லோரும் தெய்வங்கள்தான்.

இந்தக் காரணம் சபரிமலை விவகாரத்திற்குப் பொருந்தும் என்ற ஒரு கருத்தும் இங்கு மெலிதாக வெளிப்படுகிறது. பருவமெய்திய பெண்கள் கோவிலுக்கு வந்தால் பல தேவிகளின் சக்தி பக்தர்களை ஆகர்ஷித்து, பிரதான தெய்வத்தின் சக்தி சிதறடிக்கப்படும். அதனால் இளம் பெண்கள் வருவது தடை செய்யப் பட்டது என்றும் வாதிடப்படலாம்.

ஜைனமதம், புத்த மதம், சீக்கிய மதம்

சமணம், மாதவிடாய்க் காரணத்தினால் பெண்களுக்குத் துறவியாகும் அந்தஸ்தைத் தரவில்லை. ஸ்வேதாம்பரத் துறவிகள் வயதானபின் துறவு பூண்டாலும் இளம் முனிவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

புத்த மதம் பெண்களுக்கு ஆண்களை விட துயரம் அதிகம் என்கிறது.

அவை, பருவமடைதல், கருவுறுதல், பிள்ளைப் பிறப்பு, கணவனுக்கு சேவகம், மாமன் மாமியை அனுசரிப்பது. இத்தனை தொல்லைகளால் அவர்களால் ஞானம் பெற்று முக்தி அடைய முடியாது.

ஆனால் சீக்கிய மதம் மாதவிடாயிலும், பெண்கள் குருத்வாரா போக, பஜனை, பிரார்த்தனைச் சடங்குகளில் பங்கெடுக்க அனுமதிக்கிறது. பாவம் என்பது மாதவிடாயில் இல்லை. பொய் சொல்வது, பிறன் மனை விழைவது, பிறர் பொருளை அபகரிப்பதுதான் பாவம் என்பது அதன் கொள்கை.

நிதின் ஸ்ரீதர்

ஆசிரியர் இங்கு சொல்லுகிறார், “இந்துப் பெண்கள் கோவில் போக முடியாமல் சடங்கு, யாக வேள்விகளில் கலக்க முடியாவிட்டாலும் பக்தி மார்க்கத்தில் துறவிகளாகலாம்; மாதவிடாய்த் தருணத்தில் தவறாக, தீண்டல் கலந்திருந்தால் வயதானபின் எடுக்கும் ரிஷி பஞ்சமி விரதம் அதற்குப் பிராயச் சித்தம். ஆங்கீரஸர், வஸிஷ்டர், காச்யபர், விஸ்வாமித்திர், அத்திரி போன்ற ரிஷிகள் அதற்கு அருளுகின்றனர்.

இந்த வாதங்கள் எல்லாமே இன்றைய காலகட்டத்தில் செல்லாக் காசாகிவிட்டன. இதை ஆசிரியர் ஒத்துக் கொள்கிறார். புது யுகப் பெண்களுக்கு விலகுவது, வேலை செய்யாமல் இருப்பது எல்லாமே முடியாத காரியம். கூட்டுக் குடித்தனங்கள் போய் விட்டன. எல்லாமே மூடநம்பிக்கை என்ற கருத்து பரவலாகி விட்டது.

ஆசிரியர் அதன் காரணம் ஆங்கிலக் கல்வி, நகரமயமாக்குதல் விளம்பரங்கள் மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கம் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுகிறார்.

க்ரீக், ரோம, எகிப்திய, சுமேரிய, மெஸபடோமிய நாகரிகங்கள்

இவை அனைத்திலும் மாதவிடாய் எனும் நிகழ்வு அசுத்தமாக, புனிதமற்றதாக, ஆண்களுக்கும், பண்ணை மிருகங்களுக்கும் தீங்கு உண்டுபண்ணும் நிகழ்ச்சியாகவே இருந்தது. பெண்கள் ஒரு தவிர்க்கப்பட வேண்டிய பிறவிகள் என்ற கீழ்த்தர நோக்கம் கொண்டிருந்தனர். விலக்கி வைத்தல், குறைவான உணவு கொடுத்தல் எல்லாமே அவர்களிடமும் இருந்தன. முக்கியமாக, கணவன் மனைவி உறவு கட்டாயத் தடையாயிருந்தது.

இதற்குத் தண்டனையும் இருந்தது. இந்து தர்மத்தில் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்று ஸம்ஹிதிகள் சொல்லுகின்றன. யூத மதம் அவர்களை ஊரை விட்டே விலக்கி விடுகிறது. குழந்தை பிறக்கும் சமயம் அப்படிப்பட்ட பெண்கள் இறந்து விடுவார்கள் என அவர்கள் பிரார்த்தனையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

தென் வட அமெரிக்கப் பழங்குடிகளின் நிலைப்பாட்டையும் அலசுகிறார். மாதவிடாய் தூய்மை, புனிதமற்றது. அவர்களுக்கும் விலகல், தனிமைப்படுத்தல் உண்டு. ஆனால் சற்றுக் கொடுமையானது. காட்டிற்குள் போய்விட வேண்டும். பாம்பு கடித்து இறந்தால் மற்றவர்களுக்குக் கவலை இல்லை. பின் நாட்களில் கொஞ்சம் மாறி குடிசைக்குள்ளேயே ஒரு பரண் போட்டுத் தங்கினார்கள். ஆணைப் பார்த்தால் அவன் மரணம் அடைவான். அவள் சமைத்தால் அது விஷமாகி விடும். உணவும் மிக்க குறைவாக, அவர்களே சமைத்து உண்ண வேண்டும். உண்ட மண் பாத்திரங்களைப் பூமியில் புதைக்க வேண்டும். ஏனெனில் அவற்றைத் தொட்டால் மாடு ஆடு போன்ற உயிரினம் இறந்து விடும்.

இவை எல்லாமே மூட நம்பிக்கை. தவிர, ஆண் மகன் உயிர் முக்கியம் என்ற ஆணாதிக்க நோக்கத்தைக் காட்டுகிறது. ஏவாள் செய்த பாவத்தினால் ஆண் புனித நிலை இழந்துவிட்டான். அந்தப் பாவத்தின் பலன்தான் பெண்களுக்கு மாதவிடாய் சாபமாக மாறியது என பைபிள் கூறுகிறது.

யூதர்கள் மாதவிடாயின் முதல் 5 நாட்களை ‘நிட்டா (Niddah) என்று அழைத்தார்கள். அடுத்த ஏழு நாட்கள் சுத்தமில்லாத தினங்கள். அச்சமயம் ஆண்கள் பெண்ணின் துணிகள், அவளின் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது; அவள் பாடல்களைக் கேட்கக் கூடாது; பெண்ணிற்கும், அவனுக்கு மது ஊற்றக் கூடாது; அவன் கால் கழுவக்கூடாது; அவன் படுக்கையை விரிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள்.

இந்துக் கலாசாரத்தில் துர்காவும் புவேனேஸ்வரியும் எப்படி பூப்பெய்திய பெண்களுக்குக் காப்போ அதுபோல் கிரேக்கர்களுக்கு ‘ஆர்ட்டிமிஸ் என்ற பெண் தெய்வம் காப்பு. ஒரு பெண் பூப்பெய்தினால் ஏதன்ஸ் நகரில் கரடி நடனம் ஆடுவார்கள். முரட்டுக் கரடியை (ஆர்ட்டிமிஸ்ஸின் செல்லப் பிராணி) அடக்குவார்கள். அதன் பொருள், அதுவரை அந்தச் சிறுமிக்கு இருந்த திமிர்த்தனம் அடங்கி அவள் திருமணத்திற்குப் பக்குவமாகி விடுவாளாம். ஆர்ட்டிமிஸ் அச்சிறுமியைப் பிள்ளைப் பேறு சமயத்தில் காப்பாற்றுவாளாம்.

அதே போல் ரோமாபுரியில் சிறுமிகளைக் காக்கும் கடவுள் டயானா. மெஸபடோமிய நாகரீகத்தில் (இப்போதைய இராக், குவெய்ட், ஸிரியா, துருக்கி) யில் இஷ்டார், இனன்னா. டயானா நிலவுடன் சம்பந்தப்பட்ட கடவுள். இஷ்டார் வீனஸுடன் தொடர்புடைய தெய்வம். பூப்பெய்தல் நடனத்தில் வழியெங்கும் உதிரத்தைத் தெளித்துக்கொண்டு போய், கடைசியில் இஷ்டார் கடவுளின் சிலையில் தெளிப்பார்களாம்.

இத்தனை சுவாரஸ்யமான கதையைச் சொன்ன ஆசிரியர் இத்தனையுமே இடைக்கால ஐரோப்பாவில் மூட நம்பிக்கையென்று தகர்த்தெறியப்பட்டுவிட்டது என்கிறார். பொ.யு. 70ல் ஜெருசலேம் கோவில் உடைந்த பின்னர் மாதவிடாய்ப் பெண்கள் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற தடை நீங்கியது.

ரோமில் ‘மியாஸ்மா என்ற மாதவிலக்குத் தீண்டல் நடைமுறையில் இருந்தது. எந்தப் பாதிரி இறந்தாலும் சர்ச்சைப் புனிதப்படுத்தும் சடங்கும் இருந்தது.

ரஷ்யாவில் மாதவிடாய்ப் பெண்கள் ‘அல்டார் அருகில் போகத்தடை. ஸ்பெயின், போர்ச்சுகலில் அப் பெண்கள் செம்மறி ஆடுகள் அருகில் போனால் அவைகளின் பால் வற்றி விடும். ஆனால் இடைக் காலத்தில் (medieval Europe) கிறுத்துவ மதம் எல்லா விதிகளையும் தளர்த்தியது. மாதவிலக்குக் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக சர்ச்சிற்கு வரவேண்டும் என்றது. பெண்களே தம்மிடம் புனித ஆவி இல்லை, தீய ஆவிதான் உண்டு என்று நினைத்த தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்தது.

மாதவிடாய் நேரத்தில் எல்லோரும் செய்வினை, பில்லி சூனியக்கார்களாவார்கள், பேய் பிசாசுகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று லட்சக் கணக்கான பெண்களைக் கொன்று குவித்தனர். இது இங்கிலாந்தின் மிக மோசமான கறைபட்ட சரித்திரம்.

இத்தகைய மேற்கத்திய சிந்தனைகள் இநதியாவில் பரவி நம் எண்ணங்களைச் சீர்குலைத்து பண்பாட்டையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

மற்ற மதங்களில் மாதவிடாய் என்பது பாவம். ஆனால் நம் கலாசாரத்தில் அது புனிதம், போற்றப்பட்டது என்கிறார்.

புதுயுகப் பெண்கள் அது மறைக்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கிறார்கள். தான் என்றும் போல் எல்லா வேலையும் செய்வேன் என்பதெல்லாம் மேலை நாட்டைப் பின்பற்றுவதால் வந்த சீர்குலைவு. ஆயுர் வேதம், உடலுக்கு ஓய்வில்லை என்றால் பின்னாளில் பல பிரச்சினைகள் உருவாகும் எனக் கூறுவதை மேற்கோள் காட்டுகிறார்

ஆசிரியரின் இறுதிச் சொற்கள்: “ஒருதலைப் பட்சமான கண்ணோட்டத்துடன் பார்க்காமல், இந்திய கலாசாரம் மற்றும் இதர நாகரீகங்களிலும் மாதவிடாய் எப்படி நோக்கப்பட்டது என்று புரிய வைக்கும் ஜன்னலாக இப்புத்தகம் உதவும் என்று நினைக்கிறேன் என்கிறார்.

நீண்ட நாளாய் வாழ்ந்து தழைக்கும் இந்து தர்மத்தின் மேல் அவர் வைத்துள்ள ஆசை, மதிப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

ஒரு டைம் மெஷினில் பல்லாயிரம் வருடம் பயணித்த அனுபவம். பல கதைகள். பல கலாசாரங்கள். பல பழக்க வழக்கங்கள். நம்பிக்கைகள். மறுக்க முடியாத சரித்திர உண்மைகள். மறக்க இயலாத பண்பாட்டுக் கலாசாரங்கள். சிலர் ஒத்துப் போகலாம். சிலர் விவாதம் பண்ணலாம்.

ஒன்று நிச்சயம். நிதின் ஸ்ரீதர், மிக மெதுவாகப் பேசப்படும் ரகசியமான ஒரு விஷயத்தை, பண்டைய புராதனமான கலாசாரங்கள் எந்தக் கோணத்தில் நோக்கின என்பதை நல்ல புரிதலுடன் அலசிப் பார்க்க நமக்கு ஒரு சுவாரஸ்யமான சுற்றுப்பயண அனுபவம் கொடுத்திருக்கிறார்.

ஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின் விளிம்பில் (பகுதி 1) | வித்யா சுப்ரமணியம்


எத்தனை எட்டாத உயரத்தில் தெய்வங்கள் இருந்தாலும், அங்கே செல்வது மிகமிகக் கடினம் என்றாலும், சில நேரம் உயிருக்கே உத்தரவாதமில்லை என்றாலும் கூட, சர்க்கரைக் கட்டியைத் தேடிச்செல்லும் எறும்புக் கூட்டம் போல சாரிசாரியாக மலை மீது ஊர்ந்து சென்று, பலவித சிரமங்களையும் தாங்கிக் கொண்டு அந்த தெய்வத்தைத் தரிசிக்க மனிதர்கள் தயாராகி விடுகிறார்கள். சிறிய மலையோ, பெரிய மலையோ, கோவில்களை மலை உச்சியில் நம் ஆச்சார்யர்கள் கட்டி வைத்ததற்குக் காரணம் இருக்கிறது. மலையேறுகையில் மூச்சு வாங்கும். எண்ணங்கள் ஒடுங்கும். ஒரு கட்டத்தில் நம் ஆழ்மனம் திறக்கும். ஆழ்மனம் திறக்கையில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் நூறு சதம் ஈடேறும். இதைத்தான் ஆங்கிலத்தில் ஆல்ஃபா மைன்ட் பவர் என்கிறார்கள். நம் ஆழ்மனத்தின் எண்ணங்களை பிரபஞ்ச சக்தி ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கும் என்பார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் பல கோவில்கள் மலைமீது கட்டப்பட்டுள்ளன.

தெற்கே பொதிகை மலை, சதுரகிரி, பர்வதமலை, கொல்லிமலை, உட்பட பல மலைகளுக்கும் ஏறிச் சென்று வழிபட்டிருக்கிறேன். வடக்கே திபெத்தில் உள்ள கைலாஷ், இந்திய எல்லையில் உள்ள ஆதிகைலாஷ், ஓம் பர்வத், கேதார் பத்ரி என இமயத்தின் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையேற ஏற எண்ணங்கள் ஒடுங்குவதை அனுபவ ரீதியாக உணர்ந்துமிருக்கிறேன். ஒவ்வொரு யாத்திரையும் பல்வேறு அனுபவங்களையும், பரந்துபட்ட பார்வையையும் நமக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள உதவுகிறது.

திருப்பதி மலையை ஏறிச்சென்று வழிபட்ட ஒரு நாளில்தான் ஆதிகைலாஷ் யாத்திரை செல்வதென்று எங்கள் குழுவினர் தீர்மானித்தோம். அப்போது என் நண்பர் ஒருவர் ஆதிகைலாஷ் செல்வதற்கு உங்களுக்கு உடல் தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார். எப்படி எனக் கேட்டேன். பொதிகை மலை ஏறிக் காட்டுங்கள், ஆதி கைலாஷ் அழைத்துச் செல்கிறேன் என்றார். நானும் சிரித்தபடி ஏறினா போச்சு என்றேன்.


(ஆதிகைலாயத்தின் முன்பாக)

அதே போல் 2008 ஏப்ரல் மாதம் 28ம் தேதி நெல்லை பாபநாசம் சென்ற நாங்கள் மறுநாள் காரையார் அணை கடந்து பொதிகை ஏற ஆரம்பித்து மே ஒன்றாம் தேதி ஆறாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் உள்ள அகத்தியரை வழிபட்டோம். என் சக்தியை நானறிந்த தினம் அன்று. ஏனெனில் பொதிகை மலை ஏறுவது மிகவும் சவாலான விஷயம். சில இடங்களில் நாம் குரங்கு போல கை கால் எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி, தொற்றிக் கொண்டு கூட ஏற வேண்டி வரும். சூரிய ஒளியே படாத பொதிகையின் பல்லுயிர்க் காடுகளைக் கடந்து செல்வது புதியதொரு அனுபவம்.

என்னைத் தூண்டி விட்ட நண்பர் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். நானும் என் இருபது வயது இளைய மகளும் சேர்ந்தே ஆதிகைலாஷ் செல்வதெனத் தீர்மானித்தோம். இந்திய எல்லையோரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆதி கயிலாயம். இதனை தரிசிக்க மிகவும் கடினமானதொரு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு மூலம் கயிலாயம் மானசரோவர் செல்லும் அதேவழியில்தான் இந்த யாத்திரையும் மேற்கொள்ளப்படும். ஆனால் இதை அந்த மாநில அரசே நடத்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பபத்து மூன்று பேர் கொண்ட எங்கள் குழு, உத்தரகாண்ட் அரசின் குமான் மண்டல் விகாஸ் நிஹாம் நிறுவனம் மூலம் இங்கிருந்து டெல்லிக்கு முதலில் சென்றோம்.

டெல்லியிலிருந்து அன்றிரவே பேருந்து மூலம் 415 கி.மீ தூரம் பயணித்து ஜாகேஷ்வர் நோக்கிச் செல்லும் வழியில் கங்கா ஆரத்தியும் காணக் கிடைத்தது. இந்த யாத்திரையில் நங்கள் கண்டது ஜாகேஷ்வர், பாதாள் புவனேஸ்வர், நைனிடால் எனப் பல இடங்கள் என்றாலும், இந்தக் கட்டுரையில் ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பரவத் யாத்திரை பற்றி மட்டும் பார்ப்போம்.


(காளி நதியின் பிறப்பிடம்)

ஜாகேஷ்வரிலிருந்து பாதாள் புவனேஸ்வர் வழியாக முந்நூற்று சொச்ச கி.மீ தூரம் மலைப்பாதையில் பேருந்தில் பயணித்து நாம் அடையும் இடம் டார்ச்சுலா. இதுதான் ஆதி கைலாஷ் யாத்திரையின் ஆதார முகாம். இங்கிருந்துதான் ஆயத்தங்கள் தொடங்கும். இரவு நேரம் என்பதால் எல்லோரும் தூங்கிவிட்டோம். மறுநாள் காலை கண்விழிக்கும் போதே ஏதோ ஒரு பேரிரைச்சல் கேட்க என்னவென்று புரியாமல் அறையின் பால்கனிக்கு வந்து பார்த்த நான் மலைத்துப் போனேன். எங்கள் ஹோட்டலை ஒட்டி பொங்கிப் பிரவாகமாய் காளி நதி பெரும் இரைச்சலோடு ஓடிக் கொண்டிருந்தது. இந்தியாவையும் நேபாளத்தையும் பிரித்தபடி ஓடுகிறது. நதிக்கு அந்தப் பக்கம் நேபாளம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் இருக்கிறது. அடையாள அட்டையுடன் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை இந்த பாலத்தைக் கடந்து நேபாளிகள் இந்தியாவிற்கும், இந்தியர்கள் நேபாளத்திற்கும் செல்லலாம். மலையேறும் போது ஊன்றி நடப்பதற்கான கம்புகள் இங்கே விலைக்குக் கிடைக்கின்றன. குதிரைகளில் செல்ல முடியாத இடங்களில் நாம் நடந்துதான் செல்ல வேண்டும் என்பதனால் இந்தக் கம்பைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.


(டார்ச்சுலா நேபாளத்தை இணைக்கும் பாலம்)

டார்ச்சுலாவிலிருந்து மாங்தி என்னும் இடம் வரை 21 கி.மீ நம்மைப் பேருந்தில் அழைத்துச் செல்கிறார்கள். பேருந்தில் செல்லும் இந்த மலைப் பயணம் ரம்யமானது. தூரத்து அருவிகளும், பசுமை போர்த்திய மலைகளும் தவழும் மேகங்களும் மனதை மயக்கும். மலைப்பாதையில் நிலச்சரிவுகள் ஏற்படுவது சர்வசாதாரணம். காளி நதியின் ஆக்ரோஷமான வேகம் பிரமிக்க வைக்கும்.


(மாங்கிதியில் இருந்து காலா நோக்கி கடினமான மலைப்பாதையில் பயணம்)

மாங்தியில்தான் நாம் குதிரையேற வேண்டும். அங்கே நம்மை வழியனுப்பி வைக்க இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினர் புன்சிரிப்புடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குளிரிலும், பனியிலும் அவர்கள் அங்கே பணியாற்றுவதால்தான் நாம் பாதுகாப்பாக இங்கே எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


(மாங்தியில் இந்திய திபெத் எல்லையோர காவல் படையினருடன்)

இந்த யாத்திரை முழுவதும் இந்த காவல் படையினர் நமக்குச் செய்யும் உதவிகள் ஏராளம். மாங்தியிலிருந்து, ஓம் பர்வத் மற்றும் ஆதிகயிலாயம் வரையுள்ள 98 கி.மீ தூரத்தை அடைய ஆளுக்கொரு குதிரையும், உதவியாளரும் வைத்துக் கொள்வது நல்லது. நாங்கள் சென்ற சமயம், குதிரைகளுக்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.45ம் உதவியாளருக்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.39ம் கட்டணமாக வசூலித்தார்கள். தற்போது அது பலமடங்காக அதிகரித்திருக்கக்கூடும். குதிரைக்காரர் நம்மைக் குதிரை மீது அமரவைத்து அழைத்துச் செல்வார். நடந்து செல்ல வேண்டிய இடங்களில் உதவியாளர், நம்மை பத்திரமாக அழைத்துச் செல்வதோடு, நம் கைப்பை, கம்பு முதலியவற்றையும் சுமந்து வருவார். ஒரு செட் மாற்று உடை, மழை கோட்டு போன்ற அத்தியாவசியமான பொருட்களைக் கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இடுப்புப் பட்டை இருந்தால் அதில் பணம், அடையாள அட்டை போன்றவற்றைப் பத்திரப்படுத்தி இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். மலையேறும் போது கண்டிப்பாகத் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தாகமிருக்கிறதோ இல்லையோ, அவ்வப்போது கண்டிப்பாக நீரருந்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள் வழியில் நாம் செல்லும் பாதையிலேயே வழியெங்கும் சிறிதும் பெரிதுமான அருவிகள் தென்படும். சுத்தமான தண்ணீர் கிடைக்கும். பாட்டில் நீர் தீர்ந்துவிட்டால் பிடித்துக் கொள்ளலாம்.

மாங்தியில் குதிரையேறியபின் காலா என்ற இடம் நோக்கி நம் பயணம் ஆரம்பிக்கிறது. இடைப்பட்ட தூரம் எட்டு கி.மீ. பல இடங்களில் குதிரை செங்குத்தாக ஏறுவது போல இருக்கும். குதிரையில் அமரும்போது ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் சௌகரியமாகச் செல்லலாம். அதாவது குதிரை ஏற்றத்தில் செல்லும்போது நாம் முன்புறமாக அதன் மீது சாய்ந்து கொள்ள வேண்டும். இறக்கத்தில் செல்லும்போது நாம் நம் உடலைப் பின்புறமாகக் கொண்டு சென்று ஒருகையால் அதன் வளையத்தைப் பற்றிக் கொண்டு ஒரு கையைப் பின்னால் கொண்டு சென்று நாம் அமர்ந்திருக்கும் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் ஏற்ற இறக்கங்களில் முன்பாரமும் பின்பாரமும் சமமாவதால், குதிரைக்கும் சங்கடத்தை அளிக்காது. ஏனெனில் மிகக் கடினமான பயணம் இது. குதிரைக்கே கூட பல இடங்களில் மூச்சிரைத்து மேற்கொண்டு நம்மைச் சுமக்க இயலாமல் சண்டித்தனம் செய்யும்.


(காலாபாணி)

மாங்தியிலிருந்து காலா பயணம் இனியது. நடுவில் தேநீர்க் கடைகள் தென்படுகின்றன. இமயத்தில் தேநீர் அருந்தும் சுகம் பின்னர் கிடைக்குமா? எனவே குதிரையிலிருந்து இறங்கி ஆற அமர தேநீரைச் சுவைத்துப் பருகிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்து, பிற்பகலில் காலாவை அடைந்தோம். அன்றிரவு அங்குதான் தங்க வேண்டும். தங்குமிடத்திலிருந்து சுற்றிலுமிருந்த மலைகளைக் காண்பது திகட்டாத விஷயம்.

காலாவிலிருந்து புத்தி என்ற இடம் வரை செல்லும் இரண்டாம் நாள் பயணம்தான் இந்த யாத்திரையில் மிகவும் சவாலானது. மிக நீண்டது. சுமார் 21 கி.மீ தூரம் கொண்டது. இந்த இரண்டாம் நாளில் இந்த பயணம் துவங்கும் போது குதிரைகளின் மீது 7000 அடி உயரத்தில் மலைவிளிம்பில் பயணிக்கும் நம்மை ஒருசில கி.மீ தூரம் சென்றதும் ஓரிடத்தில் குதிரைகளில் இறக்கி விட்டு விடுவார்கள். அங்கிருந்து சுமார் 4440 அடிகள் நாம் கீழ்நோக்கி இறங்கி நடக்க வேண்டும். இறக்கங்களில் குதிரைமீது பயணிக்க இயலாது. கடினமான இறங்குமுக பயணத்தின் முடிவில் மலையிலிருந்து இறங்கி காளி நதியின் கரையோரத்திற்கு நதியைத் தொடுவது போல வந்திருப்போம். இந்த இரண்டாம் நாள் பயணம் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். கடுமையானது மட்டுமல்ல, இனிமையானதும் கூட. நாம் செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமான அருவிகள் நம்மை வரவேற்கும். மேகக் கூட்டங்கள் நம்மை உரசிச் செல்லும். உருவமே தெரியாத அளவுக்குப் பனிமூட்டங்கள் இருக்கும்.

புத்தி செல்லும் பயணப் பாதையில்தான் லகன்பூரை அடுத்து மால்பா என்ற இடத்தைக் கடப்போம். இந்த மால்பா என்ற பெயரைக் கேட்டால் இப்போதும் எல்லோருக்கும் அடிவயிறு கலங்கும். 1998ம் ஆண்டு கயிலாயம் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பி வரும் வழியில் இங்கு தங்கியிருந்த யாத்ரீகர்கள், உதவியாளர்கள், குதிரைகள் உட்பட சுமார் இருநூறு பேர் மற்றும் கிராமவாசிகள் எனப் பலநூறு உயிர்கள் இங்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானார்கள். ஒரு கிராமமே புதையுண்டு போனதாகக் கூறப்படுகிறது. பாதிபேரின் உடல்களைக்கூட வெளியில் எடுக்க இயலவில்லையாம். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரில் பிரபல நாட்டிய மேதை புரோதிமா பேடியும் ஒருவர் என்பது வேதனையான விஷயம். இந்த இடத்தில் குதிரைக்காரர்கள், உதவியாளர்கள் அனைவரும் சிலநிமிடம் நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தி பிரார்த்திக்க, நாங்களும் அவர்களோடு அங்கு சிலநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினோம். அந்த நிலச்சரிவின் சுவடு மாறாமல் அப்படியே இருக்கிறது அங்கு. இறந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நம்மை அதிகநேரம் இருக்க விடுவதில்லை குதிரைக்காரர்கள். இது நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான இடம் என்பதால் மிகுந்த பாதுகாப்பாக நம்மை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

நாம் பயணிக்கும் பாதை மிகக் குறுகலானது. பாறைக்கற்கள் நிறைந்தது. நீர்வீழ்ச்சிகளில் நனைந்தபடிதான் நடந்து செல்ல வேண்டியிருக்கும். மலை பல இடங்களில் குடையப்பட்டு நமக்குக் குடை பிடித்தாற்போல இருக்கிறது. அந்தக் குடையின் மேற்புறமாக அருவி வழிந்து கொட்ட, நீர்த்திவலைகள் நம் மீது தெறிக்க நடுவில் நடந்து செல்வோம். காளி நதியின் ஆக்ரோஷத்தை வெகு அருகில் காணமுடியும். பழுப்பு நிற காளி நதியோடு வெள்ளை நிறத்தில் உள்ள டிங்கர் நதி சங்கமிக்கும் அழகையும் நடுவே ஓரிடத்தில் காணமுடியும்.


(குடை பிடிக்கும் மலையும் அதன் மீதிருந்து கொட்டும் அருவியும்)

ஒருவழியாக மாலை மயங்கும் நேரத்தில் புத்தி முகாமை அடையும் நம்மை அன்போடு சூடான தேநீர் கொடுத்து வரவேற்கிறார்கள் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினர். நமக்கான உணவும் அங்கே சூடாக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் நடந்து வந்த களைப்பை மறந்து எல்லோரும் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். இரவு உணவுக்குப் பின் உடல்வலி தெரியாதிருக்க மாத்திரைகள் உட்கொண்டு ஜாலியாகச் சிரித்து பேசியபடி, அடுத்தநாள் மிக மிகக் கடினமான ஒரு மலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதறியாமல் தூங்கிப்போனோம்.

*

புத்தி முகாமிலிருந்து மறுநாள் விடியல் நேரத்திலேயே தேநீர் அருந்திவிட்டுக் கிளம்பினோம். குதிரையில் அமர்ந்தாயிற்று. சகதிக் குளமாக இருந்த பாதையில் ஒரு கி.மீ தூரம் சென்றபிறகு குதிரைக்காரர் ஹிந்தியில் ஏதோ சொன்னார். ஹிந்தி மாலும் நஹி என்றேன். சிரித்தவர் என்னருகில் வந்து என் முதுகை முன்புறமாகத் தள்ளி என்னை முன்புறமாகச் சாய்த்துவிட்டுக் குதிரையை நடத்தினார். எனக்குப் புரியவில்லை. நானும் முன்புறமாக சாய்ந்து அமர்ந்திருந்தேன். அடுத்த பத்தாம் நிமிடம் அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்குக் காரணம் புரிந்தது. நாங்கள் சென்ற பாதை வெகு செங்குத்தாக மேலேறியது. பார்க்கவே திகைப்பாக இருந்தது. சிறிதும் பெரிதுமான பாறைக்கற்கள் ஒழுங்கற்ற உயரங்களில் படிக்கட்டு அமைத்தாற் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குதிரை அதில் ஏற ஆரம்பித்ததும் பயத்தில் சற்றே என் அடிவயிறு குழைந்தது. பின்புறமாகக் கீழே விழுந்து விடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு குதிரையின் முன்புறம் மேல்நோக்கியும் பின்புறம் சரிந்துமிருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட ஐந்து கி.மீ. தூரம் இந்த செங்குத்துப் பயணம் தொடர்ந்தது. குதிரைக்கே நக்கு தள்ளும் மலையேற்றம். குதிரை மூச்சிரைத்தபடி ஆங்காங்கே மேற்கொண்டு ஏராமால் சண்டித்தனம் செய்ய, குதிரைக்காரர்கள் வெகு லாகவமாக அதன் பின்புறத்தைப் பிடித்துத் தள்ளி மேலேற்றினார்கள். கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம் இந்த மலையேற்றம் தொடர்ந்தது. நாங்கள் குதிரையின் முன்புறம் பல்லி மாதிரி சரிந்து படுத்து ஒட்டிக் கொண்டிருந்தோம். இத மலையேற்றத்தில் யாரும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத நிலை. நாக்கு வறண்டு போயிற்று. எப்போது சமவெளியை அடையப்போகிறோம் என்று தோன்ற ஆரம்பித்தது. குதிரைக்காரர்கள் ஒரு வினாடி அசந்தாலும் யாரேனும் குப்புற விழக்கூடும். ஆனால் அவர்கள் மிக லாகவமாகக் குதிரைகளை மேலேற்றினார்கள். சமவெளி வந்ததும் எங்களைக் குதிரை மீதிருந்து இறக்கி விட்டார்கள். நாங்கள் அத்தனை பேரும் அவர்களோடு கைகுலுக்கி அவர்களைப் பாராட்டி நெகிழ்ந்தோம். நான் என் குதிரைக்காரர் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டேன். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட அவர் லேசாக என் கண் கலங்கியிருப்பதைப் பார்த்துக் குழந்தை மாதிரி சிரித்தார்.

ஒருவகையில் ஹிமாலயப் பயணம் என்பது வாழ்க்கைப் பயணத்தை ஒத்ததுதான். மலைக்க வைக்கும் ஏற்ற இறக்கங்களும், இதைக் கடந்து செல்வோமா என்று பயமுறுத்தும் சூழல்களும் நம் வாழ்விலும் எதிர்ப்படுகிறது. நம்மை பத்திரமாக அவற்றைக் கடக்கச் செய்வது கண்டிப்பாக நாம் வணங்கும் கடவுள் என்னும் குதிரைக்காரன்தான். நம் கர்மாதான் குதிரைகளாக இருந்து நம்மைச் சுமந்தபடி ஒவ்வொன்றாகக் கடந்து செல்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

மிகவும் அபாயகரமானதொரு ஏற்றத்தைக் கடந்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டு விட முடியாது. இன்னும் பயணம் இருக்கிறது. ஏற்ற இறக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் குதிரைக்காரர் இருக்க கவலை எதற்கு?

புத்தியிலிருந்து ஐந்து கிமீ. செங்குத்தான மலையேற்றத்தைக் கடந்து நாங்கள் வந்து சேர்ந்த இடம். சியாலேக் சமவெளி. நாங்கள் குதிரையிலிருந்து இறங்கிய இடத்திலிருந்து சற்று தூரம் நடந்தால் ஒரு செக்போஸ்ட் இருக்கிறது. எல்லையோரக் காவல் படையினர் அங்கே அமர்ந்து நம்மைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவேட்டில் எழுதிக் கொண்டு, நமது அடையாள அட்டைகளைச் சரிபார்த்த பிறகுதான் மேற்கொண்டு பயணிக்க அனுமதிக்கிறார்கள்.

சியாலேக் பகுதி மிக அழகான இடம். எல்லைகடந்த நேபாளத்தில் உள்ள பனி போர்த்திய அன்னபூர்ணா சிகரங்களின் முதல் தரிசனம் இங்குதான் நமக்குக் கிடைக்கிறது. இந்த இடத்திற்கு மலர்களின் சமவெளி என்றும் ஒரு பெயருண்டு. எங்கு நோக்கினும் பல்வேறு நிறங்களில் அழகிய மலர்கள் சிரிக்கின்றன.


(அன்னபூர்ணா மலைத்தொடர்)

எங்கள் குதிரைப்பயணம் தொடர்ந்தது.

(பயணம் தொடரும்)

கிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்கிரிஷ் கர்னாட் இறந்ததற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அரசு மரியாதையும் இல்லை. மிக முக்கியமான மனிதர்களோ அவர்கள் கொண்டுவரும் பூமாலைகளோ எதுவுமே கிடையாது. அவர் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொண்டாரோ நடத்திக் கொண்டாரோ அதே போலவே அவரது முடிவையும் அமைத்துக் கொண்டுவிட்டார். உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். தவறான காரணங்களுக்காகப் பிரபலமானவர். இவரது முரட்டுத்தனம் உலகறிந்தது. வார்த்தைகளில் நயம் என்பதே கிடையாது. முரண்பாடுகளின் மொத்த உருவம். ‘பொதுவாக இறந்தவர்களைப் பற்றி நல்ல விதமாகத்தான் எழுதுவார்கள் ஆனால் இது என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கக் கூடும் ஆனால் உண்மையைத்தானே எழுத முடியும்?

வாழ்ந்த காலங்களில் தன்னை ஒரு பொறுமையற்றவராக, கஞ்சத்தனம் நிறைந்தவராக, கணக்கு பார்ப்பவராகவே காண்பித்துக் கொண்டார். காண்பித்துக் கொண்டார் என்பதைவிட, தனது நடவடிக்கைகளையும் வாழ்க்கையையும் அப்படிக் கட்டமைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தத்துவப் பாடத்தை விட்டுவிட்டு, அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற காரணத்திற்காக கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டதைப் பற்றித் தனது சுயசரிதையில் விவரிக்கிறார். ‘கணக்குப் பாடத்தின் மேல் எனக்குப் பெரிய மோகம் எதுவும் இல்லை. மேல் நாட்டில் படிக்க வேண்டுமென்று தீர்மானமாக இருந்தேன். தந்தையிடம் பணம் இல்லை. ஸ்காலர்ஷிப் கிடைத்துவிட்டால் வெளிநாடு போய்விடலாம். அதற்காகவே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டேன். கணக்குப் பாடத்தில் முதல் வகுப்பு கிடைத்தது மட்டுமல்ல, கல்லூரியில் முதல் மாணவனாகவும் வந்தேன். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மக்டலேன் கல்லூரியில் ரோட்ஸ் உதவித்தொகை கிடைத்தது. அங்கு தத்துவம், அரசியல், பொருளாதாரம் படித்தார்.

திரைப்பட, நாடக உலகிற்கு கிரிஷ் கர்னாட்டின் பங்களிப்பு நன்கு அறியப்பட்டது. ஆனால் அவரது அறியாத முகம் ஒன்று இருக்கிறது. பிரித்தாளும் அரசியல், இந்து மதத்தையும் அதைச் சார்ந்தவர்களையும் விரோதிகளாக நினைப்பது ஆகியவற்றால் ஆன முகம் அது. பிரபல பத்திரிகையாளர் சந்தீப் பாலகிருஷ்ணா இவரைப் பற்றிக் கூறுகிறார்: ‘அரசியலில் அரைவேக்காடு, கலைநயம் மிக்க ஏமாற்றுக்காரர், நல்ல நடிகர், சுமாரான இயக்குநர், மோசமான நாடக ஆசிரியர் என்று.

தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரி சிந்தனைகளுக்குப் பலமான ஆதரவு கொடுத்தவர். இந்தியக் கலாசாரத்தை எதிர்த்தும், வெளிநாட்டுப் படையெடுப்புகளைக் கொண்டாடியும் எழுதியவர். டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் நாடகம் இப்படி எழுதப்பட்ட ஒரு நாடகம். தன்னைச் சார்ந்தவரையே கொன்று குவித்த இந்த அறிவாற்றலற்ற அரசனை நேருவுடன் ஒப்பிட்டு, துக்ளக் மற்றும் நேரு இருவரும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத அறிவாளிகள் என்றார். பாசிச சக்திகளாலும், பிற்போக்குப் பிராமணவாதிகளாலும் அவர்களுக்குரிய இடம் வரலாற்றில் மறுக்கப்பட்டது என்றார். இந்துக்களின் மீதான தனது பகைமையைக் காட்ட அடுத்தபடியாக ‘திப்புவின் கனவு என்றொரு நாடகம் எழுதி அதில் அவனைக் கொண்டாடினார். இந்துக்களின் கோயில்களை இடித்தவனும், இந்துக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தவனுமான திப்புவின் பிறந்தநாள் கர்நாடகாவில் கொண்டாடப்பட வேண்டும் என்றார். பெங்களூரு விமான நிலையத்திற்கு பெங்களூரை நிர்மாணித்த கெம்பே கௌடாவின் பெயரை நிராகரித்து, திப்புவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார். திப்பு நாட்டுப்பற்று மிக்கவன்; கெம்பே கௌடா இருந்திருந்தால் அவர் கூட திப்புவின் பெயரை ஒப்புக்கொண்டிருப்பார் என்றார்! இந்துக்களிடம் மட்டுமே மூட நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லி அவற்றை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றார். நாத்திகவாதம் மற்றும் சோஷலிசம் என்ற பெயரில் இந்துக்களின் பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் தூற்றினார்.

பக்கா சந்தர்ப்பவாதி இவர். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவிற்குப் பிறகு 2014ம் ஆண்டு பெங்களூரு இலக்கிய விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்த கர்னாட் அழைக்கப்பட்டார். அவரைப் புகழ்வதற்குப் பதிலாகத் தூற்ற ஆரம்பித்துவிட்டார். அனந்தமூர்த்தியின் மிகவும் பிரசித்தி பெற்ற நாவல் ‘சம்ஸ்காரா கீழ்த்தரமான, அடிப்படையே இல்லாத மேலோட்டமான படைப்பு என்று கூறினார். அவரது கருத்துக்களை சுதந்திரமாகக் கூற அவருக்கு உரிமை இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். அனந்தமூர்த்தி இருக்கும்வரை வாயைத் திறக்காதவர் அவரது மறைவிற்குப் பிறகு இதுபோலப் பேசினார் என்பதுதான் அதிலுள்ள முக்கியமான விஷயம். அந்தக் கதையின் கதாநாயகனாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைத்து அதன் மூலம் இவரது திரையுலக வாழ்க்கை மேம்பட்டது என்பது கூடுதல் தகவல்.

இப்படிப்பட்டவர் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தது இயற்கைதானே? சங்க பரிவாரும் இவரது எதிரிகளே. ஆனால் இதன் காரணமாக நேரு மையத்தின் இயக்குநர் பதவியை வேண்டாமென்று சொல்லவில்லை. வாஜ்பாய் அரசின் கீழ் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் இந்திய கலாசார அமைச்சர் பதவியையும் வகித்தார். 2014ம் ஆண்டு நரேந்திர மோதியை ஆபத்தான மனிதர் என்றார். ஆனால் 2014 ஜூலை மாதத்தில் நரேந்திர மோதி நல்ல நிர்வாகத்தை அளிக்கிறார் என்றார். பாசிச அரசிற்கு எதிராக இருந்தாலும் சிலரைப்போல விருதுகளைத் திருப்பி தரவில்லை.

இந்துக்களின் புராணங்களையும், இந்திய வரலாறு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும் உருக்குலைத்ததன் மூலம் நாட்டிற்கு அவமானம் தேடித் தந்தவர். அவர் பொதுவிடங்களில் நடந்து கொண்டதெல்லாம் அவரது சொந்தக் காரணங்களுக்காகவே ஒழிய சமூகக் காரணங்களுக்காக இல்லை. செக்யூலரிசம் என்ற பட்டியலின் கீழ் இந்துக்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் எதிராகவே செயல்பட்டார். ‘அதுதான் போய்விட்டாரே, இன்னும் என்ன இவரைப் பற்றிப் பேசுவது? என்று சமூக வலைத்தளங்களில் கேட்டிருந்தனர். நாமும் இத்துடன் முடித்துக் கொள்வோம்.