Posted on Leave a comment

கிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்


கிரிஷ் கர்னாட் இறந்ததற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அரசு மரியாதையும்
இல்லை. மிக முக்கியமான மனிதர்களோ அவர்கள் கொண்டுவரும் பூமாலைகளோ எதுவுமே கிடையாது.
அவர் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொண்டாரோ நடத்திக் கொண்டாரோ அதே போலவே அவரது முடிவையும்
அமைத்துக் கொண்டுவிட்டார். உணர்ச்சிகளைத் தூண்டும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.
தவறான காரணங்களுக்காகப் பிரபலமானவர். இவரது முரட்டுத்தனம் உலகறிந்தது. வார்த்தைகளில்
நயம் என்பதே கிடையாது. முரண்பாடுகளின் மொத்த உருவம். ‘பொதுவாக இறந்தவர்களைப் பற்றி
நல்ல விதமாகத்தான் எழுதுவார்கள் ஆனால் இது என்ன இப்படிச் சொல்கிறீர்கள்
என்று நீங்கள்
கேட்கக் கூடும் ஆனால் உண்மையைத்தானே எழுத முடியும்?
வாழ்ந்த காலங்களில் தன்னை ஒரு பொறுமையற்றவராக, கஞ்சத்தனம் நிறைந்தவராக, கணக்கு
பார்ப்பவராகவே காண்பித்துக் கொண்டார். காண்பித்துக் கொண்டார் என்பதைவிட, தனது நடவடிக்கைகளையும்
வாழ்க்கையையும் அப்படிக் கட்டமைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தத்துவப் பாடத்தை
விட்டுவிட்டு, அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற காரணத்திற்காக கணக்குப் பாடத்தை
எடுத்துக் கொண்டதைப் பற்றித் தனது சுயசரிதையில் விவரிக்கிறார். ‘கணக்குப் பாடத்தின்
மேல் எனக்குப் பெரிய மோகம் எதுவும் இல்லை. மேல் நாட்டில் படிக்க வேண்டுமென்று தீர்மானமாக
இருந்தேன். தந்தையிடம் பணம் இல்லை. ஸ்காலர்ஷிப் கிடைத்துவிட்டால் வெளிநாடு போய்விடலாம்.
அதற்காகவே கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டேன். கணக்குப் பாடத்தில் முதல் வகுப்பு
கிடைத்தது மட்டுமல்ல, கல்லூரியில் முதல் மாணவனாகவும் வந்தேன்
. இங்கிலாந்தில்
உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மக்டலேன் கல்லூரியில் ரோட்ஸ் உதவித்தொகை கிடைத்தது. அங்கு
தத்துவம், அரசியல், பொருளாதாரம் படித்தார்.
திரைப்பட, நாடக உலகிற்கு கிரிஷ் கர்னாட்டின் பங்களிப்பு நன்கு அறியப்பட்டது.
ஆனால் அவரது அறியாத முகம் ஒன்று இருக்கிறது. பிரித்தாளும் அரசியல், இந்து மதத்தையும்
அதைச் சார்ந்தவர்களையும் விரோதிகளாக நினைப்பது ஆகியவற்றால் ஆன முகம் அது. பிரபல பத்திரிகையாளர்
சந்தீப் பாலகிருஷ்ணா இவரைப் பற்றிக் கூறுகிறார்: ‘அரசியலில் அரைவேக்காடு, கலைநயம் மிக்க
ஏமாற்றுக்காரர், நல்ல நடிகர், சுமாரான இயக்குநர், மோசமான நாடக ஆசிரியர்
என்று.
தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரி சிந்தனைகளுக்குப் பலமான ஆதரவு
கொடுத்தவர். இந்தியக் கலாசாரத்தை எதிர்த்தும், வெளிநாட்டுப் படையெடுப்புகளைக் கொண்டாடியும்
எழுதியவர். டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் நாடகம் இப்படி எழுதப்பட்ட ஒரு நாடகம்.
தன்னைச் சார்ந்தவரையே கொன்று குவித்த இந்த அறிவாற்றலற்ற அரசனை நேருவுடன் ஒப்பிட்டு,
துக்ளக் மற்றும் நேரு இருவரும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத அறிவாளிகள் என்றார்.
பாசிச சக்திகளாலும், பிற்போக்குப் பிராமணவாதிகளாலும் அவர்களுக்குரிய இடம் வரலாற்றில்
மறுக்கப்பட்டது என்றார். இந்துக்களின் மீதான தனது பகைமையைக் காட்ட அடுத்தபடியாக ‘திப்புவின்
கனவு
என்றொரு நாடகம் எழுதி அதில் அவனைக் கொண்டாடினார். இந்துக்களின் கோயில்களை இடித்தவனும்,
இந்துக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தவனுமான திப்புவின் பிறந்தநாள் கர்நாடகாவில்
கொண்டாடப்பட வேண்டும் என்றார். பெங்களூரு விமான நிலையத்திற்கு பெங்களூரை நிர்மாணித்த
கெம்பே கௌடாவின் பெயரை நிராகரித்து, திப்புவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார். திப்பு
நாட்டுப்பற்று மிக்கவன்; கெம்பே கௌடா இருந்திருந்தால் அவர் கூட திப்புவின் பெயரை ஒப்புக்கொண்டிருப்பார்
என்றார்! இந்துக்களிடம் மட்டுமே மூட நம்பிக்கைகள் இருப்பதாகச் சொல்லி அவற்றை ஒழிக்க
சட்டம் இயற்ற வேண்டும் என்றார். நாத்திகவாதம் மற்றும் சோஷலிசம் என்ற பெயரில் இந்துக்களின்
பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் தூற்றினார்.
பக்கா சந்தர்ப்பவாதி இவர். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவிற்குப் பிறகு
2014ம் ஆண்டு பெங்களூரு இலக்கிய விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்த கர்னாட் அழைக்கப்பட்டார்.
அவரைப் புகழ்வதற்குப் பதிலாகத் தூற்ற ஆரம்பித்துவிட்டார். அனந்தமூர்த்தியின் மிகவும்
பிரசித்தி பெற்ற நாவல் ‘சம்ஸ்காரா
கீழ்த்தரமான, அடிப்படையே இல்லாத மேலோட்டமான படைப்பு என்று
கூறினார். அவரது கருத்துக்களை சுதந்திரமாகக் கூற அவருக்கு உரிமை இருக்கிறதே என்று நீங்கள்
கேட்கலாம். அனந்தமூர்த்தி இருக்கும்வரை வாயைத் திறக்காதவர் அவரது மறைவிற்குப் பிறகு
இதுபோலப் பேசினார் என்பதுதான் அதிலுள்ள முக்கியமான விஷயம். அந்தக் கதையின் கதாநாயகனாக
நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைத்து அதன் மூலம் இவரது திரையுலக வாழ்க்கை மேம்பட்டது
என்பது கூடுதல் தகவல்.
இப்படிப்பட்டவர் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்தது இயற்கைதானே? சங்க பரிவாரும்
இவரது எதிரிகளே. ஆனால் இதன் காரணமாக நேரு மையத்தின் இயக்குநர் பதவியை வேண்டாமென்று
சொல்லவில்லை. வாஜ்பாய் அரசின் கீழ் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் இந்திய கலாசார
அமைச்சர் பதவியையும் வகித்தார். 2014ம் ஆண்டு நரேந்திர மோதியை ஆபத்தான மனிதர் என்றார்.
ஆனால் 2014 ஜூலை மாதத்தில் நரேந்திர மோதி நல்ல நிர்வாகத்தை அளிக்கிறார் என்றார். பாசிச
அரசிற்கு எதிராக இருந்தாலும் சிலரைப்போல விருதுகளைத் திருப்பி தரவில்லை.
இந்துக்களின் புராணங்களையும், இந்திய வரலாறு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும்
உருக்குலைத்ததன் மூலம் நாட்டிற்கு அவமானம் தேடித் தந்தவர். அவர் பொதுவிடங்களில் நடந்து
கொண்டதெல்லாம் அவரது சொந்தக் காரணங்களுக்காகவே ஒழிய சமூகக் காரணங்களுக்காக இல்லை. செக்யூலரிசம்
என்ற பட்டியலின் கீழ் இந்துக்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும்
எதிராகவே செயல்பட்டார். ‘அதுதான் போய்விட்டாரே, இன்னும் என்ன இவரைப் பற்றிப் பேசுவது?
என்று சமூக வலைத்தளங்களில்
கேட்டிருந்தனர். நாமும் இத்துடன் முடித்துக் கொள்வோம்.

Leave a Reply