Thursday, 10 October 2019

வலம் அக்டோபர் 2019 இதழ் அறிவிப்பு (4ம் ஆண்டுச் சிறப்பிதழ்)கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் - சில குறிப்புகள் | ஓகை நடராஜன்

திருப்பங்களுடன் கூடிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு | லக்ஷ்மணப் பெருமாள்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ராஜீவுக்கு ஜக்மோகனின் கடிதம் – தமிழில்: ஹரன் பிரசன்னா

இந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் - அகரமுதல்வன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 23 | சுப்பு

மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 6) | தமிழில்: ஜனனி ரமேஷ்

சந்திரயான் - கோல் முதல் கோள் வரை | சுஜாதா தேசிகன்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை – லாலா லஜ்பத் ராய் (பகுதி 6) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

கல உமி (சிறுகதை) | சத்யானந்தன்

அந்தமானில் இருந்து கடிதங்கள் - வீர் சாவர்க்கர் (கடிதம் 5) | தமிழில்: VV பாலா

கிண்டிலில் வாசிக்க இங்கே செல்லவும்.

Wednesday, 9 October 2019

வலம் ஆகஸ்ட் 2019 இதழ் - முழுமையான படைப்புகள்

வலம் ஆகஸ்ட் 2019 படைப்புகள்
இந்துத்துவ முன்னோடி கஸலு லட்சுமிநரசு செட்டி | அரவிந்தன் நீலகண்டன்

பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’: அறியப்பட்ட ஆளுமைகளின்  அறியப்படா முகங்கள் | செ.ஜகந்நாதன்

ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் | அரவக்கோன்

சில பயணங்கள் சில பதிவுகள் (பகுதி - 21) | சுப்பு

இமயத்தின் விளிம்பில் – நிறைவுப் பகுதி (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலா

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்

மகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 4) – தமிழில்: ஜனனி ரமேஷ்
பகுதி 4

மூன்றாவதாக, அதே காரணத்துக்காக பேட்ஜின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அவரே பேசியதாவது: ‘அடுத்த 5 அல்லது 10 நிமிடங்களில் ஆப்தேவும், கோட்சேவும் கீழே இறங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து சாவர்க்கரும் உடனே இறங்கினார். கோட்சே மற்றும் ஆப்தேவிடம் சாவர்கர் கூறியதாவது: ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’. இந்த வாக்கியத்தை நான் சொன்னேன் என்றே வைத்துக் கொண்டாலும், அது நிஜாம் ஒத்துழையாமை அல்லது அக்ரணி தினசரிக்கு நிதி திரட்டுதல் அல்லது இந்து ராஷ்ட்ர பிரகாஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்றல் அல்லது வேறெந்த சட்டப்பூர்வ விஷயத்துக்கான பொருள்களாகவும், பணிகளாகவும் இருக்கலாம். மாடியில் என்னுடன் ஆப்தேவும் கோட்சேவும் என்ன பேசினார்கள் என்று பேட்ஜுக்குத் தெரியாத நிலையில் ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என்று எது குறித்து நான் சொன்னேன் என்று அவரால் கட்டாயம் உறுதிப்படுத்த முடியாது.


நான்காவதாக என் வீட்டை விட்டு வெளியேறி இன்னொருவர் வீட்டுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது நான் ஆப்தேவிடம் சொன்னதாக ஆப்தேவே பேட்ஜிடம் கூறிய ‘காந்திஜியின் நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டது’ என்பது வெறும் செவி வழிச் செய்தி மற்றும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாகும். காரணம் அது நான் ஆப்தேவிடம் சொன்னதாகவும், அதை அவர் பேட்ஜிடம் சொன்னதாகவும் கூறப்படும் வரியாகும். இந்த வாக்கியத்தை நான் ஆப்தேவிடம் சொன்னதை பேட்ஜ் நேரடியாகக் கேட்டிருக்க முடியாது. நான் ஆப்தேவிடம் கூறியதாக பேட்ஜிடம் ஆப்தே பொய் கூட சொல்லியிருக்கலாம். நான் ஆப்தேவிடம் சொன்னதாகக் கூறப்படுவதை நிரூபிக்கவோ உறுதிப்படுத்தவோ எந்த சாட்சியும் ஆதாரமும் இல்லை.

எனவே, மக்களிடம் எனக்கிருக்கும் தார்மிகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களது குற்றவியல் கூட்டுச் சதியை வலுப்படுத்த, பேட்ஜ் பொய் சொன்னாலும் சரி அல்லது கோட்சேவும் ஆப்தேவும் பொய் சொன்னாலும் சரி, எப்படியிருப்பினும், அந்தக் கூட்டுச் சதிக்கான குற்ற அறிவு அல்லது பங்கேற்புடன் என்னைத் தொடர்புபடுத்தும் நேரடி மற்றும் பொருள் சான்று இல்லாத நிலையில் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.

ஐந்தாவதாக, எல்லாவற்றுக்கும் மேலாக, கோட்சேவும் ஆப்தேவும் இந்த வாக்கியங்களை பேட்ஜுடன் பேசவே இல்லை என ஆக்கப்பூர்வமாக மறுத்துள்ளனர். 1948 ஜனவரி 17 அன்று நடைபெற்றதாக பேட்ஜ் கூறும் நிகழ்வை முழுமையாக ஆப்தேவும் கோட்சேவும் மறுத்துள்ளனர். மேலும் அன்றைய தினம் பேட்ஜுடனோ மற்றவர்களுடனோ, சாவர்க்கர் சதனுக்கு வண்டியில் பயணிக்கவும் இல்லை, சாவர்க்கரைச் சந்திக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆப்தே மற்றும் கோட்சே கூறியிருப்பது பேட்ஜ் கூறிய முழுக் கதைக்கு முற்றிலும் மாறாக இருப்பதால் அது பேட்ஜ் சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையையே தகர்த்துவிட்டது.

ஆறாவதாக, சாவர்க்கர் சதனுக்கு வருகை தந்தபோது ஆப்தே மற்றும் கோட்சேவுடன் இணைந்து ஓட்டுநர் கோஷியானுக்குச் சொந்தமான டாக்ஸியை வாடகைக்கு எடுத்ததாக பேட்ஜ் கூறியுள்ளார். இந்த டாக்ஸி ஓட்டுநர் கோஷியான் (பி.டபிள்யூ.80) தனது வாக்குமூலத்தில் (பக்கம் 391 & 392) ‘சிவாஜி பூங்காவில் நான் டாக்ஸியுடன் காத்திருந்தேன். நான்கு பயணிகள் கீழே இறங்கினர். நான் பார்த்தவரை எனக்கு வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு வரை சென்றனர். ஐந்து நிமிடங்களில் அவர்கள் மீண்டும் டாக்ஸி இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர்’ எனப் பதிவு செய்துள்ளார். பேட்ஜின் கதையை உறுதிப்படுத்த இப்போது இந்த டாக்ஸி ஓட்டநர் அழைக்கப்பட்டிருந்தால், இந்நிகழ்வுடன் என்னைத் தொடர்புபடுத்தும் முயற்சியில் அவர் தோல்வி அடைந்துவிட்டார் என்றே கருத வேண்டும். டாக்ஸி ஓட்டநருக்கு என் வீட்டைச் சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை; அந்த வீட்டின் பெயர் கூடத் தெரியவில்லை; டாக்ஸியில் வந்த பயணிகள் வீட்டிலுள்ள யாரைச் சந்திக்க விரும்பினார்கள் என்பது குறித்தும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை; அது இரண்டாவது வீடுதான் என்பதை உறுதியாகக் கூறாமல், மேம்போக்காகத், தெளிவின்றி ‘தொலைவில் நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது எனக்குப் வலப்பக்கமுள்ள சாலையின் மூலையிலுள்ள இரண்டாவது வீடு’ என்றுதான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு வரை சென்றதை மட்டுமே பார்த்ததாகக் கூறினாரே தவிர அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்தேன் என்று சொல்லவில்லை.

எனவே அவரது சாட்சி, பேட்ஜ் எனது வீட்டுக்கு வந்ததையும், ஏனைய விவரங்கள் குறித்த அவரது குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தவறிவிட்டது. பேட்ஜின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு மாறாகக் கோஷியானின் சாட்சி அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது. அவர்கள் ஐந்தே நிமிடங்களில் டாக்ஸிக்குத் திரும்பி விட்டதாகக் கோஷியான் கூறியுள்ளார் (பக்கம் 392). மேலும் குறுக்கு விசாரணையின்போது டாக்ஸி ஓட்டுநராக நேரத்தின் மீது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே அவரது நேரத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். பேட்ஜின் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் 20-25 நிமிடங்களுக்குள் அவர்களால் டாக்சிக்குத் திரும்பி இருக்கவே முடியாது.

கோஷியான் தொடர்கையில் ‘டாக்சியுடன் வீடு வரை வந்து நின்றுவிட்டதாகவும் அங்கிகிருந்து அறைக்குள் செல்வதற்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாகவது ஆகும்’ என்றார். இதனைத் தொடர்ந்து பேட்ஜ் கூறுகையில் ‘கோட்சேவும், ஆப்தேவும், மாடிக்குச் சென்று ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு கீழே இறங்கி டாக்சிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார். எனவே இருபது – இருபத்தைந்து நிமிடங்களுக்கு முன்பாக அவர்களால் டாக்ஸிக்குத் திரும்பி இருக்கவே முடியாது. டாக்சி ஓட்டுநரின் சாட்சி மற்றும் பேட்ஜ் கதை ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு பின்னவர் (பேட்ஜ்) சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே இரண்டையுமே எனக்கு எதிரான சாட்சியாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதே நலம்.

பேட்ஜின் குற்றச்சாட்டை சங்கர் மறுப்பதைப் பார்க்கவும் (இடதுபக்கம் 24-A குறிப்பைப் பார்க்கவும்).

ஏழாவதாக, இந்த நிகழ்வு தொடர்பான பேட்ஜின் குற்றச்சாட்டைச் சங்கரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாக்சியிலிருந்து சங்கரும் இறங்கி அவர்களுடன் (பேட்ஜ், ஆப்தே, கோட்சே) சாவர்க்கர் சதனுக்குச் சென்றது மற்றும் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது வெளியே காத்திருக்கச் சொன்னது ஆகியவை குறித்த பேட்ஜின் குற்றச்சாட்டு தொடர்பாகச் சங்கரிடம் நீதிமன்றம் கேள்வி கேட்டபோது ‘சிவாஜி பூங்காவுக்கு அவர்களுடன் டாக்சியில் சென்றேன். அங்கே டாக்சி நின்றது. பேட்ஜ், ஆப்தே மற்றும் கோட்சே மூவரும் கீழே இறங்கி எங்கோ சென்றனர். நான் அவர்களுடன் செல்லாமல் டாக்சியிலேயே தங்கிவிட்டேன். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் சாவர்க்கர் சதன் என்ற பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை’ என்று பதிலளித்துள்ளார்.

“காந்திஜியின் நூறாண்டுகள் எண்ணப்பட்ட வருகின்றன....” என்று ஆப்தேவிடம் தத்யாராவ் சாவர்க்கர் சொன்னதாக, பேட்ஜிடம் ஆப்தே கூறியது உண்மையா என்று நீதிமன்றம் கேட்ட இரண்டாவது கேள்விக்கு சங்கர் அளித்த பதில் பின்வருமாறு: ‘அவர்களுக்குள் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். நான் டாக்சியின் முன் இருக்கையில் ஓட்டுநருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்ததாலும், மராத்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரியாததாலும், அவர்கள் பேசியது காதுகளில் விழவும் இல்லை, புரியவும் இல்லை.’

எனவே ஆப்தே, நாதுராம் மற்றும் சங்கர் ஆகியோருடன் கோஷியான் ஓட்டுநருக்குச் சொந்தமான டாக்சியில் 1948 ஜனவரி 17ம் தேதி சாவ்ர்க்கர் சதனுக்குச் சென்றதாகப் பேட்ஜ் கூறும் குற்றச்சாட்டை எவருமே உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், அனைவருமே முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் - தி ஹிந்து

(13) பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் (பக்கம் 220) ஆப்தேவுடனும், கோட்சேவுடனும் சேர்ந்து காந்திஜியையும் மற்றவர்களையும் கொல்வதற்கு தில்லி செல்ல முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம் கோட்சேவும், ஆப்தேவும், பல முறை தனக்குப் பண உதவி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்; மேலும் அவர்களுடன் எப்போதும் இணைந்து செயல்படுவதாகவும், அவர்கள் சொன்னதுபோல் செய்ததாவும் பதிவு செய்துள்ளார்; தத்யாராவ் சாவர்க்கர் இச்செயலைச் செய்து முடிக்கத் தனக்கு ஆணையிட்டதாக ஆப்தே கூறியதாக அவர் புரிந்து கொண்டதால், அவரது உத்தரவைச் செய்து முடிக்க வேண்டியது தனது கடமை என்று பேட்ஜ் நினைத்திருக்கலாம்.

இது குறித்து நான் சமர்ப்பிப்பதாவது:

முதலாவதாக, இதுபோன்ற குற்றப் பணியைச் செய்யுமாறு நான் ஆப்தேவிடம் சொன்னதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமும் இல்லை. இந்தப் பொய்யை ஆப்தே கண்டுபிடித்திருக்கலாம் அல்லது பேட்ஜ் பொய் சொல்லியிருக்கலாம். எப்படி இருப்பினும், நான் மேலும் பதிவு செய்துள்ள காரணங்களின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டு மூலம் பேட்ஜ் என்னைக் குற்றவாளியாக்க முடியாது.

இரண்டாவதாக, பேட்ஜ் சொல்வதுபோல் 1948 ஜனவரி 15 சதித் திட்டத்தில் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே முடிவெடுத்திருந்தால், பிறகு பேட்ஜைப் போன்ற ஒருவர், அவரது சொந்த சாட்சியத்தின்படி, அவரது உயிருக்கோ, தனிப்பட்ட பாதுகாப்புக்கோ, பொறுப்பற்றவராகவோ மூடனாகவோ இருப்பவராகத் தோன்றவில்லை. சாதாரண மனிதனுக்குள்ள இயல்பான குணத்தின்படி ஆப்தேவுக்கு இதுபோன்ற செயலைச் செய்ய நான் ஆணையிட்டேனா என்று அப்போதே என்னிடம் பேட்ஜ் நேரடியாகவே கேட்டிருக்கலாம். மேலும் பேட்ஜ், அவரே கூறியதுபோல், ஆப்தேவுடனும் கோட்சேவுடனும் சாவர்க்கர் சதனுக்கு இரு நாள்கள் கழித்து, அதாவது 1948 ஜனவரி 17 அன்று சென்றதாகவும், பேட்ஜ் காதுகளுக்குக் கேட்குமாறு ‘வெற்றிகரமாகத் திரும்பி வாருங்கள்’ என்று நான் அவர்களிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். பேட்ஜ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இதுபோன்ற பயங்கரமான பணியைச் செய்து முடிக்க நான் உத்தரவிட்டேனா என்று ஆப்தே மற்றும் கோட்சே முன்னிலையில் அப்போதே உடனுக்குடன் பேட்ஜ் என்னிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கலாம். ஆனால் பேட்ஜ் இதுபோல் எதையும் செய்யவில்லை.

மூன்றாவதாக, பேட்ஜ் உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒரு பயங்கரமான பணியைச் செய்து முடிக்கத் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்லுமாறு, நான் ஆணையிட்டதாகச் சொல்லப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு மீது அவருக்கு உண்மையிலேயே ஏதேனும் ஆச்சரியமான மற்றும் பொறுப்பற்ற மரியாதை இருக்குமானால், காந்திஜியைத் தாக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல், சம்பவ இடத்திலிருந்து முன் கூட்டியே ஓடியதும், தலைமறைவாக இருந்ததும், அவரே ஒப்புக் கொண்டதுபோல், ‘தன்னைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றி மட்டுமே ஏன் எண்ணினார்?’

நான்காவதாக, பேட்ஜ் ஒருவேளை தில்லிக்குச் சென்றிருந்தால், அது பண விஷயமாக இருந்திருக்கலாம் அல்லது தில்லி மற்றும் பஞ்சாப்பிலுள்ள அகதிகளிடம் அவர் விற்பனை செய்து கொண்டிருந்த ‘பொருளுக்கு’ மிகப் பெரிய தொகையை எதிர்பார்த்திருக்கலாம் அல்லது ‘ஆணை’ என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தவிர வேறெந்தக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.

(14) பேட்ஜின் உள்நோக்கமும் நடத்தையும்: மேலே காணப்படும் பேட்ஜ் சாட்சியத்தை விரிவாக ஆய்வு செய்தத்தில், என்னைப் பொருத்தவரை, பெருமளவு ஜோடிக்கப்பட்டவை என்பதுடன், எனக்கு எதிராக எந்த மதிப்புமிக்க ஆதாரமும் இல்லை என்பதும் நிரூபணம். எனக்கு எதிராகத் தவறான சாட்சி அளிக்க வேண்டும் என்னும் பேட்ஜின் உள்நோக்கமும் தெளிவாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் எப்படியேனும் என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று காவல்துறை தீவிரமாக முனைவதை பேட்ஜ் தெரிந்துகொண்டார். பொது வாழ்க்கையில் மதிப்போடும் கௌரவத்தோடும் வாழும் புகழ்பெற்ற மனிதரை இதுபோன்ற வழக்கில் சிக்க வைத்தால் மட்டுமே நாடு முழுவதும் செய்தி பரபரப்பாவதுடன் சுய விளம்பரமும் கிடைக்கும் என்றும், வேறு வழிகளில் கிடைக்காது என்றும், காவல்துறை நம்புவதை பேட்ஜ் உணர்ந்திருப்பார்.

எனவே கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளிக் கூண்டில், கவலை மற்றும் இக்கட்டான சூழலில் உழன்று கொண்டிருக்கும் பேட்ஜ், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘அப்ரூவராக’ மாறுவதுதான் ஒரே வழி என்பதை அறிந்து கொண்டிருக்கிறார்; எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் மட்டுமே காவல்துறை தன்னைத் தவிர்க்க முடியாத அப்ரூவராக ஏற்றுக் கொள்ளும் என்னும் உட்கிடையான நிபந்தனை காரணமாக இம்முடிவுக்கு வந்துள்ளார். ஆகவேதான் இந்த நிபந்தனையை நிறைவு செய்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ஜ் புத்திசாலித்தனத்துடன், நேர்மையற்ற குணமும் உடையவர் என்பதற்கு நீதிமன்றத்தில் அவர் அளித்த சாட்சியங்களே ஆதாரம். அவரது வாக்குமூலத்தில் சில தருணங்களில் தற்பெருமையாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் பொய் சொன்னதாகவும், தகுதி இருப்பதுபோல் போலியாக நடித்ததாவும், அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான அவரது சாட்சியத்தில் சில நிகழ்வுகள் பின்வருமாறு:

(a)  பேட்ஜ் கூறுகிறார்: ‘நான் உரிமம் இல்லாமலும், சட்டத்துக்குப் புறம்பாகவும் வெடி மருந்துகளும், குண்டுகளும், விற்பனை செய்து கொண்டிருந்தேன் என்பது உண்மைதான் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 228)

(b) கராத்தின் வீட்டில் வெடி மருந்துகள் அடங்கிய பையை மறைத்து வைத்ததற்குக் காரணம் அது என்னிடம் இருப்பது தெரியக் கூடாது என்னும் முக்கிய நோக்கம் மற்றும் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சமுமே ஆகும் (அதே பக்கம்).

(c) டாக்ஸியில் இரு ரிவால்வர் துப்பாக்கிகள் அடங்கிய பையை டாக்ஸி ஓட்டுநருக்குத் தெரியாமல் வைத்ததன் காரணம், தேடுதலின்போது ஒருவேளை அவை கண்டுபிடிக்கப்பட்டால், டாக்சி ஓட்டுநர்தான் மாட்டிக்கொண்டு கைதாவார், நான் தப்பித்துக் கொள்வேன் (பக்கம் 240).

(d) பேட்ஜ் தனது உண்மைப் பெயரை மறைந்து ‘பந்தோபந்த்’ என்னும் போலியான பெயரை வைத்துக்கொண்டார் (பக்கம் 215)

(e) பயணச் சீட்டு வாங்காமல் பேட்ஜ் பயணித்ததுடன், டிக்கெட் கலெக்டர்களுக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார் (பேட்ஜ் வாக்குமூலம் பக்கம் 237)

(f) பணத்துக்காகப் பொய்யான தகவல்களைக் கூறியதாக அவரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. தீக்ஷித் மகராஜ் என்னிடம் வாங்கிய ரிவால்வர் துப்பாக்கிக்காகக் குறைந்தபட்சம் ரூ 350/-ஆவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவரிடம் அந்த ரிவால்வரை நான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்று பொய் சொன்னேன். உண்மையில் அது எனக்கு வேறொரு பொருளுக்குப் பரிமாற்றாகத்தான் கிடைத்தது.’ (பக்கம் 236).

எனவே, மேலே குறிப்பிட்டதுபோல் நேர்மையற்ற முறையில் வாக்குமூலம் அளித்த பேட்ஜ் போன்ற ஒரு அப்ரூவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், மன்னிப்புப் பெறவும், என் மீது கூட தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிச் சாட்சி அளிக்கலாம்.

(15) பேட்ஜின் சாட்சியத்தில் என்னை நேரடியாகத் தொடர்புபடுத்திய பகுதியை மட்டுமே நான் மேலே விவரித்துள்ளேன். காந்திஜி, நேரு அல்லது ஸுஹ்ரவார்தி ஆகியோரைத் தீர்த்துக் கட்டக் கொடுமையான ஆணையை நான் ஆப்தேவுக்கு வழங்கியதை நிரூபிப்பதற்கு எந்தவொரு தனிப்பட்ட சாட்சியும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி உள்ளேன். ஆகவே அரசு சாட்சியாக மாறியுள்ள அப்ரூவர் பேட்ஜ் சொன்ன கதை என்னைக் குற்றவாளியாக்க முனைவதால் அதை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பேட்ஜின் சாட்சியத்தில் எனக்குத் தொடர்பில்லாத சில விஷயங்கள் விவரிக்கப்பட்டு, நீதிமன்றம் ஒருவேளை சில தகவல்களுக்காக உறுதிப்படுத்தி இருந்தாலும் கூட, ஆதாரமற்ற சதிச் செயலுடன், எனது தனிப்பட்ட தொடர்பு அல்லது பங்கேற்பை நீரூபிக்க இயலாத பட்சத்தில், அப்போதும் கூட அவற்றை அப்ரூவரின் சாட்சியாக எனக்கு எதிராக உறுதிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தை இன்னும் சிறப்பாகத் தெளிவுபடுத்தப் பிரிவு 133 கீழ் சர்கார் சாட்சிச் சட்டம் 7ஆவது பதிப்பிலிருந்து ஒன்று அல்லது இரு பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:

“பொருள் விவரங்களுடன் சாட்சியை உறுதிப்படுத்துவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவரை மட்டும் உறுதிப்படுத்தினால் போதாது, சாட்சியினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் உறுதிப்படுத்த வேண்டும். அவரது சாட்சி மூலம் சிறைக் கைதியாக ஒருவர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்படாத மற்றொருவர் மீதான அவரது சாட்சியை ஏற்றுக் கொள்வது நடுநிலை ஆகாது.” (பக்கம் 1253).

“குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் தனிப்பட்ட சாட்சி மூலம் அவர் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு நபரின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைச் சட்டமாகும். குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் குற்றத்தின் ஒவ்வொரு சூழலையும் அறிந்திருப்பார் என்பதால், தனது நண்பரைக் காப்பாற்ற அல்லது பகைமையைச் திருப்திப்படுத்த (அல்லது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள) குற்றத்துக்குத் தொடர்பே இல்லாத அப்பாவியைக் குற்றவாளிகளுள் ஒருவராக அடையாளம் காட்டத் துணிவார்.” (பக்கம் 1254).

(16) பேட்ஜின் மூன்று கடிதங்கள்

ப்ராக்ஸிக்யூஷன் தரப்பு மூன்று கடிதங்களைச் சாட்சி / ஆவணம் பி87, பி88 மற்றும் பி89 சமர்ப்பித்துள்ளது. முதல் இரண்டு கடிதங்கள் 1943ல் பேட்ஜ் எனக்கு அனுப்பியவை. உரிமம் தேவைப்படாத ஆயுதங்களை விற்பதற்காக அவர் நடத்திய சஸ்திர பண்டாருக்காக நன்கொடை அனுப்புமாறு அவற்றில் கோரியிருந்தார். பேட்ஜ் தனது வாக்குமூலத்தில் திரும்பத் திரும்ப தன்னை இந்து மஹாசபா ஊழியர் என்றும் 1947ல் உரிமை தேவையில்லாத ஆயுதங்களை மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் (பி.டபிள்யூ 57, பக்கங்கள் 218, 229, 242). ஆயுதச் சட்டத்தை ரத்து செய்வதுடன், ஆயுத விற்பனைக்கு உரிமம் வழங்குவது மற்றும் ராணுவப் பயிற்சியைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கு ஆதரவாக நான் வெளிப்படையாக ஓர் இயக்கம் நடத்தி வந்த காரணத்தால் இந்து மஹாசபா தலைவர் என்ற முறையில் எண்ணற்ற கடிதங்களும், அறிக்கைகளும், நிதி உதவி கேட்டு எனக்கு வந்தன.

மூன்றாவது கடிதம், பேட்ஜ் நடத்திய படிக்கும் அறைக்கு இந்து சங்கதான் மற்றும் இந்து மதம் தொடர்பான சில புத்தகங்களை இலவசமாக அனுப்பியதற்காக எனது செயலாளர் திரு வி ஜி தாம்லேவுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய ரசீதாகும். இந்த ரசீதில் துக்காராம் பாடல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்து இயக்கம் தொடர்பான புத்தகங்களை இந்தியா முழுவதுமுள்ள நூலகங்களுக்கும், படிக்கும் அறைகளுக்கும் இலவசமாகவே அனுப்பி வைப்பது வழக்கமாகும். தற்போது ப்ராக்ஸிக்யூஷன் வசமுள்ள எனது அலுவலகக் கோப்புகளில் இதுபோல் ஏராளமான ரசீதுகள் உள்ளன. எனவே இதன் மூலம் நான் பணிவுடன் தெரிவிப்பது என்னவெனில், இந்த ஆவணங்களுக்கும், இப்போதைய வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் இவற்றில் குற்றம் சுமத்தும் அளவுக்கு எதுவுமில்லை என்பதுமே ஆகும்.

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) பகுதி 4 | லாலா லஜ்பத் ராய், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்
குறுகிய இனவாதம் சுதந்திரத்தைப் பெறுவதிலிருந்து நம்மைத் தடை செய்கிறது


பகுதி 


சென்ற கட்டுரையில் செய்யப்பட்ட அவதானிப்புகள் பல அறிவுசார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் பிரச்சினையின் அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு வருவதற்கு முன்பு அவற்றை விரிவாக விவாதிப்பது அவசியமாகும். ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதங்களும் கலாசாரங்களும் தங்களைப் பின்பற்றுபவர்களை இயற்கையாகவே ஒருவருக்கொருவர் விரோதப் போக்குடையவர்களாக மாற்றும் அளவிற்கு அடிப்படையாக வேறுபட்டதா? அல்லது இன்னும் குறிப்பாக, ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்கிறதா? அப்படியானால், இரண்டிற்கும் இடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த நமக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன? ஹிந்து மதம் கறாராக வரையறுக்கப்பட்ட ஒன்று அல்ல. அப்படி அதை வரையறுப்பதும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அது ஒரு வாழ்க்கை முறை. அதில் சாதி ஒரு முக்கிய அங்கம். சாதி இருக்கும் வரை, மற்ற மத சமூகங்களுடன் எளிதான, சாத்தியமான ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு அதை சகிப்புத்தன்மையுடையதாகவோ முற்போக்கானதாகவோ மாற்ற இயலாது.

இருப்பினும், ஒரு கடுமையான சாதி அமைப்பு மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகள் இருந்தபோதிலும், உலகின் அனைத்து பெரிய மதங்களிலும் ஹிந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஹிந்து மதம் மற்ற மதங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கைகள் அல்லது விஸ்வாசத்தைக் கேலி செய்வதோ, இகழ்வதோ இல்லை: பிற மதத்தினர் தங்கள் சொந்த நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அதன்மூலம் ஆன்மிக திருப்தியைப் பெறுவதற்கும் உள்ள உரிமையை இது கேள்விக்குட்படுத்தாது. இரட்சிப்பின் ஒரே ராஜபாட்டை என்று அது பிரத்தியேக உரிமை கோரவில்லை. மற்றவர்களை நரகத்திலிருந்தோ அல்லது அழிவுகளிலிருந்தோ காப்பாற்றுவதாகச் சொல்லி அவர்களை மதம் மாற்ற அது முனைவதில்லை. சொல்லப்போனால், வெவ்வேறு நபர்களுக்கு, உடல், மன மற்றும் ஆன்மிக வளர்ச்சிகளின் வெவ்வேறு கட்டங்களில், கடவுளை அணுகுவதற்கும் ஆத்மதிருப்தியையும் மோட்சத்தையும் பெறுவதற்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன என்பதை இது வெளிப்படையாகக் கூறுகிறது. அதைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்கள் விரும்புவதை நம்புவதற்கும், அவர்கள் விரும்பியபடி வழிபடுவதற்கும் முழு சுதந்திரத்தை ஹிந்து மதம் அனுமதிக்கிறது.

அதன் கடுமையான சமூகக் குறியீடும் சாதி அமைப்பும் கூட இப்போது தளர்ந்து கொண்டு வருகின்றன. முன்பெல்லாம் ஹிந்து சமூகம் அதன் உறுப்பினர்களை மிகச்சாதாரணமான காரணங்களுக்காக, அடிப்படையற்ற குற்றங்களைச் சாட்டி அதிலிருந்து வெளியேற, அதாவது சாதிப்பிரஷ்டம் செய்துவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அதன் சமூகக் கோட்பாடுகளைப் புறக்கணிக்கும் உறுப்பினர்களுடன் எல்லாவிதமான சமரசங்களையும் செய்து கொள்ளத் தயாரானதோடு, அவர்களைத் தன் சமூகத்திலேயே வைத்திருக்க மெனக்கெடுகிறது. ஒருகாலத்தில் உயர்சாதிக் குடும்பங்கள், பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், பண்பட்டவர்கள் ஆகியோர் கூட ஹிந்து சமூகத்திலிருந்து அடிப்படையில்லாத காரணங்களுக்காக, சந்தேகத்தின் பெயரிலும் மதவெறியின் பெயரிலும் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட பொறுத்துக்கொள்ளப்படுகிறார்கள், மன்னிக்கப்படுகிறார்கள், கௌரவிக்கப்படுகிறார்கள். ஹிந்து சமுதாயத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் உள்ளனர். அதில் கௌரவமான, மரியாதைக்குரிய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அதன் சமூகக் கோட்பாடுகளின் மிக முக்கியமான நியதிகளை வெளிப்படையாக மறுத்து, மீறுகின்றனர். சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டவர்கள், வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்தவர்கள், தடைசெய்யப்பட்ட உணவை உண்டு அதை மறைக்காத ஆண்கள், தடைசெய்யப்பட்ட மதுபானங்களை எடுத்துக்கொள்பவர்கள், வேதங்களைக் கேலி செய்யும் நாத்திகர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.. இவர்களில் ஹிந்து சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் சிலர் இருப்பதைக் காண்கிறோம்.

இந்த விசித்திரமான மாற்றத்தை நாம் எவ்வாறு விளக்க முடியும்? இதற்கான காரணம் என்ன? இது எதைக் குறிக்கிறது? என்னைப் பொருத்தவரை, இந்த மாற்றம் உயர்நிலை ஹிந்துமதம் என்பது அதன் வடிவங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மேலானது என்று அதன் சமூகம் மற்றும் உறுப்பினர்கள் உணர்ந்ததால் ஏற்பட்டிருக்கிறது. அது மனம், உணர்வு சார்ந்த கலாசாரம். குறிப்பிட்ட நியதிகளின் அடிப்படையில் உண்பது, குடிப்பது, ஏன் மணம்புரிவது ஆகியவற்றைச் சார்ந்ததல்ல. இந்த உணர்தல்தான், படிவங்களுக்கும் சூத்திரங்களுக்கும் மேலாக உயர்ந்துள்ள ஆண்களையும் பெண்களையும் ஹிந்து மதத்தைப் பற்றி இன்னும் பெருமிதம் கொள்ள வைக்கிறது, தங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காக அதன் உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கிறது. இந்த உணர்தல்தான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், வெளிநாட்டுப் பெண்களின் கணவர்கள், வேதங்களைக் கேலி செய்பவர்கள், சுருக்கமாக, வழக்கத்திற்கு மாறான மற்றும் வெளிப்புறமாக இந்து அல்லாத மக்களைப் போன்று தோன்றுபவர்கள் பழமைவாதிகளோடு தோளோடு தோள் சேர்ந்து ஹிந்து மதத்தின் உரிமைக்காக, அதன் கோவில்கள், தலங்கள், விழாக்கள், நடைமுறைகள், ஆகியவற்றைக் காப்பதற்காக முன்னிற்பதை விளக்குகிறது. ஹிந்து மதத்தின் மீது ஹிந்து அல்லாத மத போதகர்கள், பிரசாரம் செய்வோர் ஆகியோர் செய்யும் கண்டனங்களை அவர்கள் கடுமையாக எதிர்க்கவும் இதுவே காரணமாக அமைகிறது.

ஆனால் இந்த நிகழ்வை விளக்கும் மற்றொரு காரணமும் உள்ளது. ஒருவரது பொருளாதார மற்றும் அரசியல் வாய்ப்புகள் அவர் சார்ந்த சமூகத்தில் உள்ளோருடைய வாய்ப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் ஹிந்துக்களின் பெரும் பகுதியிலிருந்து தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டார்கள். அவர்களில் சிலர் தாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று பெருமிதத்துடன் வெளிப்படையாகக் கூறினர். வகுப்புவாத அமைப்பிற்கு அரசாங்கம் அளித்த அங்கீகாரம் இந்த நிலைமையை மாற்றியது. ஹிந்துக்கள் என்று சொன்னாலொழிய தங்களுக்கு எந்த அந்தஸ்தும் இல்லை, அவர்கள் இஸ்லாத்தைத் தேர்வுசெய்தாலன்றி அவர்களின் குழந்தைகளுக்கும் உரிமை இருக்காது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்நிலைக்கு அவர்கள் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று அறிவித்து, முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படாத பொதுத் தொகுதிகளிலிருந்து தேர்தல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக ஹிந்து உரிமைகளின் காவலர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்ள வேண்டியிருந்தது.

ஹிந்து மதத்தைப் போலல்லாமல், இஸ்லாம் என்பது கோட்பாடுகள் மற்றும் கட்டளைகள் சார்ந்த நம்பிக்கை. ஒவ்வொரு முஸல்மானும் ஒரு நொடி தவறாமல் கடவுளை நம்புவது மட்டுமல்லாமல் (லா அல்லாஹ் இல் அல்லாஹ்), முஹம்மது அவருடைய தூதர் என்றும், குர்ஆன் அவருடைய வார்த்தை என்றும் நம்ப வேண்டும். பழமைவாதிகளின் கூற்றுப்படி, முஹம்மது தூதர்களில் கடைசியானவர் என்றும் அவர் சொன்னதும் செய்ததும் அவருடைய உண்மையுள்ள சீடர்கள் அனைவரையும் பிணைக்கிறது என்பதையும் அவர் நம்ப வேண்டும். இஸ்லாத்தை ஒரு வகையான உயர் அமானுஷ்ய நிலைக்கு உயர்த்த முயன்றவர்கள் இருந்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் கணிசமான வெற்றியை எட்டவில்லை. இஸ்லாம் அதன் அடிப்படை நோக்கங்களையும் காரணங்களையும் கொண்டு, அதைப் பின்பற்றும் பெரும்பான்மையானவர்களுடன் கடந்த பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் ஆகப்பெரிய பிரச்சினை அது தன் கோட்பாடுகளைக் கடுமையாக வலியுறுத்துவதுதான் என்ற என்னுடைய கருத்தை என் இஸ்லாமிய நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன் அரசியல் ரீதியான வீழ்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்தது. அதைத் திருத்தாவிட்டால், உலகளாவிய அரசியல் காரணிகளில் ஒன்று என்ற நிலையை இஸ்லாம் மீண்டும் எட்ட இயலாது. கிறிஸ்துவம் ஒரு காலகட்டத்தில், ஏன் இப்போதும் இருப்பதைப் போலவே இஸ்லாமும் பல பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளது.

ஹிந்து மதத்தில் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகளைப் பொருத்தவரை ஒரு நல்ல விஷயம் உள்ளது. ஹிந்துமதத்தின் சகிப்புத்தன்மை அவை ஒன்றையொன்று அழித்துக்கொள்ளாமல் தடுக்கிறது. இஸ்லாம் அதுபோன்றதல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இஸ்லாமியர்களின் வரலாறு முழுவதும் வீரம், துணிச்சல், வைராக்கியம், கற்றல் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான மதவெறி இஸ்லாமியர்களிடையே இருந்து வருவதைக் காணலாம். முதல் நான்கு கலீபாக்களில் மூன்று பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் மத ஆர்வலர்கள் அல்லது அரசியல் சாகசக்காரர்களால் செய்யப்படும் இதுபோன்ற செயல்களால் நிரம்பியுள்ளன. துருக்கி மற்றும் எகிப்தில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்வுகள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தைத் தண்டித்திருக்கும் என்று ஒருவர் நினைத்திருப்பார். ஆனால் காபூல் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ஒரு அஹ்மதியாவை கல்லெறிந்து கொன்றது, அந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்தியாவின் மிக முக்கியமான, படித்த சில முஸ்லீம் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது இந்த நோய் இன்னும் புரையோடி இருப்பதையும் அதன் அசலான வன்முறையின் எந்த ஒரு பகுதியையும் இழக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.

எகிப்தும் துருக்கியும் வேறுபட்ட ஒரு மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியிருந்தாலும், அவர்கள் காலத்தோடு ஒத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அத்தியாவசியங்களுக்கும் அத்தியாவசியமற்றவற்றுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டியுள்ளனர். இந்திய ‘மௌலானாக்கள்’ அவர்களை ‘மோசமான முஸல்மான்கள்’ என்று அழைக்கலாம், ஆனால் தங்கள் அரசியல் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் பாதுகாக்கவும் முடியும் வரை அவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒரு மதரீதியான ‘கெட்ட முஸல்மான்’ (ஒரு துருக்கிய தேசியவாதி என்னிடம் சொன்னார், ஒரு இந்திய முஸல்மான் ஒருமுறை அவரை ஒரு மோசமான முஸல்மான் என்று அழைத்தார், ஏனெனில் அவர் எப்போதாவது ஒரு பெக் [ஒரு மது பானம்] எடுத்துக் கொண்டார். வெளிநாட்டுச் சக்திக்குத் தலை வணங்கும், அந்த அடிமைத்தனத்துக்கு சப்பைக்கட்டாகத் தன்னுடைய ஷரியாவை பிரசாரம் செய்யும் முஸல்மானை விட எவ்வளவோ சிறந்தவராகக் கருதப்படுவார். துருக்கியின் ‘கெட்ட முஸல்மன்கள்’ என் பார்வையில் இந்தியாவின் பக்தியுள்ள முஸல்மான்களை விட சிறந்தவர்கள். ஏனெனில், அவர்கள் ‘ஷரியா’ மற்றும் ‘ஹதிஸ்’ ஆகியவற்றின் முக்கியத்துவம் அற்ற சிறிய விவரங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்தாலும், வெளிநாட்டு அதிகாரத்துவத்தின் கருவிகளாக இருக்கிறார்கள். கேள்விக்குரிய வழிமுறைகளின் மூலம் தங்களுக்கும் தங்களைப் போன்ற முஸல்மான்களுக்கும் இடங்களையும் தேவையானவற்றையும் வாங்குகிறார்கள்.

முஸல்மான்களின் பக்தி ஹிந்து மதத்துடனான சண்டைகளில் அதிகமாகப் புகழப்படுகிறது. ஆனால், தெரிந்தும் தெரியாமலும் இஸ்லாமிய சட்டங்களின் புனிதமான கோட்பாடுகளை வெளிப்படையாக மீறும் தலைவர்கள் முன்னிலையில், அது ஊமையாகவும் சக்தியற்றதாகவும் இருக்கிறது. ஹிந்துக்களைப் போலவே, இஸ்லாமியர்களால் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலர், குரானில் தவறுகள் இல்லை என்று நம்ப மறுக்கிறார்கள். ‘ஹதிஸ்’ மற்றும் ‘ஃபிக்கா’ ஆகியவற்றின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். வெளிப்படையாக மது அருந்துவதும், பன்றி இறைச்சி உண்பதும், வழிபடாமல் இருப்பதும், ரம்ஜானின் போது நோன்பு நூற்காமல் இருப்பதும், பர்தா, தாடிவளர்ப்பது போன்ற சிறிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருப்பது உண்மைதானே?

எனவே, ஹிந்துக்களும் முஸல்மான்களும் அவரவர் நம்பிக்கைகளின் அனைத்துப் புனிதமான நியதிகளையும் வெளிப்படையாகப் பழிப்போரால் வழிநடத்தத் தயாராக இருக்கிறார்கள். இருந்தபோதிலும், தங்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் அனுசரிப்புகளின் தீவிரத்தை ஒருவருக்கொருவர் அருகருகே நல்லெண்ணத்தோடு அமைதியாக வாழ்வதற்காக, துளிக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஐக்கிய இந்தியா என்பது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய இருவருக்கும் சுதந்திரத்தை அளிக்கும். ஆனால் அவர்களோ சுதந்திரத்தை விட, தங்கள் நம்பிக்கைகளின் பயனற்ற மற்றும் அத்தியாவசியமற்ற கூறுகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். இது கடவுளுக்கே கூட கண்ணீரை வரவழைக்கக்கூடிய விஷயம் அல்லவா?            

புரையோடியிருக்கும் மதம் என்ற புண் அகற்றப்படாவிட்டால், நாம் ஒரு ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க முடியாது, சுதந்திரத்தை எந்த வடிவத்திலும் வெல்ல முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘மஜாப்’ (அதன் குறுகிய அர்த்தத்தில்), என் அன்பு நண்பர் ஸ்டோக்ஸ் அடிக்கடி எனக்கு நினைவூட்டுவது போல், இந்தியாவின் சாபமாக இருக்கிறது. அது உச்சத்தில் ஆட்சி செய்யும் வரை, இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை. நாம் ‘நல்ல இந்துக்கள்’ மற்றும் ‘நல்ல முஸல்மான்கள்’ ஆக, அவற்றின் குறுகிய அர்த்தத்தில், இருந்து கொண்டே சுதந்திரத்தை வெல்ல முடியும் என்ற எண்ணம் என்னைப் பொருத்தவரை அபத்தமானது, இது கடந்த சில ஆண்டுகளில் அதிகமான குழப்பங்களைச் செய்துள்ளது. சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க இஸ்லாம் மற்றும் இந்து மதத்தின் உண்மையான மற்றும் அத்தியாவசிய மனப்பான்மையிலிருந்து நாம் எந்த வகையிலும் மாறத் தேவையில்லை என்று நான் இன்னும் நம்புகிறேன். கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உண்மையான கிறிஸ்தவர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகள், ப்ரீபிர்ஸ்டிரியன்ஸ், ஆங்கிலிகன்கள், யூதர்கள் மற்றும் மற்ற ஜாதியினர் உள்ளனர், ஆனால் அவர்களின் மத நம்பிக்கையின் ஆழம் அவர்கள் அந்தந்த நாடுகளின் சுதந்திரமான குடிமக்களாக இருப்பதைத் தடுக்காது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு காலகட்டத்தில் யூதர் ஒருவர் கிரேட் பிரிட்டனின் பிரதமராகவும், மற்றொருவர் வெளியுறவு செயலாளராகவும், மூன்றாவது நபர் இந்தியாவின் வைஸ்ராயாகவும் இருப்பார் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்?

யூதர்கள் கிரேட் பிரிட்டனில் மிகச் சிறிய மதச் சமூகமாக இருக்கலாம். அவர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் எந்தவொரு சிறப்பு பிரதிநிதித்துவத்தையும் அல்லது அரசாங்க பதவிகளில் எந்தவொரு குறிப்பிட்ட பங்கையும் கோரவில்லை. உண்மையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேட் பிரிட்டனில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் ப்ரட்டஸ்டன்ட்டுகளின் இனவாத உணர்வு இன்று ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான்களின் உணர்வைப் போலவே தீவிரமாகவும் பிரத்தியேகமாகவும் இருந்தது. நீண்ட காலமாக ரோமன் கத்தோலிக்கர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். எந்தவொரு அரசாங்க அலுவலகத்திலும் அவர்களால் பணியாற்ற முடியவில்லை. இன்னும் அவர்கள் ஒருபோதும் சிறப்புப் பிரதிநிதித்துவத்தை கோரவில்லை. இப்போது இந்தக் குறைபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன, ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரட்டஸ்டன்ட்டுகளுக்குச் சமமாக, மாநிலத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். இந்த விஷயத்தில் கிரேட் பிரிட்டனின் உதாரணம் ஐரோப்பாவின் அனைத்து பெரிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் பின்பற்றப்பட்டுள்ளது. அதன் விளைவுகளையும் நாம் காண்கிறோம். துருக்கி, எகிப்து மற்றும் சிரியா ஆகியவையும் அதையே செய்யப் போகின்றன என்பது என் மனதில் உறுதியாக உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க மாட்டார்கள். இந்தியா இதற்கு விதிவிலக்காக இருக்கும் என்று யாராவது எதிர்பார்க்கிறார்களா?

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (கடிதம் 3) | தமிழில்: VV பாலாகடிதம் 3

திரும்பி பார்க்கையில் ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அந்த சந்தோஷமான நாள் திரும்பவும் வந்திருக்கிறது. வீட்டில் இருந்து ஒரு செய்தி வருவதும் வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும் எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்பது சிறையில் இருக்கும் ஒருவருக்குதான் நன்றாகத் தெரியும். நாம் நேசிக்கும் ஒருவருடன் கடற்கரையில் அமர்ந்து நிலவொளியில் உரையாடுவதைப் போல மனதுக்கு ரம்மியமானது அது. ஒரு நிமிடம் பொறு. மணி அடித்துவிட்டது. நான் போய் உணவு உட்கொள்ள வேண்டும். காலை மணி பத்தாகி விட்டது... நான் மற்ற கைதிகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு திரும்பி வந்து விட்டேன். ஆமாம் நான் ஏற்கெனவே சொன்னது போல அது மிக இனிமையானதுதான். உண்மையில் வீட்டிற்கு கடிதம் எழுதும் நாள்தான் எனக்குப் புத்தாண்டுத் தினம் போல. என் ஆண்டுக்கணக்கை நான் அன்றிலிருந்துதான் தொடங்குவேன். எனக்கு நெருக்கமானவர்களுடன் உரையாடும்போது எனக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கின்றன. அது என்னை மேலும் ஒரு வருடத்திற்கு ஜீவித்திருக்கச் செய்கிறது. நான் ஏற்கெனவே கடிதம் எழுதாமல் உன்னைத் தந்தி கொடுக்க வைத்ததற்கு மன்னிக்கவும். அதிகாரிகள் எனக்கு அதை பற்றித் தெரிவித்திருந்தனர். கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அடுத்த கடிதம் எழுத எனக்கு அனுமதி உண்டென்றாலும் இங்குள்ள தபால் துரையின் மெத்தனத்தால் கடிதம் எழுதியபின் ஆறு அல்லது ஏழு வாரங்களுக்குப் பிறகுதான் அது கல்கத்தாவிற்கு அனுப்பப்படுகிறது. அதனால்தான் அடுத்த கடிதத்திற்கு பதினான்கு மாதங்கள் ஆகின்றது. ஆனால் நீ அனுப்பும் கடிதங்கள் இந்த இருவதாம் நூற்றாண்டில் எத்தனை சீக்கிரம் வர இயலுமோ அதனை சீக்கிரத்தில் வந்து விடுகின்றது. உன்னுடைய கடிதத்தின் மூலம் நீ ஆரோக்யமாக இருப்பதையும் நீ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதையும் தெரிந்து கொண்டேன். தேர்வுகள் ஒருபுறம் இருந்தாலும் நீங உன் ஆரோக்யத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளமையான ஆரோக்கியமான உன்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆவலாக உள்ளது. நீ இப்போதுதான் இளமை பிராயத்தினுள் நுழைகிறாய். இப்போது சக்தியும் உத்வேகமும் அதிகமாக இருக்கும். அதனை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் வீணடிக்காதே. உடல் ஆரோக்கியத்தைப் போல மன ஆரோக்கியமும் முக்கியம். நீயே ஒரு டாக்டர் என்பதால் உன்னிடம் ஆரோக்கியத்தைப் பற்றி வலியுறுத்துவது தேவையற்ற செயல்தான். ஆனால் இளமைப் பருவத்தில்தான் நாம் கண்மூடித்தனமாக சில காரியங்களைச் செய்து நம் சக்தி அனைத்தையும் வீணாக்கிக் கொள்வோம். இப்போது சக்தியை வீணாக்காமல் இருப்பது பிற்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது உதவும். இல்லாமல், உன் கண் பார்வை மங்கினால் நானே உன்னிடம், ‘டாக்டர் உங்கள உடல் நிலையை சீராக்கிக் கொள்ளுங்கள்’ என்று கோபமாகச் சொல்வேன். (நான் சொல்வதைக் கேட்டு உனக்குச் சிரிப்பு வரலாம். நான் டாக்டர் அல்ல. அதனால் என் கண் பார்வைத் திறன் குறைவது பிரச்சினையில்லை. எல்லா வழக்கறிஞர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரும்.) எனக்கு விருப்பமானவர்கள் சிலர் BA மற்றும் MA ஆகியவற்றை முடித்துவிட்டார்கள் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் உயர்வானது. ஆனால் இதனைக் காட்டிலும் உயர்வான விஷயம் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டு அதில் வரக்கூடிய தடைகளை நீக்கி வெற்றி பெறுவது. பலகலைக்கழகங்கள் வழங்கும் பதக்கங்களை விட சமுதாயம் வழங்கும் பதக்கங்களே மிக உயர்வானவை. நான் இன்னமும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அந்த வெற்றியைப் பற்றி நேரடியாகக் கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படித் தெரிவிக்கச் சொல்லி உன்னிடம் கூறுபவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுது.

நீ அனுப்பிய புத்தகங்கள் அருமையானவை. ‘மகாத்மா பரிச்சய’ – என்ன ஒரு அருமையான மொழிபெயர்ப்பு! அதன் அறிமுகத்தில் முதல் இரண்டு வரிகளும் பொருத்தமாகவும் அடக்கமாகவும் இருந்தன. அதன் முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது அந்த வார்த்தைகளே என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதனை யார் எழுதி இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். புத்தகத்தின் சொல்வளமும் மையகருத்தும் ஒன்றுகொன்று அழகு சேர்ப்பதாய் இருந்தது. மக்களிடையே பிரபலமாகி உள்ள ‘பாரத் கவ்ரவ் மாலா’ போன்ற தொடர்கள் அரசியல் வரலாறு, விஞ்ஞானம், பொருளாதாரம் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வர வேண்டும். வேதாந்த தத்துவப் புத்தகங்களைப் பொருத்தவரை நமக்கு அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் வேதாந்த தத்துவங்கள் தேவைப்படுகின்றன. அவர்களுடைய வாழ்கை முழுமையான முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் ஷத்ரியத் தன்மையில் இருந்து பிராம்மண தன்மையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தத்துவங்களை நிஜ வாழ்வில் செயல்ரீதியாகக் கொண்டு வருவதற்கான சரியான நிலை அதுதான். ஆனால் இந்தியா தற்போது அந்த நிலையில் இல்லை. நாம் தற்போது வேத வேதாந்தங்களைக் கற்கும் நிலையில் இல்லை.

சூத்திரர்களுக்கு வேதம் மறுக்கப்பட்டதன் மூல காரணம் இதுதான். அது குறுகிய மனப்பான்மையாலோ அல்லது கொடூர சிந்தனையாலோ அல்ல. அப்படியென்றால் அதே தத்துவங்களை விவரிக்கும் புராணங்களை பிராமணர்கள் எழுதி இருக்க மாட்டார்கள். இவ்வளவு உயர்ந்த தத்துவங்களைப் பெறுவதற்கு தகுதி இல்லாத நிலையில் நம்முடைய நாடு தற்போது இருக்கிறது. பாஜிராவ் 2 ஒரு பெரிய வேதாந்தி, அதனாலேயே அவரால் ஒரு தேசத்திற்கும் பென்ஷனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. நாம் வரலாறு, அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், போன்றவற்றைப் படித்து நம் வாழ்க்கைத் தரத்தை முதலில் மேம்படுத்தி கொள்வோம். முதலில் க்ரிகஸ்தாஸ்ரம தர்மத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்துவிட்டுப் பிறகு வானப்ரஸ்த ஆஷ்ராமத்தின் வாயிலில் அடி எடுத்து வைப்போம். இந்த புத்தகங்கள் எல்லாம் தற்போது விதவைகள், முதியவர்கள், ஒய்வூதியம் பெற்று வீட்டில் இருப்போர் போன்றவர் படிக்கட்டும். அவர்கள்தான் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்கட்டும் இந்தக் கடவுள், ஆத்மா, மனிதன் போன்றவற்றை அலசும் புத்தகங்களை! இளைஞர்கள் எதிர்காலம் குறித்த கனவில் வாழட்டும். பெனாரஸ் ஒரு தியாகியைக் கூட அளித்ததில்லை, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கென எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை.

என்னைப் பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன். கடந்த ஒரு வருடத்தில் எனக்கு எந்த நோயும் வரவில்லை. என் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது. உடல் எடையும் குறையவில்லை. அதுவே ஒரு சாதனைதான் இல்லையா? சிறையின் இந்த சிறு அறையில் நான் தினமும் சீக்கிரம் எழுந்து, சரியான அளவு உணவை சரியான நேரத்திற்கு உண்டு, சீக்கிரமே படுத்தும் விடுகிறேன். இதனாலேயே நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். வருங்கால டாக்டரான உனக்கு என்னுடைய இந்த அட்டவணை மிகவும் உபயோகமாக இருக்கும். உடலைப் போலவே என்னுடைய மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது. இப்போது நான் இருக்கும் சிறை அறையில் தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க முடிகிறது. அறையில் இருந்தபடியே ரோஜா, லில்லி போன்ற மலர்களைப் பார்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது என் மனம் தத்வார்த்த விசாரங்களில் ஈடுபடுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக அப்போது நான் உணர்கிறேன். சில சமயங்களில் ஒரு சிறு குழந்தை போல அழவும் செய்வேன். அப்போது நான் கொண்ட கொள்கை எனக்கு நினைவிற்கு வந்து என்னைத் தேற்றும். தனி மனித சுகத்திற்கோ அங்கீகாரதிற்கோ வேண்டியா நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கினோம் என்ற எண்ணம் வந்து என்னை அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும். பெயர், புகழ், சொத்து போன்றவற்றை எண்ணி நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. சந்தோஷமும் நம்முடைய இலக்கில்லை. இந்தப் போராட்டத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே ஈடுபட்டிருக்கிறோம். மற்றவர்களுக்காவும் மனித குலத்திற்காகவும் தியாகம் செய்ய வேண்டியே இதில் ஈடுபட்டிருக்கிறோம். அப்படி இருக்க இதில் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? நாம் செய்வது ஒரு தவம். நம்முடைய சமுதாயம் மேம்பட ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறோம். இதைவிட மேலான காரியம் வேறென்ன இருக்கிறது? இந்த சிந்தனை மனதில் படர்ந்த உடன் மனம் மறுபடியும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. மனம் அழுந்திக் கிடக்கும்போதெல்லாம் இமயமலையைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அது உருவாகாத காலம் ஒன்றிருந்தது. அது இல்லாமல் போகும் காலம் ஒன்றும் வரும். இந்த நிலவு, இந்த சூரியக் குடும்பம் பற்றி எல்லாம் சிந்திக்கத் தொடங்குவேன். பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனையில் ஆளும்போது மனம் அதில் ஒரு சிறு துகளாகிய நம்மை மறக்கும்.

எனதருமை பால் (Bal), நாங்கள் இருவரும் இங்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எங்களுக்கு இருப்பதெல்லாம் உன் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள்தான். இவை இரண்டிற்கும் நீ உத்தரவாதம் அளித்தால் நாங்கள் வேறு எதனைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். மகிழ்ச்சியாக இருப்போம். சிறை வாழ்க்கையினால் நாங்கள் துன்புறவில்லை. அதனையும் மீறி நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நீ இங்கு வருவதற்கு அதிகாரிகளிடம் கொடுத்த மனு குறித்து எழுதியிருந்தாய். இங்குள்ள விதிமுறைகளின்படி நான் இந்நேரம் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இந்தத் தீவில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நடத்தை நல்லபடியாகவே இருக்கிறது. ஆனால் எங்கள் இருவரையும் வெளியே அனுப்பவில்லை. இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சீக்கிரத்திலேயே நம்முடைய பாபா ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து விடுவார். அதன் பிறகு நீ இங்கு வர விண்ணபிக்கலாம். ஆனால் எங்கள் விடுதலையும், உறவினர்களை இங்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ்வதும் நடக்கும் என்று தோன்றவில்லை. மற்ற கைதிகளுக்கெல்லாம் அது நடக்கிறது. இதற்கு இங்குள்ள அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் இந்திய அரசின் உத்தரவுப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே இங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து ஏதேனும் தகவல் கிடைக்கவில்லை என்றால் நீ நேரடியாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கலாம். அரசு நியாயப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை ஓரளவு செய்யும். நாங்களும் அவர்களை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம். வேறென்ன செய்வது? நீ உன்னுடைய ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பற்றி மட்டும் அக்கறை கொண்டால் போதுமானது. நான் உன்னிடம் உயர் நீதிமன்றத்தில் சொன்னதை நினைவில் வைத்திரு.

அன்பிற்குறிய யமுனாவிடம் மகிழ்ச்சியான நாள் ஒன்று விரைவில் விடியும் என்று கூறு. நம்பிக்கையுடன் காத்திருக்கச் சொல். நம் அன்புக்குரிய வாஹினியிடமும் நம்பிக்கையுடன் இருக்கச் சொல். அவர்கள் புராணங்களை மட்டுமில்லாமல் மராத்தி இலக்கியங்களையும், உலகின் நவீன படைப்புகளையும் படிக்கட்டும். நம் சகோதரன் சாகாராமின் மறைவுச் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். நாங்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் சந்தித்தோம். அவன் துணிச்சலுடன் வாழ்ந்தான், துணிவுடன் மறைந்தான். இதைவிட வேறு என்ன வேண்டும். அவன் மனைவி ஜானகி வாகினியை நான் நேரில் பார்த்ததில்லை. நீ வரைந்து அனுப்பிய படங்களின் மூலம்தான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது அல்ல. மிகவும் போற்றுதலுக்கு உரியது. அது தனிமையில் இருந்தாலும் கூட. நான் அவர்களை நினைவில் வைத்திருக்கிறேன் என்று கூறவும். வசந்த் குட்டி எப்படி இருக்கிறான்? அந்தப் பெரிய மனிதன் எனக்கு ஏதாவது எழுதுவானா? அவனுக்கு இப்போது ஏழு வயதிருக்கும் இல்லையா? அவன் தாய் எப்படி இருக்கிறார்கள்? நான் அவர்களை டோங்கிரி சிறையில் கடைசியாகப் பார்த்தேன். ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு ஒரு நல்ல சகோதரிதான். வசந்த் குட்டிக்கு என்னுடைய அன்பு முத்தங்களையும் அவனுடைய அம்மாவிற்கு என் அன்பையும் கூறவும். நம் உறவினர் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். நான் தமாஷாக அம்மா என்று அழைக்கும், உனக்கு உறுதுணையாக இருக்கும் அந்த சகோதரியிடமும் நான் விசாரித்ததாகக் கூறவும். சிறையில் இருப்பதால் நான் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. என்னுடைய மனதிற்கு நெருக்கமானவர்கள் யார் என்று உன்னிடம் கூறியிருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் நான் விசாரித்ததாகக் கூறவும். அவர்களில் யாரேனும் தனிப்பட்ட முறையில் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறுவார்களேயானால் நான் அவர்களைப் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பேன். எனக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பி உள்ளேன். நேரமாகி விட்டது, மிகுந்த தயக்கத்துடன் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன்.

உன் சகோதரன்
தாத்யா.

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்


நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்

- ஆண்டாள், நாச்சியார் திருமொழி

ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது.இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள்.

“காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள்

“கிடைக்கும் பேசாம வா!”

“உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான்.

“காபி கிடைக்குமா கேளுங்க.”

“சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது வாயில் கெட்ட வார்த்தை வந்தது.

“பாட்டிலக் கொடு” என்று வாயைக் கொப்பளித்தபோது செல்பேசி அழைக்க, வாயை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, செல்பேசியை அழுத்தி “தோழர்” என்றான்.

“இங்கே... பஸ் ஸ்டாண்ட் பக்கம்... ஏ.டி.எம். எதிதாப்பல..”

“......”

“தங்கச்சியும் தான்.. தனியா விட முடியாது...”

“......”

“அங்கேயே நிக்கறோம்..”

“முத்து வரான்” என்று பூட்டியிருந்த அந்தக் கடை வாசலில் உட்கார்ந்துகொண்டு அவளையும் உட்காரச் சொன்னான். முப்பது நிமிடம் கழித்து கருப்பு சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் முத்து என்கிற முத்துகுமார் பைக்கில் ஸ்டாண்ட் போட்டபோது கண்ணாடி இடுக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அன்றைய நாளேடு கீழே விழுந்தது. அதைக் கையில் எடுத்துக்கொண்டே “ரொம்ப நேரம் ஆச்சா வந்து?”

“முக்கா மணி ஆச்சு” என்றாள் கண்ணம்மா.

“இப்பதாம்பா... சரி... நம்ம செய்யப் போற இடம் எங்கே?” என்றான் ஜெயபாலன்

“பக்கம் தான்.. தங்கச்சியால நடக்க முடியுமா?”

அவர்கள் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றபோது அங்கே மூன்று போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அங்கே தற்காலிகத் தடுப்பில் ‘சாரதாஸ்’ என்று எழுதியிருந்தது.

‘இந்த ஹோட்டல்தான், பார்த்துக்கோ...’ என்று முத்து கண்களால் காட்ட, ஜெயபாலனும் கண்ணமாவும் அதைப் பார்த்தார்கள்.

அவர்கள் பார்த்த இடத்தில், “ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே - Hotel Sri Krishna Iyyer” என்று, தமிழில் பெரிதாகவும் ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதியிருந்தது.

“பார்ப்பான் என்ன மாதிரி எழுதியிருக்கான் பாரு” என்று முத்துக்குமார் சொல்ல, ஜெயபாலன் “(கெட்டவார்த்தை)... ஐய்யருக்கு இரண்டு ‘y’ வேற போட்டிருக்கான் என்ன திமிரு...!” என்று சிரித்தான்.

போர்டின் மேலே பொடி எழுத்துகளில் என்ன எழுதியிருக்கிறது என்று உற்றுப் பார்த்து, படிக்கத் தொடங்கினாள் கண்ணம்மா.

“ஸ்ரீ... மீன்... குளத்தி... பகவதி அம்மன் துணை” என்று இடதுபக்கத்திலும், வலது பக்கம் “ஸ்ரீ... சமயபுரத்து... மாரியம்மன்... துணை” என்றும், நடுவில் “ஸ்ரீ... லக்ஷ்மி... நரசிம்மன் துணை” என்றும் படித்து முடித்தபோது அவளுக்கு நாக்கு வறண்டு போயிருந்தது.

“இன்னிக்குத் தெறிக்க விட்டுடலாம்... கவலைப்படாதீங்க தோழர்... எதாவது சாப்பிட்டீங்களா?”

“இங்கே காபி கிடைக்குமா?” என்றாள் கண்ணம்மா.

“இங்கேயா?...” என்று குழப்பத்துடன் முத்துக்குமார் “இந்த ஹோட்டல் வேண்டாம்... நமக்குத் தெரிந்த கடை ஒண்ணு இருக்கு.. நீ தங்கச்சியக் கூட்டிகிட்டு கோபுரம் எதித்தாப்புல... போலீஸ் ஸ்டேஷன் பக்கம்... தலைவர் சிலை இருக்கு அங்கே வந்துடு... நான் நடந்து வரேன்” என்று முத்து பைக்கை ஸ்டார்ட் செய்து கொடுத்தான்.

கண்ணம்மா காபியும், நியூஸ் பேப்பர் கிழிசலில் மசால் வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது முத்து வந்து, “போஸ்டர் பாரு” என்று சொல்ல, கோணலாக ஒட்டிய போஸ்டரில் “...சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்” என்று கொட்டை எழுத்தில் அடித்திருந்தார்கள்.

“மொத்தமா முவாயிரம் போஸ்டர்.. நேத்து ராவோடு ராவா நானும்... தில்லைநகர் சங்கர் தெரியுமில்ல... சேர்ந்து ஒட்டினோம்.”

“தலைவர் எத்தினி மணிக்கு வரார்?”

“தலைவர் கனடாலேர்ந்து நேத்தி ராத்திரிதான் வந்தார்... இங்கே பத்து பத்திரை மணிக்கு வந்துடுவார். கருப்பு பெயிண்ட் ரெடி பண்ணிடலாம்... பக்கத்துலேயே ஹார்ட்வேர் கடை இருக்கு... வாங்கிக்கலாம்.. இன்னிக்கு ஐயருக்குக் கருப்பு அபிஷேகம்தான்...”

மசால் வடை காகிதத்தில் அந்த எண்ணெய் வழிந்த நடிகரைப் பார்த்துக் கொண்டிருருந்த கண்ணம்மாவிடம் “தங்கச்சி.. செலவுக்கு வெச்சுக்கோ” என்று முத்துக்குமார் இரண்டு நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கில் செல்லும்முன் ஜெயபாலனுடன் ஏதோ பேசிவிட்டு தோளில் தட்டிவிட்டுச் சென்றான்.

எட்டு மணிக்குக் கோபுரத்துக்கு முன் இருக்கும் காபி கடையில் கூட்டமாக இருக்க, அங்கே சில கருப்புச் சட்டைகள் தென்பட்டன. திடீரென்று ஒலிபெருக்கி ‘உஸ்...உஸ்’ என்ற சத்தத்தைத் தொடர்ந்து, கோபுரத்துக்கு முன் சிரித்துக்கொண்டிருந்த காந்தி சிலை பக்கம் விசில் சத்தத்துடன் ஒரு டாட்டா சுமோ வந்தது. நடுவில் ஒருவன் நெற்றியில் கர்சீப் கட்டிக்கொண்டு, சுருட்டு குடித்துகொண்டிருந்த முகம் போட்ட பனியனுடன் மூங்கில் கம்பில் கட்டப்பட்ட கருப்புக் கொடியைப் பிடித்துகொண்டிருக்க, பக்கத்தில் இன்னொருவன் “...பெரியார் வாழ்க...” என்றபோது ஜெயபாலன் “நீ போராட்டத்துக்கெல்லாம் வராதே... வயித்துல புள்ள இருக்கு... இங்கேயே நிழல்ல எங்காவது இரு.. கையில பணம் இருக்கு இல்ல? கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா, பிரஷ்... அப்பறம் நீ ஏதாவது வாங்கி சாப்பிடு” என்று பதிலுக்குக் காத்திராமல் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.

கண்ணம்மா என்ன செய்வது என்று தெரியாமல் ஜெயபாலனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒலிபெருக்கி இன்னொரு முறை “பெரியார் வாழ்க... சமத்துவம் ஓங்குக” என்று முழங்கிவிட்டுத் தொடர்ந்தது.

“1957ல் தமிழ்நாடு முழுவதும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்தி வெற்றி கண்டார்... ஆனால் தற்போது ஸ்ரீரங்கத்தில் ‘ஸ்ரீகிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே’ என்ற ஹோட்டல் இருக்கிறது. நம் கழகத் தோழர்கள் கொதித்துப் போய் ஹோட்டல் உரிமையாளாரை அணுகி பிராமணாள் என்பது வர்ணத்தின் பெயரை அப்பட்டமாகக் குறிக்கும் சொல்... பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் சொல்... அதை அழிக்க வேண்டும் என்று அறவழியில் கேட்டார்கள். ஆனால் பார்ப்பான் கேட்கவில்லை. இன்னிக்கும் பிராமணாள் பெயர் அழிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. வர்ண வெறி பிடித்தவர்கள்... தலைவர் இன்னும் சில மணிநேரத்தில் இங்கே வரப் போகிறார். நம் கருப்பு மை இன்று நாம் யார் என்பதைக் காட்டும்...” என்றபோது விசிலும் கைத்தட்டலும் மெலிதாகக் கேட்டது.

கண்ணம்மாவிற்கு எங்காவது அமைதியான இடத்தில் படுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கடையில் ‘இன்று மந்திரி சபை விரிவாக்கம்’ என்பது அவளுக்கு அபத்தமாகப் பட்டது. ஒலிபெருக்கிச் சத்தம் அவளுக்குப் பழகி, சுவாரசியம் இல்லாமல் போனபோது “ஒரு பன்னீர் சோடா கொடுங்க” என்றவரை கண்ணம்மா பார்த்தாள். அவருடன் இன்னொருவர் வந்திருந்தார். அவர் தலையில் குடுமி இருந்தது.

“சாமி உங்களுக்கு?”

“எனக்கு ஏதும் வேண்டாம். சந்நிதி கைங்கரியம் இருக்கு...”

“ஏன் சாமி கோபுரத்துக்கு முன்னாடி சிலை வைக்கும்போது நீங்க எல்லாம் சும்மாவா இருந்தீங்க?”

“போராட்டம் எல்லாம் நடத்தினோம்.. ஆனா ஆட்சி செஞ்சவா சப்போர்ட் இல்லை... என்ன செய்ய?”

“நீங்க அன்னிக்கு விட்டதுதான் இவங்க இன்னிக்கு தைரியமா மைக் பிடிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க...”

“திருமஞ்சனக் காவிரி பக்கம் நம்பிள்ளை சன்னதி இருக்கு... யாருக்குத் தெரியும்? ஆனா இந்தச் சிலை?... எல்லாருக்கும் தெரியும்... என்ன செய்ய...? கலி காலம்.”

“நீங்க ஏதாவது செய்யனும் சாமி... சும்மா பூஜை, பொங்கலுனு இருந்தா போதாது... நீங்க எல்லாம் மைக் பிடித்துப் போராட்டம் செய்யனும்...”

“யாரும் வர மாட்டா... ஐபிஎல் பார்த்துண்டு இருப்பா... ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வாழ்ந்த இடம்... இங்கே இருக்கும் மரம், பூ, கல்லு, மண்ணு, எறும்பு, மாடு எல்லாம் போன ஜன்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருக்கு..”

“அப்ப கடவுள் இல்லைனு இங்கே மைக் பிடிச்சு கத்திண்டிருக்கறவா எல்லாம்...?”

“கருப்புச் சட்டை போட்ட அடியார்கள்... பூர்வ ஜென்ம புண்ணியம் இன்னிக்கு இவா ஸ்ரீரங்கத்துல இருக்கா.”

கண்ணம்மா அவர்களிடம் சென்று “சாமி! இங்கே பெயிண்ட் கடை ஏதாவது இருக்கா?” என்றாள்.

“பழைய தேவி தியேட்டர் தெரியுமா?”

“தெரியாதுங்களே... ஊருக்குப் புதுசு”

“இப்படி நேராப் போனா, இடது கைப்பக்கம் பஸ் எல்லாம் திரும்பும்... அங்கே கடை இருக்கு. ஆனா பத்து மணிக்குத்தான் திறப்பாங்க...” பன்னீர் சோடாவிற்கு சில்லறையுடன் ஏப்பத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

கண்ணம்மாவுக்கு ஒலிபெருக்கி ஏதோ பேசிக்கொண்டேயிருந்தது சலிப்பாக இருந்தது. தானும் பன்னீர் சோடா குடிக்க வேண்டும் போல இருந்தது. போலீஸ் ஜீப் ஒன்று ‘இங்கே யாரும் கூட்டம் போடக் கூடாது... நகருங்க... நகருங்க...’ என்று அவள் தாகத்தையும் அமைதியாகக் கலைத்துவிட்டு எக்ஸ்ட்ராவாக ‘...ஆட்டோ உனக்கு இங்கே என்ன வேலை...?’ என்ற அதட்டலுடன் சென்றது.‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் நம் தலைவர் சற்று நேரத்தில் இங்கே வருவார்...’ என்றது இன்னொரு ஒலிபெருக்கி.

நடந்து சென்றவரிடம் “மணி என்னங்க?” என்று கேட்டுவிட்டு கண்ணம்மா மெதுவாக பெயிண்ட் கடை நோக்கி நடக்கத் தொடங்கினாள். பஸ் திரும்பும் இடத்தில் சிமெண்ட் மூட்டைகள், சுருட்டபட்ட டியூப், சங்கலிகள் வெளியே தொங்க, ‘ஸ்ரீரங்கா ஹார்ட்வேர்’ என்ற கடை காலியாக இருந்தது. நம்பெருமாள் சேர்த்தி சேவைக்குக் படத்துக்கு கீழே ஊதிபத்தி பத்து பர்சண்ட் தன்னை இழந்து புகையால் கைங்கரியம் செய்து கொண்டிருந்தது.

“கருப்பு பெயிண்ட் கொடுங்க” என்ற வாசகத்தை, வெளியே சென்ற போலீஸ் ஜீப்பின் தலையில் சிகப்பு-நீல ஒளியின் பளிச்சும், அதைத் தொடர்ந்த ஒலிபெருக்கியின் ‘கூட்டம் போட அனுமதி இல்லை... யாரும் கூட்டம் போடக் கூடாது... அமைதியாக் கலைஞ்சுடுங்க...!’ அபகரித்தது.

“அந்தச் சிமெண்ட் மூட்டையை எல்லாம் உள்ளே அடுக்குப்பா.. இன்னிக்கிக் கடையைத் திறக்க வேண்டாம்... பிரச்னை வர வாய்ப்பு இருக்கு” என்று தினத்தந்தியை மடித்து வைத்தார் கடைக்காரர். “உனக்கு என்னம்மா வேணும்? சீக்கிரம் சொல்லுமா... கடை இன்னிக்குக் கிடையாது.”

“பெயிண்டு...”

“எதுக்கு அடிக்க?”

கண்ணம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “சுவத்தில அடிக்க...”

“வெளிச் சுவரா? வீட்டுக்குள்ள அடிக்கவா? டிஸ்டம்பரா? ராயலா? எமல்ஷனா? என்ன கலர்? எவ்வளவு வேணும்?” என்று கேள்விகளை அடுக்க கண்ணம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கருப்பு பெயிண்ட் ஒரு டப்பா... இதோ இங்கே அடிச்சிருக்கீங்களே...”

“இந்த பெயிண்ட் சுவத்துல அடிக்கமாட்டாங்க... ஒரு லிட்டர் கருப்பு எனாமல் கொடுப்பா!”

“பிரஷ் ஏதாவது வேணுமா?”

“ஆமாம் ஒரு பிரஷ்.”

“எவ்வளவு இன்ச்?”

“இந்த அளவு கொடுங்க..” என்று கையால் காண்பித்தாள்.

“அரை இன்ச் பிரஷ்... வேற?” கண்ணம்மா தலையை ஆட்ட, ஒரு துண்டுக் காகிதத்தில் சரசரவென்று எழுதி “இருநூற்றி நாற்பத்தி இரண்டு ரூவா. இருநூற்றி நாற்பது கொடு!”

கண்ணம்மா தன் கையில் சுருட்டியிருந்த பணத்தைப் பிரித்தபோது அதில் இரண்டு நூறு ரூபாய் இருந்தன.

“இதுல சின்ன டப்பா இருக்கா?”

“முதல்லயே சொல்லக் கூடாதா?... அரை லிட்டர் கொடுப்பா.”

“நூற்றி முப்பது கொடு” என்று கண்ணம்மாவிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு சில்லறையைக் கொடுத்தபோது கடை வாசல் காலியாக இருந்தது.

கண்ணம்மா கோபுரத்தை நோக்கி அவசரமாக நடந்தாள். கோபுர வாசலில் மாடு ஒன்று என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றுக்கு போய்க்கொண்டு இருந்தது. தடுப்புகள் போடப்பட்டு, கடைகள் எல்லாம் படபடவென்று ஷட்டர்கள் மூடப்பட்டு, கொய்யா கூர் கலைக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் போலீஸ் நின்று கொண்டு இருந்தது.

பெயிண்ட் வாங்கி வருவதற்குள் இடமே சினிமா செட் போட்ட மாதிரி மாறிவிட்டதை உணர்ந்தாள். கண்ணம்மாவிற்கு உலகமே தன்னைப் பார்த்துக் கோபித்துக்கொண்டது போலத் தோன்றியது.

“என்னப்பா ஒரு ஆட்டோ, பஸ் கூட இல்லையே”, “சி.எம் வராரா?” என்ற கேள்விகளைக் கடந்து சென்றபோது, கோபுர வாசலில் பலர்கூடி ஊர்வலம் போலக் காட்சி அளித்தது. கூட்டத்தின் நடுவில் ஜெயபாலனைப் பார்த்தபோது மனதில் நிம்மதியும், கூட்டத்தில் ஊர்ந்து சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்த போது பயமும் கவ்விக்கொண்டது.

கண்ணம்மா ஜெயபாலனை நோக்கி நடந்தாள்.

“இங்கே எதுக்கு புள்ள வந்தே?”

“பெயிண்ட் வாங்கியாந்தேன்.

“இன்னிக்குத் தேவைப்படாது போல... கோர்ட் தடை விதிச்சுட்டாங்களாம்.

“ஐயோ... இதைத் திருப்பிக் கூட தர முடியாது. கடை எல்லாம் முட்டிட்டாங்க.”

“ஒன்னும் கவலைப்படாதே... இருட்டின பெறகு ஒரு வேலை இருக்கு... முத்து... முத்து...” என்று கூப்பிட, முத்து வந்தபோது ஒருவித வாடை அடித்தது.

“முத்து! இவ கிட்ட சொல்லிடு.”

“தங்கச்சி, உனக்குத் தாயார் சன்னதி தெரியுமா?”

கண்ணம்மா தெரியாது என்பதை போல முகத்தைக் காண்பிக்க, முத்து தொடர்ந்தான். “கடை எல்லாம் மூடிட்டாங்க... அதனால நேரா கோபுரத்துக்குள்ள போயிடு. கருடன் சன்னதி வரும்... அங்கே பிரசாதக் கடை இருக்கு. புளிசாதம், தயிர் சாதம் கிடைக்கும். பதினஞ்சு ரூபாய். சாப்பிட்டுக்க. அங்கேயே எதிர்த்த மாதிரி தண்ணி இருக்கு. இருட்டிய பிறவு ஏழு மணிக்கு தாயார் சன்னதி வாசல்ல வந்திடு. வேலை இருக்கு.”

“என்ன வேலை?”

முத்து நிதானமாகச் சொன்னான். “கோர்ட் கருப்பு பெயிண்டு வெச்சு அழிக்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லிட்டாங்க.... தலைவர் கொஞ்ச நேரத்துல வந்து பேசுவார். ஒரு கூட்டம் இருக்கு. நாம ஏழு மணிக்கு... கொஞ்சம் இருட்டின பெறவு... கோயில் சுவத்தில நாமம் எல்லாம் பெரிசா போட்டிருக்காங்கல்ல... கருப்பு பெயிண்ட் வெச்சி.. “

“வெச்சி?”

“வெச்சு செஞ்சிடுவோம். நீ கிளம்பு தங்கச்சி...”

கண்ணம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பினாள். கோபுரத்தைத் தாண்டிச் சென்றபோது கோயிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது. குழந்தை ஒன்று எல்.ஈ.டி பம்பரம் வேண்டும் என்று அடம்பிடித்துகொண்டு இருந்தது. “துளசி மாலை வாங்கிப் போங்க அக்கா” என்று ஒரு சின்ன பெண் அவளைச் சுற்றி சுற்றி வந்து கெஞ்சியது.

கருட மண்டபத்துக்கு வந்தபோது வவ்வால் நாற்றம் அடித்தது. சற்று தூரம் சென்று பார்த்தபோது கையில் இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. ஐம்பது ரூபாயை பெயிண்ட் கடைக்காரர் திருப்பித் தந்தாரா இல்லை வழியில் விழுந்துவிட்டதா என்று நினைவில்லை.

மத்தியானம் ஒரு பொட்டலம் புளிசாதம் வாங்கிச் சாப்பிட்டாள். பாக்கி ஐந்து ரூபாய்க்கு ஒரு வடை தந்தார்கள். இன்னும் பசித்தது. சூரிய புஷ்கரணி பக்கம் படுத்தபோது தூங்கிவிட்டாள். எழுந்தபோது எல்லாம் இருட்டாக எங்கோ ‘டம் டம்’ என்று மேளச் சத்தம் கேட்டது. சோர்வாக இருந்தது.

துடப்பத்தை வைத்துக் கூட்டிக்கொண்டிருந்த பணியாளாரிடம் “மணி என்ன?” என்றபோது “ஏழு ஆகப் போகுது... இனிமேதான் நடை திறப்பாங்க.”

“வெளியே எப்படிப் போகணும்?”

“நீ எந்தப் பக்கம் போகணும்?”

“தாயார் சன்னைதி பக்கம்.”

“இப்படியே நேரா போனா தன்வந்திரி சன்னதி வரும். அங்கே கேட்டா சொல்வாங்க.”

மதில்களைப் பார்த்து நடந்து சென்றபோது பிரமிப்பாக இருந்தது. அதில் சோர்வாக சாய்ந்தபோது சூரியனின் சூடு இன்னும் கற்களில் தெரிந்தது. அவளைக் கடந்து பேட்டரி கார் காலியாகச் சென்றபோது அதைக் கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள் அது சென்றுவிட்டது.

மெதுவாக நடந்தாள். தன்வந்திரி சன்னதிப் பக்கம் ஒரு பூனை ஓடியது. “தாயார் சன்னதி...” என்றவுடன் “இதோ இப்படிப் போனா வரும்” என்று ஒருவர் கைகாட்டினார்.

‘தாயார் சந்நிதி’ என்று நியான் எழுத்துகள் ஒளியில் தெரிய, கண்ணம்மாவுக்குத் தளர்ச்சி ஏற்பட்டு அப்படியே கம்பர் மண்டபத்தில் உட்கார்ந்தாள். சரிந்தாள் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்.

தேசிகர் சன்னதியில் காலை ஆட்டிகொண்டிருந்தவர் இதைக் கவனித்து ஓடி வந்தார். “என்ன ஆச்சு?” என்று கேட்டபோது கண்ணம்மாவுக்கு கண்கள் திறக்கத் தெம்பில்லாமல் சொருகியது. அவள் வயிறு சற்று மேடிட்டிருப்பதைக் கவனித்து, உடனே தாயார் சன்னதியில் சீருடையில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி ஓடினார்.

“ஒரு பொண்ணு மயக்கமா இருக்கா... கம்பர் மண்டபம்... புள்ளதாச்சி போல...” என்று படபடப்பாகச் சொல்ல, தாயார் சன்னதியிலிருந்து வெளியே வந்தவர்களும் கம்பர் மண்டபத்துக்கு செக்யூரிட்டியுடன் விரைந்தார்கள். கண்ணம்மா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.

ஒருவர் உடனே தன்னிடம் இருந்த பூ, மஞ்சகாப்பு இத்தியாதிகளை “இதை கொஞ்சம் வெச்சிக்கோங்க” என்று கொடுத்துவிட்டு உடனே செயல்பட்டார். “முதல்ல எல்லோரும் கொஞ்சம் தள்ளிப் போங்கோ தள்ளி போங்கோ.. காத்து வரட்டும்” என்று கண்ணம்மாவின் கைகளைப் பிடித்து நாடியை சோதிக்க ஆரம்பித்தார்.

“கூட யாராவது வந்தீங்களா?” கூட்டம் ஓர் அடி தள்ளிச் சென்றது.

“நாடித் துடிப்பு அதிகமா இருக்கு.. தண்ணி வேணும். சக்கரை... ஸ்வீட் ஏதாவது இருக்கா?... ஆம்புலன்ஸ் ஒன்னுக்கு சொல்லிடுங்க...” என்றார்.

உடனே ஒரு பிஸ்லேரி வந்தது.

“கொஞ்சம் இருங்கோ. மேலே நரசிம்மர் சன்னதில பானகம் இருக்கு. எடுத்துண்டு வரேன்” என்று அர்ச்சகர் மேட்டழகிய சிங்கர் சன்னதி படிகளை நோக்கி ஓடினார். வட்டிலில் பானகம் எடுத்துக்கொண்டு வர, அதைக் கண்ணம்மாவின் வாயில் விட்ட பிறகு, கண்ணம்மா விழித்தாள். கூட்டத்துக்கு உயிர் வந்தது.

அவள் கையில் இன்னும் கொஞ்சம் பானகம் ஊற்றப்பட்டது. அதையும் குடித்தாள்.

“ஏம்மா வயித்துல புள்ள இருக்கு... எத்தனை மாசம்?”

“அஞ்சு ஆச்சு.”

“காலையிலிருந்து என்ன சாப்பிட்ட? தண்ணி கிண்ணி குடிச்சியா?” கண்ணம்மாவுக்கு அப்போதுதான் தான் தண்ணீரே குடிக்கவில்லை என்று தெரிந்தது.

“இல்லை” என்றாள்.

“...டிஹைட்ரேஷன்... லோ சுகர்... குழந்தை வயித்துல இருக்கு... அதுக்காகவாவது ஒழுங்கா சாப்பிட வேண்டாமா? நல்லவேளை இந்த ஸ்வாமி பானகம் கொடுத்தார். இல்லன்னா ஆபத்தா முடிஞ்சிருக்கும்...”

அர்ச்சகர் சந்தோஷமாக “தேவரீர் டாக்டரா?” என்றார்.

“ஆமாம்.. திருநெல்வேலியில.”

“ஆழ்வார் எந்தத் தொழிலையும் சொல்லலை. ஆனா மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா என்று ஆழ்வார் டாக்டரை மட்டும்தான் சொல்லுகிறார். நரசிம்மர் மாதிரி வந்து காப்பாத்திருக்கார்... நீ ஒன்னும் கவலைப் படாதே... பானகம் குடிச்சிருக்க... குழந்தை பிரகலாதன் மாதிரி பிறப்பான்... இந்தா இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்று அவள் கையில் பானம் முழுவதையும் கவிழ்த்தார்.

“எங்கேமா போகணும்?... ஆம்புலன்ஸ் வேண்டாம்னு சொல்லிடுப்பா.”

“தாயார் சன்னதிக்கு வழி கேட்டு வரச் சொன்னாரு.”

“யாரு?”

“என் வூட்டுக்காரர்..”

“இதோ இதுதான் கேட்டு” என்றதைக் கேட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினாள். கை பிசுக்காக ஒட்டியது. மூக்குப் பக்கம் வைத்துப் பார்த்தபோது சுக்கும், ஏலக்காய் வாசனையும் கலந்து அடித்தது.

தாயார் சன்னதி வாசல் திகில் படத்தில் வரும் மௌனம் போல நிசப்தமாக இருந்தது. தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது. ஜெயபாலுவும் முத்துவும் வந்தபோது பையைக் கொடுத்தாள்.

மதில் மீது வரையப்பட்ட நாமம் பக்கம் நெருங்கிய ஜெயபாலன், பிரஷ்ஷை எடுத்தபோது “ஏதோ பிசுபிசுப்பா ஒட்டுதே” என்றான்.

கண்ணம்மா மீண்டும் தன் கையை முகர்ந்தாள்.