Posted on Leave a comment

திருக்குறள் மதச்சார்பற்றதா? | ஆமருவி தேவநாதன்

‘திருக்குறள்
உலகப்பொதுமறை; சாதி, மத, மொழி, இன, நில வேறுபாடுகளைக் கடந்து எல்லா மதத்தவருக்கும்
பொதுவான மறை நூல்; மதச்சார்பற்றது.’ இந்தப்  பரப்புரையில் உண்மையின் விழுக்காடு எவ்வளது? திருக்குறள்
இறை மறுப்பு நூலா? திருக்குறளுக்கும் பாரதத்தின் ஆன்மிகக் களஞ்சியங்களான வைணவ,
சைவ, சமண, பௌத்த மதங்களுக்கும்
தொடர்பில்லையா? பார்க்கலாம்.
பலருக்கும் தெரிந்த பின்வரும் குறட்பாக்கள் வைணவத்
தொடர்பைக் காட்டுவன.
1954ல் பண்டித ரெ.திருமலை ஐயங்கார் எழுதிய ‘திருவாதிமாலை’
நூலில் ‘ஆதிபகவன்’ என்னும் சொல்லாடல் எவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களிலும்,
விஷ்ணுபுராணம் முதலிய வைணவ நூல்களிலும் கையாளப்படுகிறது என்று தெளிவாகக் கூறி,
அதனால் திருக்குறள் வைணவ நூலே, திருவள்ளுவர் வைணவரே என்பதை நிறுவுகிறார். பகவான்
என்னும் சொல் ‘பகவந்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபே என்று கூறுகிறார். இதற்கு
அவர் காட்டும் விஷ்ணுபுராண ஸ்லோகம் இதோ:
‘’ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்யதேஜான் ஸ்யசேஷத:
பகவச்சப்த வாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி:
ஏவமேஷ மஹாசப்தோ மைதேய பகவாநிதி
பரமப்ரஹ்மபூதஸ்ய வாஸுதேவஸ்ய நாக்யக:
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷாஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண அந்யத்ர ஹ்யுபசாரத:’
(ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், கீர்த்தி, செல்வம்,
ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் ‘பக’ என்னும் பதம்
வாசகமாயிருக்கிறது. பூதங்களைச் சரீரமாகக் கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பனுமான
அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் எல்லா பூதங்களிலும் வஸிக்கிறான்.
ஆகையால் அழிவற்றவனான பகவான் ‘வ’காரத்திற்கு அர்த்தமாகிறான். கீழானவையான
முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத ‘ஜ்ஞானம், ‘சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம்,
தேஜஸ்’ என்னும் எல்லா குணங்களும் ‘பகவான்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்
பெறுகின்றன. மைத்ரேயரே, இம்மாதிரியாக பகவான் என்ற இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான
வாஸுதேவனுக்கே உரியது. வேறு ஒருவரையும் குறிக்காது.)
1904ம் ஆண்டு மதுரை ஜில்லா, சிறுகூடற்பட்டி சே.சுப்பராய
ஐயர் அவர்கள் விஷ்ணுபுராணத்தைத் தமிழ்ப் பாக்களாக மொழிபெயர்த்து எழுதினார்.
அப்பாக்களில் சில பின்வருமாறு. இவற்றிலும் ‘பகவன்’ என்னும் சொல் இடம்பெறக்
காணலாம்.
‘அகமதி னினைக்க வேண்டு மப்பர மான்மா ரூபம்
பகவனென் றுரைக்கா நின்ற பதத்திற்குப் பொருளா மந்தப்
பகவனா நாம மன்னோன் பற்பல குணஞ்சொ ரூப
முகவைசால் விபவ மின்ன வுரைத்திடத் தக்க தன்றே.
மற்றுமிப் பகவ னென்னும் வாசக நாம ரூபம்
பெற்றில னாகி யன்ன பிரமத்திற் கிணையாய் நின்ற..
அவித்தையென் றிவற்றை யோர்ந்தோன் பகவனென் றறைதல் வேண்டும்…’
விஷ்ணுபுராணம் மேலும் சொல்வது :
‘ததேவ பகவத் வாச்யம் ஸ்வரூபம் பரமாத்மந:
வாசகோ பகவச்சப்தஸ் தஸ்யாத்யஸ்யாக்‌ஷயாத்ம ந:’
(அந்த பரமாத்ம ஸ்வரூபமே பகவான் எனப்படுவது. அழிவற்றவனான
அந்த ஆதிபுருஷனுக்கே வாசகமாயிருப்பது பகவச்சப்தம்.)
‘பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி
நிரூபாதி வார்த்தேதே வாஸுதேவே ஸநாதநே’
(பகவான் என்னும் சப்தமும், புருஷன் என்னும் சப்தமும்
இயற்கையாகவே பழமையானவனான வாஸுதேவனிடமே விளங்குகின்றன.)
‘அந்தமிலாதியம்பகவன்’ என்று திருவாய்மொழி திருமாலைச்
சொல்கிறது. ஒன்பதினாயிரப்படி என்னும் வைணவ உரை ‘தனக்கு அந்தமின்றி எல்லார்க்கும்
தான் ஆதியாய் ஸ்வாபாவிகமாய் ஹேயப்ரத்நீகமான ஜ்ஞாநாதி கல்யாண குண பரிபூரணன்’ என்று
மஹாவிஷ்ணுவை விவரிக்கிறது. இவ்விடத்தில் ‘ஆதி’, ‘பகவன்’ என்பது வைணவத்தின் மூலமான
திருமாலைக் குறிப்பதை உணரலாம்.
இவைமட்டுமன்றி, திருவள்ளுவர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்
தலை’ என்பது குறள். மாலவனின் எட்டுக் குணங்களாகச் சாந்தோக்ய உபநிஷத் சொல்வது:
பாபமின்மை, நரையின்மை, மரணமின்மை, சோகமின்மை, பசியின்மை,
தாகமின்மை, ஸத்யகாமம், ஸத்யஸங்கல்பம் என்பன. இவற்றையே திருவள்ளுவர் எண்குணத்தான்
என்கிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘எண்குணத்தான்’ என்னும்
சொல்லிற்குச் சொல்லும் விரிவிரை : ‘ தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை
உயர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை,
முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை’.
இதனைத் தொடர்ந்து, ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்’ என்பதாலும், ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை
நீடுவாழ் வார்’ என்பதாலும் அடியைத் தொழும் வைணவ மரபு சுட்டப்படுகிறது. ஆண்டாள்
எழுதிய திருப்பாவையை ‘பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்’ என்று போற்றுவதை
நாம் அறிவோம். மேலும் திருப்பாவையில் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று
வாமனாவதாரத்தைப் பாடுகிறாள். வள்ளுவரும் ‘அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
என்னும் போது மூவடியால் மூவுலகையும் அளந்த வாமனனைப் பற்றிப் பேசுகிறார்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’
என்னும் குறட்பாவினால், எந்தப் பொருளையும் விரும்புதல்
இல்லாதவனும், வெறுத்தல் இல்லாதவனுமாகிய பரம்பொருளைப் பார்க்க முடிகிறது. இந்த
இரண்டு குணங்களும் ஒருங்கே இருப்பதால், எந்த விதப் பாபமும் இல்லாதவன் என்றாகிறது.
எனவே அவன் இயல்பாகவே பாபங்களில் இருந்து நீங்கியவன் என்பதைக் காண்கிறோம். இதுவும்
மாலவனின் எண் குணங்களில் ஒன்றே.
‘இருள் சேர் இருவினையும் சேரார் இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
என்னும் குறளால் இறைவனது குணங்களான ஸத்யகாமம் (பழுதடையாத
இச்சை), ஸத்யஸங்கல்பம் (பழுதடையாத நினைவு) முதலியன புலனாகின்றன.
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்’
என்னும் குறளில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐந்து பொறிகள் வழியாக வந்தடையும் ஐந்து ஆசைகளையும் ஒழித்தவனது மெய்யான ஒழுக்க
நெறியின் கண் வழுவாது நின்றவர், பிறப்பில்லாமல் எக்காலத்திலும் ஒரு தன்மையராய்
வாழ்வார் என்பதாகச் சொல்லும்போது, பசியின்மை, தாகமின்மை, சோகமின்மை, மரணமின்மை
என்கிற நான்கு குணங்களையும் அறிய முடிகிறது. பசி, தாகம் இருந்தால் அவற்றை
நீக்கிக்கொள்ள வேண்டிப் புலன்களை மேயப் பொறிகள் செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் என்பன புலன்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன பொறிகள். பசி, தாகம்
முதலியன இல்லாதவனாதலால் பொறிவாயில் ஐந்தவித்தவன் ஆகிறான். பசி, தாகம் இல்லாததால்
அவற்றால் உண்டாகும் சோகம் அற்றவனாகிறான். உண்ணும் சோறும் பருகு நீரும் பசி தாகங்களை
அகற்ற உதவுகின்றன. இவை இல்லாவிட்டால் மரணமே. இறைவன் பசி, தாகம் இல்லாதவன். ஆதலால்,
உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியதில்லை. அதனால் வளர்தல், தேய்தல் அற்றவனாகிறான்.
இவற்றினால் எல்லாம் மரணம் அற்றவன் ஆகிறான்.  
இதுகாறும் திருக்குறளில் வைணவக் கோட்பாடுகள் குறித்துக்
கண்டோம்.
மணிவாசகர் பதிப்பத்தார் வெளியீட்டில் திருக்குறள்
மாமுனிவர் முனவர்.கு.மோகனராசு எழுதிய ‘திருவள்ளுவர் கண்ட கடவுள்களும்
தெய்வங்களும்’ நூலில் பாரதத்தின் பல சமயங்களின் கடவுளர்கள் திருக்குறளில் எவ்வாறு
காட்டப்பட்டுள்ளனர் என்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
முனைவர் சு.மாதவன் என்பார் எழுதிய ‘சமூக மெய்யியல்
நோக்கில் திருக்குறள்’ (செம்மொழிப் பதிப்பகம், தஞ்சாவூர்) என்னும் நூலில்,
திருக்குறள் சைவ மரபை ஒத்து வருகிறது என்கிறார். அவரது பார்வை புதியது.
நிலைத்த பேருண்மையை உணர்த்த மட்டுமே திருவள்ளுவர்
‘ஏ’காரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கிறார் முனைவர் சு.மாதவன்.
1330 குறட்பாக்களில் 114ல் மட்டுமே ஏகாரங்கள் உள்ளன.
அதாவது 133 அதிகாரங்களில் 74ல் மட்டுமே ஏகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள்
வாழ்த்தில் ஏகாரம் உண்டு. வான் சிறப்பில் இல்லை. ஏனெனில் கடவுள் என்பது நிலைத்த பேருண்மை,
வானம் அப்படியானதன்று. அவ்வப்போது மாறுபடும், நிலையானதாக இருக்காது. எனவே வான்
சிறப்பில் எந்தக் குறளிலும் ஏகாரம் இல்லை. நீத்தார் பெருமையில் ஏகாரம் உண்டு
என்பதையும் உற்று நோக்குக.
‘சுவை ஒளி ஊறு, ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.’
‘அறத்தான் வருவதே இன்பம்’
‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’
‘அமிழ்அமிழ்தினும் ஆற்ற இனிதே’
‘அன்றே மறப்பது நன்று’
பரிதியார் வியாக்கியானம்: அனந்த ஞானம், அனந்த வீரியம்,
அனந்த குணம், அனந்த தெரிசனம், கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாவியல்பு என்பன’.
‘சைவ சித்தாந்த அறிஞர் கி.லெக்ஷ்மணன் ‘தாடலை’ என்னும் சொல்
குறித்துக் கூறுவது:
‘சைவ சித்தாந்தப் படி முத்தி என்பது துன்பம் துளியும்
இல்லா நிலை மட்டுமன்றிப் போரின்பமயமான உடன்பாட்டு நிலையும் ஆகும். இம்முத்தியாலேயே
ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலந்தபோதும் தன் தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை.
இக்கலப்புக்குத் தமிழில் ‘தாள்’, ‘தலை’ என்னும் இரு சொற்களின் புணர்ச்சியை
உதாரணமாக காட்டுவது மரபு. தலை ஆன்மாவையும், தாள் இறைவனையும் குறிப்பனவாகக்
கொள்ளலாம். அதாவது, இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகிறது என்பதே
கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புணரும் போது ‘தாடலை’ ஆகும்.’
இத்தாடலைக் கோட்பாட்டின் சிந்தனைக் கட்டிணைவைக் கடவுள் வாழ்த்தில் காணமுடிகிறது ‘  என்கிறார் முனைவர் மாதவன். ஆக, சைவ சித்தாந்தக்
கருத்தும் வெளிப்படுகிறது.
இவை தவிரவும் ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’, ‘ஆ பயன் குன்றும் அறு தொழொலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்’, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க் கெழுமைக்கும்
ஏமாப்புடைத்து’, ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரப்பின் இளி வந்தது இல்’
முதலிய குறட்பாக்களால் வைணவ, சைவ மத நம்பிக்கைகளான அந்தணன் ஒழுக்கம், வேதம்
ஓதுதலின் அத்தியாவசியம், பசுவின் மேன்மை, கர்ம வினை, மறுபிறப்பு முதலியன
சுட்டப்படுகின்றன. ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்னும் ஆண்டாளின் வரிகள்
நினைவிற்கு வரலாம்.
திருக்குறள் சமண நூல் என்பதற்கான சான்றுகளும் கொட்டிக்கிடப்பதாகவும்
சில நூல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்றொரு நூலில் உள்ள சில சான்றுகளைக் காண்போம்.
திருவள்ளுவர் ஶ்ரீ குந்த குந்த ஆச்சாரியர், பத்ம நந்தி,
வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்று பல பெயர்களால்
அழைக்கப்பட்டுள்ளார். இவர் கிமு 52 – கிபி 44 வரை வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
இவரைப்பற்றிய சிலாசாசனம் சிரவணபேளாகோளாவில் உள்ளது என்கிறது மேற்சொன்ன நூல்.
குந்த குந்தர், தற்போது திருப்பாதிரிப்புலியூர் என்றும்,
அன்னாட்களில் பாடலிபுரம் என்றும் அழைக்கப்பட்ட ஊரில் வாழ்ந்த சமண ஆச்சாரியர் என்று
அறியப்படுகிறார், பிராகிருத மொழியில் பல நூல்களையும், குறிப்பாக
‘பிரப்ருதத்திரயம்’ என்று அறியப்பட்ட பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸமயஸாரம்,
மற்றும் தமிழில் திருக்குறளையும் இயற்றினார். இவரது சீடர் திருவுள்ளம் நயினார். இவரே
‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ என்று குறளைக்
கொண்டாடியதாகவும், அதனால் ஶ்ரீ குந்த குந்தர் அவரையே மதுரைக்குச் சென்று குறளை
அரங்கேற்றம் செய்யச்சொன்னதாகவும், பின்னர் சீடரின் பெயர் திருவுள்ளம் நயினார்
என்பதில் இருந்து திருவள்ளுவர் என்றானதாகவும் ஜைன மரபு தெரிவிக்கிறது. (‘கடுகைத்
துளைத்து’ இடைக்காடர் செய்தது என்றும் கூறுவர்).
சமணர்களின் கடவுள் வணக்கம் நான்கு வகையானது.
1. அருக சரணம்
2. சித்த சரணம்
3. சாது சரணம்
4. தர்ம சரணம்
சீவக சிந்தாமணிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியனார்
‘நல்லறத் திறை வனாகி நால்வகைச் சரணமெய்தி’ என்ற பகுதிக்கு உரை எழுதுகையில்
மேற்சொன்ன நான்கு வணக்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.
இந்த நான்கையும் திருக்குறளின் கடவுள் வாழ்த்து
அதிகாரத்தில் காணமுடிகிறது. அவ்வதிகாரத்தில் முதல் ஏழு செய்யுட்களால் ‘அருக
சரணமும்’, ’பொறிவாயில் ஐந்தவித்தான்’ செய்யுளால் ‘சாது துசரண’மும், ‘அறவாழி
அந்தணன்’ குறளால் ‘தர்மசரண’மும் குறிக்கப்படுகின்றன என்கிறது ‘திருக்குறள் – ஜைன
உரை’ என்னும் நூல்.
அத்துடன் ‘திருக்குறள் ஆய்வு – கவிராஜ பண்டிதர் உரை’
என்னும் நூல், ‘கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்துள் அருக சரணமும் சித்த சரணமும்
அடங்கியுள்ளனவென்றும், நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள் சாது சரணமும், அறன்
வலியுறுத்தல் என்னும் அதிகாரத்துள் தரும சரணமும் கூரப்பட்டுள்ளன என்றும் ஜைன சமயப்
பெரியோர் கூறுவர்’ என்கிறது.
‘ஆதிபகவன்’ என்பது அருகரையே குறிப்பதாக ‘கயாதர நிகண்டு’
என்னும் சமண நூல் பின்வரும் செய்யுளால் தெரிவிக்கிறது:
‘கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்’.
மேற்சொன்ன செய்யுளில் திருக்குறளில் காணப்படும்
‘ஆதிபகவன்’, ‘எண்குணத்தான்’, ‘அறவாழி அண்ணல்’ என்ற சொற்கள் சுட்டப்படுகின்றன.
சமண நூலாகிய சீவக சிந்தாமணி ‘அறவாழியண்ணல் இவன் என்பார்’
என்று அருகரைக் குறிக்கிறது.
‘பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம்பொருள்’ என்று
சிலப்பதிகாரம் குறிப்பதும் அருகனையே.
மேரு மந்திர புராணம் என்னும் சமண நூல் ‘இறைவனீ ஈசனீ
எண்குணத் தலைவனீ’ என்று அருகனுக்கு எண்குணத்தானெனும் பெயரிட்டு அழைக்கிறது.
மேற்சொன்ன செய்யுட்கள் ஒன்று அருகனை நேரடியாகக்
குறிக்கின்றன அல்லது ஜைன சித்தபரமேட்டிகளைக் குறிக்கின்றன.
‘அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
என்னும் குறளுக்கு விளக்கம் போல அமைந்துள்ளது
பின்வரும் ஜைன மரபுக்கதை.
பரத சக்கரவர்த்தி மகாஜனங்களுக்குத் தானம்
செய்ய விழைகிறான். அரண்மனை வாயிலில் பூ, பழம், இலை முதலியன பரப்பிக்
காத்திருக்கிறான். அரசர்கள், செல்வந்தர்கள் வருகின்றனர். ஓரிரு மகாஜனங்கள் மட்டுமே
வருகின்றனர். சிலர் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் வேறு வழியில் உள்ளே வர
சம்மதிக்கின்றனர்.
‘நீங்கள் ஏன் வாயில் வழியாக வரவில்லை?’
என்று சக்கரவர்த்தி வினவுகிறான்.
‘நீ வாயிலில் பரப்பிவைத்துள்ள பொருட்கள்
ஏகேந்திரிய ஜீவன்கள். ஏகேந்திரிய ஜீவ ஹிம்சைகூட செய்யாதவர்கள் நாங்கள்’ என்கின்றனர்
அம்மகாஜனங்கள்.
‘நீங்களே உண்மையான மகாஜனங்கள்’ என்று
சொல்லி, அவர்களுக்கு ஒன்று முதல் பதினோரு சூத்திரம் ஈராக, யக்ஞோபவீதம் இட்டுச்
சன்மானம் பண்ணி ஆரிய ஷட்கர்மங்களை (ஆறு தொழில்கள்) உபதேசித்தான். இவர்களே
அந்தணர்கள். இவர்களே செந்தண்மை பூணாத, ஏகேந்திரிய ஜீவ ஹிம்சை கூட செய்யாத
அந்தணர்கள் என்கிறது ஜைன மரபு.
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
என்னும் குறளில் குறிக்கப்பெறும் நூல் ஜைன
வேதங்களான பிரதமாநு யோகம், கரணாநு யோகம், சரணாநு யோகம் மற்றும் திரவியாநு யோகம்
என்கிறது ‘திருக்குறள் – ஜைன உரை’ நூல்.
‘த்ரிகுப்தி’ என்னும் மூன்று அவசியமான கோட்பாடுகளை ஜைன சமயம் வலியுறுத்துகிறது.
அவையாவன ‘காயத்தின் அடக்கம்’, ‘வாக்கின் அடக்கம்’, ‘மனோவடக்கம்’. ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தின்
கீழ் உள்ள குறட்பாக்களால் ’த்ரிகுப்தி’யை அறியலாம்.
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின்
அடங்கப் பெறின் – காயத்தின் அடக்கம்.
ஒன்றானும்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா
தாகி விடும் – வாக்கின் அடக்கம்.
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து  – மனோவடக்கம்.
‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்’
என்னும் குறள் சைவ, பௌத்த சமயங்களை ஒரே
நேரத்தில் இழித்துரைப்பதாகசவும் தொனிக்கிறது. (மழித்தல் – பௌத்தத் துறவியர்
செய்வது. நீட்டல் – ஜடா முடி வளர்க்கும் சைவ சமயத் துறவியர்). இக்குறளின்
வாயிலாகவும் திருக்குறளின் ஜைனத் தொடர்பு தெரிகிறது.        
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபுர
ஆதீனத்தின் அடியார் கூட்டத்தில் ஒருவரான வெள்ளியம்பலவாண முனிவர் என்பார் ‘முதுமொழி
மேல்வைப்பு’ என்னும் நூலை இயற்றியுள்ளார். திருக்குறளைப் பின்னிரண்டடிகளில்
வைத்து, மேற்கோள் செய்தியை முன்னிரண்டடிகளில் வைத்து எழுதப்பட்ட இந்த நூலில்
திருக்குறள் ஜைன நூல் அன்று என்கிற வகையில் பல வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள்
பின்வரும் ஒன்று சிறப்புடையது:
‘ஒருவர் செய வேண்டா உலகியல்பா மென்னும்
அருகர் பிறர்கோள் சிதைக்குமாற்றால் – வருவது
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்’
இதன் பொருளாவது: ‘உலகில் பிச்சை எழுத்தே
ஒருவன் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த உலகத்தைப் படைத்தவனான இறைவன் அழியட்டும்
என்று சொல்கிறது திருக்குறள். இக்கருத்து, ஜைனக் கோட்பாடென்று அருகர் சொன்ன
‘உலகத்தை யாரும் இயற்றவில்லை, அது தானாகவே இருப்பது’ என்ற கருத்துக்கு முரணாகவன்றோ
உள்ளது?’
இதனால் 17ம் நூற்றாண்டு வரை திருக்குறள்
ஜைனை நூலாகவே அறியப்பட்டது என்பது புலனாகிறது.
மேலும் கொல்லாமை, புலால் உண்ணாமை,
கள்ளுண்ணாமை, உணவு, மருந்து முதலியன பற்றியும் குறட்பாக்கள் அமைந்துள்ளதால் சமண
அறங்களான ‘அன்ன அறம்’, ‘மருத்துவ அறம்’, ‘சாத்திர (கல்வி) அறம்’ முதலியன
சுட்டப்படுகின்றன.
‘கொடுப்பது அழுக்கறுப்பான்
சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம்
இன்றிக் கெடும்’ என்னும் ஒரு குறள் ‘தானம்’ செய்வதைக் கெடுப்பதால் ஏற்படும் கேட்டைக்
குறிக்கிறது. மற்றவனுக்குச் செய்யும் உதவியை ஒருவன் கெடுத்தால், அவனது சுற்றம் உடுக்க
உடையின்றியும், உண்ண உணவின்றியும் கெட்டழியும் என்று சாபம் இடுவதைப்போல் அமைந்துள்ளது
இக்குறள். உதவியைக் கெடுப்பவனது கேட்டைக் குறிக்காமல், கெடுப்பவனின் சுற்றத்தார் இதனால்
பெரும் இன்னலுக்கு ஆளாவர் என்றுரைத்ததால், இது பெரிய அளவில் ஜைனக் கோட்பாடான ‘தானம்’
என்னும் அறத்தை  வலியுறுத்துகிறது என்பதைக்
கணிக்க முடிகிறது. 
திருக்குறளை மேலும் ஆராய்ந்தால் பௌத்த மதக்
கருத்துகளும் புலப்படும் என்பது தெளிவு.

ஆக, ஜைன, வைணவ, சைவக் கருத்துக்களை
உள்ளடக்கிய திருக்குறள் பாரதத்தின் ஆன்மிகம் சார்ந்த பண்பாட்டின் விஸ்வரூப தரிசனம்
என்றே கொள்ளவேண்டும். எனவே, கடவுள் மறுப்பு, சனாதன மறுப்பு, மதங்களின் மறுப்பு என்று
மதச்சார்பின்மைச் சாயத்தைப் போலியாகத் திருக்குறளின் மீது ஊற்ற முயல்வது, வள்ளுவரின்
கூற்றின்படியே, ‘காயாத மண் பானையில் நீர் சேகரிப்பது’ போன்றதாகும். 

Leave a Reply